செய்திகள்

ஓகஸ்ட்டில் பொதுத்தேர்தல் : நாளை வர்த்தமானி அறிவித்தல்

பொதுத்தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனினும், திகதி குறித்த இறுதித் தீர்மானம் நாளை திங்கட்கிழமை, ஆணைக்குழு கூடி முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல் குறிப்புக்களை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது பரிசீலித்து வருவதாகவும் இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தபபடலாம் என்றும் தெரியவருகிறது.

அந்த குறிப்புக்களின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் ஒவ்வொரு பெரிய கூட்டங்கள் வைக்க அனுமதிப்பதுடன், அதில் அதிகபட்சமாக 500 பேரே கலந்து கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்பவர்களிற்கிடையில் 1 மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும்.

இந்த கூட்டங்களில் கலந்து கொள்பவர்களின் பெயர் விபரம், தொலைபேசி இலக்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

“பொக்கற் மீற்றிங்“களில் அதிகபட்சமாக 100 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

நாளை திங்கள்கிழமை, வேட்பாளர்களின் இலக்கங்களுடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும். இதனை தொடர்ந்து, தேர்தல் பிரச்சரங்கள் முறையாக ஆரம்பிக்கப்படும்.

பொதுத்தேர்தல் ஓகஸ்ட் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை, மரத்தாலான வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படாது. அட்டைப் பெட்டிகளே பயன்படுத்தப்படும்.

வாக்களிப்பிற்கு மறுநாள் வாக்குகள், விருப்பு வாக்குகள் எண்ணப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.