Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

என் மீது நேரடியான யுத்தம் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது; ஆனால் நான் சலனமடைய மாட்டேன் : விக்னேஸ்வரன்

என் மீது நேரடியான யுத்தம் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது; ஆனால் நான் சலனமடைய மாட்டேன் : விக்னேஸ்வரன்

ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் நலனுக்காக தன் மீது நேரடியான யுத்தம் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுபற்றி சலனப்படப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தனது பயணம் பக்குவமாகத் தொடரும் என்றும் சிறுவர்களின் கல்லெறிகள் தன்னை பாதிக்க மக்கள் விட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று ஞாயிறுக்கிழமை ‘தமிழ்க் குரல்’ வானொலியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

இன்றைய தினம் தமிழ் மக்களின் உரிமைக்குரலாக இனிமேல் ஒலிக்கவிருக்கின்ற தமிழ்க்குரல் வானொலியின் அறிமுக விழாவில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். இலங்கையைப் பொறுத்தவரையில் பல்வேறு ஒலிபரப்புக்கள் மற்றும் ஒளிபரப்புக்கள் அரசினாலும் மற்றும் அரசின் ஆதரவுடன் இயங்குகின்ற பல்வேறு நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற போதும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தெட்டத்தெளிவாகப் பெரும்பான்மைச் சமூகத்திற்கும் அரசிற்கும் ஏனைய வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறுவதற்கு ஒரு சிறந்த ஊடகம் எம் மத்தியில் இதுவரை இல்லாது இருப்பது எமது துரதிர்ஷ்டம். இக்குறையை இன்று ஆரம்பிக்கின்ற தமிழ்க்குரல் வானொலி ஈடுசெய்யும் என எதிர்பார்க்கின்றேன்.

பல தசாப்தங்களாக இன விடுதலையை வென்றெடுப்பதற்காக சதா போராட்டமே வாழ்வாகிப் போன எமது மக்களின் உரிமைக் குரல்கள் அதிகாரத்தில் உள்ள ஆதிக்க சக்திகளினால் தொடர்ந்தும் நசுக்கப்பட்டே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் நீதி வழியிலான தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதமாக உலக நாடுகளிடம் கொண்டு சேர்த்த பங்கு அரச மற்றும் அரச சார்புடைய ஊடகங்களையே சாரும். தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கோருவது ‘பயங்கரவாதம்’ என்று கூறுமளவுக்கு அவர்களின் நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளன.

அந்த வகையில் தமிழ் இனத்திற்கான தனித்துவமானதும் தன்னினம் சார்ந்ததுமான ஊடகத்தின் தேவை என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது வெள்ளிடைமலை. இன விடுதலைக்காகப் போராடும் மக்களின் மிகப் பெரும் ஆயுதமாகவும் பலமாகவும் ஊடகங்களே கோலோச்சியிருக்கின்றன என்பது வரலாற்று உண்மை. நவீன காலங்களில் ஊடகம் ஒரு தேசிய இனத்திற்கு உயிர்நாடி போன்றது. தனது விடுதலைக்காகப் போராடுகின்ற தேசிய இனம் தனது தொன்மையான வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தொடர்ந்து வரும் சந்ததிக்கு ஊடுகடத்துவது அவசியம். ஒரு தேசிய இன அடையாளங்களே அம்மக்கள் கூட்டம் வாழிடங்கள், அவற்றின் வரலாறு, மொழி, கலை, கலாசாரப் பண்பாடு ஆகியனவாகும். எனவே தான் எமது தமிழ் இனம் மிகுந்த அக்கறையோடுந் துடிப்புடனும் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி வருகின்றது.

ஆளும் அதிகார வர்க்கங்களினால் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் 2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்ட பின்னாளிலிருந்து இன்றுவரை மிக நன்கு திட்டமிட்;ட வகையில் கட்டமைக்கப்பட்டு இனவழிப்பும், வரலாற்றுத் திரிபுபடுத்தலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே தான் எமது இனத்தின் வலிகளையும் செய்திகளையும் சர்வதேசத்திற்கும் எமது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்திற்கும் உரத்துச் சொல்லவும், ஒருமைப்பாடற்ற கட்சி அரசியலினால் குழம்பிப் போயுள்ள எமது மக்களைத் தெளிவுபடுத்தவும், ஓரணிப்படுத்தவும் ஓர் தனித்துவமான ஊடகத்தின் அவசியத்தினைக் கருத்திற் கொண்டு தமிழ்க் குரல் என்கின்ற ஊடகம் எம் தாய்மண்ணில் உதயமாவதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்று எமக்கெதிரான சக்திகளினால் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகின்ற கலாச்சார, பண்பாட்டுச் சிதைவுகளுக்;குள்ளும் சாதிய, சமய முரண்பாடுகளுக்குள்ளும் சிக்கி எமது சமூகமும் இளைய தலைமுறையினரும் சீரழிந்து போகாமல் காப்பாற்றும் உயரிய பணியினை இந்த ஊடகம் பொறுப்புணர்ந்து புரியும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். அரசியல் ரீதியான விருப்பு வெறுப்புக்களைக் கடந்து எமது மக்களுக்கு சரியான செய்திகளையும் தகவல்களையும் இவ்வானொலி கொண்டு சேர்க்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன்.

உலகத் தமிழர்களின் குரலாக உலகமெல்லாம் ஒலிக்கப்போகும் தமிழ்க்குரலுக்கும், இயக்குனர் தனபாலசிங்கம் சுதாகரனுக்கும் பணியாளர்களுக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன். அனுபவம் வாய்ந்த அறிவிப்பாளர்களான திருமாறன், கொற்றவை ஆகியோரின் அனுபவங்கள் தமிழ்க்குரலுக்கும் இளம் அறிவிப்பாளர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பன என்று அறிகின்றேன். அவர்களுக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகுக! வானொலியின் இயக்குனரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து இந்த வானொலியின் அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்று சிறப்பான வழியில் வானொலியை வழிநடாத்திச் செல்ல இருக்கின்றார் தம்பி குமாரசிங்கம் என்றும் அறிகின்றேன். அவருக்கும் எனது பாராட்டுக்கள். இந்நிகழ்வின் ஒழுங்குபடுத்தல்களில் மட்டுமல்ல தொடர்ச்சியாக தமிழ்க்குரலின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக தம்பி மதிவண்ணன் இருந்து வருவார் என்றும் அறியத் தரப்பட்டது. அவருக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக!
என் அன்புக்குரிய மக்களே!

நாம் எமது அபிலாசைகளை வென்றெடுக்கின்ற அரசியல் பயணத்தில் தற்போது மிக முக்கியமான காலகட்டத்தில் வந்து நிற்கின்றோம். அகிம்சை ரீதியாக தமது உரிமைகளுக்காக குரலெழுப்பிய மக்களை ஆளும் அதிகார வர்க்கங்கள் இரும்புக் கரங் கொண்டு அடக்கியதனாலேயே எமது இளைஞர்கள் அன்று ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள்.

‘சமாதானத்திற்கான யுத்தம்’ என்கின்ற பெயரில் உலக வல்லரசுகளின் ஆதரவோடு எம் மண்ணில் எமது மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பு யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் நீதியானதும் நியாயமானதுமான கோரிக்கைகளுக்கான தீர்வுத்திட்டத்தினை முன் வைப்பதிலும் அதனை அமுல்படுத்துவதிலும் கரிசனை காட்டாது இலங்கையின் ஆளும் அதிகாரவர்க்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்ற செயற்பாடு அவர்களின் உள்ளக்கிடக்கையை தெட்டத்தெளிவாக வெளிக்கொண்டு வருகின்றது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கவில்லை. நிலவுரிமை மற்றும் மரபுரிமைப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை பற்றி எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை. கன்னியாவில் ஒரு இந்து மதப் பெரியார் மீது வேண்டுமென்றே ஒரு சிங்கள பௌத்தர் சுடு தேநீரை அவர் முகத்தில் வீசியுள்ளார். ‘சமாதானமாகப் போங்கள்’ என்கின்றார்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் பொலிஸாரும். ஒரு புத்த பிக்கு மீது தமிழர் ஒருவர் சுடுநீர் வீசியிருந்தாரானால் அவரைச் ‘சமாதானமாகப் போ’ என்பார்களா? குறைந்தது பகிரங்கமாக எமது சுவாமியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டால்த்தான் சுவாமி அவர்கள் சமாதானத்தை நாட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் ஏராளம். கண்ணீர் களமாக காட்சியளிக்கின்றது எமது நிலம். ஒரு மாபெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு இன நீதி மறுக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் நிபந்தனைகளேதுமற்ற ஆதரவினை ஆதாரமாகக் கொண்டு சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கை தன்னை விடுவித்துக்கொண்டுள்ளதோடு திட்டமிட்டே வேண்டுமென்று தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அழித்து தமிழர் மண்ணில் பௌத்த விகாரைகளை அமைப்பதிலும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதிலும் முனைப்போடு எந்தவித பதட்டமும் இல்லாது செயற்பட்டு வருகின்றது.

எமது மக்கள் தமது விரல்களாலேயே தங்களது கண்களைக் குத்திக்கொண்டுள்ளதை இப்பொழுது நன்கு உணரத்தொடங்கியுள்ளார்கள். எமது மக்களின் உள உணர்வுகளை உதாசீனம் செய்து தொடர்ந்தும் அரச இயந்திரங்களின் ஒத்தோடிகளாக இருக்கின்ற இன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை நான் வேதனையுடன் இங்கு தெரிவிக்க வேண்டி இருப்பதையிட்டு கவலையடைகின்றேன். எமக்கு இப்பொழுது பாராளுமன்றத்தில் இருக்கும் பலத்தை வைத்து பலதையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றிருக்கலாம். இவ்வாறான பலம் இனி எமக்குக் கிடைக்குமோ தெரியாது. அவ்வாறு தமது பலத்தைப் பாவியாது இருந்தமை எப்பேற்பட்ட குற்றம் என்பதை இப்பொழுது உணர்ந்துள்ளனர் கூட்டமைப்பினர். அதனால்தான் தாம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக இப்போது கூறத்தொடங்கியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர்கள் இவ்வாறு கூறி மக்களின் அனுதாபத்தைப் பெறலாம் என்று யோசிக்கின்றார்கள் போலும். ஆனால் இதுகாறும் இருந்த பலத்தை எமது மக்களின் நன்மைக்காகப் பாவியாது விட்டமை எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றேன். ஆகவே, தான் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியாக கட்சி பேதங்கள் இன்றி ஒரு மாபெரும் மாற்று அணியினைக் கட்டியெழுப்ப வேண்டிய காலத்தின் கட்டாயம் இன்று எழுந்திருக்கின்றது. அவ்வாறானதொரு அரசியல் கூட்டிணைவை விட எம்மை காக்கப்போவது வேறொன்றுமில்லை. இவ்வாறு இணைவதானால் கட்சிகள் சுயநலம் களைவது அவசியம். கட்சிகளின் சுயநல சிந்தனைகள் தமிழ் மக்களின் விடிவுக்கு இடம்கொடுக்க மாட்டா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது மக்கள் மீது சமகாலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அரசியல் சூழ்ச்சிகளை உடைத்தெறிந்து, எமது மக்களுக்கான தைரியமான அரசியலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சக்திகள் யாவும் ஓரணியில் இணைந்து செயற்;பட வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்துகின்றேன். இதனையே நான் முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில்; கூறி வந்திருக்கின்றேன்.

தனிப்பட்ட கட்சி நலன்களைத் தாண்டி தினம் துன்பச்சிலுவைகளைச் சுமந்து வாழும் எமது மக்களின் நலன்களுக்காக கடந்து போன காலங்களை நியாயப்படுத்துவதை விடுத்து நிகழ்காலத்தின் யதார்த்தங்களைக் கருத்திற்கொண்டு ஒருமித்த ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து செயலாற்றுவதற்கு அனைவரையும் அழைத்து நிற்கிறேன்.

ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் நலனுக்காக என்மீது நேரடியான யுத்தம் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளதை நான் நன்கறிவேன். இதுபற்றி நான் சலனப்படப் போவதில்லை. பயணம் பக்குவமாகத் தொடரும். சிறுவர்களின் கல்லெறிகள் எம்மைப் பாதிக்க எம் மக்கள் விட மாட்டார்கள். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட எம்முடன் இணைந்து அரசியல் செய்த ஒரு தரப்பினர், தங்கள் அனைத்துப் பலங்களையும் பாவித்து என்னைத் துரத்துவதற்குப் பிரயத்தனம் செய்தார்கள். அந்தச் சதி முயற்சி எம் மக்களின் சக்தியால் முறியடிக்கப்பட்டது. அந்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக, நேர்மையான, விலைபோகாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்பதை இங்கு கூறி வைக்கின்றேன்.

உயிர்க்கொடை என்பது கொடைகளில் மிகஉயர்ந்த கொடை. சாதாரண மனிதர்களால் அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எமது இனத்திற்காகத் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களை நாம் எந்தக் காலத்திலும் மறத்தலாகாது. எமது நம்மைக்காக உயிர் நீத்த உத்தமர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினரிடமும் நான் உரிமையுடன் வேண்டி நிற்கின்றேன்.

அரசியலில் மட்டுமல்ல, ஊடகத்துறையிலும் நேர்மையாகப் பயணிக்கும்போது, பல எதிர்ப்புக்கள் எழும். பல இடங்களில் இருந்தும் உங்களை நோக்கி எதிர்ப்புக்கணைகள் ஏவப்படலாம். அந்த எதிர்ப்புக்களைக் கண்டு மனம் துவண்டு விடாமல், துணிந்து நின்று, விசமத்தனமான பிரச்சாரங்களை முறியடித்து, என்ன காரணத்திற்காக இந்த தமிழ்க்குரல் வானொலி இன்று ஆரம்பிக்கப்படுகின்றதோ அதிலிருந்து சற்றும் நழுவாமல் தமிழர்களின் குரலாக தொடர்ந்தும் நீங்கள் ஒலிக்கவேண்டும் எனக்கூறி தமிழ்க்குரலை மீண்டும் வாழ்த்தி எனது உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *