Search
Monday 16 September 2019
  • :
  • :

எழுக தமிழ் எமது தேசிய அபிலாசைகளை உரத்துக் கூறும் உன்னத நாள் : டெலோ முளுமையான ஆதரவு

எழுக தமிழ் எமது தேசிய அபிலாசைகளை உரத்துக் கூறும் உன்னத நாள் : டெலோ முளுமையான ஆதரவு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16 அம திகதி ஏற்பாடுசெய்யபட்டுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

ஏஎழுக தமிழுக்கு ஆதரவு தெரிவித்து ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிக்காந்தா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

வீழ்ந்து கிடக்கும் எம் இனத்தின் எழுச்சியையும் மீட்சியையும் மறுமலர்ச்சியையும் இலக்காகக் கொண்டு, மீண்டும் வந்திருக்கும் ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சி, கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் கடந்த நிலையில், விடுதலையை நேசிக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களையும் ஓரணி திரட்டி, உலகறிய எம் தேசிய அபிலாசைகளை உரத்துக் கூறும் உன்னத நாளாக எதிர்வரும் திங்கட்கிழமையைப் பிரகடனப்படுத்தி நிற்கின்றது.

அகிம்சைப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பிய போதெல்லாம், சிங்கள – பௌத்த ஆட்சியாளர்கள் அவற்றைத் தொடர்ந்து தோற்கடித்து வந்த அரசியற் பின்னணியில், இனத்தின் விடிவுக்காய் துணிந்து ஆயுதம் ஏந்திய ஓர் இளைய தலைமுறை முப்பது வருடகால விடுதலைக் கிளர்ச்சியை வரலாற்றின் பக்கங்களில் ரத்தத்தால் எழுதிவிட்டு ஓய்ந்து விட்டது.

போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த பத்தாண்டு காலத்தில், சிங்கள – பௌத்த ஆட்சியாளர்கள் தம் பேரினவாத நிகழ்ச்சி நிரலைத் தீவிரமாகவும் சாதுரியமாகவும் முன்னெடுத்து வந்திருக்கையில், தமிழர் தரப்பின் தலைமை சமரச அரசியல் செய்து சரணாகதி முடிவினை நோக்கி தமிழ் இனத்தை தள்ளிச் செல்ல முனைந்து நிற்கின்றது.

எச்சில் இலைக்கும் எலும்புத் துண்டுக்கும் மானத் தமிழினம் மண்டியிட மாட்டாது என்ற ஆக்ரோஷக் குரல்கள் அபிவிருத்தி அரசியற் காற்றில் அள்ளுண்டு போயுள்ளன. வீதிகளையும், பாலங்களையும், விளையாட்டு மைதானங்களையும், களியாட்ட அரங்குகளையும் கட்டி எழுப்பினால், தமிழ் இனத்தின் சுதந்திர தாகம் தணிந்து விடும் என்று சிந்தித்த அந்த நாள் ஒத்துழைப்புத் தமிழ் அரசியல்வாதிகளின் பொய்த்துப் போன சுயநலத்திட்டங்கள் மீண்டும் உயிரூட்டப்பட்டு உத்வேகத்தோடு தமிழர் தாயகத்தை தழுவத் துடிக்கின்றன.

வேதனையும் சோதனையும் நிறைந்த இந்தச் சூழ்நிலையில், வியர்வையால், கண்ணீரால், ரத்தத்தால் எழுதப்பட்டு வந்த எம் இனத்தின் விடுதலை வரலாற்றை பொய்யாய், புனைகதையாய் சிதைந்து புதைந்து போகவிடாமல், ‘கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! கருகத் திருவுளமோ?’ என்ற மகாகவிஞன் பாரதியின் உள்ளக் குமுறலை எதிரொலித்தபடி, தமிழ்த் தேசியத்தை நேசிப்போர் அனைவரும் எழுக தமிழ் நிகழ்வில் ஓரணி திரண்டு, சிங்கள – பௌத்த பேரினவாதிகள் அனைவருக்கும் திட்டவட்டமான அரசியற் செய்தி ஒன்றினை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்க வேண்டும்.

இலங்கைத் தீவு ஒரே நாடாக எதிர்காலத்திலும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், விடுதலையைக் கோரி நிற்கும் தமிழ்த் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் அனுசரிக்கவும் சிங்கள தேசம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகவே அந்தச் செய்தி இருக்க வேண்டும்.

எம் தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காக காலங்காலமாகக் காத்திருக்க முடியாது.விடுதலை என்பது தங்கத் தட்டில் அல்லது வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து மற்றவர்கள் எவராலும் தரப்படுவது அல்ல. மாறாக, சுதந்திரம் எமது பிறப்புரிமை. அதை நிலைநாட்டுவதும் எம் உரிமை. இந்தச் செய்தியை ‘எழுக தமிழ்’ உரத்துச் சொல்ல வேண்டும். எழுக தமிழின் உன்னத நோக்கத்தோடு எமது கட்சியும் இணைந்து நிற்கின்றது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *