Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் வெளிப்படுத்தும் அரசியல் யதார்த்தம்

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் வெளிப்படுத்தும் அரசியல் யதார்த்தம்

சிவா செல்லையா
மக்கள் ஆட்சி என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மூலம் நாட்டின் நிர்வாகம் செயற்படுத்தப்படல் ஆகும். இலங்கையின் மக்களாட்சி இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. 1972ம் ஆண்டு ஆட்சியிலிருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சுய பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை 1977இல் ஐக்கிய தேசியக் கட்சியினை 5ஃ6 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்தது. அதேபோல் 2020இல் நாட்டில் கொரோனா தொற்று மந்த நிலையில் உறுதியான ஆட்சி அமைக்க பொதுஜன பெரமுனக் கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது.

வாக்குகள் சேகரிப்பதில் இன, மத, சாதி, பிரதேச ரீதியான பாகுபாடுகள் 1948ம் ஆண்டுக்குப் பின் கடுமையானது. இதனாலேயே பிரஜா உரிமைச் சட்டமூலம் இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கையில் ஏற்பட்ட இனச்சுத்திகரிப்பிற்கான முதலாவது சர்வதேச ஒப்பந்தமாகும். இலங்கையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு சிங்கள பௌத்த மக்களின் ஆதரவுத் தளத்தை இறுக்கமாக வைத்திருக்க தமிழர்கள் மீது அதிகார அடக்குமுறை அதிகரித்தது.

1958ம் ஆண்டுத் தனிச் சிங்களச்சட்டம் இத்தகையதே. இதனைத் தொடர்ந்தே இனக்கலவரங்கள் ஏற்பட்டன. இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியினை கபளீகரம் செய்யக் குடியேற்றத்திட்டங்களை சிங்கள ஆட்சியாளர் 1948ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிட்டனர். கல்லோயாத்திட்டம் இதன் முதற்படி. பின் மகாவலி அபிவிருத்தித்திட்டம். தற்போது வெலிஓயாக் குடியேற்றங்களும் நாவற்குழிக் குடியேற்றங்களும் அமைகின்றன. இத்தகைய முரண்பாடான உச்சத்திலேயே இலங்கையில் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் எழுச்சிபெற்று பின் முற்றாக சர்வதேச ஆதரவுடன் முடக்கப்பட்டது. இக்காலத்தில் “1987 இலங்கை இந்திய ஒப்பந்தம்” தமிழர் தாயகத்தின் அடையாளத்திற்கான ஓர் சர்வதேச ஒப்பந்தமாகும். இறுதியாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பான ஜெனீவா மனித உரிமை அவையின் 2015 கூட்டத்தொடரின் 30ஃ1 தீர்மானம் தமிழின அழிப்பிற்கான ஆதாரமாகும்.

தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும், வடக்கு கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களும் இலங்கையின் வடக்குகிழக்குப் பகுதியினை தமிழர் தாயகமாக அடையாளப்படுத்தலை சேதப்படுத்தி உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல, திருகோணமலை, வன்னி மாவட்டங்களும் தமிழரின் பிரதேசப் பெரும்பான்மைக்குச் சவாலாகி உள்ளன. அடுத்து யாழ். மாவட்டத்தின் மக்களின் மனப்பாங்கில் 40மூ ஆனோர் சலுகைகளைப் பெற்று சுயமுன்னேற்றத்தை நோக்கிச் செல்வதை இலக்காகக் கொண்டுள்ளனர். இவை எதிர்காலத்தில் இலங்கையின் வடபகுதியும் இன்றைய அம்பாறை மாவட்டத்தின் நிலைக்கு ஆளாகலாம்.

இந்தியப் பிரதமர் மோடியும் இந்துத் தீவிரவாதத்தால் பெரும்பான்மை ஆட்சியை நடத்துகின்றார். அவ்வாறே ராஜபக்ச அரசும் பௌத்த சிங்களத் தீவிரவாத அரசையே மேலும் தொடர்வார்கள். இந்நிலையில் தமிழர் தாயகத்தைத் தக்க வைப்பதற்கான அரசியல் சித்தாந்தம் உறுதியாக வைத்திருக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு உள்ளது. கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஏமாற்று நடவடிக்கைகளையும், அதற்கான போலிப் பிரசாரங்களையும் குறித்த அளவான தமிழ் மக்கள் நிராகரித்து உள்ளனர். வரலாற்று ரீதியாக தமிழரை ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இலங்கையில் காணாமல் போயுள்ளது. வடபகுதியில் ஏற்பட்ட தனிநபரின் வெற்றியின் பின்னணியில் கோடிக்கணக்கான பணமுதலீடு உள்ளது. வடகிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பாராளுமன்றப் பிரவேசம் இன்று பத்து முகமுள்ள இராவணனாகவே பாராளுமன்றில் ராஜபக்ச அரசுக்கு காட்சியளிக்கப் போகின்றனர். எனவே இராவணனை வீழ்த்த ராமருக்கு கோயில் அமைக்கும் மோடியின் துணை ராஜபக்சக்களுக்கு வெளிச்சமாகக் கிடைக்கும். இந்நிலையில் தமிழ்த் தேசியத்தைத் தக்கவைப்பதற்கான மக்கள் எழுச்சி நிச்சயமாக நிகழ்வதற்கான சாத்தியம் உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *