தலைப்பு செய்திகள்

கடற்படை அதிகாரிகள் எவ்வாறு ஆள் கடத்தலில் ஈடுபட்டனர் : பொலிஸார் பேச்சாளர் விளக்கம்

கடற்படை அதிகாரிகள் எவ்வாறு ஆள் கடத்தலில் ஈடுபட்டனர் : பொலிஸார் பேச்சாளர் விளக்கம்

ஆட்கடத்தல்கள் தொடர்பாக உறுதியான சாட்சிகளை அடிப்படையாக கொண்டே கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களால் கடத்தப்பட்ட நபர்கள் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்பில்லாதவர்கள் எனவும் இவர்களிடமிருந்து பணத்தை பெறும் நோக்கிலேயே இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர இவ்வாறாக கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2008 காலப்பகுதியில் 28 பேர் வரையிலானோர் காணமல் போயுள்ளதாகவும் ஆனால் 11 பேர் தொடர்பான விசாரணைகளே முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் கடத்தப்பட்டவர்கள் கொழும்பிலும் , திருகோணமலை முகாமிலும் தடுத்து வைத்திருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்த அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
கடற்படையின் அப்போதிருந்த அதிகாரியான லெப்டினன் கமன்டர் சம்பத் முனசிங்க என்பவர் இருந்தார். அவர் அப்போதிருந்த கடற்படை தளபதியாக இருந்த கரண்ணாகொடவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார். இதன்பின்னர் கடற்படை தளபதியினால் 2009 மே 29ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனக்கு பாதுகாப்பாக இருந்த சம்பத் முனசிங்க என்பவரின் கெபினில் இருந்து 4 பேரின் அடையாள அட்டைகள் மற்றும் அவர்களில் ஒருவரின் கடவுச்சீட்டு மற்றும் பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள் 450 வரையும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் கையடக்க தொலைபேசியொன்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஊறுதிப்படுத்தல் தாள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரியே அவரால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி விசாரணை நடத்திய சீ.ஐ.டியினர் அந்த அடையாள அட்டைகள் யாருடையது என தேடிப்பார்த்த போது அவை மன்னார் பகுதியை சேர்ந்த சூசைபிள்ளை அமலன் லியோன் , சூசைபிள்ளை ரொசான் லியோன் ஆகியோரினதும் கொட்டாஞ்சேனையை சேர்ந்த கஸ்தூரி ஆராச்சிகே என்டனி என்பவரினதும் திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா ஜெகன் என்பவரினதும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடற்படையின் சட்டப்பிரிவினால் கடற்படை அதிகாரிகளினால் மேலும் சில முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் சம்பத் ஹெட்டியாராச்சி என்ற மற்றுமொரு கடற்படை அதிகாரிக்கு எதிராகவும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் தெஹிவளை பகுதியில் மேலும் 5 இளைஞர்களை காணாமல் போக செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களில் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த ரஜீவ் நாதன் , பிரதீப் விஸ்வநாதன் கிரேன்ட்பாஸ் பகுதியை சேர்ந்த திலகேஸ்வர் ராமலிங்கம் , மருதானை பகுதியை சேர்ந்த மொஹமட் ஜமல்டீன் மற்றும் தெமட்டகொட பகுதியை சேர்ந்த மெகமட் சாஜித் ஆகியோரே இவ்வாறு காணாமல் போக செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டது. இதன்படி 9 பேர் காணமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தபோது மேலும் இருவர் காணாமல் போனமை தொடர்பாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி தெஹிவளை பகுதியை சேர்ந்த மொகமட் அலி அன்வர் என்பரும் மற்றும் கஸ்துரி ஆராச்சி என்பவரும் கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்படி மொத்தமாக 11 பேர் இவ்வாறாக கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்படி இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் மிகவும் தெளிவான சாட்சிகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக முக்கிய சாட்சிகள் சிவில் நபர்களின் வாக்கு மூலங்கள் மூலமும் , கடற்படை அதிகாரிகள் முதல் சிறிய அதிகாரிகள் வரையும் சாட்சிகள் கிடைத்துள்ளன. இவர்களை கடத்திசென்று தடுத்து வைத்திருந்த காலப்பகுதியில் இவர்கள் அடிக்கடி கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தாருடன் தொலைபேசிகள் மூலம் பேசியுள்ளனர். இதற்காக இந்த செயலை ஏற்றுக்கொள்ளாத கனிஸ்ட கடற்படை உத்தியோகத்தர்களின் தொலைபேசிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக தொலைபேசி உரையாடல் அறிக்கைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு உறவினர்கள் ரீலோட் செய்தும் உள்ளனர். இது தொடர்பாக அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி தொலைபேசி தொலைத்தொடர்பு கோபுற அறிக்கைகளை கொண்டு அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன. இதேவேளை இங்கு கடத்தப்பட்ட ஒருவரின் வாகனமொன்று சந்தேக நபர்களில் ஒருவர் கடற்படை வாகனம் போன்று தனது தேவைக்காக பயன்படுத்தியுள்ளார். ஆனால் உறவினர்கள் அந்த வாகனத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
இதேவேளை சம்பத் முனசிங்க மற்றும் ஹெட்டியாராச்சியின் கெபினில் இருந்தே அடையாள அட்டைகளும் , கையடக்க தொலைபேசியும் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் கையடக்க தொலைபேசியானது கடத்தப்பட்ட ஒருவருக்கு பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் பரிசளித்த ஒன்று. இதன்படி அந்த கையடக்க தொலைபேசியை அவர் அண்மையில் குற்ற விசாரணை பிரிவுக்கு இங்கிலாந்திலிருந்து வந்து அடையாளம் காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலைமையில் அண்மையில் கடற்படை கொமதோரு டீ.கே.பி.தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த காலப்பகுதியில் கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளராக இருந்துள்ளார். அந்த காலப்பகுதியில் கடற்படை புலனாய்வு பிரிவுக்கு புறம்பாக இவருக்கு கீழ் இரண்டு குழுக்கள் செயற்பட்டுள்ளன. ஒன்று ஹெட்டியாரச்சியும் , ரணசிங்கவும் பொறுப்பாக இருந்துள்ளன. இதன்படி தசாநயக்கவுக்கு எதிராக பல்வேறு சாட்சிகள் உள்ளன. இவரால் பயன்படுத்தப்பட்ட சிம் காட் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கைகளும் உள்ளன. பணத்தை பலவந்தமாக பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கான போதுமான சாட்சிகள் உள்ளன. இது தொடர்பாக இது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடற்படையை சேர்ந்தவர்களே. ஆரம்பத்தில் சம்பத் முனசிங்க 2 வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தினால் பினை பெற்றுள்ளார். மற்றையவர்கள் அனைவரும் விளக்க மறியலில் இருக்கின்றனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் மிகவும் திறமையாக விசாரணை நடத்தியுள்ளனர். இவர்கள் தொடர்பாக தெளிவான விசாரணைகளை மேற்கொண்டு சாட்சிகளை அடிப்படையாக கொண்டே கைது செய்துள்ளனர். நீதிமன்றமே இவர்கள் குற்றம் செய்துள்ளனரா என்பதனை தீர்மானிக்க வேண்டும். இது தொடர்பாக யாரேனும் சவால் விடுப்பதென்றால் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளன. இதன்படி சவால் விடுக்க முடியும். நாங்கள் முப்படையினரிடமும் அறிக்கை கோரியுள்ளோம். அதன்படி இவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புகளை கொண்டவர்கள் அல்ல என்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை காணமல் போன இந்த 11 பேருடன் 28 பேர் காணாமல் போயுள்ளதாக குற்றவிசாரணை பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 11 பேர் தொடர்பாகவே தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மற்றையவர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடக்கும். என தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *