Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்காவில் கலந்துரையாடல் சீன இலங்கை உறவின் நிலை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்காவில் கலந்துரையாடல் சீன இலங்கை உறவின் நிலை?

அ.நிக்ஸன்
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

செவ்வாய்க்கிழமை பயணம்
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கையின் உயர்மட்டக்குழுவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவும் இந்தக் கலந்துரையாடலில் பங்குகொள்ளவுள்ளது.

வோஷpங்டன் டிசி நகரில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் பங்குகொள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய பூகோள அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ற இந்தோ – பசுபிக் மூலோபாயம், இலங்கை, ஆசியப் பிராந்தியம், இராணுவ உறவுகள், இலங்கையின் உள்ளக அமைதிக்கான உதவி, ஏனைய நாடுகளின் இராணுவப் பயன்பாடுகள், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஆற்றல்களை மேம்படுத்தல் போன்ற விடயங்களும் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளன.

அத்தோடு பிராந்தியப் பாதுகாப்பு, உள்ளகப் பாதுகாப்பு, பயங்கரவாதத்தை முறியடிப்பது, நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது போன்றவை உட்பட பல்வேறு விடயங்களும் இந்தக் கலந்துரையாடலில் பேசப்படவுள்ளன. இதன் பின்னர் மெக்சிக்கோவுக்குப் பயணம் செய்யவுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அங்கு அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டைச் சந்தித்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான இலங்கையின் நிலை தொடர்பாக உரையாடவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

easter attach 1

அமெரிக்காவின் ஏற்பாட்டில்
அமெரிக்காவின் ஏற்பாட்டிலேயே அமைச்சர் திலக் மாரப்பன மெக்சிக்கோவுக்குப் பயணம் செய்வதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை, இந்தப் பயணத்துக்கு முன்னதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக உயர்மட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் திலக் மாரப்பனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் சந்தித்து உரையாடுவரெனவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது. இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தைக் குறைத்துத் தமது நிலைகளை இலங்கையில் மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து அமெரிக்கா, இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் பல நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேதான் சென்ற 21 ஆம் திகதி இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல்களை ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் நடத்தினர். தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதல்நாள் அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தரித்து நின்றன. ஆனால் தாக்குதலையடுத்து இலங்கைப் படைகளுடனான கூட்டுப் பயிற்சிகளை நிறுத்திவிட்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சென்று விட்டன.

அத்துடன் தமிழர் தாயகமான முல்லைத்தீவுக் கடலில் இருந்து கிழக்கு மாகாணம் திருகோணமலை வரையான அமெரிக்காவின் எண்ணெய் வயல் ஆய்வும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி எண்ணெய் வயல் ஆய்வை அமெரிக்கா ஆரம்பித்திருந்தது. எனவே அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் கருதப்பட்டது. அத்துடன் ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் இலகுவாக ஒன்று கூடும் நிலத்தொடர்புள்ள பிரதேசங்கள் குறிப்பாக சிரியாவில் உள்ள அவர்களின் பிரதான முகாம்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாகவே அமெரிக்கா மார்தட்டியிருந்தது.

easter attach 2

சீனாவின் இராணுவ உதவி
ஆகவே நிலத்தொடர்பில்லாத நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கையில், அதுவும் இலங்கையில் பூர்வீகமாக வாழும் முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல், பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் அதிர்ச்சியையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாகவே அவசர அவசரமாகக் கொழும்புக்கு வந்து தற்கொலைத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய மேற்குலக நாடுகளின் இராணுவப் புலனாய்வாளர்கள், தற்போது அமெரிக்காவில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் இலங்கையுடன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில் சீனா இலங்கை முப்படைகளுக்கும் தேவையான பல மில்லியன்கள் பெறுமதியான அதிநவீன வாகனங்களை வழங்கியுள்ளது. அதேவேளை, இந்தக் கலந்துரையாடலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன தலைமையிலான குழு அமெரிக்காவுக்குச் செல்வதை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கவில்லையெனவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

easter attack


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *