தலைப்பு செய்திகள்

ஒன்றுபட்டு அஞ்சலி செலுத்தவேண்டிய முள்ளியவாய்கால் மண்!

ஒன்றுபட்டு அஞ்சலி செலுத்தவேண்டிய முள்ளியவாய்கால் மண்!

நரேன்-

ஒட்டுமொத்தத்தில் மானிடத்தை நேசிக்கும் எந்தவொரு மனிதனாலும் இலகுவில் மறந்து விட முடியாத மண்ணே முள்ளியவாய்கால். இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாகிய தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30 வருட அகிம்சைப் போராட்டத்தில் தமிழ் தேசிய இனத்தின் மிதவாத தலைவர்கள் ஈடுபட்ட போது தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிரதான அரசியல் கட்சிகளும் அதனை கண்டு கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனம் உரிமைக்காக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். 30 வருடமாக தமது உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய தமிழ் தேசிய இனம் பிராந்திய நாடுகளே அச்சம் கொள்ளும் வகையில் வலுவான இராணுவ படைக் கட்டமைப்பை கொண்டதாக வளர்ச்சியடைந்தது. இந்நிலையில் சர்வதேச நாடுகளின் துணையுடன் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான முன்னைய அரசாங்கம் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி போர்குற்றங்களுடனும், மனிதவுரிமை மீறல்களுடன் தமிழினத்திற்கு ஏதிராக போர் தொடுத்து முள்ளியவாய்கால் மண்ணில் 2009 மே 18 ஆம் திகதி பாரிய மனிதப்பேரவலத்துடன் உரிமைப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இதனால் இந்த முள்ளியவாய்கால் மண் என்பது எல்லோராலும் இலகுவில் மறந்து விடமுடியாத வரலாற்று மண். இன்று தமிழ் மக்கள் தொடர்பில் ஐ.நாவை பேச வைத்த மண்ணும் இது தான்.

வன்னியின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் இராணுவத்தின் கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதல்களுக்கும், விமான தாக்குதல்களுக்குள்ளும், துப்பாக்கி சூட்டுக்களுக்குள்ளும் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இறுதியாக அடைக்கலம் தேடிய முள்ளியவாய்கால் மண்ணில் கூட பலர் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அந்த மண்ணே குருதியால் தோய்ந்தது. ஆயுதம் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் மேய்ப்பார் அற்ற மந்தைகள் போல் இருந்த தமிழ் தேசிய இனம் தமக்கான ஒரு தலைமையாக விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பேயே நம்பியிருந்தனர். ஆனால் உரிமைக்காக மடிந்த அந்த மக்களின் நினைவேந்தல் நிகழ்வில் கூட அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக நினைவேந்தலை செய்ய முடியாதவர்களாகவே உள்ளனர்.

60 வருடத்திற்கும் மேலாக உரிமைக்காக போராடிய தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக அமைப்பாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் 8 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டே முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் பங்கு பற்றியிருக்கிறார். தேர்தல் காலங்களில் முள்ளியவாய்கால் அவலத்தையும், அந்த மக்களின் நியாயமான அபிலாசைகளையும் முன்வைத்து வாக்கு பெற்று விட்டு அந்த மக்களின் நினைவு நாளில் கூட கலந்து கொள்ளாத நிலையே 2017 மே 18 வரை நீடித்தது. இலங்கை சுதந்திர தினத்தில் பங்கு பற்றியிருந்த போதும் இந்த நிகழ்வுகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் ஏம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புறக்கணித்தே வந்திருந்தனர். ஆனால் கடந்தமுறை அவர்கள் இருவரும் முள்ளியவாய்கால் மண்ணில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்டமைக்கும் காரணங்கள் உண்டு.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என நீதி கேட்டும், தாம் வாழ்ந்த காணிகளை விடுவிக்கக் கோரியும் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், இப்போராட்டங்கள் தொடர்பில் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்ளவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் எழுந்திருந்தது. இப்படியாக பரவலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரான கருத்துக்களும், விமர்சனங்களும் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாய நிலை கூட்டமைப்பு தலைமைக்கு ஏற்பட்டிந்தது.

இது தவிர, தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு நபராக மாறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகளை தன்னை சந்திக்கின்ற இராஜதந்திரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் காத்திரமாக முன்வைத்து வருகின்றார். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கைக்குரியவராக அவர் மாறியிருக்கிறார். இந்நிலையில் வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் மூன்றாவது முறையாகவும் முள்ளியவாய்கால் நினைவேந்தல் நடைபெற்ற போது அது மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கை மேலும் அதிகரித்து விடும். இதனால் கூட்டமைப்பின் தலைவரும் தனது நிலையை தக்க வைக்க விரும்பியோ விரும்பாமலோ முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய ஒரு நிலமை உருவாகியிருந்தது. இந்த நிலையில் தான் அவர்களின் வருகை இடம்பெற்றது.

இம்முறையும் 9 ஆவது ஆண்டு நினைவேந்தலுக்கு முள்ளியவாய்கால் மண் தயாராகி வருகின்றது. இந்த நிகழ்வுகளிலும் கூட்டமைப்பு தலைமைகள் பங்குபற்றக் கூடிய நிலையே உள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தமிழ் தேசியகட கூட்டமைப்பு அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய தேவையுள்ளது. அதனால் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் முன் காட்சி கொடுக்க தொடங்கிவிட்டனர். யாழில் நடைபெற்ற கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கூட எஸ்.ரி.எப் பாதுகாப்புடன் அந்த நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையில் விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டிருந்தது. அரசாங்கம் தீர்வைத் வழங்காவிடின் நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்தப் போவதாக அண்மையில் சுமந்திரன் எம்.பி அவர்கள் அறிவித்து இருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்தநிலையில் தேர்தல் அரசியலுக்காக இம்முறையும் முள்ளிவாய்கால் மண் அரசியல்வாதிகளினால் நிறையத்தான் போகிறது.

அண்மையில் முள்ளியவாய்கால் நினைவேந்தல் தொடர்பில் வெளிவந்த அறிக்கைகள் சில கூட சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. உண்மையில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் என்பது ஒரு விழாவோ அல்லது அரசியல் நிகழ்வோ அல்ல. இது தமிழ தேசிய இனம் ஒன்றித்து அனுஸ்டிக்க வேண்டிய துயரநாள். இந்த நாளைக் கூட தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒன்றாக நினைவு கூட முடியாத நிலையே இன்றும் தொடர்கிறது. வடமாகாண சபை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஜனநாயக போராளிகள் கட்சி, பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் என பிரிந்து சென்று அனுஸ்டிப்பதற்கான முன்னேற்பாடுகளே ஆரம்பத்தில் இருந்து நடைபெற்று வந்தது. ஆனாலும் தற்போது இதில் சில தரப்புக்கள் இணைந்து அஞ்சலி செலுத்த தயாராக இருக்கின்றன. இருப்பினும் ஒரு இடத்தில் அனைத்து தரப்புக்களையும் இணைக்க முடியுமா என்பது கேள்வியாகவே உள்ளது. முள்ளிவாய்கால் நினைவுத் தூபி அமைக்கப்படும் என வடமாகாணசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்த போதும் அத்தகையதொரு நினைவுத்தூபி உரிய வகையில் இன்றுவரை அமைக்கப்படாமை வடமாகாணசபையின் பலவீனமே. நினைவுத்தூபி ஒன்று பொதுவாக அமைக்கப்படும் இடத்தில் அதனை அரசியல் நிகழ்வு இல்லாது பொது அமைப்புக்களின் தலைமையில் கீழ் ஒரு நினைவு அஞ்சலிக் கூட்டமாக அனைத்து அரசியல் தலைமைகளையும் ஒன்றிணைத்து நினைவு கூரக்கூடிய ஒரு நிலை உருவாகும். ஆனால் அத்தகையதொரு ஏற்பாட்டை செய்வதற்கு எந்தவொரு பொது அமைப்புக்களுமாக இருந்தாலும் சரி அல்லது மக்கள் இயக்கமாக தன்னை பிரகடனப்படுத்தியிருக்கும் தமிழ் மக்கள் பேரவையாக இருந்தாலும் சரி முன்வராமை துரதிஸ்டமே. ஒரு நினைவேந்தலைக் கூட ஒற்றுமையாக செய்ய முடியாத நிலை என்பது உரிமைக்காக போராடிய இனத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. அது அந்த மண்ணில் மடிந்த ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகமும் கூட. தனிப்பட்ட கட்சி அரசியலைத் தவிர்த்து தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்காகவும், விடிவுக்காகவும் இந்தப் போரில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய அந்த ஆத்மாக்களின் இலட்சியத்திற்காகவும், அவர்களின் ஆத்மாசாந்திக்காகவும் அனைத்து கட்சிகளும், பொது அமைப்புக்களும், தமிழ் மக்களும் இணைந்து ஒரு பொது நிகழ்வாக இதனை செய்ய வேண்டும். அதுவே அந்த ஆத்மாக்களுக்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் மரியாதையாகவிருக்கும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *