Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எழுக தமிழின் பின்னரான சூழலில், விக்கினேஸ்வரன் செய்ய வேண்டியது என்ன?

எழுக தமிழின் பின்னரான சூழலில், விக்கினேஸ்வரன் செய்ய வேண்டியது என்ன?

யதீந்திரா
பல்வேறு எதிர் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் எழுக தமிழ் – 2019 நடந்தேறிவிட்டது. எழுக தமிழ் 2016இன் போது ஒன்றுதிரண்ட மக்கள் இம்முறை ஒன்றுதிரளவில்லை என்னும் அவதானம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. அது உண்மைதான். ஆனால் இதற்கு பலவாறான காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டடிப்படையில் முன்னரை விடவும் மிகவும் பலவீனமாக இருந்த ஒரு சூழலில்தான் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த எழுக தமிழின் போது, மக்களை அணிதிரட்டுவதில் பங்களித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவை இம்முறை எழுக தமிழில் பங்குகொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக, அவர்களது ஆதரவாளர்கள் இதில் பங்குகொள்ளவில்லை. புளொட் இதில் பங்குகொள்ளாது விட்டாலும் கூட, விக்கினேஸ்வரன் தொடர்பிலோ அல்லது பேரவை தொடர்பிலோ, புளொட் பொது வெளியில் குற்றசாட்டுக்களையோ அல்லது எதிர்மறையான கருத்துக்களையோ வெளிப்படுத்தவில்லை. புளொட் இதில் பங்குகொள்ளாமையை ஒரு குற்றசாட்டாக முன்வைக்கவும் முடியாது. ஏனெனில் புளொட், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போன்று, கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. இப்போதும் அதன் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகவே இருக்கிறது.

இந்த நிலையில், விக்கினேஸ்வரன் ஒரு புதிய கட்சியின் தலைவராக இருக்கின்ற சூழலில், அவரது தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பங்குகொள்வதிலுள்ள இடர்கள் விளங்கிக்கொள்ளக் கூடிய ஒன்றே! ஆனால் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பிரச்சினை முற்றிலும் வேறானது. அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முழுமையாக விக்கினேஸ்வரனது தலைமையை விரும்பிய ஒருவர். அவர் மூலமாக மட்டுமே ஒரு கொள்கை நிலைப்பட்ட கூட்டை கட்டியெழுப்ப முடியுமென்று நம்பி, பேரவையுடன் பயணித்த ஒருவர். விக்கினேஸ்வரனை தமிழினத்தின் தலைவர் என்று புகழ்ந்த ஒருவர். அவ்வாறான ஒருவர் முரண்பாடுகளை கடந்து, பேரவையின் எழுக தமிழுடன் நின்றிருக்க வேண்டும். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. மாறாக, பேரவையின் எழுக தமிழ் -2019 – முற்றிலும் விக்கினேஸ்வரனது கட்சியை பலப்படுத்தும் ஒரு நிகழ்வென்னும் அடிப்படையில் அதனை முற்றிலுமாக புறக்கணித்திருந்தார்.

இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எழுக தமிழுக்கு எதிராக பகிரங்கமாக எந்தவொரு பிரச்சாரத்தையும் முன்னெடுக்கவில்லை என்றாலும் கூட, இந்த எழுக தமிழ் விக்கினேஸ்வரனுக்கு ஆள்சேர்க்கும் ஒரு வேலை என்றவாறான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான ஒரு உந்துசக்தியாக காங்கிரஸ் ஆதரவாளர்களே இருந்திருக்கின்றனர்.அதே வேளை தமிழரசு கட்சி, எழுக தமிழுக்கு எதிராக பகிரங்கமாக கல்லெறியாவிட்டாலும் கூட, அதன் ஒரு சில ஆதரவாளர்கள் சமூக ஊடங்களில் விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்தி தொடர்ச்சியாக எதிர்மறையான பிரச்சாரங்களையே முன்னெடுத்து வந்தனர். தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இது கோத்தபாயவிற்கு ஆதரவான எழுக தமிழ் என்றவாறும் எதிhமறையான கருத்துக்கள் பரவுவற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தார். ஒரு நிகழ்விற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்ற போது, அதற்கு எதிரான பார்வைகள் பொது வெளியில் பரவுவவதற்கான சூழலை ஏற்படுத்துவதும் அந்த நிகழ்விற்கு எதிரான பிரச்சாரங்கள்தான். அப்படிப் பார்தால் இவ்வாறான பரவலான எதிர்ப்புக்களுக்கு மத்தியில்தான் எழுக தமிழ் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதற்கு அப்பால், பேரவையின் கட்டமைப்பு சார்ந்த பலவீனங்களும் இதில் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. பேரவை, அதன் அங்கத்துவ கட்சிகள் தொடர்பில் ஒரு வித மௌனத்தை கடைப்பிடித்துவருவதும், கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளின் போது, மதில் மேல் பூனைபோன்று இருக்க முற்படுவதுமே இதற்கான காரணமாகும்.

Eluka tamil 2

எழுக தமிழ் – 2019 தொடர்பில், அதன் அங்கத்துவ கட்சிகள் அனைத்துடனும் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துரையாடியிருந்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் புளொட்டுடனும் கலந்துரையாடியிருந்தனர். ஆனால் அந்தக் கட்சிகள் இதில் ஏன் பங்குகொள்ளவில்லை. அவர்கள் முன்வைத்த நிபந்தனைகள் என்ன, அதற்கு பேரவை வழங்கிய பதில் என்ன என்பது இதுவரையில் பேரவையால் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை.

2016இல் பங்குகொண்ட கட்சிகளை உள்ளடக்கி ஏன் இந்த எழுக தமிழை செய்ய முடியாமல் போனதென்பது, எழுக தமிழுக்காக வெயிலில் கால் கடுக்க நின்ற மக்களுக்குக் கூடத் தெரியாது. இவ்வாறானதொரு சூழலில், மக்கள் அதிகளவில் இவ்வாறான அழைப்புக்களுக்கு செவிசாய்க்க வேண்டுமென்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? உண்மையில் பேரவை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன், அங்கத்துவ கட்சிகள் தொடர்பில் வெளிப்படையான விமர்சனங்களுடன், போதிய காலஅவகாசத்துடன் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தால், இன்னும் அதிகமான மக்கள் திரண்டிருக்கக் கூடும். எனவே இவ்வாறான அக மற்றும் புற காரணிகளே, மக்களது குறைவான பங்களிப்பில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. மக்களின் குறைவான பங்களிப்பை அல்லது கூடுதலான பங்களிப்பைக் கொண்டு, இந்த நிகழ்வின் வெற்றி – தோல்வி,தொடர்பில் வாதிட முடியாது.

இதில் மக்கள் குறைவாக பங்களித்தனர் – இதனால் அதனை தோல்வி என்று குறிப்பிட முடியுமென்றால், 2016இல் இதன் இரட்டிப்பான மக்கள் பங்குகொண்டிருந்தனர் எனவே அது வெற்றியென்றால், அந்த வெற்றியின் அளவுகோல் என்ன? உண்மையில் மேற்படி இரண்டு எழுக தமிழ் நிகழ்வுகளுமே, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் கூட்டமைப்பு, மக்கள் ஆணைக்கு அமைவாக பயணிக்கவில்லை முக்கியமாக அதன் தலைமையால் பிழையாக வழிநடத்தப்படுகின்றது என்றவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துத்தான் மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் சிந்திக்கப்பட்டது.

அந்த மாற்று தலைமைக்கான தலைமையை வழங்குமாறுதான் விக்கினேஸ்வரன் தொடர்ச்சியாக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார். கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்து கொண்டு, அவ்வாறு செய்வது நேர்மையான ஒன்றல்ல என்னும் காரணத்தை முன்வைத்து, தனது பதவிக் காலம் முடியும்வரையில் விக்கினேஸ்வரன் அவ்வாறான கோரிக்கைகளை புறக்கணித்திருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான்,தனது முதலமைச்சர் பதவிக் காலம் முடியும் இறுதிநாளன்று, தன்னை தலைமை தாங்குமாறு தொடர்ச்சியாக அழைத்து வந்தவர்கள் மத்தியில்வைத்து, தன்னை அவ்வாறானதொரு மாற்றுக்கான ஒருவர் என்பதை பொது வெளிக்கு அறிமுகம் செய்த பேரவையின் நிகழ்வில் வைத்து, தனது புதிய கட்சியை விக்கி அறிவித்திருந்தார். இதில் அவரது பக்கத்தில் எந்தவொரு தவறும் இருப்பதாக தெரியவில்லை.

விக்கினேஸ்வரனை தன்னுடைய கட்சியில் இணைத்துக்கொள்ள முடியுமென்னும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த கஜேந்திரகுமார், இதனால் கடும் அதிருப்திக்கு உள்ளானார். இது விளங்கிக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். இதலிருந்துதான் பேரவையின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்தன. இந்த முரண்பாடுகளைத் தொடர்ந்து அகிலஇலங்கை தமிழ் காங்கிரஸ் பேரவையின் கூட்டங்களில் பங்குகொள்வதை தவிர்த்திருந்தது. அதே போன்று, புளொட்டும் பேரவையிலிருந்து ஏறக்குறைய வெளியேறியிருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் மீண்டுமொரு எழுக தமிழ் திட்டமிட்டப்பட்டது. இந்த எழுக தமிழ் விக்கினேஸ்வரன் மற்றும் அவருடன் கூட்டு வைத்துக்கொள்ளக் கூடிய கட்சிகளுக்கான ஒரு தளத்தை ஏற்படுத்துவதுதான் என்று ஒருவர் வாதிட்டால் அதனை நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில் பேரவையின் கடந்த கால நிகழ்வுகளும், அதில் பங்குகொண்டிருந்த கட்சிகளின் இலக்குகளும், கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு அரசியல் கூட்டிற்கு விக்கினேஸ்வரன் தலைமையேற்க வேண்டுமென்னும் கோரிக்கையும், அந்தக் கோரிக்கையுடைய கட்சிகளை இணைத்துக் கொண்டு பேரவை பயணித்தமையும், பேரவையை ஒரு மக்கள் இயக்கம் என்பதற்கு அப்பால், கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு அரசியல் கூட்டை முன்தள்ளும் ஒரு அமைப்பாகவே பொது வெளியில் புரிந்துகொள்ளப்பட்டது. அப்படிப் புரிந்துகொண்டால் அத தவறும் அல்ல. இப்போதும் அதுதான் நிலைமை. இதற்கு மாறான ஒரு தூர நோக்கு பேரவைக்கு இருப்பது உண்மையாயின், அதனை பேரவை, அதன் கட்டமைப்புசார்ந்த மாற்றங்களாலும், செயற்பாடுகளாலும் நிரூபிக்க வேண்டும். மேலும் பேரவை விக்கினேஸ்வரனுக்கு ஆள் சேர்க்கும் ஒரு அமைப்பு என்றவாறான குற்றசாட்டுக்களிலிருந்து பேரவை முற்றிலுமாக விலகிக்கொள்ள வேண்டுமென்றால், விக்கினேஸ்வரனை முற்றிலுமாக விடுத்து, அது அதன் வழியில் செல்ல வேண்டும். தன்னுடைய கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், தனது தலைமையை ஏற்றிருக்கும் கட்சிகளுக்கான ஒரு கூட்டை ஏற்படுத்தும் பொறுப்பிலிருக்கும் விக்கினேஸ்வரன் பேரவையின் அங்கமாக இருப்பின், மேற்குறிப்பிட்ட விக்கினேஸ்வரனின் இரண்டு இலக்குகளையும் பேரவையும் தூக்கிக்கொண்டுதான் செல்ல நேரிடும். அவ்வாறுதான் செல்லவும் வேண்டும்.

இந்த அனுபவங்களிலிருந்து விக்கினேஸ்வரன் எதனை கற்றுக்கொள்ள போகின்றார்? நடந்து முடிந்த எழுக தமிழ் விக்கினேஸ்வரனுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறது. அதாவது, விக்கினேஸ்வரன் இனியும் தாமதிக்காமல் தனது தலைமையின் கீழான புதிய அசியல் கூட்டை அறிவிக்க வேண்டும். இப்போது விக்கினேஸ்வரனோடு யார் தொடர்ந்தும் நிற்பார்கள் – நிற்கமாட்டார்கள் என்பது வெள்ளிடைமலை. விக்கினேஸ்வரனுடன் நிற்பவர்கள்தான் – அவரது தலைமையின் கீழான மாற்று அணி. அதற்கான கட்டமைப்புக்களை இறுதி செய்வதும், அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதும்தான் விக்கினேஸ்வரன் விரைந்து செய்ய வேண்டிய ஒன்று. இதில் விக்கினேஸ்வரன் தாமதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர், அவரைச் சுற்றியிருப்பவர்களால் பலவீனப்படுத்தப்படுவார் என்பதை அவர் குறைவாக எடைபோடுவாராக இருந்தால், அது அவரது தவறாகவே அமையும்.

விடுதலைப் புலிகள் காலத்தில் நடந்த ஒரு விடயத்தை விக்கினேஸ்வரன் ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களை எதிர்த்து, விமர்சித்து பலரும் தங்களை மாற்று அணியாக நிரூபிக்க முற்பட்டனர் ஆனால் அனைவருமே மிக மோசமான தோல்வியை சந்தித்தனர். நன்கு நிறுவனப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை மக்களிலிருந்து அன்னியப்படுத்த எவராலும் முடியவில்லை.
இப்போதும் – தேர்தல்களின் மூலமும் ஒப்பீட்டடிப்படையில் கட்டமைப்பு சார்ந்தும் பலமாக இருக்கின்றன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு கூட்டை இதுவரை உருவாக்க முடியவில்லை. அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தரப்புக்கள் எவையுமே இதுவரை தங்களை நன்கு நிறுவனமயப்படுத்திக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இவ்வாறு தொடர்ந்தும் பொது வெளியில் மாற்றுத் தரப்பினர் என்பவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது, மக்கள் மேலும் கூட்டமைப்பை நோக்கியே சாய்வர். ஏனெனில் அவர்களுககு முன்னால் வேறு தெரிவுகள் இல்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *