தலைப்பு செய்திகள்

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் கடந்த 4 ஆம் திகதி பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொண்டிருந்தனர். பிரதேச இளைஞர்களால் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முறுகல் நிலை ஒன்றும் தோன்றியிருந்தது.

இந்த நிலையில் ஒட்டுசுட்டான் பொலிசார் தலையிட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை கடந்த 06 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படிநேற்று வரை குறித்த மலைக்கு எவரும் செல்ல முடியாதவாறு தற்காலிக தடை உத்தரவினை நீதிவான் பிறப்பித்துள்ளதுடன், வழக்கினை மேலதிக விசாரணைக்காக திகதியிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதில் குறித்த கிராமத்தின் சார்பாக மக்களும், விகாரை அமைக்க வந்த பௌத்த துறவிகள் தரப்பினரும் , ஒட்டுசுட்டான் பொலிசாரும் முன்னிலையாகியிருந்தனர்.

குமுழமுனை குருந்தூர்மலை கிராம மக்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் மற்றும் மூத்த சட்டத்தரணி ரி.பரஞ்சோதி மற்றும் சட்டத்தரணிகளான சுபாவிதுரன், கணேஸ்வரன், ஜெமீல், ராதிகா, நேரோஜினி, மின்ராச், துஸ்யந்தினி, அனித்தா, ஹரிஸ், சுதர்சன், உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த 14 சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதாடினார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில், குறித்த பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றினை கொண்ட பிரதேசம். அங்கு பல நூற்றாண்டுகளாகாக இயற்கை வழிபாட்டுமுறையில் ஆலயம் ஒன்றினை அமைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் அங்கு அந்த இடத்திற்கு சம்மந்தமில்லாத பௌத்த மதகுருமார் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தின் அனசரணையுடன் விகாரை அமைப்பதற்காக வருகை தந்திருப்பதானது இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சுமூகமற்ற ஒரு நிலையினை தோற்றிவிக்கும். குறித்த பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபட்டு வரும் மக்களின் வழிபாட்டிற்கு தடைவிதிப்பது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்.

அத்துடன் தொல்பொருள் திணைக்களம் ஆய்வு என்ற பெயரில் விகாரை அமைப்பதற்கு பௌத்த மதகுருக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளமை பிழையான விடயம். அதனை தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிவான் குறித்த மலைப்பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை என்றும் குறித்த பிரதேசத்தில் புதிதாக கட்டுமானம் மற்றும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளகூடாது என்றும் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் புதிதாக எந்தவொரு மதத்தினையும் சேர்ந்த ஆலயங்கள் அமைப்பதும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு நிர்மாணிப்பதாக இருந்தால் பொலிசில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றின் அனுமதியுடன் மேற்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை குருந்தூர் மலையில் தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் யாழ்.பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் பங்குபற்றலுடன் மூத்த வரலாற்று ஆய்வாளர்களினதும் பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே அகழ்வு ஆராய்ச்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவ்வாறு செய்யப்படாதுவிடத்து இனமுரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு, குருந்தூர் மலைப் பகுதியில் அனுமதியின்றி மத வழிபாட்டுத் தலங்களை அமைக்க முடியாது என்றும், அங்குள்ள சைவ ஆலயத்தில் மக்கள் தடையின்றி வழிபட முடியும் எனவும், முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.(15)32


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *