Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலும் பிரியப் போகும் கூட்டுக் கட்சிகளும்….?

உள்ளூராட்சி தேர்தலும் பிரியப் போகும் கூட்டுக் கட்சிகளும்….?

ருத்திரன்-

தமிழ் தேசிய இனத்தின் ஆயுத ரீதியான உரிமைப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னரும் கடந்த மஹிந்த அரசாங்கம் வெற்றிவாதத்தில் திழைத்திருந்ததுடன், தமிழ் தேசிய இனத்தை தொடர்ந்தும் அடக்கி ஆழ்வதில் கவனம் செலுத்தியிருந்தது. இதன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் பெருவாரியான ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்றாண்டுகள் நெருங்கும் நிலையில் நல்லாட்சி எனக் கூறப்படும் மைத்திரி – ரணில் அரசாங்கம் கடும் நெருக்கடிகளை உள் நாட்டில் எதிர்நோக்கி வருகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக இருந்த அழுத்தங்களை தமிழ் தேசிய இனத்தின் தலைமைகளின் உதவியுடன் மைத்திரி – ரணில் அரசாங்கம் குறைத்திருக்கின்றது. சர்வசே சமூகத்துடன் கைகோர்த்து செயற்படக் கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறது. ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் இணை அணுசரனை வழங்கக் கூடிய நிலமை உருவாகியது. ஐ.நாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மீண்டும் இந்த அரசாங்கம் கால நீடிப்பையும் பெற்றிருக்கின்றது. ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் தலைமை சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக காணப்பட்ட அழுத்தத்தை வினைத்திறனுடனும், இராஜதந்திரத்துடனும் கையாண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுப் கொடுப்பதற்கு பதிலாக அரசின் நிகழ்ச்சி நிரலுடன் இணைந்து சென்றிருக்கின்றது.

சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்கும் நிலையில் உள்ள அரசாங்கம் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலையிலேயே அரசாங்கமும் அதன் இரு பிரதான கட்சிகளும் காணப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டும் பட்சிகளுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. மஹிந்த தலைமையிலான பொது எதிரணியும் இந்த அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டத் தொடங்கியுள்ளன. கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்து ஊழலற்ற ஆட்சியை உருவாக்கப் போவதாக ஆட்சி மாற்றத்தின் போது இரு தலைவர்களும் கூறிய போதும், அதனை துரிதமாக செயற்படுத்த விருப்பமின்றி அல்லது இயலாமையில் இருப்பதையே காணமுடிகிறது. நல்லாட்சி எனக் கூறப்படும் இந்த அரசிலும் முறைகேடுகள் தொடர்பில் சில அமைச்சர்கள் சிக்கியுள்ளமை தென்னிலங்கையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் தென்னிலங்கையின், பௌத்த அடிப்படைவாத, இனவாத சக்திகளால் புதிய அரசியலமைப்பு ஊடாக நாடு பிளவு அடையப் போவதாக தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தென்னிலங்கையின் சில ஊடகங்களும் துணை போகின்றன. இது புதிய அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதுடன், மகாநாயக்க தேரர்களின் மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாவே அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அச்சு ஊடகங்களை கடுமையாக விமர்சித்திருந்தனர். ‘புதிய அரசியலமைப்பு தொடர்பில், ஊடகங்கள் கிடைக்கப்பெற்றுள்ள ஊடக சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டு உண்மைக்கு மாறான பொய்யான கருத்துக்ளை பக்கம் பக்கமாக எழுதி மக்கள் மத்தியில் அவற்றை பரப்பி வருவதாகவும், மகாநாயக்கர்களை தவறாக வழிநடத்த முற்படுபடுவதாகவும்’ அச்சு ஊடகங்களை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்தும் இருந்தார். இத்தகைய விமர்சனம் என்பது தென்னிலங்கையில் மைத்திரி – ரணில் அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியின் வெளிப்பாடு என்பதை மறுத்து விடவும் முடியாது.

இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் தேசிய இனம் பெருவாரியாக தமது வாக்குகளை வழங்கிய போதும் இன்று இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்தவர்களாக அரசிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன….? என நீதி கோரியும், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. தமிழ் மக்களின் தலைமையாக கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து வரும் நிலையில் மக்கள் தாமாகவே, தன்னெழுச்சியாக போராட்டங்களை கடந்த 9 மாதங்களாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை இந்த அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. அரசிற்கு ஆதரவாக செயற்படும் கூட்டமைப்பு தலைமைக்கு எதிராகவும் மக்கள் அவ்வப்போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் துணிந்து விட்டனர். இது இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள விரக்தியின் வெளிப்பாடே. தமிழ் தேசிய இனத்தின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளும், ஐ.நா நிபுணர்களும் இலங்கையை அவ்வப்போது எச்சரித்தும் வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கம் ஆனது வடக்கு, தெற்கு என வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த இலங்கையிலுமே சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.

நாட்டில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் அதற்கு உடனடியாக தேர்தலை நடத்த முடியாத நிலையே உள்ளது. எல்லை மீள்நிர்ணயம், புதிய தேர்தல் முறையிலான சட்ட திருத்தம் என்பன நடந்தாலும், உண்மையில் பிரிந்து நின்று தனித்து தேர்தலைக் எதிர் கொள்ளக் கூடிய நிலையில் இரு பிரதான கட்சிகளும் இல்லை. தற்போது உள்ள அரசியல் சூழலில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் மகிந்தாவின் கை ஓங்கி விடலாம் என்ற ஒரு வித அச்சநிலை மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் காணப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது அந்த நேரத்தில் நடைபெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

நவம்பர் 16 ஆம் திகதிக்குள் வர்த்தகமானி அறிவித்தல் வெளியிட்டால் மட்டுமே ஜனவரி மாதத்தில் தேர்தல் நடத்துவது பற்றி யோசித்து முடிவெடுக்க முடியும். வர்த்தமானி அறிவித்தலே வராத நிலையில் தேர்தல் திகதியை நிர்ணயிப்பது கடினம் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளமையால் அந்த முறையின் கீழான ஒரு பரீட்சார்த்த களமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தலை முதலில் நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த புதிய தேர்தல் முறையின் நன்மை, தீமை குறித்து ஆராய்வதற்கு இரு பிரதான கட்சிகளும் முனைப்பு காட்டுவதாகவே தெரிகிறது. இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் தென்னிலங்கை போன்றே உள்ளது. கூட்டமைப்பு தலைமை மீதும் மக்கள் கோபம் கொண்டுள்ள நிலையில் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த போரின் சாட்சியங்களாகவுள்ள அந்த இரண்டு பிரதேசங்களின் தேர்தல்களில் கூட்டமைப்பின் வாக்கு வங்கி எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை ஆராய்வதற்கான களமாகவும் அந்த தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சி பரிசீலிக்கலாம். இலங்கை தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் இந்த தேர்தலில் தமது செல்வாக்கு சரிவடைந்தால் ஏனைய தேர்தல்களிலும் அது தாக்கத்தை செலுத்தும் என்ற காரணத்தினால் அரசாங்கத்திடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு முயற்சித்து வருவதாக தெரிகிறது. இதற்காகவே இப்பெழுது மாற்றி அமைக்கப்பட்ட பிரதேச சபைகளின் எல்லைகள் தொடர்பில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களாக திகழ்கின்ற அரசாங்க அதிபர்களிடம் மக்கள் கருத்துக்களை கேட்டறியுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறாக செயற்பட்டு வருவதாகவும், இந்த அரசாங்கத்தை நெருக்கடிகளில் இருந்து பாதுகாத்து முண்டு கொடுத்து வருவதாகவும் பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் பிரதான கட்சியாகிய தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளியும், தன்னிச்சையாகவும், செயற்படுவதுடன் நல்லாட்சி அரசாங்கத்திடம் இணக்க அரசியல் என்னும் பெயரில் சரணாகதி அடைந்து விட்டதாகவே மக்கள் கருதும் நிலை உருவாகியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஐ.நா தீர்மானம் வலுவிழந்ததில் இருந்து கால அவகாசம் வழங்கப்பட்டது வரை உள்ள சர்வதேச நெருக்கடிகளை குறைப்பதற்கும், தமிழ் மக்களது அபிலாசைகளையும், அவர்களது கோரிக்கைகளையும் புறந்தள்ளி கொண்டு வரப்படவுள்ள புதிய அரசியலமைப்பை ஏற்கச் செய்வதிலும் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் இத்தகைய செயற்பாடுகளை பகிரங்கமாக ஈபிஆர்எல்எப் எதிர்த்து வருவதுடன், ரெலோ, புளொட் என்பன தமிழரசுக் கட்சிக்கான எதிர்ப்பு வலுவடையும் பட்சத்தில் அதனை ஒட்டி எழக்கூடிய கூட்டணியுடன் இணைவதற்கு வசதியாக எந்தவொரு விடயத்திலும் தமது கருத்துக்களை முன்வைக்காமல் அமைதி காத்து வருகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய நான்கு கட்சிகளும் தனித்தனியாக தமது வேட்பாளர்களை தேடும் பணியை ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு கட்சிகளும், இந்த உள்ளூராட்சி தேர்தலில் தமது இருப்பை நாடி பிடித்து பார்ப்பதற்கும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ரெலோ தமிழரசுக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்கும் நேரம் கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்தமையும், தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியன இணைந்து போட்டியிடுவது குறித்து பேசியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த உள்ளூராட்சித் தேர்தல் எப்படி அமையும் என்ற கேள்வியும், சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. வட்டார முறையிலான புதிய தேர்தல் முறை அந்த சிக்கலை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றது. ஆக, உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பது தென்பகுதியை மட்டுமன்றி வடக்கு, கிழக்கு என ஒட்டுமொத்த இலங்கையின் அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்திருக்கின்றது. உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் மக்கள் எடுக்கும் முடிவுகளே அடுத்த கட்ட அரசியல் கூட்டுக்களையும், நகர்வுகளையும் தீர்மானிக்கவும் போகிறது.

எந்தவொரு கட்சியும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ மக்களை சந்திப்பதற்கு தயக்கம் காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது. இதில் சில அரசியல் கட்சிகள் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவுகளை வழங்கிய போதிலும், அவர்களை வழிநடத்துவதற்கோ அல்லது தலைமை தாங்குவதற்கோ முன்வரவில்லை. மிதவாத அரசியலில் இருந்து ஆயுதப் போராட்டம் தொடக்கப்பட்ட ஆரம்ப காலம் வரை ஆயுதப் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டும் வகையில் பல்வேறு மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவைகளுக்கு அந்த அமைப்பினர்கள் தலைமை தாங்கியும் வழிநடத்தியும் இருந்தனர். இன்று அந்த அமைப்புக்களின் முதல் தர தலைவர்கள் இல்லை. இரண்டாம் நிலை தலைவர்கள் இன்று தலைமையேற்று ஜனநாயக வழி முறையில் அரசியல் கட்சிகளாக செயற்படுகின்றனர். அவர்களால் மக்களுக்கு தலைமை கொடுக்க முடியாமல் இருப்பது என்பது கவலை அளிப்பதாக இருக்கிறது. மக்கள் போராட்டங்களை கையில் எடுத்து மக்களுடன் நின்று அவர்களை ஒரு கட்டமைப்புக்குள் வழிநடத்தக் கூடியவர்களையே மக்கள் தமது தலைவர்களாகவும், தமக்கு உரியவர்களாகவும் ஏற்றுப் கொள்வார்கள். இதனை உணர்ந்து இனியாவது கட்சித் தலைவர்கள் செயற்பட வேண்டும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *