Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எழுக தமிழை ஆதரிக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகும்

எழுக தமிழை ஆதரிக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகும்

ஒரு மக்கள் இயக்கம் என்னும் வகையில், தமிழ் மக்கள் பேரவையானது, 2016இல் வடக்கிலும் கிழக்கிலும் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் எமது மக்களை, ஓர் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அணிதிரளச் செய்ததில் எழுக தமிழ் நிகழ்வுகளுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், இறுதி யுத்தத்தின் விளைவுள் ஏற்படுத்திய அச்சம், பதட்டம் மற்றும் தாழ்வு மனப்பாண்மை என்பவற்றால் எமது மக்கள் வெறுமனே தேர்தல்கால வாக்குறுதிகளுடன் கட்டுண்டு கிடந்த ஒரு சூழலில்தான், ”எழுக தமிழ்’ இடம்பெற்றது. இந்த எழுச்சியானது, தமிழ் புலம்பெயர் சமூகத்திற்குள்ளும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது.

ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தின் இராணுவ ரீதியான தோல்வியானது, அந்தப் போராட்டம் முன்னிலைப்படுத்திய தேசத்தின் அரசியல் தோல்வியல்ல என்பதை பறைசாற்றும் வகையில், மக்களை விழிப்பூட்டுவதும், அணிதிரளச் செய்வதும் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையாகும். 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் தென்னிலங்கை எதைச் செய்ய முயற்சிக்கின்றது என்பதை தெளிவாக புரிந்துகொண்டால்தான் ‘எழுக தமிழ்’ போன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவரீதியான வீழ்ச்சியுடன் தமிழர் தேசத்தின் தனித்துவமான அரசியல் கோரிக்கைகளும் முற்றிலுமாக இறந்துவிட்டன என்றவாறான ஒரு தோற்றப்பாட்டையே தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு முன்னெடுத்துவருகின்றனர். இந்த விடயத்தில் தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் மத்தியில் கட்சி வேறுபாடுகள் எதுவுமில்லை.

ஆட்சி மாற்றம் இந்த விடயத்தில் சில அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றவாறான, நம்பிக்கைகள் ஊட்டப்பட்ட போதிலும் கூட, அதுவும் மிக மோசமான தோல்வியையே சந்தித்திருக்கிறது. தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் கூட, தமிழர் தாயகப்பகுதியின் மீதான நில மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படவில்லை. அது பல்வேறு வழிகளில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்துவரும் கட்சிகளால் சிங்கள ஆட்சியாளர்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள் எதனையும் தடுத்துநிறுத்த முடியவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவுகள் என்ன? தேர்தல் அரசியலால் இந்த நிலைமையை தடுத்து நிறுத்த முடியாதென்பது தெட்டத்தெளிவான நிலையில், சாத்வீக வழியில் போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு முன்னால் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழ் மக்கள் பேரவை மீண்டுமொரு எழுக தமிழுக்கான அழைப்பை விடுத்திருக்கிறது. ஈழத் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திப்பவர்கள் எவராலும் இதனை ஆதரிக்காமல் இருக்க முடியாது.

Eluha Tamil

அந்த வகையில், பேரவையின் எழுக தமிழில், ஈழத் தமிழர் நலனுக்காக போராடும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டியதும், அதன் வெற்றிக்காக உழைக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும். எனவே ஈழத்-தமிழ் மக்களின் நலனை முனிறுத்தி இயங்கிவரும் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் தமிழ் தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள் மற்றும் ஏனைய முற்போக்கு அமைப்புக்கள் – அனைவரும் ஓரணியாக திரண்டு, எழுக தமிழை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதில் கடந்தகால பேதங்கள் மற்றும் தனிநபர் முரண்பாடுகளை முதன்மைப்படுத்துவதானது, எழுக தமிழ் நிகழ்வுகளை பலவீனப்படுத்துவதற்கே வழிவகுக்கும். அவ்வாறான செயற்பாடுகள் அதன் இறுதி அர்த்தத்தில் சிங்கள ஆக்கிரமிப்புக்களையே பலப்படுத்தும். குறுகிய தேர்தலரசியல் நலன்களையும், கட்சிப் போட்டிகளையும் முன்னிலைப்படுத்தி, எழுக தமிழை பேரம்பேச முற்படுவதானது அடிப்படையிலேயே தவறான ஒன்றாகும். அது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்காது. 2009இற்கு பின்னர் களத்திலும் புலத்திலும் நன்கு நிறுவனமயப்பட்ட கட்சிகளோ அல்லது அரசியல் இயக்கங்களோ இல்லாமல் இருப்பதான் காரணமாகவே இவ்வாறான முரண்பாடுகள் தொடர்க்கின்றன. இந்த நோயை குணப்படுத்துவதும் நம் அனைவரதும் பொறுப்புத்தான்.

தமிழர் தாயகப் பகுதியில் எவ்வாறு அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு எழுக தமிழின் வெற்றிக்காக உழைக்க வேண்டியது கட்டாயமான ஒன்றோ, அவ்வாறே நாடுகடந்த சூழலில் செயலாற்றும் அனைத்து ஈழத் தமிழர் அமைப்புக்களும், பாரபட்சங்களையும் கருத்து முரண்பாடுகளையும் புறம்தள்ளி, எழுக தமிழின் வெற்றிக்காக பாடுபட வேண்டியதும் கட்டாயமான ஒன்றாகும். தாயகத்திலுள்ள தமது அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள்சார் தொடர்புகளை பயன்படுத்தி, எழுக தமிழின் வெற்றிக்காக அனைத்து புலம்பெயர் அமைப்புக்களும் தங்களது முழுமையான ஆதரவை நல்கவேண்டும். இது நமது மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை மேலும் பலப்படுத்தவும் நமக்குள் நிலவும் அமைப்புசார் இடைவெளிகளை புறம்தள்ளி செயலாற்றவும் உதவும். உண்மையில் எழுக தமிழ் நிகழ்வின் வெற்றியானது, ஈழத் தமிழ் மக்களின் நலனுக்காக உழைத்துவரும் நம் அனைவரதும் வெற்றியாகும்.

நிமால் விநாயகமூர்த்தி
புலம்பெயர் அரசியல் செயற்பாட்டாரும் தமிழ் உணர்வாளரும்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *