Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.க தமிழ் கூட்டமைப்பை பணயக் கைதியாகவே வைத்திருக்கிறது : மகிந்த சாடல்

ஐ.தே.க தமிழ் கூட்டமைப்பை பணயக் கைதியாகவே வைத்திருக்கிறது : மகிந்த சாடல்

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஐக்கிய தேசிய கட்சி பணயக் கைதியாகவே வைத்திருப்பதாகவும் பாராளுமன்றத்தின் ரிமோட் கன்டோல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமே இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி நவம்பர் 9ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் தேர்தலுக்கு எதிரானவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தற்காலிக தடையுத்தரவை பெற்றுக்கொண்டனர். அத்துடன் சபாநாயகரை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூட்டி தங்களுக்கே பெரும்பான்மை இருக்கின்றது என்பதனை காட்ட பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதனை கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக யோசனை நிறைவேற்றப்பட்டபோது மக்கள் புரிந்துக்கொண்டனர். ரணிலை பிரதமராக்க வேண்டுமென 117 வாக்குகள் கிடைத்திருந்தன. அதில் 14 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களாகும். அவர்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் மாவை சேனாதிராஜா கூறும் போதும் அவர்கள் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் என்பதனை தெரிவித்திருந்தார். அப்படியென்றால் 103 பேரே இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பை பணயக் கைதியாக வைத்திருப்பதே நடந்துள்ளது. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கையிலேயே ரிமோட் கொன்ரோல் இருந்துள்ளது.
இதேவேளை வழக்கு தீர்ப்பு வருவதற்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க கடந்த 12ஆம் திகதி பாராளமன்றத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெரிவித்துள்ளார். அந்த அரசியலமைப்பின் நகல் தயாரிக்கப்பட்டு ஊடகங்களிலும் வெளியாகிவிட்டது. அதில் இந்த நாட்டை பகுதியளவு சமஷ்டி அடிப்படையில் 9 மாநில துண்டுகளாக்கவே திட்டமிடப்பட்டுள்ளது. அதனுடாக செய்யவுள்ள இன்னொரு விடயம்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது. அப்படியென்றால் 2019 டிசம்பர் 9ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடக்காது. அத்துடன் அரசியலமைப்பில் பாராளுமன்ற தேர்தல் முறையும் மாற்றப்படும். அதன்படி மாகாண சபைகள் தேர்தல் தள்ளிப் போவதை போன்று 2020 பாராளுமன்ற தேர்தலையும் ஒத்தி வைக்கலாம். அதற்குதான் இவ்வாறாக தயாராகின்றனர். என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் வாக்கு வங்கியுள்ள கட்சிகளுடன் இணைந்து நாட்டிற்கு எதிரான சக்திகளை தடுப்பதற்காக, எவராலும் அசைக்க முடியாத நாடளாவிய அரசியல் கூட்டணியை கட்டியெழுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு வருடமும் மூன்று மாதங்களும் தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே தமது முதன்மை இலக்கு எனவும் மஹிந்த ராஜபக்ஸ கூறினார்.
ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தல் நிறைவுபெறும் வரை, தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக மஹிந்த ராஜபக்ஸ தனது விசேட உரையில் கூறினார்.
இதேவேளை, ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு தாம் மதிப்பளிப்பதாகவும் மஹிந்த ராஜக்ஸ குறிப்பிட்டார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *