Search
Tuesday 20 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஈழத் தமிழ் லொபியின் தோல்வி?

ஈழத் தமிழ் லொபியின் தோல்வி?

யதீந்திரா

யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கழிந்துவிட்டது. இந்தக் காலகட்ட தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால், பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ்த்தேசிய தரப்பினரும் சர்வதேச சமூகம் தொடர்பிலேயே தமது கரிசனையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். ‘சர்வதேச சமூகம் எங்களை கைவிடாது’ – என்பதுதான் அனைவரதும் சுலோகமாக இருந்தது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் – கூட்டமைப்பின் கொள்கையை விமர்சித்து வேறு வழியில் சென்றவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. அதே போன்று ஜரோப்பிய மைய தமிழ் புலம்பெயர் அமைப்புக்களான நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC) மற்றும் USTAG போன்ற தாராளவாத புலம்பெயர் அமைப்புக்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. ஆனால் சர்வதேச சமூகம் என்பது சர்வதேச அரசியலுக்குட்பட்டது என்னும் புரிதலுடன் இந்த விடயம் அணுகப்பட்டதா என்பது ஒரு பெரிய கேள்வியாகும். தமிழ் லொபி தொடர்பில் பேசியவர்கள் இந்த விடயம் தொடர்பில் எந்தளவு தெளிவுடன் இருந்தனர் என்பதும் ஒரு பெரிய கேள்விதான்.

கடந்த ஒரு தசாப்தகால ஈழத் தமிழர் லொபியை (Tamil Lobby) உற்றுநோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலையாகும். அதாவது, தமிழ் லொபி என்பது ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளையும் அதன் பிரதிபலிப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதாவது, தமிழ் லொபியிஸ்டுகளின் பார்வையில், சர்வதேச சமூகம் என்பது ஜக்கிய நாடுகள் சபை மட்டும்தான். ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களில் கிரமமாக பங்குபற்றுவது, இதன்போது பிரசன்னமாகும் மேற்குலக ராஜதந்திரிகளுடன் ஊடாடுவது, பக்க நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது. இதற்கு மேல், ஜெனிவாவில் சிலரை ஒன்றுதிரட்டி சத்தமிடுவது – இதற்கு அப்பால் தமிழ் லொபியால் பயணிக்க முடியவில்லை. சர்வதேச சமூகம் என்பதை ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டுக்குள் குறுக்கிக் கொண்டதே இதற்கான காரணமாகும்.

Diaspora-Organisations-

சர்வதேச சமூகம் என்பது – சர்வதேச அரசியல் ஒழுங்கிற்குட்பட்டது. சர்வதேச அரசியல் என்பது – பலம்பொருந்திய நாடுகளின் அதிகார மோதல்களில் தங்கியிருக்கின்றது. இந்த அதிகார மோதலின் மத்தியில், ஜக்கிய நாடுகள் சபை என்பது மிகவும் பலவீனமானதொரு அமைப்பாகும். வல்லரசுகளின் அதிகார மோதலை சமாளிக்கும் முயற்சியில் ஜ.நாவின் செயற்திறன் மிகவும் மட்டுப்பட்டதாகும். தமிழ் அரசியல் லொபி, கடந்த ஒரு தசாப்தகாலமாக, இவ்வாறானதொரு பலவீனமான அமைப்பை மையப்படுத்தியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இன்று ஜக்கிய நாடுகள் சபை தொடர்பில் அமெரிக்க குடியரசு நிர்வாகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவை, யுனெஸ்கோ ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா வெளியேறிருக்கின்றது – தற்போது உலக சுகாதார அமைப்புடனான உறவையும் அமெரிக்கா துண்டித்திருக்கின்றது. ஒரு வேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி ஆட்சியை கைப்பற்றுமாக இருந்தால், ஒரு வேளை இந்த நிலைப்பாடுகளில் மாற்றங்களும் ஏற்படலாம். ஆனால் மீண்டும் குடியரசு கட்சி ஆட்சிக்கு வருகின்ற போது, மீண்டும் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனான தொடர்பை அமெரிக்கா துண்டிக்கும் ஏனெனில் ஜ.நா மனித உரிமைகள் பேரவையை கொள்கை அடிப்படையில் அமெரிக்க குடியரசு கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்காவில் ஆட்சியமைக்கும் இரு பிரதான கட்சிகளின் கொள்கை நிலைப்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை, தமி;ழ் மக்களுக்கு சாதகமானதாக புரிந்துகொள்ள முற்படும் ஒரு போக்கும் தமிழ் லொபியிஸ்டுகள் மத்தியில் காணப்படுகின்றது. இது அடிப்படையிலேயே தவறான ஒன்றாகும். சுருங்கச் சொன்னால் தமிழர்களை ஆதரித்தல் என்னும் நிலைப்பாட்டில் இன்றைய நிலையில் எந்தவொரு நாடும் இல்லை. நாடுகளை அப்படியான நிலையை நோக்கி தள்ளக் கூடிய லொபியாற்றலும் தமிழர்களிடத்தில் இல்லை. ஒப்பீட்டடிப்படையில் கனடிய அரசுடன் ஊடாடகக் கூடிய ஆற்றலை அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் பெற்றிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அதனைக் கொண்டு அமெரிக்காவை நெருங்கக் கூடிய ஆற்றலை இதுவரை தமிழர்கள் நிரூபிக்கவில்லை.

அரசியல் லொபி என்பது யூதர்களால் பிரபலமான ஒன்றாகும். அடிப்படையில் லொபி என்பது ஒரு இலக்கை முன்னிறுத்தி மற்றவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தி, தங்களின் நலன்களை வெற்றிகொள்வதாகும். இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால் லொபி என்பது அதிகாரத்தை இலக்கு வைக்கும் ஒரு தொடர்ச்சியான செயலாகும். இந்த பி;ன்புலத்தில் சிந்தித்தால், 2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் லொபி வெற்றியளிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழ் லொபியிஸ்டுக்கள் ஜ.நாவிற்குள் மட்டும் கூடாரமிட்டுக் கொண்டிருந்தமையாகும். ஆனால் ஜ.நா பலம்பொருந்திய நாடுகளின் நிகழ்சிநிரலுக்குள் சிக்குப்பட்டு திணருகின்ற சந்தர்ப்பங்களில், தமிழ் லொபி பூச்சிய நிலைக்கு சென்றுவிடுகின்றது. தமிழ் லொபி கடந்த ஒரு தசாப்தகாலமாக தோற்றுக் கொண்டிருக்கின்ற இடமும் இதுதான்.

உலக அரசியல் என்பது நிலவுகின்ற அதிகாரத்தை பாதுகாத்துக் கொண்டு, அதிகாரத்தை பெருக்கிக் கொள்வதற்கான தொடர்ச்சியான இயங்குநிலையாகும். இதனை ஒரு பிரமிட் வடிவில் சிந்திக்கலாம். பிரமிட்டின் கூர்முகம்தான் பலம்பொருந்திய நாடுகளின் இடம். பிரமிட்டின் மத்திய பகுதியில் இடைநிலை அல்லது நடுத்தர நாடுகள் இருக்கின்றன. பிரமிட்டின் அடிநிலையில் இருப்பவைதான் சிறிய நாடுகள். இதனை அடிப்படையாக் கொண்டுதான் நாடுகளுக்கிடையிலான சர்வதேச உறவுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பலம்பொருந்திய நாடுகளின் அதிகார மோதல்களுக்குள் உள்நுழைய விரும்பாத சிறிய நாடுகள் தங்களை அணிசாரா நாடுகளாக முன்னிறுத்துகின்றன. பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து, சிறிலங்கா தன்னை அணிசாரா நாடாகவே முன்னிறுத்தி வருகின்றது. அந்த வகையில் சிறிலங்காவின் வெளிவிவகார அணுகுமுறை ஒரு அணிசாரா அணுகுமுறையாகும். இதனை சிறிலங்கா அதன் பலமாகக் கருதுகின்றது. இந்த அணுகுமுறையில் எப்போதெல்லாம் சறுக்கல்கள் ஏற்படுகின்றனவோ, அப்போது சிறிலங்கா அதிகார மோதல்களுக்குள் சிக்குப்பட நேர்கிறது. 1987இல் இந்தியாவின் நேரடியான தலையீடு இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் நிகழ்ந்தது. சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, தனது பதவிப்பிரமான உரையின் போது – நாம் ஒரு சிறிய நாடு – நாம் பலம்பொருந்திய நாடுகளின் அதிகார மோதல்களுக்குள் தலையீடு செய்ய விரும்பவில்லை என்று கூறியதை இந்த பின்புலத்தில்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். மறுபுறமாக, சிறிலங்காவின் அணிசாரா வெளிவிவகார அணுகுமுறைதான் ஜ.நா மனித உரிமைகள் பேரவையை கையாளுவதற்கான வாய்ப்பையும் அதற்கு வழங்குகின்றது.

ஜக்கிய நாடுகள் சபையை மட்டும் இலக்கு வைக்கும் தமிழ் லொபி, ஒரு போதும் வெற்றியளிக்காது. கடந்த ஒருதசாப்தகால அனுபவங்கள் இதனை தெளிபுபட உணர்த்தியிருக்கின்றன. தமிழ் லொபியை ஜ.நாவிற்கு வெளியில் கொண்டு செல்வது தொடர்பில்தான் தமிழ் லொபியிஸ்டுக்கள் சிந்திக்க வேண்டும். ஜ.நா என்பது ஒரு பல்தரப்பு ராஜதந்திரத்திற்கான களம் ஆனால் அந்த பல்தரப்பு ராஜதந்திரம் என்பது சிறிலங்காவிற்கே அதிகம் சாதகமாக இருக்கின்றது ஏனெனில் சிறிலங்கா ஒரு அரசு என்னும் வகையில், ஒரே நேரத்தில் பல தரப்புக்களையும் கையாளும் ஆற்றலை கொண்டிருக்கின்றது. எனவே ஜக்கிய நாடுகள் சபையில் என்னதான் சிறிலங்கா தொடர்பாக விவாதித்தாலும், சிறிலங்காவின் அணிசாரா அணுகுமுறை அதன் கவசமாக முன்வந்து சிறிலங்காவை பாதுகாக்கும். இந்த இடத்தில்தான் யூத லொபியை தமிழ் லொபியிஸ்டுக்கள் உற்றுநோக்க வேண்டும். யூத லொபி என்பது ஜக்கிய நாடுகள் சபையில் தஞ்சமடைந்த ஒன்றல்ல. மாறாக அது உலகின் அதிகார சக்திகளை கையாளும் இருதரப்பு ராஜதந்திர அணுகுமுறையையே அதன் இலக்காகக் கொண்டிருந்தது. அது மிகவும் தெளிவான அமெரிக்க சாய்வு நிலையை கொண்டிருந்தது. அமெரிக்க சாய்வு நிலைதான் யூதர்களின் எழுச்சிக்கும், மீட்சிக்கும் பக்கபலமானது. அதன் மூலமே யூதர்கள் அதிகார தரப்பாக மீண்டெழுந்தனர். தமிழ் லொபியிஸ்டுகள் கண்மூடிக்கிடக்கும் இடமும் இதுதான்.

Geneva-UN_4

தமிழ் லொபியின் வெற்றியென்பது இலங்கையை, தெற்காசியாவை மையப்படுத்திய புவிசார் அரசியலை கையாளுவதில்தான் தங்கியிருக்கின்றது. புவிசார் அரசியலை கையாள வேண்டுமாயின் தமிழ் லொபி இரண்டு தளங்களின் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்று மேற்குலகின் தலைமையான அமெரிக்காவின் நலன்களோடு தமிழ் லொபி தன்னை அடையாளப்படுத்த வேண்டும். அடுத்தது, பிராந்திய சக்தியான இந்தியாவுடன் உரையாடலில் இருக்க வேண்டும். இந்தியாவை புறம்தள்ளி மேற்குலகுடன் மட்டும் நிற்பதன் மூலமும் எந்தவொரு நன்மையும் கிட்டப் போவதில்லை. இந்தியாவின் நலன்களுக்கு தமிழர்கள் எதிரானவர்கள் அல்லர் என்பதை இந்திய ஆளும் வர்க்கம் நம்ப வேண்டும். ஆனால் இந்த இடத்திலும் தமிழ் லொபியிஸ்டுக்கள் என்போர் கண்மூடித்தான் கிடக்கின்றனர். 2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்பத்தில், இந்தியாவை கையாளுதல் என்னும் அடிப்படையில் எந்தவொரு லொபியும் இடம்பெறவில்லை. ஜ.நா மனித உரிமைகள் பேரவையை வட்டமிடுவதன் மூலம் அனைத்தையும் வெற்றிகொண்டுவிடலாம் என்னும் மாயையிலேயே ஒரு தசாப்தம் கழிந்திருக்கின்றது.

மேலும் தமிழ் லொபி தொடர்ந்தும் தோல்வியடைவதற்கு தமிழ் லொபியிஸ்டுக்கள் என்போர் மத்தியில் காணப்படும் போதாமைகளும் முக்கியமானவை. பலம்பொருந்திய நாடுகளின் கொள்கை வகுப்புக்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல மேற்குமைய சர்வதேச ஊடகங்களில், தமிழ் லொபியை உள்நுழைப்பதற்கேற்ற ஊடக ஆளுமைகள் தமிழர்களிடத்தில் இல்லை. சர்வதேச உறவுகள் மற்றும் புவிசார் அரசியல் சார்ந்து கருத்துருவாக்களில் செல்வாக்குச் செலுத்தும் சிந்தனைக் கூடங்களுடன் (Think Tanks) ஊடாடக் கூடிய சிந்தனைக் கூடங்கள் தமிழர்களிடத்தில் இல்லை. இவ்வாறான பல்வேறு காரணங்களால்தான், தமிழ் லொபி தொடர்ந்தும் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றது.


One thought on “ஈழத் தமிழ் லொபியின் தோல்வி?

  1. ந.சதாசிவ ஐயர்

    உண்மைதான் இங்கு மக்களுக்கு கதை சொன்னார்களே தவிர அதற்கென ஒர அணியை உருவாக்கி செயற்படவில்லை.ஒற்றுமையாகவும் முன்வைக்கவில்லை. புலம் பெயர் அமைப்புகளும் அப்படியே ஒரு கட்டமைப்புக்குள் நிற்கவில்லை.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *