Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஈரோஸ் பாராளுமன்ற கதிரைகளை விட்டு வெளியேறியது போன்று தற்போதைய தலைமைகள் செய்வார்களா..? ஈரோஸ் துஸ்யந்தன் 

ஈரோஸ் பாராளுமன்ற கதிரைகளை விட்டு வெளியேறியது போன்று தற்போதைய தலைமைகள் செய்வார்களா..? ஈரோஸ் துஸ்யந்தன் 

தமிழர்களுக்கான உயரிதும் தீர்க்கமானதுமான அரசியல் ரீதியான தீர்வு கிடைக்கவில்லையாயின் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தில் ஈரோஸ் அமைப்பினர் 13 பேர் தெரிவு செய்யப்பட்டு தீர்வு கிடைக்காத நிலையில் எவ்வாறு பாராளுமன்ற கதிரைகளை துறந்து மக்களுக்காக வந்தார்களோ அதேபோன்றதான செயற்பாட்டை தற்போதைய தமிழ் தலைமைகள் மக்களுக்காக செய்ய முன்வருவார்களா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது என ஈரோஸ் அமைப்பின் தலைவர் துஸ்யந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் சனிக்கிழமை போரில் உயிர்நீத்த போராளிகள் நினைவாக இடம்பெற்ற மரநடுகை நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஐக்கியம் என்ற தளம் தமிழர்கள் அரசியலில் எதிர்ப்பாக்கப்பட்டுவரும் சம்பவமாகவே இருந்து வருகின்றது. எனினும் அது சாத்தியப்பாடுகள் அற்றதாக காணப்படுகின்றமை வேதனையான விடயமாகும்.

தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பேரினவாத சக்திகளின் வாழ்வியல் தகு நிலைக்கு மாறான செயற்பாடுகள் தமிழர்களை தமது உரிமைப்போராட்டத்தின் மீது செல்லத்தூண்டியமை வரலாறு. இதன்பால் எமது உரிமை மற்றும் வாழ்வியல் தொடர்பாக சிந்திக்க தலைப்பட்ட தமிழர்களுக்கு அகிம்சை வழிமுறைகள் ஏதுவான பதிலை வழங்கியதாக இருந்திருக்கவில்லை.

தந்தை செல்வாவின் அகிம்சையான போக்கை எள்ளி நகையாடிய பேரினவாதத்தின் செயலால் தமிழ் இளைஞர்கள் மீது ஆயுதப்போராட்டம் என்ற ஒன்று திணிக்கப்பட்டிருந்தது. விரும்பியோ விருபாமலோ தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு தீர்வாக நாம் ஏந்திய ஆயுதங்கள் எமக்கு மீட்சியான பாதையை ஏற்படுத்தும் என்ற எண்ணப்பாட்டுடன் எமது போராட்டம் ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் இராணுவத்தின் மீதானதுமாக இருந்தது.

தமிழ் இளைஞர்களின் உரிமைப்போராட்டம் தமிழீழம் என்ற உன்னத தேசத்தின் விடுதலையை நோக்கியதாக மிளிர்ந்திருந்தது. இதனை அடைவோம் என்ற வேட்கையுடனேயே அறிவார்ந்த தமிழ் இளைஞர்கள் தங்களது கைகளில் இருந்து பேனாக்களை ஓரமாக வைத்து ஆயுதத்தினை கையிலேந்தியிருந்தனர்.

வெறுமனே தான் சார்ந்த பிரதேசத்திற்கான போராட்டமாக இல்லாது தமிழீழம் என்ற இலக்கோடு பயணத்தினை ஆரம்பித்த இளைஞர்கள் கடும் இன்னல்களை சந்தித்து தமிழ் போராளிகளாக களமாடியிருந்தனர். எந்த இலக்கிற்காக பேராட்ட களங்களை போராளிகள் உருவாக்கி கொண்டார்களோ இதனை அடையும் நோக்கோடு தமது சீரிய சிந்தனைகளை சிரம்மேல் ஏந்தி செயற்பட்டிருந்தனர்.

இதன் போது களப்பலியான மாவீரர்களை வீர மரணமடைந்த எங்கள் மறவர்களாக எமது மக்களால் போற்றப்பட்டிருந்தனர். இந்த உன்னத பயணத்தில் பல எதிர்பாராத நிலைமைகள் எமது போராளிகளுக்கிடையில் ஏற்பட்டதனால் நாம் ஏந்திய ஆயுதங்கள் எமது சகோர போராளிகள் மீதே திரும்பிய துர்ப்பாக்கிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தது.

இதன் விளைவாக எமது போராட்ட களத்தில் பல இழப்புகளும் பின்னடைவுகளும் ஏற்பட்ட தருணங்கள் மறக்கமுடியாததும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாக இன்றும் கறைபடிந்த வரலாற்று படிமங்களாக உள்ளது. இதன்போது ஏற்பட்ட இழப்புகளால் எமது தமிழ் இளைஞர்கள் பலர் மரணங்களை எதிர்கொண்டிருந்தனர். எனினும் ஆயுதப்போராட்டத்தினை நம்பி விடுதலைக்கான பயணத்தில் இணைந்துகொண்ட அனைத்து இளைஞர்களும் தமிழர்களின் விடுதலை என்ற இலக்கோடு போராட்ட களத்திற்கு பயணித்தவர்களே. அவர்களின் இலக்கு ஒன்றாக இருந்போதிலும் எமக்குள் ஏற்பட்ட முரண்பாடான நிலைமைகள் இவ்வாறான சகோர படுகொலைகளுக்கு வழிசமைத்திருந்தது. எனினும் அத்தனை போராளிகளையும் நாம் ஒன்றிணைத்து போற்றி வணங்க வேண்டியர்வகளாகவே உள்ளோம்.

இவ்வாறான ஓர் சூழலிலேயே ஈரோஸ் அமைப்பின் தலைவரான அண்ணன் பாலகுமார் அவர்களினால் எமது இயக்கமானது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டிருந்தது. இது தீர்க்கதரிசனமாக ஓர் செயற்பாடாக அப்போது பார்க்கப்பட்டது மாத்திரமன்றி முரண்பாடுகளை குறைத்துக்கொள்வதற்கான வழிமுறையாகவும் இருந்தது.

எனினும் தமிழ் இளைஞர்களின் இலக்கு நோக்கிய பயணத்தில் ஏற்பட்ட தடங்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் உன்னத நோக்கம் கொண்டு களமாடிய போராளிகள் காரணமல்லர் என்ற காரணத்தால் நாம் அனைத்து போராட்ட இயக்கங்களில் இருந்து உயிர்நீத்தவர்களையும் ஓரிடத்தில் ஐக்கியப்பட்டு அஞ்சலி செலுத்தவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கடந்த 30 வருடகால ஆயுத போராட்ட களம் முடிவுறுத்தப்பட்ட நிலையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் பலமானதாகவும் ஆழமானதாகவும் உள்ளது. இதற்குமப்பால் இன்றைய அரசியல் சூழலும் எமக்கு சாதகமான நிலையில் இல்லாமல் உள்ளதாகவே உணரப்படடு வருகின்றது. எதிர்பார்க்கப்பட்டு வரும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக தீர்க்கமானதும் உண்மையானதுமான கருத்துகளை மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கருத்தை தெரிவுக்கும் நிலை மக்களை தெளிவற்ற தன்மைக்கு தள்ளிச்செல்கின்றது.

தமிழ் மக்களால் இன்று பாராளுமன்றத்திற்கு பெரும்பான்மையாக அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவுபடுத்தல்களை செய்யவேண்டும் என்ற தளத்தில் இருந்து விலத்திச்செல்வதை நாம் அவதானிக்கின்றோம்.

எமக்கு எஞ்சியுள்ள அரசியல் தீர்வு என்பதனை காலத்தின் போக்கில் விட்டுத்துச்செல்லும் கருப்பொருளாக கருத முடியாது. நாம் இதுவரை சந்தித்த இழப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நிரந்தரமான தீர்வை வழங்குவதாக அமையவேண்டும். அதற்கு எமது அரசியல் தலைமைகள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அரசியல் களத்தில் ஏற்படுத்தவேண்டும்.

வெறுமனே சிங்கள பேரினவாதம் தந்துவிட்டு செல்லும் தீர்வை பெறும் துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் மீண்டும் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கவேண்டும் என்பதுடன் கடந்த காலங்களை மீள உருவாக்க கூடிய வகிபாகங்களை அரசியல் தலைமைகள் உருவாக்கிவிடவும் கூடாது.

தமிழர்களுக்கான உயரிதும் தீர்க்கமானதுமான அரசியல் ரீதியான தீர்வு கிடைக்கவில்லையாயின் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தில் ஈரோஸ் அமைப்பினர் 13 பேர் தெரிவு செய்யப்பட்டு தீர்வு கிடைக்காத நிலையில் எவ்வாறு பாராளுமன்ற கதிரைகளை துறந்து மக்களுக்காக வந்தார்களோ அதேபோன்றதான செயற்பாட்டை தற்போதைய தமிழ் தலைமைகள் மக்களுக்காக செய்ய முன்வருவார்களா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது.

எனவே கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து நாம் சிங்கள தலைமைகளை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாற்றமடையாது ஆக்கபூர்வமான நிலைப்பாடுகளை தமிழ் தலைமைகள் முன்னெடுக்கவேண்டும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *