தலைப்பு செய்திகள்

ஓநாய்கள் மோதும் போது ‘ஆடுகள்’ ஏன் அழுகின்றன?

ஓநாய்கள் மோதும் போது ‘ஆடுகள்’ ஏன் அழுகின்றன?

-இதயச்சந்திரன்

கடந்த ஒக்டோபர் 26 அன்று, 2015 இல் ஏற்படுத்தப்பட்ட ‘நல்லாட்சி ‘ அரசின் இதயத்தால் ஒன்றிணைந்த வாழ்வு முடிவிற்கு வந்தது.

புவிசார் அரசியலில் தீர்மானகரமான சக்திகளாகத் திகழும் வல்லரசுகள், இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி அதற்கு ‘நல்லிணக்க நல்லாட்சி அரசாங்கம்’ என்று  பெயர் சூட்டியதாக நம்பப்படுகிறது.

அது நம்பிக்கையல்ல உண்மை என்பதனை அவர்களின் பக்கத்திலிருந்து வரும் கடுமையான கண்டனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

2004 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உடைத்தது போன்று, 2015இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை பிரித்தெடுத்து நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டது.

ஐதேக, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், மலையக கட்சிகள்  மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவோடு வெற்றி பெற்றார் மைத்திரிபால சிறிசேன.

அரசியல் நிர்ணய சபை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்ற நகர்வுகள் நல்லாட்சியின் விளைவுகளாக சித்தரிக்கப்பட்டு, மைத்திரிக்கான ஆதரவினை நியாயப்படுத்தும் கருவிகளாக்கப்பட்டன.

இப்போது ஆட்சிமாற்றம் தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. நல்லாட்சியிலிருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு, புதிதாக உருவாக்கப்படும் ‘ஏக்கிய ராஜ்ய ‘அரசியலமைப்பினை நிறைவேற்றிவிடலாம் என்கிற கனவு சிதைந்துவிட்டது.

இனியென்ன 15 நாடுகளின் பலவான்களை சந்தித்து, ‘சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டுங்கள்’ என்று தமது  இராஜதந்திர சாணக்கியத்தனத்தினைக் காட்டினாலும் யாப்பு வடிவில் தீர்வு வரப்போவதில்லை.

2015 இற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி- ஐக்கிய தேசியக்கட்சி என்று நடந்த இருநிலை அரசியல், இனி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐதேக என்றாகிவிடும்.

மீண்டும்  இந்திய-மேற்குலக அனுசரணையோடு ‘புதிய நல்லாட்சி ‘ அரசு அமைந்தால், சம்பந்தரின் ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர்களால் பெறமுடியுமா என்று தெரியவில்லை.

கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது,  அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வெல்வார்கள் என்கிற நம்பிக்கை ஏற்படவில்லை.

ரணிலா? சஜிதா? என்ற போட்டி, தற்போதைய சூழ்நிலை கருதி ஒத்திவைக்கப்பட்டாலும், தேர்தல் வரும்போது அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் தலைமைப்போட்டி விவகாரம் வெடித்துக் கிளம்பும் வாய்ப்புமுண்டு.

‘திடீர் தோசை’ போல, ‘திடீர் பிரதமர்’ மகிந்த ராஜபக்ச  நாடாளுமன்றில் தோன்றிய நாள் முதல், இவ்வளவு காலமும் கட்டிக்காத்த ஜனநாயகம் அழிந்துவிட்டதென கூச்சல் போடுவோரை பார்க்கும்போது, மே 2009 இல் இந்த ஜனநாயகத்தின் உலகக் காவலர்களும் உள்ளூர் காவலர்களும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததை வலி சுமக்கும் மக்களால் ஒருபோதும்  மறக்க முடியாது.

தமிழின வரலாற்றில் 2009 என்பது  மிகக்கொடூரமான நிகழ்வுகளை சுமந்து நிற்கிறது. அது மாவீரத்தின் இறைமைக்கோட்பாட்டு உறுதியை உரத்துச் சொல்கிறது.

sri lanka parliamant fight
2009 இனவழிப்பின் மூலவர்கள் இருவரும் , 2015 இல் பிரிந்து  2018 இல் மீண்டும் இணைந்துள்ளார்கள்.

2015 இல் நல்லவராக, தமிழர்களின் மீட்பராக வெள்ளையடிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன, 2018 இல் மேற்குலகின் ஊடகங்களால் போர்க்குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறார் என்கிற செய்தி வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இனத்தின் மீட்பராக, ஜனநாயகத்தின் காவலனாக, எளிமைமிகு  மனிதனாக , நெல்சன் மண்டேலா போல் காட்டப்பட்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சர்வாதிகாரியாகிவிட்டார்.

சரத் பொன்சேக்கா முதல் மைத்திரிபால சிறிசேன வரையிலான தமிழின ஒடுக்குமுறையாளர்களுக்கு வாக்களிக்கச் சொன்ன கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்து நிலை பற்றி பேசினால், யதார்த்தம் புரியாதவர்கள் என்று பூசிமெழுகுவதற்கு ஒரு கும்பல் தயார் நிலையில் இருக்கிறது.

வல்லரசுகளின் நலன்களுக்காக ஆட்சி மாற்றங்களுக்கு முண்டு கொடுப்பதும், வல்லரசுகளை அரவணைத்து தீர்வினைப் பெற்றுவிடலாமென்று தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளித்து வாக்குப் பெறுவதும், தமிழ்த் தேசிய அரசியலின் வாடிக்கையாகிவிட்டது.

பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்றுவரை, சிங்களத்தின் அரசியலானது  தமிழ் தேசிய இனம் குறித்தான அணுகுமுறையில் ஒரே போக்கினையே கொண்டுள்ளது.

தமக்குள் நடக்கும் அதிகாரப்போட்டிக்கு, தமிழர் தரப்பினை பகடைக்காயாக பயன்படுத்தி தூக்கியெறியும் வழிமுறையையே எப்போதும் கையாள்கிறது.

இவை புரியாமல், சிங்கள அரசியலில் மென்போக்கு கடும்போக்கு என இரு பிரிவுகள் இருப்பதுபோல் கற்பிதம் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் ஒருபக்க சரிவுப்போக்கினை தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் எப்போதும் மேற்கொண்டு வந்திருக்கின்றன.
அந்தத் தவறினை இப்போதும் செய்ய விரும்புகின்றன.

ஒரு தீர்வினை எட்ட வேண்டுமாயின் மத்தியில் ஐதேக வும், பிராந்திய மட்டத்தில் இந்தியாவும் மேற்கும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற அரசியல் முன்நிபந்தனையை, தமக்குள்ளே உருவாக்கிக் கொண்டுள்ளன.

இந்துசமுத்திரப் பிராந்திய மட்டத்தில் பாகிஸ்தானில் இம்ரான்கானின் வருகையும், மாலைதீவில் இந்திய சார்பு  அதிபராக இப்ராஹிம் முகமட் சொலியின் பதவியேற்பும் இலங்கையிலும் அவ்வாறான  சார்புநிலை உறுதியாகுமென கூட்டமைப்பு கணிக்கிறது.

தமது 15 நாடாளுமன்ற பிரதிநிதிகளும், எவர் ஆட்சிக்கு கட்டிலில் அமர வேண்டுமென்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என்பதை இந்தியாவும் மேற்குலகமும் தெரிந்து வைத்திருப்பார்கள் என சம்பந்தன் நம்புகிறார்.
தமது உரிமைகளைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட எம்பிக்கள், ரணிலைக்  காப்பாற்றுவதற்காக ஏன் நீதிமன்றத்தில் வழக்காடுகிறார்கள், 15 நாடுகளின் தூதுவர்களை சந்திக்கிறார்கள் என்கிற பெருத்த சந்தேகம் தமிழ் மக்களிடையே எழுகிறது.

அதுமட்டுமல்ல, நகைப்பிடமான இன்னுமொரு முரண்நிலையையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

உயர் நீதிமன்றம் சென்று  இணைந்த வடக்கு கிழக்கைப் பிரித்த ஜேவிபியும், இணைப்பிற்காகப் போராடுவதாகக் கூறும் கூட்டமைப்பும் அதே நீதிமன்றத்திற்குச் சென்று மைத்திரியின் நாடாளுமன்ற கலைப்பிற்கு எதிராக ஒரே அணியில் இணைந்து வாதிட்டுள்ளார்கள்.

அதன் விளைவாக மைத்திரியின் கலைப்பிற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவும்  நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.
இங்குதான் கூட்டமைப்பின் அரசியல் இராஜதந்திரம் குறித்த சந்தேகம் பலமாக எழுகிறது.

மூன்றில் இரண்டு பலமில்லாத ரணிலை ஆதரித்தால் தீர்வு கிட்டுமா?.

வழமை போன்ற நிபந்தனையற்ற ஆதரவினால், இருக்கும் பதவிகள் காப்பாற்றப்படும் ஆனால் வாக்களித்த மக்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா?.

இருபெரும் கட்சிகளும் இணைவதால் தீர்வு சாத்தியம் என்று 2015 இல் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தீர்வினை அடைவதற்கு இனியென்ன இராசாவின் தந்திரத்தைக் கையாளப்போகிறது?.

சீனா வந்தால் தீர்வில்லையென்று படம் காட்டுபவர்கள், இந்தியாவும் மேற்குலகமும் வந்தால் தீர்வு நிச்சயம் என்கிற உத்தரவாதத்தையாவது கொடுப்பார்களா?.

பிராந்தியத்தில் வல்லரசுகள் பனிப்போர் செய்வதும், கொழும்பில் பேரினவாதக் கட்சிகள் அதிகாரத்திற்காக மோதுவதும், அதையிட்டு ஒருபக்கச் சார்பாக நின்று நாம் அழுவதும் புத்திபூர்வமானதல்ல.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *