தலைப்பு செய்திகள்

ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை!

ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை!

நேர்காணல்-

கே.வசந்தரூபன்

ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை என வடமாகாண முன்னாள் சுகதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவரது முழுமையான பேட்டி வருமாறு:

கேள்வி: வன்னியின் சில பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் வேறு கட்சிகள் ஆட்சி அமைந்திருக்கின்றன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: அண்மையில் நடைபெற்ற தேர்தல் முறை வித்தியாசமான பல பாதிப்புக்களை ஏற்படுத்திய முறையாக இருந்தாலும் கூட நாம் அரசியல் கட்சியாக இருந்தவர்கள் பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்றதால் வவுனியா உட்பட வட மாகாணத்திலே தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலை வந்திருக்கின்றது. வவுனியாவில் தேர்தல் முறையால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையில் வவுனியாவில் 4 சபைகளிலும் மிகக்கூடிய ஆசனங்களை நாங்கள் பெற்றிருக்கின்றோம். உதாரணமாக வவுனியா நகரசபையில் 10 இல் 7வட்டாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று 8 ஆசனங்களை தனதாக்கி கொண்டது. வவுனியா தெற்கு பிரதேச சபையும் அதே போன்றுதான் 13 வட்டாரத்தில் 11 வட்டாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது.

யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின் காலப்பகுதியிலேயே பெருந்தொகையான சிங்கள மக்களை கொண்டு வந்து வவுனியா வடக்கில் குடியேற்றினார்கள். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு மக்களில்லாத பகுதிகளுக்கு யானை வேலிகள் அமைத்து குடியேற்றவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றது. வந்து குடியேறியவர்களின் கையில் வவுனியா வடக்கின் ஆட்சி போகவேண்டிய நிலை இருந்தது. தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 வட்டாரங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி 1 வட்டாரத்திலும் வெற்றி பெற்றது. எமக்குள்ளே என்னதான் பிரிவு இருந்தாலும் தமிழ் பேசுகின்றவர்கள் என்ற வகையிலும் தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் என்ற வகையிலும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என்ற வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழர் விடுதலைக் கூட்டனி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆகிய 3ம் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை காணப்பட்டது. கௌரவ சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவைகள் பேசியிருந்தோம். கடைசிவரை ஒத்துப்போக முடியாதென்று கூறிவிட்டார். அவர்கள் ஆம் என்றிருந்தால் 4 சபைகளும் எம்மிடம் இருந்திருக்கும். ஆனால் நகரசபையில் 10 வட்டாரங்களில் 07 வட்டாரங்களில் வெற்றிபெற்ற நாம் எதிர்க்கட்சியாக இருக்கின்றோம்.

கேள்வி: முன்னால் வடமாகாண அமைச்சர் என்ற வகையில் வடமாகாணசபையின் கடந்த ஐந்து வருட செயற்பாடுகள் எப்படி உள்ளன?

பதில்: பெரும்பாலான திணைக்களங்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டதாக நான் கருதுகின்றேன். வடக்கு மாகாண சபைக்கான ஐந்து ஆண்டுகளில் இந்த வருடம் ஐப்பசி மாதம் 10ம் திகதி தனது ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது. இந்த மாகாண சபையில் ஐந்து ஆண்டு காலத்திலும் பலவிதமான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செய்கின்றோம். வடக்கு மாகாணத்திலே இப்போது பல அரசியல் வாதிகள், ஊடகங்கள் இந்த மாகாண சபை என்னத்தை செய்ததென்ற கேள்வியை பலர் கேட்டுக்கொண்ட வண்ணமுள்ளனர் என்பது நீங்கள் அறிந்த விடயம். இந்த மாகாணத்திலே நாங்கள் நீண்டகால யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள். வடக்கு மாகாணத்திலே வாழ்கின்றார்கள். கிட்டத்தட்ட 30 வருடங்கள் பாரிய போருக்கு மத்தியிலே வாழ்ந்து வந்ததுடன் இந்த போரினால் நாம் உயிர்களை மாத்திரமல்லாது பல சொத்துக்களையும் இழந்தவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அப்படியான 30 ஆண்டு யுத்தம் நடைபெற்ற இடத்திலே மக்களுடைய தேவைகள், பிரச்சினைகள் மிகவும் அதிகம். நாம் சாதாரணமாக அநுராதபுரத்திலுள்ள மக்களுடனோ அல்லது குருநாகல் மாவட்டத்திலுள்ள மக்களுக்கு உள்ள பிரச்சினைகள்தான் எமது மக்களுக்குள்ளது என கூற முடியாது.

நாங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் இவ்வளவு பிரச்சினைகள் தேவைகளை இந்த 5 ஆண்டுகளில் மாகாண சபையால் நிறைவேற்ற முடியாது. ஆனால் இந்த 5 ஆண்டுகளிலே மாகாண சபை இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் மறுக்க முடியாது. இந்த மாகாண சபைக்கு கீழே 30 திணைக்களங்கள் இருக்கின்றது. அத்திணைக்களங்களில் மிகவும் முக்கியமான திணைக்களங்களில் கிட்டத்தட்ட 17 திணைக்களங்கள் எங்களுடைய கௌரவ முதலமைச்சருக்கு கீழ் இருக்கின்றது. ஏனைய மிகுதி 4 அமைச்சர்களுக்கு கீழும் 3 அல்லது 4 திணைக்களங்கள் தலா ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. எனக்கு கீழ் இருந்த சுகாதார திணைக்களமாக இருக்கட்டும் அல்லது விவசாய திணைக்களமாக இருக்கட்டும் ஏனைய மாவட்டத்திலில்லாத பல வேலைத்திட்டங்களை நாங்கள் இம் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளோம். எனது சுகாதார அமைச்சினால் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 5 புதிய வைத்தியசாலைகள் கட்டியிருக்கின்றோம். இது வரலாற்றில் எப்போதும் நடக்காத விடயம். பல மில்லியன் கணக்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றது. அது மட்டுமல்லாது இலவச அம்புலன்ஸ் சேவை மற்றும் வைகறை என்னும் சித்த மருத்துவமனை எனபன வவுனியாவில் உள்ளது.

வெளிநாட்டிலிருந்து பல மில்லியன் ரூபா பணம் மாகாணத்திற்க கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த வருடம் 160 கோடி ரூபாய் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது. அந்த நிதியில் பெருந்தொகையான நிதி வவுனியா வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 வருடங்களில் (2020) வவுனியா வைத்தியசாலை பாரிய வசதிகளைக்கொண்ட வைத்தியசாலையாக வரும். எமது மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் துரதிஸ்ர வசமாக இந்த மாகாணசபை மக்களுக்கு செய்த விடயங்களை கொண்டு செல்வதில் எற்பட்ட இடையூறுகளும் நாங்கள் மக்களுடன் பேசும் போது இவ்வளவு விடயம் நடந்ததா என கேட்கின்ற நிலைமையும் தான் தற்போது உள்ளது. அத்தோடு ஊடகங்களும் எமக்கு சரியான பங்களிப்பை வழங்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

நாம் ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் முதுகில் குத்துவதும், அரசியல் ரீதியாக நன்றாக செயற்பட்டவர்களை வெளியேற்றியதும் இப்படி அரசியலில் நடந்ததை மாத்திரம் வைத்துக்கொண்டு செயற்பட்ட எமது அரசியல் வாதிகளும் அல்லது அவர்களுடன் கூட நின்றவர்களால் தான் இந்த மாகாண சபை செய்த விடயங்கள் கூட மக்களுக்கு போய்ச்சேர முடியாதுள்ளது. இனியாவது நாம் ஒற்றுமையாக இருப்போம். இப்போது கூட நாம் ஒற்றுமையாக செயற்படக்கூடிய சூழ்நிலை இல்லாமல் இருப்பது மன வருத்தமாக உள்ளது.

கேள்வி: மகாவலி திட்டம் என்னும் பெயரில் கொண்டுவரப்படுகின்ற நீர்பாசன திட்டம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: மகாவலி திட்டம் பற்றி தற்போது பேசப்படுகின்றது. எமது மாவட்டத்திற்கு இந்த படிமுறை நீர்ப்பாசன திட்டம் வருவது எமக்கான அதிஸ்ரம். குளங்களில் 2 போகம் செய்யக் கூடியதாக இருக்கும். இருந்தாலும் மகாவலி அபிவிருத்தி திட்டம் தான் நடைமுறைப் படுத்துகின்றது என்பது எம் எல்லோருக்கம் பயம். ஏன் எனில் கடந்த காலங்களில் எங்கெல்லாம் மகாவலி அபிவிருத்தி திட்டம் வந்ததோ அங்கெல்லாம் சிங்கள குடியேற்றங்கள் வந்தது. இன்னும் மகாவலி தண்ணீர் வரவில்லை. ஆனால் மகாவலியைக்கூறி குடியேற்றங்கள் வருகின்றன. இத்திட்ட நீர் வவுனியாவுக்குள் வரும்போது இத்திட்டம் எமது மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என ஜப்பானிலிருந்து வந்த குழுவிடம் கூறினோம்.

அங்கு மக்களை குடியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் எமது மாவட்டத்தில் காணிகளற்ற விவசாய குடும்பங்களுக்கு இக் காணிகள் பிரித்து வழங்கப்பட வேண்டும். தமிழ், சிங்களம், முஸ்லீம் என பாராமல் எமது மாவட்டத்திலுள்ள மூவின மக்களுக்கும் பிரித்து வழங்கி நாங்கள் குடியேற்றங்களை மேற்கொள்ளலாம். ஆனால் இதுவரை உள்ள குடும்பங்களில் ஒன்று கூட எமது மாவட்ட குடியேற்ற குடும்பமில்லை. கிட்டத்தட்ட 7000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. அத்தனை குடும்பங்களும் இலங்கையின் தென் பகுதியிலிருந்து குடியேற்றப்பட்டுள்ளன. இதையே நாம் வேண்டாம் என்கின்றோம். மேலும் சிறு குளங்கள் எல்லாம் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இப்படியான வேலைத்திட்டங்களை செய்ய முடியாத நிலைமை தான் இந்த மாகாண சபையிடம் காணப்படுகின்றது. ஆகவே நாங்கள் எங்களால் செய்யக்கூடிய அதாவது மாகாண சபையால் செய்யக்கூடிய வேலைத்திட்டத்தையாவது நாங்கள் சிறப்பாக செய்ய வேண்டும்.

கேள்வி : தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?

பதில்: ஐக்கிய தேசிய கட்சியில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. அதுபோல எமது வடக்கு அரசியலிலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக ஊடகங்கங்கள் வாயிலாக அறியமுடிகிறது. இங்கு ஏற்படுகின்ற மாற்றங்கள் மக்களை அடிப்படையாக கொண்டு ஏற்பட வேண்டும் என்பது தான் எமது அவாவாக இருக்கிறது. நீண்ட கால யுத்தத்தால் பாதிக்க்கப்பட்ட மக்களின் வாழ்வு சார்பாகவும், இருப்பு சார்பாகவும் மாற்றங்கள் ஏற்படும் என்றால் அந்த மாற்றங்களோடு நாம் கைகோர்த்து செல்ல கூடிய சூழ்நிலை ஏற்படும் ஆனால் பத்திரிகை செய்திகளை பார்க்கும் போது மீண்டும் மக்களுக்கு எதிரான, மக்களை முன்னிலை படுத்தாத மாற்றங்கள் ஏற்படுவதாக அறியமுடிகிறது. மக்களை மையப்படுத்தாத விடயங்களில் அவற்றிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

கேள்வி: வவுனியா மாவட்டத்தில் உருவாகி வரும் குடியேற்றங்கள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: வவுனியா மாவட்டம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய மாவட்டமாக இருக்கிறது. காரணம் எமது நகரசபை, பிரதேசசபைக்கு உட்பட பகுதிகளிலே எமது குடிப்பரம்பலை மாறுவதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்க்கு எதிரான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக வவுனியா வடக்கு, செட்டிகுளம் போன்ற பிரதேசங்களிலே இந்த வேலை திட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று வவுனியாவை பார்க்கும் போது இது எமது மாவட்டம் தானா என்று எண்ண தோன்றுகிறது. அரசாங்கத்தின் வெசாக் கொண்டாட்டங்கள் இங்கு மேற்கொள்ளபட்டுவருகிறது. இதுதவிர வடக்கு பிரதேசங்களில் காடுகள் அழிக்கப்பட்டு மிகவும் இரகசியமான முறையில் புதிய குடியேற்றதிட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்க்கு தமிழ் கட்சிகள் ஒன்றுபடவேண்டும். இதனைத் தடுக்க தமிழ் கூட்டமைப்பு பல வழிகளில் அழுத்தம் கொடுத்து வருகின்றது. எனவே எமது மக்களின் வாழ்வின் மேம்பாட்டுக்காக எல்லோரும் இணைந்து உழைக்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டு கொள்கிறேன்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *