Search
Saturday 20 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

என்ன செய்யப் போகிறது தமிழ் மக்கள் பேரவை…?

என்ன செய்யப் போகிறது தமிழ் மக்கள் பேரவை…?

ருத்திரன்-

ஒரு நாடு ஜனநாயகத்தன்மையுடன் அதன் விழுமியங்களை மதித்து நடைபோடுகிறது என்பதை நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவதற்காகவே குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிடுகின்றது. அதற்கேற்பவே உள்ளூராட்சி முதல் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வரை குறிப்பிட்ட கால எல்லை நிர்ணயிக்கப்பட்டு அதன் ஆட்சிக்காலம் நிறைவடைந்தவுடன் அல்லது அதற்கு சற்று முன்னதாகவே தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். இலங்கையைப் பொறுத்த வரையில் பிரிடிஸ் ஆட்சியாளர்களிடம் இருந்து அதிகாரம் கைமாறியதன் பின்னர் இந்த நாட்டின் பாராளுமன்றத் தேர்தல்களே உரிய காலக்கிரமத்தில் நடைபெறாமலும், சில வேளைகளில் பாராளுமன்றம் இடையில் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல்களும் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதன் உச்ச கட்டமாக 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த போது, பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைந்த பின்னரும், அடுத்த ஆயுட்காலம் வரை தேர்தல் நடத்தாமலேயே தனது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் மூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்து இருந்தார்.

தற்போதைய சூழலிலும் உள்ளூராட்சித் தேர்தல்கள் பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ளது. இது அனைவரது கவனத்தையும் ஈர்த்து அரசாங்கத்தையும் ஒரு நெருக்கடிக்குள் தள்ளியிருந்தது. இதன் விளைவாகவே அரசாங்கம் விரும்பாவிட்டாலும் கூட ஒரு தேர்தலுக்கான தயாரிப்புக்களில் ஈடுபட நேர்ந்தது. புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தேர்தல்கள் நடத்தப்படுவது அந்த முயற்சியை சீர்குலைப்பதாக அமையும் என்ற கருத்தை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும், இந்த தேர்தல்கள் ஒத்திப் போவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. நெருக்கடிகளை சமாளிப்பதற்காக தேர்தல்களுக்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அற்கான வேலைகள் நடைபெறுவதாகவும் காட்டிக் கொண்டாலும் இதனை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்பதிலேயே அரசாங்கமும், எதிர்கட்சியும் செயற்படுவதாக தெரிகிறது.

எது எப்படி இருப்பினும், தமிழ் தரப்பைப் பொறுத்த வரையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்கள் மத்தியில் பொருள் பொதிந்த விவாதத்தை மேற்கொண்டு வழிநடத்தல் குழுவில் தமது கருத்துக்களை முன்வைக்கவில்லை என்றும் குறைந்தபட்சம் அங்கத்துவ கட்சிகளுடன் கூட பேசி முடிவெடுக்கவில்லை என்றும் பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் வழிநடத்தல் குழுவில் கூட்டமைப்பின் தலைவராகவும் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் திகழ்கின்ற திரு.சம்மந்தனும், அதே கட்சியைச் சேர்ந்த திரு சுமந்திரனும் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டுள்ளனர். ஒரு அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே விமர்சனத்திற்கு காரணமாகவும் அமைந்திருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய அதிருப்தியான செயற்பாடுகளால் போரில் பலவற்றையும் இழந்து தங்களது நாளாந்த பிரச்சனைகளைக் கூட தீர்த்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ள தமிழ் மக்கள், தங்கள் மீது கரிசனை செலுத்தக் கூடிய, தங்களுடன் இணைந்து செயலாற்றக் கூடிய, தங்களை பற்றுதியுடன் வழிநடத்தக் கூடிய ஒரு தலைமை அல்லது ஒரு இயக்கம் அல்லது ஒரு அரசியல் கட்சி வராதா என்ற அங்கால்ய்புடன் தமது பிரச்சனைகளை தாமே கையில் எடுத்துக் கொண்டு இந்த வருடத்தின் முக்கால் பகுதிக்கும் மேலாக வீதியில் கழித்து வருகின்றனர். மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க கூடிய வகையிலும், உருவாக்கப்படவிருக்கின்ற புதிய அரசியல் யாப்பில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும், ஒரு மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது.

2010 ஆம் ஆண்டு முதலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியாக இயங்குகின்ற அதேவேளையில் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் உள்ள அமைப்புக்களை இணைப்பதற்காக தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்று உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கருவும் உதயமாகியிருந்தது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் முகமாகவே பேரவையும் தோற்றம் பெற்றது. மக்களும் தாங்கள் எண்ணியிருந்த ஒரு அமைப்பு உதயமாகிவிட்டதாக மகிழ்சியடைந்தனர். பேரவையின் அங்குராப்பண நிகழ்வில் இது ஒரு அரசியல் கட்சி அல்ல. தேர்தல்களில் போட்டியிடுவதை நோக்கமாக கொண்டதும் அல்ல. ஆனால் பிலிம்பைன்ஸ் போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்று பேரவையால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளை ஏற்று அதற்கு உழைப்பதாக உத்தரவாதம் அளிக்கக் கூடியவர்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு அமைப்பாக அது செயற்படும் என்றும், அதன் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அபிலாசைகளில் இருந்து தவறும் பட்சத்தில் அவர்களை கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இவை எழுத்து பூர்வமாக இருக்கின்றதா, இல்லையா என்பது வேறு விடயம். அதை பேரவை காத்திரமாக முன்னெடுத்து இருக்கின்றதா என்பதே தற்போதுள்ள கேள்வி.

தற்போதைய சூழலில் வந்திருக்கின்ற இடைக்கால அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் இல்லை என்றும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் என்பது நாடு முழுவதும் நடைபெறக் கூடிய ஒரு சூழலில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றம் தொடர்பில் ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கின்றனர். அதேநேரம் தமிழர் தரப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த இடைக்கால அறிக்கையுடன் இணங்கிப் போகின்ற போக்கையே காணமுடிகிறது. தமிழ் மக்கள் பேரவையும், பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற இரண்டு அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு எதிரானவர்களாக இருக்கின்றனர்.

தமிழ் தலைமைக்கும், இலங்கை அரசிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகள் தொடர்பில் எடுத்துச் சொல்வதற்கும், அழுத்தம் கொடுப்பதற்காகவுமே பேரவை தோற்றம் பெற்றுள்ளதாக சொல்லப்பட்டது. மக்களின் அபிலாசைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்திற்கு அதன் அரசியல் தலைமையின் செயற்பாட்டின் மீது சந்தேகம் எழும்பியிருக்கும் போது அந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக பேரவையின் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்ற நிலையில் அந்த மக்களுக்கு உரிய தலைமையை வழங்கி தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் பேரவைக்கும் இருக்கிறது. தன்னுடைய நோக்கத்தை முன்வைத்து மக்கள் மத்தியில் ஒப்புதலைக் கேட்டு வடக்கிலும், கிழக்கிலும் நடத்திய இரண்டு எழுக தமிழ் பேரணிக்கும் மக்கள் வெள்ளம் எனத் திரண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர். ஆகவே பேரவை ஏனையவர்கள் மீது விரல் நீட்டுவதற்கு முன்னதாக ஏனைய மூன்று விரல்களும் தம்மை நோக்கி திரும்புவதையும் அந்த மூன்று விரல்களும் விலகிச் சென்று விடாமல் பெருவிரல் அமர்த்திப் பிடித்திருப்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். குழப்பத்தில் இருக்கும் மக்களை மேலும் மேலும் குழப்பாமல் சரியான மக்கள் பிரதிநிதிகள் உருவாகுவதற்கும், பேரவையின் எண்ணக்கருக்களை முன்னெடுத்துச் சென்று மக்களை அணிதிரட்டுவதற்கும் பற்றுதி மிக்கவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிய பொறுப்பும் பேரவைக்கு இருக்கிறது. இந்த கடமையில் இருந்து பேரவை தவறுமானால் சிறு சிறு குழுக்களாக ஆங்காங்கே நின்று கொண்டு சமூக மாற்றம்திற்காகவோ அல்லது சமூகத்தின் அபிவிருத்திக்காகவோ எதுவும் செய்யாமல் வாய் சொல் வீரர்களாக எல்லாமே தவறு என்று விமர்சனம் செய்பவர்களைப் போன்றே இவர்களையும் நோக்க வேண்டி வரும். பேரவை நேரடியாக அரசியலுக்கு வருகிறதோ அல்லது மறைமுகமாக வருகிறதோ என்பது இல்லை கேள்வி. அது தோற்றம் பெற்றத்தற்கான தேவையையும், நோக்கத்தையும் புரிந்து பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணமிது.

இனியாவது நேரத்திற்கு ஒரு பேச்சைப் பேசாமல் நோக்கத்தில் இருந்து திரும்பி விடுவமோ, பழிச் சொல்லுக்கு ஆழாகிவிடுமோஇ நமது கௌரவத்திற்கு பாதிப்பு வந்து விடுமா என்றெல்லாம் தனி மனித ஒழுக்கம் சார்ந்து சிந்திக்காமல் ஒரு சமூகத்தின் விடியலுக்கான பொறுப்பை ஏற்றுள்ளோம் என்ற சமூக சிந்தனையில் அடிப்படையில் செயற்பட முன்வர வேண்டியது பேரவையில் உள்ள ஒவ்வொருவரினதும் இன்றைய தலையையாய கடமையாகும். இதனை அவர்கள் புரிந்து கொள்வதன் மூலமே உண்மையான ஒரு மக்கள் இயக்கமாக அவர்கள் தொடர்ந்தும் செயற்பட முடியும். அதுவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தேவையானதும் கூட.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *