Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிழக்கின் தேர்தல் களம் சவால்களும் சந்தர்ப்பங்களும்

கிழக்கின் தேர்தல் களம் சவால்களும் சந்தர்ப்பங்களும்

யதீந்திரா

தேர்தல் களம் தொடர்பான பொது அவதானம் என்பது எப்போதுமே வடக்கை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. ஒப்பீட்டடிப்படையில் வடக்கின் தேர்தல் களம்தான் தமிழ்த் தேசிய நிலையில் போட்டிமிக்கதாக இருக்கின்றது. அதே வேளை ஒப்பீட்டடிப்படையில் வடக்கு மாகாணத்தில், முக்கியமாக யாழ் தேர்தல் மாவட்டத்தில்தான் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் போட்டியிடுகின்றனர். மேலும் அங்குதான் தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் பலமாக இருக்கின்றன. இதன் காரணமாகவே தேர்தல் அரசியல் தொடர்பான அவதானம் முழுவதும் வடக்கை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் பிரதான தலைவர்களாக அடையாளம் காணப்படும் அனைவரும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். இவ்வாறான காரணங்களினால் கிழக்கில் என்ன நடைபெறுகின்றது என்பது அதிகம் ஊடயமயப்படுத்தப்படவில்லை.

இம்முறை தேர்தல் முடிவுகள் ஒரு செய்தியை கூறலாம். அதாவது, கிழக்கில் தமிழ்த் தேசிய வாக்கு வங்கியின் சரிவு. இவ்வாறானதொரு பார்வை பொதுவாகவே காணப்படுகின்றது. இது தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள கருத்தியல் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, அவரோ திரும்பி என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார் – தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க வேண்டும் என்னும் எண்ணம், தமிழ்த் தேசியத்தை காப்பதாக கூறி, கட்சிக் கடைகள் நடத்துபவர்களிடம் இல்லாதபோது, அது தொடர்பில் நானும் நீங்களும் கவலைப்படுவதில் என்ன பயன்? கூட்டமைப்பு தொடர்பில் கடுமையான அதிருப்திகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் இம்முறை கூட்டமைப்பினர் எதிர்பார்ப்பது போன்று நிலைமைகள் இருக்காது என்பதே பலருடைய அபிப்பிராயம். வடக்கில் எவ்வாறு கூட்டமைப்பின் ஏகபோகம் உடைவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்றனவோ, அதே போன்றதொரு நிலைமையே கிழக்கிலும் காணப்படுகின்றது. ஆனால் கிழக்கில் கூட்டமைப்பு எதிர்கொள்ளுகின்ற சவால் வித்தியாசமானது.

Sam and Ruban

இதில் திருகோணமலை மற்றும் அம்பாறையின் வாக்களிப்பு மனோபாவம் சற்று வித்தியாசமானது. ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் தமிழர்கள் சார்பில் ஒரேயொரு பிரதிநிதி மட்டுமே வரமுடியும். இந்தப் பகுதிகளில் இருக்கின்ற ஒரேயொரு பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் இழந்துவிடக் கூடாது என்றவாறான பிரச்சாரத்தையே கூட்டமைப்பினர் மேற்கொள்கின்றனர். உண்மையில் இது ஒரு தேர்தல் வியூகமே தவிர அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமான வாதம். ஏனெனில் இதுவரை கிடைத்த பிரதிநிதிகளை வைத்து கூட்டமைப்பினர் சாதித்தது என்னும் கேள்விக்கு கூட்டமைப்பிடம் பதிலில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், ராஜதந்திர சமூகம் என்னை போட்டியிடும்படி கூறுகின்றனர் என்னும், புதிய பொய் ஒன்றுடன், நடப்பதற்கே நடுங்கும் சம்பந்தன் திருமலையில் போட்டியிடுகின்றார். ஆனால் இதிலுள்ள உண்மையான பக்கம் வேறு. அதாவது ஆரம்பத்தில் போட்டிடுவதை தவிர்க்க விரும்பியிருந்த சம்பந்தன், பின்னர் தான் போட்டியிடாது விட்டால் தமிழரசு கட்சியின் ஆசனத்தை தக்கவைக்க முடியாதுபோய்விடும் என்னும் அச்சத்தினால்தான், மீண்டும் போட்டியிடுகின்றார். ஏனெனில் அந்தளவிற்கு ஆளுமையுள்ள வேட்பாளர் ஒருவர் தமிழரசு கட்சியிடம் இல்லை.

அம்பாறையை பொறுத்தவரையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோவிற்கான வெற்றிவாய்ப்பை தட்டிப் பறிக்கவேண்டும் என்னும் நோக்கிலேயே தமிழரசு கட்சி செயற்பட்டது. கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரன், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, டெலோவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஆனால் இம்முறை அவர் தமிழரசு கட்சியின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளராவார். வேட்பாளர் நியமனத்தின் போதுதான், டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை அறிந்துகொண்டார். டெலோவை பொறுத்தவரையில் இது ஒரு மோசமான அவமானம். அதே போன்று கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் வசந்தராஜாவின் பெயரை மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியிலில் இணைக்குமாறு கோரியிருந்தார். ஆனால் தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அதனை ஏற்கவில்லை. ஏனெனில் வசந்தராஜா வெற்றிபெறக் கூடிய வேட்பாளர். கடந்த தேர்தலின் போது புளொட் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றிபெற்றிருந்தார். அதாவது வெற்றிபெறக் கூடியவர்கள் பங்காளிக் கட்சிகளில் இருக்கக் கூடாது என்னும் அடிப்படையிலேயே வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றன. ஆனாலும் நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டுமென்னும் நிலையில்தான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில், டெலோவின் சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் சம்பந்தன் திட்டமிட்டு கோடீஸ்வரனை பிரித்தெடுத்தார். ஆனால் இன்று அம்பாறையின் நிலைமை என்ன? கிடைக்கும் தகவல்களின்படி விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறை தளபதி கருணா அம்மானின் செல்வாக்கு குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாகவே கூறப்படுகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகளினால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில், அதனை எதிர்கொள்ளுவதற்கு கருணா போன்ற ஒருவர் தேவையென்று கருதுவதாகவும் கூறப்படுகின்றது. சில தகவல்களின்படி தமிழரசு கட்சியின் தூரநோக்கற்ற செயற்பாடுகளால் இம்முறை அம்பாறையின் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமலும் போகலாம்.

கிடைக்கும் தகவல்களின்படி மட்டக்களப்பில் கூட்டமைப்பினர், வழமைக்கு மாறாக கடுமையான போட்டியை எதிர்கொண்டிருப்பதாகவே கூறப்படுகின்றது. எவரை கேட்டாலும் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே பிரதான மாற்றுத் தலைமையாக கூறுகின்றனர். இதுவரை பிள்ளையான் தலைமையிலான கட்சி தொடர்பில் மட்டக்களப்பு சிவில் சமூகத் தரப்பினர் மத்தியில் நிலவிய கருத்துக்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்களில் அனேகர் படித்த, நன்மதிப்புள்ள சமூக பிரமுகர்களாகவும் இருக்கின்றனர். ஒப்பீட்டடிப்படையில் கூட்டமைப்பின் வேட்பாளர்களைவிடயும் ஆளுமையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இது அந்தக் கட்சியின் மீதான பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்கான சான்றாகும். இந்த நிலையில் கடந்த முறை கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றியை இம்முறை பெறமுடியாதென்பதே பலருடைய அபிப்பிராயம்.

Mavi, sanakkiyan

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பெயரளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று கூறிக்கொண்டாலும் கூட, கிழக்கின் தீர்மானங்கள் முற்றிலும் தமிழரசு கட்சியின் செல்வாக்கிற்குள்தான் இருக்கின்றது. கிழக்கு தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையில், இதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும் நபராக துரைராஜசிங்கம் காணப்படுகின்றார். மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் பலருடன் பேசுகின்ற போது இன்று இவ்வாறானதொரு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டதற்கு குறித்த நபரே காரணம் என்கின்றனர். ஆனால் விடயங்களை ஆழமாகப் பார்த்தால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டதற்கு ஒருவரைப் பொறுப்பாக்க முடியுமென்றால், அது நிச்சயமாக இராஜவரோதயம் சம்பந்தனாக மட்டுமே இருக்க முடியும். கிழக்கு மாகாண சபையில் நசீர் முகமட்டை முதலமைச்சராக்குவதற்காக கூட்டமைப்பினர் கையுயர்த்தியதிலிருந்து, நிலைமைகள் மோசமடையத் தொடங்கியது. இதனால் தமிழ் – முஸ்லிம் உறவு வலுவடையவில்லை மாறாக மேலும் சிக்கலடைந்தது. கடந்த ஆட்சிக் காலத்தில் நிலைமைகள் மேலும் மோசமடைந்தன.

மக்களுக்கு தலைமை தாங்குபவர்கள் மக்களின் பிரச்சினைகளோடு கலக்க வேண்டும். ஆனால் கூட்டமைப்போ போலியான தமிழ் – முஸ்லிம் உறவொன்றை காண்பித்து மக்களின் உணர்வுகளுக்கு புறம்பாக செயற்பட்டது. இந்த இடைவெளியில்தான் மக்கள் புதிய தலைமைகளை தேடத் தொடங்கினர். ஏனெனில் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் தமிழ் சமூகம், முஸ்லிம் சமூகத்தையே அதன் பிரதான போட்டியாளராகப் பார்க்கின்றது. இன்று மட்டக்களப்பை சேர்ந்த படித்த மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில், மட்டக்களப்பிற்கென்று ஒரு தமிழ் அமைச்சர் இருக்க வேண்டும் என்னும் சிந்தனை மேலோங்கியிருக்கின்றது. இதற்கு முஸ்லிம் அமைச்சர்களின் செயற்பாடுகளே காரணம்.

கிழக்கு நிலைமைகளை சரியாக கையாளாவிட்டால் நிலைமைகள் நாளடைவில் மேலும் மோசமடையலாம். கிழக்கு முற்றிலுமாக தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து விலகிச் செல்லும் நிலைமையும் ஏற்படலாம். கிழக்கை பொறுத்தவரையில் தமிழ் தேசிய அரசியலையும் அதே வேளை மக்களுக்கான அபிவிருத்தியையும் சமாந்தரமாக பிரதிபலிக்கக் கூடியதொரு தலைமையே மக்களுக்குத் தேவை. அது நிச்சயம் கூட்டமைப்பால் முடியாது. ஒரு வேளை கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றிகொண்டாலும் கூட, அது தமிழ்த் தேசியத்தின் வெற்றியல்ல.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *