தலைப்பு செய்திகள்

ஒரு தனிநபருக்கு முன்னால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்

ஒரு தனிநபருக்கு முன்னால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்

யதீந்திரா

சுமந்திரன் தனது பேச்சுக்களாலும் செயலாலும் எப்போதுமே தமிழ் அரசியலில் சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வருகிறார். தனக்கு சரியென்பதை மட்டுமே பேசுவேன் என்பதை மிகவும் இறுமாப்புடன் மேற்கொள்ளும் ஒருவராகவே சுமந்திரன் இருக்கிறார். இதன் காரணமாக எழும் எந்தவொரு விமர்சனங்களைக் கண்டும் சுமந்திரன் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. பிறிதொரு வகையில் நோக்கினால் இதுவே சுமந்திரனின் பலமாகவும் இருக்கிறது. இப்போதும் சுமந்திரன் கூறியதாக சொல்லப்படும் ஒரு கருத்து தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அதற்கு சுமந்திரன் வழங்கியிருக்கும் பதில் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காலியில் இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றின் போது, சிங்களவர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் அடிப்படையில் சுமந்திரன் சமஸ்டியை தாம் கோரவில்லை என்றும், இருக்கின்ற மாகாண சபை முறைமையின் கீழ் இருக்கும் அதிகாரத்தை கொஞ்சம் அதிகரித்தால் போதுமானது என்றும் தெரிவித்திருக்கி;ன்றார். சுமந்திரன் சிங்களத்தில் தெரிவித்திருந்த மேற்படி கருத்தை தமிழ் மொழிக்கு மாற்றினால் அப்படித்தான் அர்த்தம் பெறும்.

மேற்படி கருத்து தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சுமந்திரனனின் அனுகுமுறையை விமர்சித்திருக்கின்றனர். செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் சுமந்திரன் அவ்வாறு கூறியிருந்தால், அவர் பிழையான திசையில் சிந்திக்கின்றார் என்றே கருத வேண்டியிருக்கிறது. புதிய அரசயலமைப்புக்கான பணிகளில் நாங்கள் சமஸ்டியை வலியுறுத்தி வருகின்றோம். சுமந்திரன் கூட்டமைப்பை திசைதிருப்ப முற்படுவராயின் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று ஏதோ கூறியிருக்கிறார். சுமந்திரன் பிழையான வழியில் சிந்திக்கின்றார் என்றால், சுமந்திரனோடு சேர்ந்து இயங்கிவரும் செல்வம் எப்படி சரியான திசையில் சிந்திக்க முடியும்? ‘கேக்கிறவர் கேனயன் என்றால் எலி ஏரப்பிளேன் ஓடுமாம்’ என்னும் ஒரு பழமொழியை இந்த இடத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை. முன்னுக்குப் பின் முரணாக பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் டெலோவின் தலைவர்கள் முதலில் கூட்டமைப்புக்குள் தங்களின் இடம் என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

பொதுவாகவே சுமந்திரன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட்டை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இது புளொட் மற்றும் டெலோவும் அறியாத சங்கதியுமல்ல. இம்முறை அதனை சுமந்திரன் மிகவும் வெளிப்படையாகவே செய்திருக்கின்றார். தனது கருத்தை பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் விமர்சி;த்தமை தொடர்பில் பதிலளிக்கும் போது, அவர்களுக்கு சமஸ்டி பற்றி எந்தளவிற்கு அறிவு இருக்கிறதென்று தெரியாது என்று எள்ளலாக பதிலளித்திருக்கின்றார். இது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சற்று அதிகமாகவே சுட்டிருக்க வேண்டும். ஆனாலும் சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாது என்பது எந்தளவிற்கு பங்காளிக் கட்சிகளுக்குப் பொருந்துமோ என்பதை நாம் அறியோம் பராபரமே!

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் புளொட் தலைவர், சுமந்திரனின் வயது தனது அனுபவம் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் இப்போதுதான் சித்தார்த்தனுக்கு தனது அனுபவம் தெரிந்திருக்கிறது. சித்தார்த்தனது சமஸ்டி பற்றிய அறிவு தனக்குத் தெரியவில்லை என்று சுமந்திரனால் சாதாரணமாக கூற முடிகிறதென்றால், கூட்டமைப்பிற்குள் சித்தார்த்தன் தனது இடம் என்னவென்று தெரியாமல் இருந்துவருகிறார் என்பதுதானே பொருள். கூட்டமைப்புக்குள் சித்தார்த்தனின் இடம் என்னவென்று சி;த்தார்த்தனுக்கு தெரியாமல் இருப்பதால்தான். சித்தார்த்தனிடம் என்ன அறிவு இருக்கிறது என்பது சுமந்திரனுக்குத் தெரியாமல் இருந்தி;ருக்கிறது. இது யாருடைய தவறு – சுமந்திரனுடையதா அல்லது சித்தார்த்தனுடையதா? சித்தார்தனுக்கு ஏறக்குறைய ஜம்பது வருடத்திற்கு மேற்பட்ட அரசியல் அனுபவமுண்டு. தற்போது கூட்டமைப்புக்குள் இருப்பவர்களுக்குள் திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர்களில் ஒருவர் சித்தார்த்தன். மற்றையவர் இராஜவரோதயத்தின் மகன் சம்பந்தன். ஒருவகையில் பார்த்தால் சம்பந்தனுக்கு முன்னரே அரசியல் கண்டவர் சித்தார்த்தன். புளொட் இயக்கத்தின் சார்பில் அதன் சர்வதேச பிரிவை கையாண்டவர். சம்பந்தன் காண்பதற்கு முன்பதாகவே இந்தியாவையும் அதன் பல முகங்களையும் கண்டவர். ஒரு வேளை, கூட்டமைப்புக்குள் ஜனநாயகம் இருந்திருக்குமானால் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் கூட்டமைப்பின் தலைவராக சித்தார்த்தனே இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை ஏனெனில் சித்தார்த்தனுக்கே தனது இடம் என்னவென்று தெரியாமல் இருக்கின்ற போது, மற்றவர்கள் ஏன் அந்த இடம் தொடர்பில் சிந்திக்க வேண்டும்?

சித்தார்த்தன், புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உப குழுக்களில் ஒன்றான, மத்திக்கும் மானிலத்திற்குமான உறவுகள் தொடர்பான குழுவின் தலைவராக இருந்தவர். சம்பந்தனது அறிவுறுத்தலுக்கு அமைவாகவே, அந்தப் பொறுப்பை சித்தார்த்தன் ஏற்றுக் கொண்டிருந்தார். சுமந்திரன் தற்போது தெரிவித்திருக்கும் கூற்றின்படி நோக்கினால் சம்பந்தன், சமஸ்டி பற்றி;த் தெரியாத ஒருவரைத்தான். உப குழு ஒன்றின் தலைவராக நியமித்திருக்கிறார். இந்த அடிப்படையில் நோக்கினால், இhஜவரோதயத்தின் மகன் சம்பந்தனுக்கும் சமஸ்டி பற்றி ஒன்றுமே தெரியாது என்னும் முடிவுக்கல்லவா வரவேண்டியிருக்கிறது. ஏனெனில் சமஸ்டி பற்றி சம்பந்தனுக்கு அறிவிருந்திருந்தால் சமஸ்டி பற்றிய அறிவில்லாத சித்தார்த்தனை எவ்வாறு உப குழுவின் தலைவராக நியமித்திருப்பார்? சம்பந்தன், மன்னாரில் இடம்பெற்ற ‘தடம்மாறுகிறதா தமிழ் தேசியம்’ என்னும் தலைப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசுகின்ற போது முதல் முதலாக ஒற்றையாட்சி சமஸ்டி (Unitary federalism) என்னும் புதிய அரசியல் பதமொன்றை பயன்படுத்தியிருந்தார். அவர் அவ்வாறு கூறுகின்ற போது இந்தப் பத்தியாளரும் சபையில் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர் இந்த சொற் பிரயோகம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது எங்கும் அப்படியொரு முறைமை இருப்பதாக அறியமுடியவில்லை. சம்பந்தன் ஒரு வேளை சமஸ்டி பற்றிய அறிவில்லாமல் அப்படிச் சொல்லியிருக்கலாம் ஆனால் கூட்டமைப்பில் சமஸ்டி பற்றிய அறிவுள்ள ஒரேயொரு நபரான சுமந்திரனும் அதென்ன ‘ஒற்றையாட்சி சமஸ்டி’ என்று இதுவரை தெரிவிக்கவில்லை. ஒருவேளை கூட்டமைப்புக்குள் எவருக்குமே சமஸ்டி பற்றி தெரியாதோ? அதனால்தான் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான விளக்கங்களை கூறுகின்றனரோ!

TNA-press-600x400

சுமந்திரன் இவ்வாறெல்லாம் இறுமாப்பாக நடந்து கொள்வதன் பின்னணி என்னவென்று பார்த்தால், அனைத்துக்கும் பங்காளிக் கட்சிகளின் இயலாமையே காரணம். 2009இற்கு பின்னர் அரசியலுக்கு அறிமுகமான சுமந்திரனால் எவ்வாறு இந்தளவிற்கு தன்னிச்சையாக செயற்பட முடிகிறது? உண்மையில் இந்த இடத்தில்தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனித்துத் தெரிகின்றார். ஆரம்பத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரனே கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்தார். சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்புக்குள் அதிகாரத்துடன் இருக்கும் வரையில் சுமந்திரனால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. 2015 தேர்தலில் சுரேஸ் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமந்திரன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கூடடமைப்பின் தீர்மானங்கள் அனைத்துமே சுமந்திரன் – சம்பந்தன் என்னும் இரு நபர்களுக்குள் அடங்கிப் போனது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டால்தான் பங்காளிக் கட்சிகளுக்கு தாங்களும் கூட்டமைப்புக்குள் இருக்கிறோம் என்பது நினைவுக்கு வரும். ஆசனங்கள் தொடர்பான தெருச்சண்டைகள் இடம்பெறும். ஆசனப்பங்கீட்டின் போது வீராவேச அறிக்கைகளை வெளியிடும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், குரங்கு பிரிக்கும் அப்பத் துண்டுகளில் திருப்திகொண்டு, பின்னர் அப்படியே சோடா கேஸ் போல் அடங்கிப் போவர். தேர்தல் காலங்களில் வீராவேச அறிக்கைகளை வெளியிடுவதில் டெலோவிற்கு நிகர் டெலோ மட்டுமே.

இந்த விடயங்கள் அனைத்தையும் மதிப்பிட்டுத்தான் சுமந்திரன் பேசுகின்றார். புதிய அரசியல் யாப்பு விவகாரங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுப்பராக சுமந்திரன் மட்டுமே இருந்தார். தமிழ் மக்களின் சார்பில் ஜெனிவா தொடக்கம் வோசிங்கடன் வரையில் சுமந்திரனே பயணம் செய்கின்றார். கூட்டமைப்பின் சார்பில் வெளிநாட்டு ராஜதந்திரிகளை அனுகும் அதிகாரமுடைய நபராகவும் சுமந்திரனே இருக்கின்றார். இந்த அதிகாரங்களை சுமந்திரன் எங்கிருந்து எடுத்துக் கொண்டார்? அவருக்கு இதனை வழங்கியவர்கள் யார்? சுமந்திரன் தமிழ் மக்களின் சார்பில் ஒவ்வொரு விடயங்களையும் முன்னெடுக்கும் போது, அது இந்த அடிப்படையில்தான் அமைந்திருக்க வேண்டும். தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர் ஒவ்வொரு விடயங்களும் எங்களது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நாங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும்தான் கூட்டமைப்பின் சார்பில் குறித்த விடயங்களை முன்னெடுக்க முடியும். இப்படியெல்லாம் கூட்டமைப்புக்குள் எவராவது சுமந்திரனுக்கு அறிவுறுத்தியது உண்டா? தமிழ் மக்களின் சார்பில் ஒவவொரு முடிவுகளும் எடுக்கப்படுகின்ற போது, அதில் தங்களின் இடம் என்னவென்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? அது பற்றி கேள்வி எழுப்பியதுண்டா?

நிலைமை இப்படியிருக்க பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் அறிவு என்னவென்று சுமந்திரன் கேட்பதில் பெரிய தவறிருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கும் போது தங்களின் இடம் என்னவென்று தெரியாமல் இருந்த பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், எடுக்கப்பட்ட முடிவை விமர்சிக்க முற்படும் போது, சுமந்திரன் கோபப்படுவதிலும் ஒரு பொருள் உண்டுதானே! சுமந்திரன் தனது பேச்சில் குறி;ப்பிட்டிருந்த பிறிதொரு விடயத்தையும் இங்கு நோக்க வேண்டும். வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை ஒரு தபால்காரன் என்று சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அதாவது நான் உச்ச நீதிமன்ற்தில் வாதாடி ஒரு தீர்ப்பை பெற்றேன் ஆனால் விக்கினேஸ்வரனோ நான் பெற்றுக் கொடுத்த திர்ப்பை தூக்கிக் கொண்டு மகாநாயக்கர்களிடம் செல்கின்றார். ஆனால் சுமந்திரன் கூறும் இந்த விடயத்தில் ஒரு கருத்துப் பிழையுண்டு என்பது வேறு விடயம். அதாவது, பொதுவாக ஒரு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அந்த திர்ப்பு இந்த சட்டத்தரணியால் வந்தது என்று யாரும் கூறுவதில்லை. மாறாக, குறி;த்த நீதிமன்றத் தீர்ப்பு அல்லது குறித்த நீதிபதிகளால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்றுதான் சொல்வது வழக்கம். அதனைத்தான் விக்கினேஸ்வரன் சுட்டிக் காட்டியிருக்கிறார். இது விக்கினேஸ்வரன் தரப்பின் கருத்து.

Sumanthiran and Federal (2)

ஆனால் பொதுவில் சுமந்திரன் கூறமுற்படுவது வெள்ளிடைமலை. நான் உழைக்கின்றேன். நான் ராஜதந்தரிகளுக்கு விளக்கமளிக்கின்றேன். அதற்காக பயணங்களை மேற்கொள்கின்றேன். ஆனால் சும்மா இருந்து கொண்டிருப்பவர்கள் கேள்வி கேட்கின்றனர். எப்படி நீங்கள் கேள்வி கேட்க முடியும்? நான் எதைச் சொன்னாலும் நீங்கள் வாயை முடிக்கொண்டிருக்க வேண்டும் ஏனெனில் இதில் உங்களின் பங்கு என்று ஒன்றுமில்லை. எனவே இப்போது பிரச்சினை சுமந்திரனல்ல. பங்காளிக் கட்சிகளில்தான் கோளாறுண்டு. பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்புக்குள் தங்களின் இடம் என்னவென்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டுதான், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் அறிவு பற்றியும் பேசியிருக்கின்றார். சுமந்திரனுக்கு அதற்கான ஆற்றலும் துனிவும் இருக்கிறது ஆனால் சுமந்திரனை தொடர்ந்தும் கூட்டமைப்பின் பேச்சாளராக அனுமதிக்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றும் ஆற்றலும் துனிவும் கூட்டமைப்பன் பங்காளிக் கட்சிகளான புளொட்டிமும், டெலோவிடமும் இருக்கிறதா? ஒரு தனிநபரான சுமந்திரனுக்கு முன்னால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு பங்காளிக் கட்சிகள், பங்காளியாக இருந்து கொண்டே, தோற்றுக்கொண்டிருக்கப் போகின்றார்கள்?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *