Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தோல்வியடைவது சிறுபான்மை சமூகத்தினரே

இலங்கை  ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தோல்வியடைவது சிறுபான்மை சமூகத்தினரே

டெய்லர் டிப்போர்ட்- வோசிங்டன் டைம்ஸ்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாவதற்கான போட்டி இடம்பெறுகின்றது. வாக்காளர்கள் சனிக்கிழமை 35 வேட்பாளர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்காக வாக்களிப்பார்கள். எவர் வென்றாலும்- இலங்கையின் சிறுபான்மையினத்தவர்கள் – தமிழர்கள் – முஸ்லீம்கள் தோற்கப்போகின்றனர்.

இலங்கை அரசியலை பொறுத்தவரை இலங்கையின் சிறுபான்மையினத்தவர்களை நோக்கி நேசக்கரத்தை நீட்டுவது ஒருபோதும் தெளிவான நடவடிக்கையாகயிருந்ததில்லை- அதற்கு மிகவும் தீவிரமான அரசியல் துணிச்சல் அவசியம். சிறுபான்மையினத்தவர்கள் எவ்வளவு மோசமாக தோற்பார்கள் என்பதே கேள்வி? இந்த சூழமைவில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மத்தியிலான வித்தியாசம் குறிப்பிடத்தக்கதாக காணப்படுகின்றது.

இரு பிரதான வேட்பாளர்களான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கோத்தாபய ராஜபக்சவும் ஐக்கியதேசிய கட்சியின் சஜித்பிரேமதாசவும் உறுதியான சிங்கள பௌத்த தேசியவாதிகள். இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தவர்களாக சிங்களவர்களே காணப்படுகின்றனர்.இவர்கள் அனேகமாக பௌத்தர்கள்.

ஐக்கியதேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித்பிரேமதாச ஒரு அமைச்சர்.அவரது தந்தை ரணசிங்க பிரேமதாச 1989 முதல் 1993 வரை இலங்கையின் ஜனாதிபதியாக பணியாற்றினார்.1993 இல் அவர் விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார். அவர் ஏதேச்சதிகார முறையில் ஆட்சி புரிந்தார். இலங்கையில் எப்போதும் காணப்பட்ட பெரும்பான்மையினத்தவர்களின் அமைப்பு முறைக்கு எதிராக மகன் செயற்படுவார் என நம்புவதற்கான காரணங்கள் இல்லை.

ஆனால் இங்கு அடிப்படை விடயம் என்னவென்றால் தேர்தலில் வெற்றிபெறுவார் என கருதப்படும் கோத்தபாய ராஜபக்ச அதிகளவிற்கு கவலை தரும் தெரிவாக காணப்படுகின்றார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் அதிகளவிற்கு ஏதேச்சதிகார போக்கை கொண்டதாக மாறியது.
மாற்றுக்கருத்திற்கான சூழல் குறைவடைந்தது- மக்கள் அச்சத்தில் வாழ்ந்தனர்.ஊழலும் குடும்ப ஆட்சியும் அதிகளவிற்கு காணப்பட்டது. சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் குறிப்பாக தமிழர்களின் உரிமைகள் அதிகளவிற்கு மிதிக்கப்பட்டன.

2005 முதல் 2015 வரை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராகயிருந்த கோத்தபாய ராஜபக்ச பிரிவினைவாத விடுதலைப்புலிகளை தோற்கடித்து மூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு மோதலை முடித்துவைப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். யுத்தத்தின் இறுதி மாதங்கள் பாரிய உயிரிழப்பை ஏற்படுத்தின.
அதன் பின்னர் இலங்கை படையினருக்கு நம்பகதன்மை மிக்க யுத்த குற்றச்சாட்டுகளும் மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன.

பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களால்; ராஜபக்சாக்கள் இன்றும் யுத்தவெற்றி வீரர்களாக போற்றப்படுகின்றனர். முக்கிய யுத்த குற்றவாளிகளிற்கு தொடர்ந்தும் பதவி உயர்வு வழங்கப்படுகின்றது.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கற்றவர்- அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.அவர் எதிர்பாராத விதத்தில் 2015 இல் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த பின்னர் அறிவித்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் திசையற்ற பாதையில் பயணிக்கின்றது.

தேசிய பாதுகாப்பு- சட்டம் ஒழுங்கு- பொருளாதார அபிவிருத்தி போன்ற தேர்தலில் முக்கிய விடயங்களாக இடம்பெற்றுள்ளன. இலங்கைக்கு வலுவான ,திறமைவாய்ந்த தலைமைத்துவம் அவசியம் என்ற எதிர்பார்ப்பு உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் இருந்தே காணப்படுகின்றது. இந்த தாக்குதல்கள் ராஜபக்ச முகாமிற்கு பெருமளவு உதவியுள்ளன.

தமிழர்களின் உரிமைகள் நீண்டகாலமாக தாக்குதலிற்குள்ளாகியுள்ளன.யுத்தத்தின் பின்னரும் இந்த நிலைமை காணப்படுகின்றது. முஸ்லீம்கள் சிங்கள பெரும்பான்மையினத்தவர்களால் இலக்குவைக்கப்படுவது யுத்தத்தின் முடிவின் பின்னரே இடம்பெற ஆரம்பித்தது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முஸ்லீம்களிற்கு எதிரான வன்முறைகளும் பாரபரட்சங்கள் ஒடுக்குமுறைகளும் 2020லிலும் அதன் பின்னரும் முக்கியமான விடயங்களாக விளங்கப்போவதை உறுதி செய்துள்ளன.

தற்போதைய மனித உரிமை மீறல்கள் கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியிலோ அல்லது பிரேமதாசவின் ஆட்சியிலோ தொடரப்போகின்றன. எவ்வளவு அளவு என்பதே வித்தியாசமாகயிருக்கப்போகின்றது.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாவது என்பது தமிழர்கள் – முஸ்லீம்களிற்கும் நாட்டிற்கும் ஆபத்தானதாக காணப்படப்போகின்றது.

மாற்றுக்கருத்துடையவர்கள்- உடன்படமறுப்பவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவது என்பதே எதிர்கால கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் விசேட அம்சமாக விளங்கப்போகின்றது. அதிகாரம் மத்தியில் குவிக்கப்படலாம்.பத்திரிகையாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்குவார்கள். இன்னொரு ராஜபக்ச ஆட்சிக்காலம் என்பது அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்ட தமிழர்கள் அதிகமாகவாழும் வடக்கில் நிலைமையை மேலும் மோசமானதாக்கும்.

இஸ்லாமிய சமூகத்தினரிற்கு எதிரான அச்சம் என்பது அதிகாரத்தின் உச்சத்தில் உள்ளவர்கள் மத்தியில் காணப்படும். பலர் பிரேமதாசவின் வெற்றி ஜனநாயகத்திற்கான வெற்றி என குரல்கொடுக்கலாம். உரிமைகள் மற்றும் ஆட்சி என்ற கோணத்திலிருந்து பார்க்கும்போது அவர் நல்ல தெரிவுதான். ஏனையவர்கள் இரு பிரதான வேட்பாளர்கள் குறித்தும் நம்பிக்கையீனத்தை கொண்டுள்ளனர்.

சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களின் பிரச்சினைகளை சரிவரப்புரிந்துகொள்வதில்லை என்கின்றார் வடமாகாண முன்னாள் முதல்வர் சிவி விக்னேஸ்வரன். ராஜபக்சவும் பிரேமதாசவும் சிங்களபௌத்த ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தி தமிழர்களை அடிமைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனர் என்கிறார் அவர்.

இந்த நாடு சிங்கள பௌத்தர்களுடையது என அவர்கள் சிந்திக்கும்வரை சிறுபான்மையினத்தவர்கள் தொடர்பான அவர்களது நிலைப்பாடுகளில் வித்தியாசங்கள் இருக்காது என்கின்றார் விக்னேஸ்வரன். சனிக்கிழமை என்ன நடந்தாலும் இலங்கை தொடர்ந்தும் பிரச்சினைகள் நிலவும் நாடாகவே காணப்படும். இனமோதல்களின் அடிப்படை காரணிகள் புறக்கணிக்கப்படும். பெரும்பான்மை ஜனநாயக நாடாக அது காணப்படலாம்- இங்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட இனவாதம் பொதுவான விடயமாக காணப்படலாம். சிறுபான்மையினத்தவர்கள் குறைவான பிரஜைகளாக நடத்தப்படலாம். ஆனாலும் இந்த தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் ஒரேமாதிரியானவர்கள் இல்லை. கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி இருண்ட யுகத்திற்கு மீண்டும் நாட்டை இட்டுச்செல்லலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *