Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கல்முனை விவகாரம்: ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான விழிப்பின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுமா ?

கல்முனை விவகாரம்: ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான விழிப்பின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுமா ?

நிலாந்தன் 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளை மறுபடியும் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறது. ஈஸ்ரர் குண்டு வெடிப்பையடுத்து குறிப்பாக சீயோன் தேவாலயத்தில் முப்பதிற்கும் குறையாதவர்கள் கொல்லப்பட்ட பின்னணியில் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் பதட்டம் அதிகரிப்பதைத் தடுக்கும் விதத்தில் அங்குள்ள சிவில் சமூகங்களும் கிறிஸ்தவ சமயப்பணி நிறுவனங்களும் விசுவாசமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டன. சீயோன் தேவாலயத்தின் மீது நடந்த தாக்குதலின் பின்னரும் கிழக்கில் முஸ்லிம்களின் மீது தமிழ் மக்கள் தனியாட்களாகவோ அல்லது கும்பலாகவோ பழிவாங்கும் தாக்குதல்கள் எதிலும் ஈடுபடவில்லை.

மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு கடைகளை வாடகைக்கு கொடுக்க தமிழர்கள் முஸ்லிம் வர்த்தகர்கள் மீது சில நெருக்கடிகளைப் பிரயோகித்ததாகக் கூறப்படுகிறது. முஸ்லிம் வணிகர்களிடம் தமிழ் மக்கள் பொருட்களை வாங்கக்கூடாது என்றும் சில தரப்புக்களால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிராக அநாமதேயப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. எனினும் இரத்தம் சிந்தும் பழிவாங்கல் எதுவும் நடக்கவில்லை என்பது ஒரு செழிப்பான முன்னுதாரணம். ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் நிலமைகளைத் தலைகீழாக்கிவிடும் போல் தெரிகிறது. கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகளைச் சீர் செய்ய முற்படுவோர் மேலும் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதையே இந்தவார நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு தமிழ் மக்கள் 30 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறார்கள்.கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் அல்லது அதற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது, நாவிதன்வெளி, இறக்காமம, காரைதீவு போன்ற உப பிரதேச செயலகங்கள் இப்பொழுது தரம் உயர்த்தப்பட்டு விட்டன. ஆனால் கல்முனை விவகாரத்தில் முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பினாலும் தமிழ் அரசியல்வாதிகளின் இயலாமையினாலும் அப்பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை. முஸ்லிம் மக்கள் ஏன் அதை எதிர்க்கிறார்கள்?

கல்முனை பிரதேசத்தில் குறிப்பாக நகரப்பகுதியில் தமிழ் மக்களே செறிவாக வாழ்கிறார்கள. கல்முனைக்கு தெற்கே காணப்படும் கல்முனைக்குடி என்ற பகுதியில் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழ்கிறார்கள். இவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகளின் மையத்தளமாக காணப்படும் கல்முனை நகரப்பகுதியும் சந்தையும் தமிழ் உப பிரதேச செயலக பிரிவுக்குள் வருகின்றன. தமது வணிக ஆதிக்கம் அதிகமுடைய ஒரு பிரதேசம் தமிழ் உப பிரதேச செயலகத்திற்குள் போவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை. இதுதான் பிரச்சினை.

அதேசமயம் தமிழ் மக்கள் கூறுகிறார்கள் தமக்கு முழு அதிகாரமுடைய ஒரு பிரதேச செயலகம் கிடைத்தால் அதை வைத்துத் தமக்கென்று உள்ளுராட்சி அதிகார அலகையும் பெறலாம் என்று. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மொத்த முஸ்லிம் சனத்தொகையும் அம்பாறை மாவட்டத்திலுள்ள மொத்தத் தமிழ்ச் சனத்தொகையும் கிட்டத்தட்ட ஒன்று என்று கூறும் தமிழ் மக்கள் மட்டக்களப்பில் இருக்கும் முஸ்லிம் சமூகம் பெற்றிருக்கும் நிர்வாக வளங்களோடு ஒப்பிடுகையில் அம்பாறையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையென்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

உதாரணமாக மட்டக்களப்பில் வாழும் முஸ்லிம் சமூக்திற்கு அவர்களுடைய சனச்செறிவிற்கேற்ப நிர்வாக அலகுகளும், உள்ளுர் அதிகார அலகுகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஆனால் அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதேச செயலகங்கள் கல்வித் திணைக்களங்கள் உள்ளிட்ட பல நிர்வாகக் கட்டமைப்புக்களில் போதியளவு இடம் தரப்படவில்லையென்றும் அவர்கள் குறைபடுகிறார்கள்.அதோடு அம்பாறையிலிருக்கும் தமிழ்ப் பகுதிகளில் தண்ணீர் மீற்றர், மின்சார மீற்றர் போன்றவற்றை வாசிக்கும் ஊழியர்களும் உட்பட நிர்வாக அதிகாரிகள், முடிவெடுக்கும் தகுதியுள்ள அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த முப்பதாண்டுகளாகத் தீர்க்கப்படாத இப்பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கடந்த திங்கட்கிழமை தொடக்கம் குறிப்பிட்ட உப பிரதேச செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலுமான ஒரு உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தில் இந்து மத குருக்களும், மெதடிஸ்ற் திருச்சபை போதகர் ஒருவரும், ஒரு பௌத்த பிக்குவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சிலரும் காணப்பட்டார்கள். இப் போராட்டத்திற்கு கருணா, வியாழேந்திரன் உள்ளிட்ட தென்னிலங்கை மையக் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பெரும்பாலான பத்திரிகைகள் இப்போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளைப் பிரசுரித்துள்ளன. அதுமட்டுமல்ல முஸ்லிம்களுக்கு எதிராக துருத்திக் கொண்டு தெரியும் தேரர்கள் சிலரும் களத்தில் இறங்கினார்கள். நேற்று ஞானசார தேரர் வாக்குறுதி வழங்கியதையடுத்து தேரர்கள் போராட்டத்தைக் கைவிட்டார்கள்.

1
தேரர்கள் களத்தில் குதித்தது தற்செயலானது அல்ல. இதற்கான கருக்கள் ஏற்கனவே அங்கிருந்தவைதான். மேற்படி உபபிரதேச செயலகம் தொடர்பில் போராடும் தரப்புக்களில் சிலர் சில மாதங்களுக்கு முன்னரே பொதுபல சேனவோடு உரையாட வேண்டும் என்று விரும்பியதாகத் தெரிகிறது. கல்முனையில் ஞானசார தேரருக்கு ஓர் அலுவலகத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் சில தரப்புக்கள் முயற்சித்தனவாம்.

இந்த விவகாரத்தை தமிழ் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் கூடிக் கதைத்து தீர்க்க வேண்டும் என்று ரிசாத் பதியுதீன் கேட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் தேரர்களின் தலையீட்டை அவர் அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தை இரு சமூகங்களின் பிரதிநிதிகளும் தீர்க்க முடியாமல் போனமைக்கு காரணம் முதலாவதாக – தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள். அதாவது சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமானது தமிழ் முஸ்லிம் உறவுகளைத் துண்டாடுவதற்கு இதுபோன்ற விவகாரங்களை தமிழ் மக்களுக்கு எதிராகக் கையாண்டு வந்தது என்பதே உண்மை. இரண்டாவது காரணம்-இது விடயத்தில் முஸ்லிம்களை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஒரு கருவியாக் கையாண்டு வருகிறது. இதற்கு முஸ்லிம் தலைவர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். மூன்றாவது காரணம்-தமிழ்த் தலைவர்கள். முன்னைய காலங்களில் அரசாங்கங்களோடு சேர்ந்து நின்றவர்களும் யுத்தத்தின் பங்காளிகளாக நின்றவர்களும் இப்பொழுது போராட்டக்காரர்கள் மத்தியில் காணப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் அதிகாரத்தில் இருந்த காலங்களில் ஏன் இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவில்லை? குறைந்தபட்சம் முஸ்லிம் தலைவர்கள் தமது இணக்க அரசியலின் மூலம் நமது சமூகத்தைச் செழிப்பாக்கியதுபோல இவர்களும் ஏன் தமது இணக்க அரசியலின் மூலம் இது போன்ற விடயங்களைத் தீர்க்க முடியவில்லை?

30 ஆண்டுகளாக இந்த விவகாரம் தீர்க்கப்படாமைக்கு மேற்கண்ட மூன்று தரப்புகளுமே பொறுப்பு. இப்பொழுதும் தேரர்கள் உள்நுழைவதை குறித்து ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால் தேரர்கள் அங்கே உள் நுழையும் அளவுக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே விரிசல்கள் காணப்பட்டன என்பதனையும் அந்த விரிசல்களுக்கு முஸ்லிம் தலைவர்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பொறுப்பு என்பதனையும் ரிசாத்தைப் போன்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்ணணியில் கடந்த புதன்கிழமை மாலை கல்முனை மாநகரசபை வளாகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களும், முஸ்லிம் வர்த்தகர்களும், பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் அதில் பங்குபற்றினர். இக்கூட்டத்தின் முடிவில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி புதனிரவு கல்முனைத் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தமிழ் மக்கள் நடாத்திவரும் சாகும் வரையிலுமான உண்ணாவிரதப் போராட்டத்தால் போக்குவரத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் அவசரகாலச்சட்ட விதிக்கமைய அப்போராட்டத்தை சமூக நல்லிணக்கம் கருதி அகற்ற வேண்டும் என்றும் முஸ்லிம் தரப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் சாதாரண முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவதைக் குறித்து தமிழ்ச் சிவில் சமூகங்களும் கருத்துருவாக்கிகளும் கருத்துத் தெரிவித்து வரும் ஒரு பின்னணியில் அதே அவசரகாலச்சட்டத்தை உண்ணாவிரமிருப்பவர்களின் மீது பிரயோகிக்க வேண்டுமென்று முஸ்லிம் சமூகம் கேட்டிருக்கிறது.

இவ்வாறு இரண்டு சமூகங்களுக்கும் இடையே காணப்பட்ட விரிசல்களை பயன்படுத்தி தேரர்கள் உள்நுழைந்திருக்கிறார்கள். முஸ்லீம் தலைவர்களுக்கெதிரான உணாவிரதத்தால் கிடைத்த வெற்றிகளில் ருசி கண்டு அவர்கள் கிழக்கிலும் இறங்கினார்கள். இதில் சம்பந்தப்பட்ட தேரர்கள் தமிழ் அரசியல்வாதிகளை விடவும் தீவிரமான போராளிகள் போலக் காணப்பட்டார்கள். இந்த விவகாரத்தில் ஒரு முடிவை காணும் வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறினார்கள். ஒரு காலக்கெடு விதித்து அதற்குள் விவகாரத்தை தீர்க்காவிட்டால் அதற்காக தாங்கள் சாகத் தயார் என்றும் கூறினார்கள.இதுபோன்ற தீவிரம் தமிழ் மக்களின் பிரதிநிதிககளிடம் காணப்படாத ஒன்று.

ஆனால் இங்கு முக்கிய கேள்வி என்னவென்றால் இது அரசாங்கத்துக்கு எதிரானதா அல்லது முஸ்லிம்களுக்கு எதிரானதா? என்பதே. மெய்யாகவே தேரர்கள் இந்த விவகாரத்தை தமிழ் நோக்கு நிலையிலிருந்து தீர்க்க விரும்பினால் இந்த விவகாரத்தில் மட்டுமல்ல இதற்கும் அப்பால் மிக ஆழமாக வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதோடு தமிழ் பகுதிகளில் நிகழும் பௌத்த மயமாக்கலை எதிர்க்க வேண்டும்.

குறிப்பாக 2009க்கு பின்னர் யுத்தத்தை வேறு வழிகளில் தொடரும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் உபகரணங்களில் ஒன்றாகப் பிக்குகள் காணப்படுகிறார்கள். முல்லைத்தீவில் நீராவியடிப் பிள்ளையார் கோவிலை ஒரு பிக்கு ஆக்கிரமிக்கப் பார்க்கிறார். திருமலையில் கன்னியா வெந்நீரூற்றை வேறு சில பிக்குக்கள் பௌத்த மயமாக்க முயற்சிக்கிறார்கள். நாவற்குழியில் ஒரு விகாரை கட்டப்படுகிறது. தமிழ் பகுதிகளில் பெரும்பாலான பௌத்த ஆலயங்கள் படைக்கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே காணப்படுகின்றன. இவ்வாறு 2009ற்குப் பின்னரும் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை பிக்குக்கள் வேறு வழிகளில் தொடர்கிறார்கள். இது விடயத்தில் மேற்படி தேரர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரத்திலும் அவர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு, வடக்கு கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களில் மேற்படி பிக்குகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்தால்தான் அவர்கள் தமிழ் மக்களோடு சேர்ந்து போராடுவது நீதிக்காகத்தான் அதாவது சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்திற்கு எதிராகத்தான் என்ற முடிவுக்கு தமிழ் மக்கள் வரலாம். மாறாக ஒருபுறம் யுத்தத்தை வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டு தமிழ் பகுதிகளில் பௌத்த மயமாக்;கலைச் செய்து கொண்டு இன்னொருபுறம் தமிழ் மக்கள் முஸ்லிம்களோடு முரண்படும் இடங்களில் தமிழ் மக்களோடு சேர்ந்து போராடுவது என்பது தமிழ்-முஸ்லிம் சமூகங்களைப் பிரித்தாளும் ஒர் உத்திதான.

பிக்குகள் மிகவும் தெளிவாகவும் தீவிரமாகவும் இருக்கிறார்கள். தமிழ் பகுதிகளில் இருக்கும் மரபுரிமை ஸ்தலங்களை ஆக்கிரமிப்பதும் அதே சமயம் தமிழ் – முஸ்லிம் உறவுகளை மேலும் முரண் நிலைக்குத் தள்ளுவதும் ஒரே நிகழ்ச்சி நிரலின் இருவேறு பகுதிகள்தான். ஒன்று நேரடியாகவே சிங்கள பௌத்த மயமாக்கலைச் செய்கின்றது. இன்னொன்று சிங்கள – பௌத்த மயமாக்கலுக்கு எதிராக சிறிய தேசிய இனங்கள் ஒற்றுமைப்படுவதைத் தடுக்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் தரப்பு அதிகம் விழிப்பாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தைக் கையாள்வது தொடர்பில் 2009ற்குப் பின்னரான புதிய தொகுக்கப்பட்ட ஒரு பார்வை அவசியம்.

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகம் முன்னரை விட அதிகமாக ஓரலகாகிவிட்டது. எனினும் முஸ்லிம் தலைமைகள் சிங்கள – பௌத்த பெருந்தேசிய வாதத்தோடு இணக்க அரசியலைச் செய்வதா? அல்லது எதிர்ப்பு அரசியலைச் செய்வதா? என்பதைக் குறித்து ஓர் ஒட்டுமொத்தத் தீர்மானத்தை இன்னமும் எடுக்கவில்லை. அவர்கள் எதிர்ப்பு அரசியலுக்குப் போவதை சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதம் அனுமதிக்காது. அதே சமயம் வடக்கு – கிழக்கை இணைய விடாது தடுப்பதில் முஸ்லிம் சமூகத்தை ஒரு நிரந்தர ஆப்பாக சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதம் பயன்படுத்தும். கல்முனை உபபிரதேச செயலக விவகாரத்திலும் முஸ்லிம்களை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு உள்ளளுராட்சி அதிகாரங்களை வழங்குவதற்கு இதுவரையிலும் இருந்து வந்த அரசாங்கங்கள் தயாராக இருக்கவில்லை என்பதே உண்மை நிலை.

ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான நிலமைகள் முஸ்லிம் தலைவர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஒரு பயங்கரமான உண்மையை உணர்த்தியுள்ளன. அதாவது சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதத்தைப் பயமுறுத்தாத வரைக்கும்தான் முஸ்லிம்களுக்கு இலங்கைத்தீவில் எதிர்காலம் உண்டு என்பதே அது. ஈஸ்ரர் தாக்குதல்கள் ஒரு புறம் முஸ்லிம் சமூகத்திற்கு பெருந்தீங்கை ஏற்படுத்தியுள்ளன. இன்னொரு புறம் பெரு விழிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கல்முனை விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் அந்த விழிப்பின் அடிப்படையில் முடிவெடுக்குமா?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *