Search
Saturday 16 December 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் சபையை கலைத்தாவது பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் : தயாசிறி

இலங்கை கிரிக்கெட் சபையை கலைத்தாவது பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் : தயாசிறி

இலங்கை கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு கிரிக்கெட் சபையை கலைத்தாவது தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஆகியோரின் பின்னர் நின்று விளையாடக் கூடிய வீரர்கள் எவரும் இல்லாது போயுள்ளனர். நிலையான விளையாட்டு வீரர்கள் உருவாகவில்லை. கடந்த 8 வருட காலத்தில் ஏற்பட்ட நிலைமையே இது. அப்போது வெளியே வெற்றிகள் தொடர்பாக மட்டுமே தெரிந்தன. உள்ளே பல பிரச்சினைகள் இருந்துள்ளன.
எவ்வாறாயினும் இப்போது நான் அமைச்சரான பின்னர் மத்தியில் இருந்த கிரிக்கெட் நிர்வாக சபை மாகாணங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 4 மாகாணங்களாக பிரித்து அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளை பந்து , சிவப்பு , ரோஸ் பந்து என மூன்று நிறங்களில் பந்துகள் உள்ளன. இதனால் மாகாண மட்டத்தில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு தம்புள்ளையை சுற்றியுள்ள குருநாகல் , அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பணத்தை உள்ளடக்கியதாக மாகாணம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீரர்கள் கடந்தகாலங்களில் போதிய பயிற்சிகள் இல்லாத நிலைமையிலேயே இருந்துள்ளனர். இந்த 4 மாகாணங்களிலும் ஒரு மாகாணத்திற்கு 15 பேர் என்ற ரீதியில் 60 பேரை தெரிவு செய்யவுள்ளோம். இங்கு அணிகளை அமைக்கவுள்ளோம். இந்த அணிகளினூடாக முன்கொண்டு செல்ல வேண்டும். அவசரமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியாது. விளையாட்டு கழகங்களுக்கு வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளே கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளது. கழகங்களின் தேவைகளுக்காக அவற்றின் தலைவர்களின் தேவைகளுக்காக நான் செயற்பட போவதில்லை. தேர்தலைகளை குறைக்கவே நடவடிக்கையெடுப்பேன். நிச்சயமாக நான் இதனை செய்வேன்.
சங்கக்கார ,மஹேலவுடன் இதற்கு முன்னர் கலந்துரையாடி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். உள்ளக மாகாண போட்டிகளை நடத்துவோம். 140 வரையான தேர்தல்கள் உள்ளன. அவற்றை குறைக்க நடவடிக்கையெடுப்போம். அதனை செய்தால் எங்களால் கிரிக்கெட்டை கட்டியெழுப்ப முடியும். இதனை நான் செய்தே தீருவேன். இதற்கு தடையாக யாராவது இருந்தால் அல்லது கிரிக்கெட் நிர்வாக சபையை கலைக்க வேண்டிய தேவை வந்தால் அதனை செய்யவும் தயார். 2 , 3 போட்டிகள் தோல்வியடைந்தாக முழு அணியையும் தவறாக பார்க்கக் கூடாது. சில காலம் எனக்கு தேவை இதனால் பொறுமையாக பாருங்கள். கடந்த காலங்களில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றால் போன்றே நிர்வாக சபை பயன்படுத்தப்பட்டது. நான் அப்படி இடமளிக்க போவதில்லை. நான் நேரடியாக இப்போது தலையிட்டு தீர்வு காணுவேன்.
அத்துடன் ஒவ்வொரு போட்டியின் போதும் ஒவ்வொரு தலைவரை நியமிப்பது பிரச்சினைக்குறியதே. இதற்கு தீர்வு காண வேண்டும். 2019 வரையாவது ஒரே தலைவரின் கீழ் போட்டிகளுக்கு செல்லும் நிலைமையை உருவாக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *