தலைப்பு செய்திகள்

எத்தனை காலம் தான் எமாற்றுவார் இந்த வீட்டிலே?

எத்தனை காலம் தான் எமாற்றுவார் இந்த வீட்டிலே?

லோ. விஜயநாதன்

தேர்தல் காலம் என்றவுடன் தமிழரசு கட்சிக்கும் அதன் தலைமைகளுக்கும் புலிகளால் தோற்றுவிக்கப்பட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு , புலிகள் உடன்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் படியான தீர்வு என்று எல்லாம் புலிகள்தான் (செய்ததாக) பிரச்சாரமாக வருகின்றது. உண்மையில் புலிகளின் வழியில் இவர்கள் செயற்பட்டிருந்தால் இவர்கள் புலிகளை துணைக்கு அழைக்கவேண்டியதில்லை என்பதை மக்களே அறிந்திருப்பார்கள் . சிங்களப்படைகளின் பாதுகாப்புடன் ஒரு காலத்தில் கருணா, பிள்ளையான் போன்றோர் வலம் வந்ததுபோல் ஏன் இவர்களுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

முதலில் தமிழீழ விடுதலைப்புலிகள் என்றால் என்ன? தமிழீழம்- தாயகம், விடுதலை-சுதந்திரம், புலிகள்- போராளிகள் . அதாவது சுதந்திர தமிழீழத்துக்காக போராடுபவர்கள். தனியே ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் மட்டும் போராளிகள் அல்ல அவ்விலக்கு நோக்கி ஏதாவது வழியில் பயணிப்பவர்களும் போராளிகள் தான். அதனால்தான் புலிகளால் அவ்வழியில் செயற்பட்டவர்களுக்கு “மாமனிதர்கள்” என்ற கெளரவிப்பு வழங்கப்பட்டது.

1976ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நெஞ்சில் வரியாகவரைந்து போராடியவர்களே தமிழீழ விடுதலைப் புலிகள். ஆனால் தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்கு மாவை சேனாதிராஜா வந்தவுடன் முதலில் கூறியதே அவ்வட்டுக்கோட்டை தீர்மானத்தை தாம் கைவிட்டு விட்டதாக என்பதாகும் (தீர்வு விடையத்தில் எந்தவித இணக்கமும் எட்டப்படாமல்). இதைத்தான் 25 வருடங்கள் போராடிவிட்டு கருணாவும் செய்தவர். பின்னவர் காக்கைவன்னியன் வழியில் வந்த துரோகியென்றால் முன்னவர் யார்?

அன்று எந்தபேச்சுவார்த்தைக்கும் முன் நிபந்தனையாக விடுதலைப் புலிகளால் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இயல்புவாழ்க்கை ஏற்படுத்தப்படல் வேண்டுமென சிறிலங்கா அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கும். அதை ஏற்று சிறிலங்கா அரசும் சிலநடவடிக்கைகளை செய்யும். ஆனால் இன்றோ சர்வதேச நெருக்கடியை சந்தித்திருந்த நிலையில் அதனை முறியடிப்பதற்காக ஒரு சில நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு செய்ய அச் சலுகைகளை தமது சாதனைகளாக தமிழரசு கட்சியினர் காட்டிவருகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் செய்த சாதனைகளாவன:

1) புலிகள் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்து அதை நிறுவனப்படுத்திய அமைப்பாக மாற்றாது அதை சிதைப்பதை மையமாக கொண்டு தேசியத்தின்பால் பற்றுள்ளவர்களை வெளியேற்றி தமிழரசு கட்சியை முதன்மைப்படுத்தியமை.

2) எதிர்கட்சி தலைவர், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர், மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் போன்ற பதவிகளைப் பெற்றுக் கொண்டமை.

3) வடமாகாண சபையை ஆக்கபூர்வமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு நிறுவனமாக மாற்றி அதற்கூடாக சர்வதேச உதவிகளை பெற்று செயற்படாமல் அதை முடக்கும் வகையில் செயற்பட்டமை
( குறைந்தது முதலமைச்சர் நிதியத்தையாவது ஏற்படுத்தியிருக்க வேண்டும்)

4) ஆக குறைந்தது வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட இனவழிப்பு , தமிழர்களுக்கான அரசியல் தீர்வு போன்றவற்றை சாதகமாக அணுகி சர்வதேசரீதியில் நகர்த்த தவறியமை.

5) அபிவிருத்தியென்ற பெயரில் சில குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி நிதி பெற்றுக்கொடுத்தமை ( 70களில் அல்பிரட் துரையப்பாவும் 90களில் டக்ளஸ் தேவானந்தாவும் இதையே தான் செய்தார்கள் ).

6) எந்த தலைவர் தமிழரசு கட்சியை ஸ்தாபித்து சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என்று அறிவித்து சுமார் 60 வருடங்களாக அதை தமிழர்கள் பகிஸ்கரித்துவந்தனரோ அக்கட்சியில் உள்ள இன்றைய தலைவர்கள் அந்நாளை சிங்களதேசத்துடன் கொண்டாடி மகிழ்ந்தமை.

7) பல்லாயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் உதிரங்களால் தமிழ் மக்களுக்கான சர்வதேச கவசமாக கொண்டுவரப்பட்ட ஐ.நா. மனிதவுரிமை சபையின் சிறிலங்கா அரசுக்கெதிரான போர்குற்றச்சாட்டுக்களும் இனவழிப்பு குற்றச்சாட்டுக்களுக்குமான சர்வதேச பொறிமுறை இன்றைய தமிழரசு கட்சித் தலைவர்களால் மழுங்கடிக்கப்பட்டமை.

8) சர்வதேச கோரிக்கையாக வட-கிழக்கில் இருந்து ஆக்கிரமிப்பு இராணுவத்தின் முற்றான வெளியேற்றம் என்பதை தனியார் காணிகளிலிருந்தான இராணுவ வெளியேற்றமாக மாற்றியமைத்தமை.

9) மிக முக்கியமாக தாம் வீழ்ந்தாலும் எக்காரணம் கொண்டும் தமது கொள்கைகளான தாயகம், தேசியம் , சுயநிர்ணயம் தோற்றுவிடக்கூடாது (இவற்றை எந்தவித சமரசத்திற்கும் இடங்கொடுக்காதபடி) என்பதற்காக அரசியல்பிரிவு தலைவர்களை சரணடையும்படியும் இராணுவத்தளபதிகள் இறுதிவரை போராடி மடிவதென்றும் முடிவெடுத்து விடுதலைப் புலிகள் இறுதிப்போரில் செயற்பட்டனரோ அக்கொள்கைகளை அழிக்கும் நோக்கில் சிங்கள-இந்திய கூட்டுச்சதியின் பங்காளிகளாக மாறிய தமிழரசு கட்சி அச்சதியை புதிய அரசியல் அமைப்பு என்னும் பெயரில் தமிழர்களிடையே திணிப்பதற்கு முயற்சிக்கின்றமை:

– புதிய அரசியல் அமைப்பு எனும் பெயரில் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை என்று ஏற்றுக் கொண்டமை

– வரிக்கு வரி பிரிக்கப்பட முடியாத நாடு, பகிரப்பட முடியாத இறைமை என்ற புதிய சொற்களை புகுத்தி
தமிழ் , ஆங்கிலத்தில் உள்ள ஒற்றை ஆட்சி என்ற வாக்கியத்தையும் நீக்கிவிட்டு சிங்களத்தில் எந்த மாற்றமும் செய்யாது இது தமிழர்களுக்கான தீர்வு என்று சிங்கள ஏகாதிபத்தியத்தை கொண்டு செல்லும் ஒற்றை ஆட்சியை தீர்வாக ஏற்றுள்ளமை

– நடைமுறை சாத்தியமில்லை என்று கூறி வட-கிழக்கு இணைப்பு என்ற தாயக கோட்பாட்டை கைவிட்டமை

-நில அதிகாரம் என்று வரும் போது அந்த பகுதி காணியற்ற மக்களுக்கு முன்னுரிமை என்று கூறி எண்ணிக்கையில் மிகசிறிய தமிழர்களிடையே தொடர் சிங்களக் குடியேற்றத்திற்கு வழியமைத்துள்ளமை.

இவற்றைத் தானா புலிகள் கோரிநின்றனர். இவற்றைத்தானா புலிகள் ஒஸ்லோவில் ஏற்றுக் கொண்டனர். இவற்றைத் தானா தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக கோரிவருகின்றனர். இவற்றை அடைவதற்குத்தானா தமிழரசு கட்சியை ஸ்தாபித்த தந்தை செல்வா கோரி நின்றார். இவை தானா தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்தகால தேர்தல் விஞ்ஞாபனம் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது?

ஒரு இனத்தின் வளர்ச்சியானது அதன் பொருளாதார வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது . பொருளாதாரமானது அவ்வினத்தின் வளத்தில் தங்கியுள்ளது . எமது வளமாக நிலமும் , கடலுமே உள்ளன . இன்று முல்லைத்தீவும், எண்ணய் வளம் மிகுந்த மன்னாரும் தொடர் ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டே வட மாகாண முதல,முதலமைச்சர் விக்னேஸ்வரன் பலவீனமான தமிழ் தலைமைகளினால் தமிழ் மக்களின் இருப்புக்கே ஆபத்து வந்துள்ளது என்றும் தமிழ் மக்களை விழித்துக்கொள்ளும்படியும் நேற்றைய தினம் கோரிக்கைவிடுதிருப்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *