Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எழுக தமிழ் எழுச்சி பேரணியை முன்னிட்டு பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

எழுக தமிழ் எழுச்சி பேரணியை முன்னிட்டு பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் ஒன்றுபட்டு, தென்னிலங்கை தரப்புகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடித்துரைக்கும் வரலாற்றுக் கடமையை மேற்கொள்ளுமாறும் எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறும் எழுக தமிழ் எழுச்சி பேரணியை முன்னிட்டு, தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பின மூலம் வழமை மறுப்பு போராட்டத்தை மேற்கொள்ள தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி திங்கட்கிழமை தமிழர் தாயகம் தழுவியதாக எழுக தமிழ்-2019 மாபெரும் எழுச்சிப் பேரணி யாழ்.மண்ணில் நடைபெற உள்ளது.தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் உறவுகளும் ஓரணியில் ஒன்றுபட்ட குரலாக, தென்னிலங்கை தரப்புகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடித்துரைக்கும் வரலாற்றுக் கடமையில் அணியமாகும் வகையில் அன்றைய தினம் வழமை மறுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது கடமை என்பதனை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம் என தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரது பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், சந்தைகள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், அரச, அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் என்பவற்றை மூடியும், போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் மீனவர்கள் தமது தொழிலுக்குச் செல்லாதும் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *