தலைப்பு செய்திகள்

எழுச்சியுடன் ஆரம்பமானது எழுக தமிழ் : அலை அலையாக செல்லும் மக்கள் கூட்டம்

எழுச்சியுடன் ஆரம்பமானது எழுக தமிழ் :   அலை அலையாக செல்லும் மக்கள் கூட்டம்

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்படும் எழுக தமிழ் பேரணி யாழில் ஆரம்பமாகியுள்ளது.யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் தற்போது ஆரம்பமாகியுள்ள எழுக தமிழ்ப் பேரணியில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் இரண்டு பேரணிகள் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இந்த பேரணியில் இணைந்துகொண்டிருப்பதுடன் ஏனைய மாவட்டங்களில் இருந்து பேருந்து வண்டிகளில் பெருமளவு மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இதுவரை பங்கெடுத்துள்ள மக்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற எழுக தமிழை விட மிகவும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்தும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உள் சுற்றுவட்டத்திலிருந்தும் இரு பேரணிகள் சம நேரத்தில் ஆரம்பமாகி, யாழ்ப்பாணம் முற்றவெளிளியை பேரணி தற்போது சென்றுகொண்டிருக்கிறது.  முற்றவெளியை பேரணி அணுக தொடங்கியதும் அருகில் உள்ள ஆலயங்களில் காண்டா மணிகள் ஒலிக்கப்பட்டன.  குடாநாடு முழுவதும் எங்கும் உணர்ச்சி பிரவாகம் மேலோங்கி இருக்கிறது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணியில் சமயத் தலைவர்கள், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களான முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வைத்தியக் கலாநிதி பி. லக்ஸ்மன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், பொ. ஐங்கரநேசன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்களைப் பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினர் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்த போதிலும், யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி விடுத்த விசேட உத்தரவுக்குப்பின்னர் அனைவரும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக் கணக்கானோர் அங்கிருந்து யாழ்ப்பாணம் முற்றவெளி நோக்கி சென்றனர்.

Eluka tamil 2 Eluka tamil 3 Eluka tamil 4 Eluka tamil 5 Eluka tamil 6 Eluka tamil 7


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *