Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஈழத் தமிழருக்கும் இந்தியாவிற்கும் வரலாறு சொல்லும் செய்தி

ஈழத் தமிழருக்கும் இந்தியாவிற்கும் வரலாறு சொல்லும் செய்தி

– மு.திருநாவுக்கரசு

இந்தியாவில் பலம் பொருந்திய அரசாங்கம் பதவியில் இருப்பதானது ஈழத்தமிழருக்கு ஒன்றில் நூறுவீதம் சாதகம் அல்லது நூறுவீதம் பாதகம். பூகோளம் மற்றும் பிராந்திய அரசியல் சூழலில் அது பெரிதும் சாதகமான தன்மையையே அதிகம் கொண்டுள்ளது.

இந்த சாதகமான தன்னமை மேலோங்க வேண்டும் என்றால் ஈழத்தமிழர் மத்தியில் பலமான ,சாதுர்யம் மிக்கநீண்ட நோக்க பார்வைகொண்ட திறமையான அர்ப்பணிப்பு உள்ள திறமையான தலைமை அவசியம்.அவ்வாறான ஒரு பலம் பொருந்திய சிறந்த தலைமை கிடைக்காது விட்டால் ஆகக்கூடியது வரக்கூடிய 10 ஆண்டுகளுக்குள் இலங்கைத் தீவில் ஈழத்தமிழினன் அரசியல்ரீதியில் அர்த்தமற்ற அளவிற்கு அழிந்துபோய்விடும் ஒரு சிறந்த பலமான தலைமை அமையும் இடத்து இந்தியாவின் இந்த பலமான அரசாங்க காலத்திற்குள் குறிப்பிட்ட இலக்கையும் தெளிவான வெற்றியையும் அடைய முடியும்.

இலங்கைத்தீவில் ஈழத்தமிழர் இவ்வாறு வெற்றிபெற்று நிலைபெறுவதானது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை பெரிதும் பலப்படுத்தும்.ஈழத்தமிழர் தோல்வி அடைவதான் வாயிலாக இலங்கைத்தீவில் தலையெடுக்கவல்ல அந்நிய பேரரசுகளின் பேரலையால் இநதியாவும்பேர் அரிப்புக்கு உள்ளாகிவிடும். இந்தியாவின் கோணத்தில் இருந்து பார்க்கும் போது இந்தியாவிற்கு மூன்று பெரும் சவால்கள் உண்டு.

இந்திய உபகண்டத்தின் வட மேற்குப்புறத்தால் உள் நுழைந்த அராபிய – இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் இந்தியப் பண்பாட்டுக்குள் அப்படியே கரைந்து போகாமல் இந்தியாவின் வட-மேற்கே பாகிஸ்தான் என்ற ஓர் இஸ்லாமிய பெரும்பான்மை அரசையும் இந்தியாவிட்கு கிழக்கே பங்களாதேஸ் என்ற இன்னொரு இஸ்லாமிய பெரும்பான்மை அரசையும் உருவாக்கியதன் மூலம் இந்திய உபகண்டத்துக்குள் புதிய அரசுகளை உருவாக்கி இந்தியாவிற்கு சவாலாக அமைந்து விட்டனர்.

அதேவேளை இந்தியாவிற்குள் இருபது கோடிக்கும் மேலாக முஸ்லீம்கள் காணப்படுவதுடன் காஷ்மீர் என்ற பிரச்சனைக்கு உரிய பகுதியினர் ஆகவும் உள்ளனர்.எல்லையில் அணு ஆயுத வல்லமைகொண்ட பாகிஸ்தான் விளங்குவதுடன் உள்ளே வாழும் இருபது கோடிக்கு மேலான மக்களில் இருந்து எழக்கூடிய “தீவிரவாதம் உள்நாட்டு பாதுகாப்புக்கு சவாலாக உள்ளது என்ற சிந்தனை உண்டு .மேலும் பங்களாதேஷ் உம் இந்தியாவோடு எல்லையைக்கொண்ட ஒரு முஸ்லீம் நாடு என்ற வகையில் அங்கும் சவால்கள் உண்டு என்ற பிரச்சனைகள் காணப்படுகின்றன.

இந்தவகையில் இந்தியாவின் அயல்நாட்டு உள்நாட்டு முஸ்லீம் பிரச்சனைகள் இந்தியாவின் முதலாவது இருபெரும் பிரச்சனைகள் ஆகும் அதேவேளை இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள சீன இந்தியாவுடன் பெரும் போரில் ஈடுபட நாடாகவும் அப்போரின் மூலம் இந்தியாவின் ஒரு பகுதி இன்று வரை சீனாவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து எல்லைப்பிரச்னைக்கு உரியநாடாகவும் விளங்குகின்றது.

அணு ஆயுத வல்லமை கொண்ட எல்லைப்புற நாடான சீன ஓர் உலகப் பேரரசாக எழுச்சி பெரும் நிலையில் அது இந்தியாவுடன் இன்னொரு பகைமை கொண்ட அணு ஆயுத நாடாக விளங்கும்.பாகிஸ்தானுடன் இணைந்து சீன பாஸ்கிஸ்தானிய தரைவழி போக்குவரத்து தொடர்பை நிர்மாணித்து பாகிஸ்தானின் பலுச்சி மாநிலத்தில் உள்ள குவாத்தர் துறைமுகத்தினூடாக இந்துமா கடலுடன் தன் தொடர்பை இணைத்து விட்ட்து.

சீனாவின் உலக பேரரச வலைப்பின்னலுக்கான “ஓர் அணை ஒரு பாதை ” (“one belt one road”) திட்டத்தின் கீழ் இந்துமா கடல் பிரதான இடத்தை வகிக்கின்றது. அந்த இந்துமா கடலின் கடல்வழி, வான்வழி ,வர்த்தக,இராணுவ கேந்திர மையத்தில் அதுவும் இந்தியாவின் தென் பகுதியில் மிக அருகே இலங்கை அமைந்துள்ளது அந்த வகையில் சீனாவின் திட்டத்தில் இலங்கை பிரதான மையப்புள்ளி ஆகும்.

உலக முதற்தர பேரரசானா பெரிய பிரித்தானிய, மற்றும் உலகப் பேரரசுகளான அமெரிக்கா, ரஷ்யா ஆகிய மூன்று பேரரசுகளின் மக்கள் தொகையைவிடவும் சீனாவின் மக்கள் தொகை பெரிது. மேலும் அப்பேரரசுகளை மிஞ்சக்கூடிய வகையிலான உள்ளார்ந்த வளங்களையும் வல்லமையையும் சீனா கொண்டுள்ளதாகவும் அது முதல்தர உலகப்பெரு வல்லரசாக மிளிரும் காலம் வரும் என்றும் 1923ஆவது ஆண்டு சீன தேசிய தலைவர் டாக்டர் சுன்-யாட்-சன் கூறியமை ஒரு நூற்றாண்டின் பின் நிதர்சனம் ஆகும் நிலையில் உள்ளதை காணலாம்.

இந்தியப் பாதுகாப்பிற்காக பிரித்தானியர் வகுத்த தரை வழியே-கண்ட ரீதியான பாதுகாப்புத் திட்டம் (Continental Theory) கடல்வழியேயான பாதுகாப்புத் திட்டம் (Oceanic Theory) என்பனவற்றை உடைக்கும் திறன்மிக்கதாக சீனா இந்தியாவைச் சூழ்ந்து வியூகம் அமைத்துள்ளது.”சுற்றிவளைப்பு”,(Encirclement)”சூழ்ந்தடைத்தல்”(Envelopment) “சிக்க வைத்தல்”(Entanglement) என மூன்று வழிகளில் இந்தியாவைச் சூழ்ந்து சிக்கலுக்குள்ளாக்க இலங்கை மிகவும் பொருத்தமான மையப்புள்ளியாக விளங்குகிறது.

இங்குள்ள விசித்திரமான அரசியல் வரலாற்று வளர்ச்சி என்னவெனில் இந்தியாவிற்கு எதிரான மூன்று பெரும் சவால்களும் ஒரே வேளையில் ஒன்றாய் மையம் கொள்ளவல்ல புள்ளியாய் இலங்கை காணப்படுகின்றது என்பதுதான்.

உயிர்த்த ஞாயிற்றுக் குண்டுத் தாக்குதல்களோடு இந்தியாவின் உள்நாட்டு, அயல்நாட்டு (சீனா,பாகிஸ்தான்)சவால்களுடன் கூடவே சர்வதேச இஸ்லாமியச்(ஐ.எஸ்) சவாலும் ஒன்றிணைந்து இலங்கையில் மையம் கொண்டுள்ளன.

அத்துடன் சீனாவின் “சிக்கவைக்கும்”(Entanglement) திட்டத்திற்கான கட்டியமாக உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் அமைந்துவிட்டன. இந்தத் குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவை ஊடுருவுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருப்பதாக இந்தியா அச்சப்பட்டது.இந்த அச்சம் இந்தியாவின் புலனாய்வு தகவல்கள் வடிவில் வெளிப்பட்டு நின்றன.

அப்படியாயின் இஸ்லாமிய –ஐ.எஸ்,பாகிஸ்தான் –சீனா என பல்வகை இந்திய எதிர்ப்பு சக்திகளும் ஒன்றுதிரளவல்ல மையமாக நடைமுறை அர்த்தத்தில் இலங்கை விளங்குகின்றது என்ற அச்சம்,இந்திய தரப்புப்பக்க புரிதலாக அமையமுடியும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையவல்லது என்பதை உணர்ந்திருந்த இந்தியா அதனைத் தான் அறிந்துகொண்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தடுப்பதற்கு இலங்கை அரசை நாடியபோதிலும் இலங்கை ஆட்சியாளர்கள் அதனை புறக்கணித்து இப்பாரிய குண்டுத் தாக்குதல்கள் நடைபெற இடமளித்து விட்டனர் என்ற மனஅழுத்தம் இந்தியாவிடம் உண்டு.

இந்தியாவிற்கு அருகே தென்முனையில் அமைந்திருக்கும் இலங்கையின் ஆட்ட்சியாளர்கள் வரலாற்று அர்த்தத்தில் இந்தியாவை தமது எதிரி நாடாகப் பார்க்கின்றனர். கிறிஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்பட்ட பெளத்த மத படர்ச்சியை,இந்திய பேரரச படர்ச்சியின் வெளிப்பாடாகவே பார்க்கின்றனர். அத்துடன் காலத்திற்கு காலம் இந்தியாவிலிருந்து தொடர்ச்சியாக இலங்கை மீது படையெடுப்புக்கள் ஏற்பட்டதையும் வைத்து இந்தியாவை இலங்கையின் வரலாற்று எதிரியாக கணிக்கின்றனர். ராஜதந்திர உள்நோக்கத்துடன் இந்தியாவை வெளிப்படையாக நட்பு நாடு என்று கூறிக்கொண்டாலும் அவர்களது அடிமனத்தில் இந்தியாவை எதிரி நாடாகக் கருதிச் செயற்படும் முறையே காணப்படுகிறது.

india and sri lanka

தமக்கு வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் காலத்திற்கு காலம் இந்தியாவின் எதிரி நாடுகளுடன் இலங்கை ஆட்சியாளர் கைகோர்ப்பதை எப்போதும் காணலாம். தற்போது ஆசிய பேரரசாக வளர்ந்துள்ள சீனா,உலகப் பேரரச அபிலாஷையோடு இந்துமாகடலில் தன்னை நிலைநிறுத்த முயலும் நிலையில் இந்தியாவை மீறியும் கடந்தும் அந்த பேரரசுடன், ஆத்மார்த்த உறவு கொள்ளும் நிலை வளர்ந்திருப்பதைக் காணலாம்.

இலங்கையில் பதவிக்கு வரும் ஜனாதிபதிகளோ,பிரதமர்களோ தமது முதலாவது பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்வர்.ஆனால் இத்தகைய பயணம் ஒரு சம்பிரதாயபூர்வமான பரிமாணத்தை மட்டுமே கொண்டது.அதேவேளை மேற்படி குண்டுத்தாக்குதல் ஏற்பட்டவுடன்,இலங்கை ஜனாதிபதியின் செயல்பூர்வ பயணம் சீனாவிற்கானதாக அமைந்ததே தவிர இந்தியாவிற்கானதாய் அமையவில்லை. இந்த அணுகுமுறை இந்தியாவிற்கு பெரிதும் கவலையையும் சிக்கலையும் அளிக்ககூடிய விடயமாய் அமையக்கூடும்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் பலமாகவிருக்கும் நிலையில்தான்,இந்தியாவிற்கு இலங்கை செவிசாய்க்கவேண்டிய அவசியமுள்ளது.ஆதலால் ஈழத்தமிழர்களை முற்றாக நசுக்கிவிட்டால் இந்தியாவிற்கு சிறிதும் செவிசாய்க்காது, இந்தியாவின் எதிரி நாடுகளோடு மேலும் வலுவாக கைகோர்க்க முடியும்.இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான வியூகத்தின் அடிப்படையில் ஈழத்தமிழரை இலங்கையில் அழிக்கும் கொள்கையை இலங்கை அரசு பின்பற்றி வருகிறது.

ஈழத்தமிழர்கள் எப்போதும் ஆத்மார்த்தபூர்வமாக இந்தியாவின் நண்பர்கள்.இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கைக்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர்களின் வீடுகளில் இந்தியத் தேசிய தலைவர்களின் புகைப்படங்கள் நிறைந்திருக்கும்.சுவாமி இராமகிருஷ்ணர்,சாராததேவி,விவேகானந்தர்,மகாத்மா காந்தி,ஜவர்ஹலால் நேரு,சுபாஷ் சந்திரபோஸ்,இந்திராகாந்தி போன்றோரின் படங்களையே பெரிதும் காணலாம்.சிங்களத்தலைவர்கள் எவரினது படங்களையும் காணமுடியாது.மேலும் ஈழத்தமிழ் தலைவர்களான சேர்.பொன் இராமநாதன்,ஜி.ஜி பொன்னம்பலம்,தந்தை செல்வநாயகம் போன்றோரின் புகைப்படங்கள் மிக அரிதாகவே இருக்கும்.தமிழகத்தலைவர்களில் அறிஞர் அண்ணாவின் படங்கள் நடுத்தரவர்க்கத்தினரின் வீடுகளில் ஓரளவு இருக்கும்.பெரியார் ஈ.வே.ராவின் படத்தை ஓரிடத்திற்கூட காணமுடியாது.

ஈழத்தமிழர்களின் மனதில் தமிழகத்தை அவர்கள் இந்தியாவாகவே பார்ப்பார்கள்.மொத்தத்தில் இந்திய தேசிய உணர்வுடன் கலந்தவகையில் ஈழத்தமிழர்கள் காணப்பட்டார்கள். ஆனால் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளின் பின் இந்தியத் தேசியத்தலைவர்களின் படங்கள் எல்லாம் ஈழத்தமிழர்களின் வீடுகளில் பெரிதும் அருகிவிட்டன.ஈழத்தமிழர்களை புரிந்துகொள்வதில் இந்தியத் தேசிய தலைவர்களும்,இந்திய அறிஞர்களும்,ஊடகவியலாளர்களும் குறிப்பிடக்கூடிய அளவிற்காவது வெற்றிபெற்றார்கள் என்று சொல்வதற்கில்லை.

அதேவேளை இந்தியாவின் உண்மையான நட்புசக்தியான ஈழத்தமிழரையும் –இந்தியாவையும் மோதவிட்டு பகைமை கொண்ட சக்திகளாக மாற்றும் தந்திரத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தன நூறுவீத வெற்றியடைந்தார்.பின்நாட்களில் இந்தியாவின் மத்தியிலும் ஈழத்தமிழர் மத்தியிலும் ஏற்பட்ட அளப்பெரும் துயரங்களுக்கெல்லாம் ஜெயவர்த்தனவின் மேற்படி ராஜதந்திர வியூகமே அடிப்படை காரணமாய் அமைந்தது.கடந்தகால தவறுகளில் இருந்து இந்த இருநட்பு சக்திகளும் பாடங்களைக் கற்றுக்கொண்டு உறவை மேல் நிலைப்படுத்த வேண்டிய இறுதிக்கட்டம் இப்போதும் வந்துள்ளது.

இந்தியாவின் கருவியாக ஈழத்தமிழரைக் கணிப்பதன் விளைவாக இலங்கையில் இந்தியாவை தோற்கடிப்பதன் ஒரு பகுதியாக ஈழத்தமிழர்களை இலங்கை அரசு அரசியல் சமூக பலமற்றவர்களாக்கும் அளவிற்கு ஒடுக்கிவருகிறது.அணுகுண்டை விடவும் ஒரு பிரதேசத்தில் செறிந்துவாழும் மக்கள்பலம் அதிகம் வல்லமைமிக்கது.இதனடிப்படையில் சிங்களக்குடியேற்றங்களை கிழக்கில் உருவாக்கி வளர்த்ததன் மூலம் தமிழரின் இனவிகிதாசாரம் மாற்றப்பட்டுவிட்டது.இலங்கை –இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அரசியல் ரீதியாக வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்கும் தந்திரத்தில் சிங்களத்தலைவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.எது தமிழருக்கான தீர்வென முன்வைக்கப்பட்டதோ,அதையே தமிழருக்கு எதிரான சாபமாக மாற்றி வடக்கையும் கிழக்கையும் இரண்டாக பிரித்து கிழக்கில் தமிழரை சிறுபான்மை ஆக்கி,அங்கு அரசியல் அதிகாரம் அற்றவர்களாக ஆக்கும் நடைமுறையிலும் வெற்றி பெற்றுவிட்டனர்.மேலும் தற்போது வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் “மஹாவலி எல்” வலய சிங்களக் குடியேற்றத்திட்டத்தின் வாயிலாக முல்லைதீவு மாவட்டத்தோடு வடக்கையும் கிழக்கையும் புவியியல் ரீதியாக இரண்டாக்கும் தந்திரச்சதி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இவையின்னும் சில ஆண்டுகளில் நிறைவேறும் போது தமிழர் இலங்கைதீவில் அரசியல் ரீதியாக அர்த்தமற்றவர்களாகி விடுவார்கள்.

பிராந்திய –சர்வதேச அரசியல் ரீதியில் தென்னாசியாவில் இந்தியாவிற்கு எதிரான வியூகம் ஒருபுறம் இலங்கையை மையமாகக் கொண்டு முன்னேறும் அதேவேளை மறுபுறம் இலங்கைக்குள்ளும் இந்தியாவின் நட்புசக்தியாக விளங்கவல்ல ஈழத்தமிழரை தோற்கடிப்பதன் வாயிலாக இலங்கையைச்சூழ்ந்து வெளிவட்டத்திலும், உள்முனையிலும் இந்திய எதிர்ப்பு அரசியல் முன்னெடுக்கப்படுவது முன்னேறிச்செல்கிறது.
ஈழத்தமிழர் தரப்பில் சர்வதேச அரசியலை சரியாகப் புரிந்துகொண்ட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட அர்ப்பணிப்புள்ள தலைமையை இப்போதைய அரங்கில் காணமுடியவில்லை.சேர்.பொன்.இராமநாதன் காலத்திலிருந்து திரு.சம்பந்தன் காலம் வரை தமிழ்தலைமைகளது கப்பல்கள் அனைத்தையும் அடிநுனி தெரியாமல் தமது ராஜதந்திர பெர்முடா முக்கோணத்துள்(Bermuda Triangle)மறையவைக்கும் வல்லமையை சிங்கள தலைவர்கள் எப்போதும் நிரூபித்து வருகின்றனர்.
இத்தகைய பின்னணியில் நிகழ்ந்தேறியுள்ள உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பல அவசர எச்சரிக்கைகளை இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் விடுத்து நிற்கின்றன.இக்கால கட்டத்தில்தான் இந்தியாவில் மிகப்பலம்பொருந்திய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.ஆனால் ஈழத்தமிழர்களோ பலமான தலைமயற்று,தூர நோக்கற்ற அரசியலுடன் காணப்படுகின்றனர்.

இலங்கையில் நிகழ்ந்த குண்டுத்தாக்குதல்களும் அதுதொடர்பான இலங்கை ஆட்சியாளர்களின் அரசியலும் கடல்வழியே,தென்முனையில் இந்தியாவிற்கு எதிரான அபாய எச்சரிக்கையை விடுக்கும் தன்மையுள்ளவையாக காணப்படுகின்றன.கடல்சார் மக்கள் திரளுடன் கூடிய பாதுகாப்பு வலமயாக ஈழத்தமிழர்கள் காணப்படுவது இங்கு அருகிப்போகும் அபாயத்தைக் கொண்டுள்ளது.தெற்கே கடல்சார் பாதுகாப்பின் அவசியம் ஈழத்தமிழரின் பாதுகாப்பு பலப்படும் பின்னணியிற்தான் தங்கியுள்ளது.அணுகுண்டை விடவும் மக்கள் பலமே மிகபெரும் வலுவான ஆயுதமாகும். அத்தகைய ஈழத்தமிழர்களை பாதுகாக்கும் விடயத்திற்கு இந்தியா முதன்மை கொடுக்கவேண்டிய அவசியம் இந்தியாவின் கோணத்திலிருந்து எழுகிறது.அதேவேளை இந்தியாவின் ஆதரவின்றி ஈழத்தமிழர்கள் தம்மைத்தக்க வைக்கவும் முடியாது.இதில் இருதரப்பினரும் பழைய வரலாற்று தவறுகளை மறந்து புதிய வரலாற்றுப் பாதைக்கு தயாராகவேண்டும்.இந்தியாவில் பலம்பொருந்திய அரசாங்கம் உருவாகியிருக்கும் இந்தக் காலகட்டமே இதற்கான கடைசி சந்தர்ப்பமாகும்.இச்சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால் இன்னும் சில ஆண்டுகளின் பின் இலங்கையில் ஈழத்தமிழர்களும் இல்லை.”இலங்கைத்தீவில் இந்தியாவிற்கு எவ்வித ஏதுக்களும் இல்லை என்ற நிலைமையே உருவாகும்”.கடந்த ஒரு நூற்றாண்டுகால வரலாற்றுப்போக்கின் தர்க்கபூர்வ வளர்ச்சி இதனையே காட்டி நிற்கின்றது.இலங்கைத்தீவில் இந்தியாவை நோக்கியவாறு இருக்கும் தமிழர்வாழும் நிலப்பரப்பில் தமிழீழ அரசு அமையும் போது அரபிக்கடலும் வங்கக்கடலும் இந்தியாவின் பாதுகாப்புடன் கைகோர்க்கும்.அப்போது இலங்கையிலிருந்து எந்த சக்தியாலும் இந்தியாவிற்கு எதிரான Entanglement எனப்படும் ஊடுருவல்களையோ சிக்கவைக்கும் முறைகளையோ பின்பற்றமுடியாது.இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கடல்ரீதியாக ஊடுருவல் அச்சமின்றி பலமுற்று இருக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *