கூட்டமைப்பின் ஏமாற்று நாடகமும் தமிழ் மக்களும்
யதீந்திரா
அண்மைக்காலங்களில் இது போன்றதொரு ஏமாற்று நாடகம் தமிழ் அரசியல் சூழலில் இடம்பெறவில்லை. தமிழ் மக்களை எந்தளவிற்கு ஏமாற்றலாம் என்பதற்கும், தமிழ் மக்கள் எந்தளவிற்கு ஏமாறுமாவர்கள் என்பதற்கும் இது ஒரு வரலாற்று உதாரணம். பல்வேறு விடயங்கள் மிகவும் ஆர்ப்பாட்டமாக இடம்பெற்றன. இரவுபகலாக விவாதங்கள் இடம்பெற்றன. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள் மதத்தலைவர்கள் எனப்பலரும் ஈடுபட்டனர். இதன் விளைவாக 13அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றில் ஜந்து கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். அந்த ஆவணம் ஒரு வரலாற்று ஆவணம் போல் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அனைத்தும் இறுதியில் புஸ்வானமாகிவிட்டது. இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவரது முகத்திலும் கூட்டமைப்பு காறிஉமிழ்ந்திருக்கிறது. உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளும், தமிழ் சமூகத்தை பிரதிபலிக்கும் சிவில் சமூக தரப்பினர், மதத்தலைவர்கள் புத்திஜீவிகள் எந்தளவிற்கு கையறுநிலையில் இருக்கின்றனர் என்பதற்கு இதனையும்விட வேறு சிறந்த உதாணரம் இருக்க முடியுமா? அரசியல் வாதிகளுக்கு எங்கிருந்து இந்தளவு துனிவை பெற்றனர்? விழிப்புணர்வற்றிருக்கும் தமிழ் சமூகத்திலிருந்தா? அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல்மிக்கவர்கள் என்னும் கற்பனையில் கிடக்கும் சிவில் சமூகதரப்பினரின் இயலாமைலிருந்தா? புத்திஜீவிகள் சமூகத்தின் இயலாமையிலிருந்தா? தாங்கள் நினைக்கும் எதனையும் தங்களால் செய்ய முடியும் என்னும் எண்ணம் எவ்வாறு சம்பந்தன் – சுமந்திரன் தரப்பிற்கு கிடைக்கின்றது. எவ்வாறு அவர்களால் எவரையும் பொருட்படுத்தாமல் இதனை செய்ய முடிகின்றது. இதனை இன்னொரு விதத்தில் கூறுவதானால், எவ்வாறு அவர்களால் தொடர்ந்தும் எல்லோரையும் ஓரங்கட்டி வெற்றிபெற முடிகின்றது?
தபால் மூல வாக்கெடுப்பிற்கு முன்னர்தான் ஜந்து கட்சிகளும் கூடி ஆராய்ந்தன. நாளை காலை மக்கள் வாக்களிக்கப் போகின்றனர் ஆனால் மக்களை வழிநடத்துவதாக கூறிக்கொள்ளும் தலைமைகளோ, முதல் நாள் மாலை ஜந்து மணிக்குத்தான் அதுபற்றி ஆராய்கின்றன. தமிழ்த் தேசிய கட்சிகள் எந்தளவிற்கு கையறுநிலையில் இருக்கின்றன என்பதற்கு இது வெள்ளிடைமலை. தபால் மூல வாக்கெடுப்பிற்கு பின்னர் இலங்கை தமிழரசு கட்சி சஜித்பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்தது. ஆனால் இதே கட்சி தபால் மூல வாக்கெடுப்பிற்கு முன்னர் மக்களை முடிவெடுக்குமாறு அறிவித்திருந்தது. அதே கட்சியே பின்னர் சஜித்பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து புளொட் மற்றும் டெலோவும் சஜித்பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்தன. இப்போது, கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு சஜித்பிரேமதாசவை ஆதிப்பதாகும். இவ்வாறானதொரு நிலைப்பாட்;டுக்குத்தான் கூட்டமைப்பு வரப்போகின்றது என்றால் பின்னர் எதற்காக பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டும்? எதற்காக 13அம்ச கோரிக்கைக்கு உடன்பட வேண்டும்?
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதுதான் கூட்டமைப்பின் முடிவென்றால் அதனை தாரளமாகவே செய்யலாம் எதற்காக இவ்வாறு நடாகமாடவேண்டும்? மக்களை ஏமாற்ற வேண்டும்? சஜித்பிரேமதாசவை ஆதரிப்பதுதான் கூட்டமைப்பின் முடிவென்றால் அதற்கு இவ்வாறு சுற்றிவழைக்க வேண்டியதில்லையே! தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தே சஜித்தை தாம் அதரிப்பதாக கூட்டமைப்பினர் கூறுகின்றனர்? அது உண்மையாயின் அந்த தேர்தல் விஞ்ஞாபனம் வரும் வரையில் அமைதியாக இருந்திருக்கலாமே? அதற்கிடையில் எதற்கு 13 அம்ச கோரிக்கை நாடகம்? ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென்று கட்சிகள் முடிவெடுக்கலாம். சில கட்சிகள் மிகவும் வெளிப்பயைடாகவே கோட்டபாயவை ஆதரிக்கின்றன. அது ஒரு நேர்மையான அணுகுமுறை. ஏனெனில் அதனை அவர்கள் சுற்றிவழைத்துச் செய்யவில்லை. அதே போன்று தமிழ்த் தேசியப் பரப்பில் கஜேந்திருமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைத்திருக்கின்றது. அது அந்தக் கட்சியின் நிலைப்பாடு. எனவே கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தல் தொடர்பில் சுயாதீனமான முடிவை எடுக்க முடியும். அது இங்கு விடமல்ல ஆனால் அந்த முடிவை எடுப்பதற்காக போலியான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் இங்குள்ள கேள்வி. கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழ் மக்களை எந்தளவிற்கு மலினமாக நினைக்கின்றார்கள் என்பதுதான் இதிலிருந்து தெளிவாகும் உண்மை.

ஜந்து கட்சிகளை ஒரிடத்தில் சந்திப்பதற்கான ஏநற்பாடுகளை மேற்கொண்;ட பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றப் போகின்றனர்? ஜந்து கட்சிகளின் உடன்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த சிவில் சமூக தரப்பினர் புத்திஜீவிகள் மதத்தலைவர்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றப் போகின்றனர்? ஏனெனில் கூட்டமைப்பு இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கூட்டமைப்பின் இந்த இளக்காரமான போக்கிற்கான சமூக பதில் என்ன? ஒரு ஜனாதிபதி தேர்தலில் முடிவெடுப்பதற்கு இந்தளவு தங்களுக்குள் குழும்பும், மக்களை குழப்பும் இவர்களால் எவ்வாறு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அடைய முடியும்? ஏனெனில் இவ்வாறு தமிழ் மக்களை மலினப்படுத்திய கூட்டமைப்பு மிகவும் துனிகரமாக பாராளுமன்ற தேர்தலையும் தாங்கள் எதிர்கொள்ள முடியுமென்று எண்ணுகின்றது. இதற்கான துணிவு எங்கிருந்து வருகின்றது?
தாங்கள் என்ன செய்தாலும் அதற்கான பலமாக எதிர்வினை தமிழ் சமூகத்திலிருந்து எழாது என்றே சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு உறுதியாக நம்புகின்றது. அந்த நம்பிக்கை அவர்களுக்குள் இருக்கின்றவரையில் அவர்கள் மக்களை ஏமாற்ற அஞ்சப்போவதில்லை. ஆனால் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் சமூகம், வடக்கு கிழக்கில் இயங்கும் சிவில் சமூக அமைப்புக்கள், இது தொடர்பில் சிந்திக்கும் புத்திஜீவிகள், அரசியல் செயற்பாட்டார்கள் ஓரணியாக திரண்டால் நிச்சயம் இந்த எதேச்சாதிகாரப் போக்கிற்கு ஒரு பதிலை கொடுக்கலாம். இன்று தேர்தல் பிரச்சாரங்களில் பிரதான பேசுபொருளாக இருப்பது கோட்டபாய வெற்றிபெற்றால் ஜனநாயகம் செத்துவிடும். எதேச்சாதிகாரம் ஆட்சியேறிவிடும் என்றெல்லாம் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் ஒரு வேளை அது உண்மையாக இருந்தால் அது மிகவும் வெள்ளிப்படையாகவே நிகழும். வெளிப்படையான எதேச்சாதிகாரத்தை மக்கள் எதிர்கொள்ளுவர். வரலாறு முழுவதும் அது நடந்திருக்கிறது. ஆனால் ஜனநாயக போர்வைக்குள் ஒழிந்திருக்கும் எதேச்சாதிகாரம்தான் மிகவும் ஆபத்தானது. 13அம்ச கோரிக்கையை மக்கள் முன்வைத்துவிட்டு, அது தொடர்பில் எந்தவொரு பொறுப்பும் கூறாமல் தன்னிச்சையாக ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை ஒரு கட்சியால் எடுக்க முடிகின்றது என்றால் இதன் பொருள் எதேச்சாதிகாரம் இல்லையா? எதேச்சாதிகாரம் என்பது ஆட்சியாளர்களுக்கு மட்டுமான ஒன்றல்ல அது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும் உரிய ஒன்றுதான். ஒரு கட்சி நாங்கள் நினைப்பதையலெ;லாம் செய்வோன் எங்களை யாரும் கேள்விகேட்க முடியாது என்னும் எண்ணத்தோடு செயற்படுவது, ஒரு அரசியல் எதேச்சாதிகாரமாகும். அதனைத்தான் தற்போது தமிழசு கட்சியும் அதன் பாதச்சுவட்டில் நடைபழகும் பங்காளிக் கட்சிகளும் செய்துகொண்டிருக்கின்றன. இதனை தமிழ் சமூகம் தொடர்ந்தும் அமைதியாக அனுமதிக்கப் போகின்றது என்றால் இது தொடர்பில் விவாதங்கள் தேவைப்படாது. ஆனால் இதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இதற்கான பதிலை கொடுக்க வேண்டும் என்று தமிழ் சமூகத்தின் உயிர்ப்பான பிரிவினர் சிந்திப்பார்களானால் நிச்சயம் இது ஒரு விவாதத்திற்குரிய விடயம். அது பரந்த தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும்.




