Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள்?

கூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள்?

யதீந்திரா

தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் எவ்வாறான பார்வை காணப்படுகின்றது என்பதை தற்போதைக்கு ஊகிப்பது கடினம். ஆனால் தேர்தல் போட்டியானது, குறிப்பாக வடக்கு மாகாணத்தில், இம்முறை ஒப்பீட்டடிப்படையில் மக்களுக்கு முன்னால் தெரிவுகள் அதிகரித்திருக்கின்றன. அதே வேளை கூட்டமைப்புக்குள்ளும் இலங்கை தமிழசு கட்சிக்;குள்ளும் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக கூட்டமைப்புக்குள்ளும் தமிழரசு கட்சிக்குள்ளும் அணிகள் உருவாகியிருக்கின்றன. தமிழரசு கட்சிக்குள் மாவை அணி – சுமந்திரன் அணியென்று இரு அணிகளாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சுமந்திரன் அணியென்பது, உண்மையில் சம்பந்தன் அணியாகும். சம்பந்தன் பொதுவாக பச்சைக் கொடியை அசைத்துவிட்டு அமைதியாக இருப்பார். அதனை சம்பந்தன் ஒரு வேளை தனது சாணக்கியமென்று எண்ணலாம். விக்கினேஸ்வரனுக்கு எதிராக, வடக்கு மாகாண சபையில் தமிழரசு கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த போதும் சம்பந்தன் இப்படித்தான் எதுவுமே தெரியாதவர் போலிருந்தார். அதனை மாகாண சபையின் பிரச்சினை மாதிரி காண்பித்துவிட்டு, அனைத்துக்கும் பின்னால் அமைதியாக தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். இப்போது மாவைக்கு எதிரான அனைத்து நகர்வுகளுக்கும் பின்னாலிருந்து கொண்டு, தனக்கு எதுவுமே தெரியாதது போன்று முகபாவனை காட்டிக்கொண்டிருக்கின்றார். முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு, தனது காரியங்களை சாதித்துக் கொள்வதில் சம்பந்தனுக்கு நிகர் சம்பந்தன்தான்.

தமிழரசின் ஒவ்வொரு அணியும் மற்றவர்களின் தோல்விகளை விரும்புகின்றது. ஏனெனில் ஒரு அணியின் வெற்றி இன்னொரு அணியின் தோல்வியில்தான் சாத்தியப்படும். அதே போன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் தங்களுடைய வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றது. ஏனெனில் பங்காளிக் கட்சிகள் பெறப் போகும் ஆசனங்கள்தான் கூட்டமைப்புக்குள் அவர்களுக்கான இடத்தை தீர்மானிக்கும். இதன் காரணமாக ஒவ்வொருவரும் மக்களுக்கு முன்னால் தங்களை சரியானவர்களாக காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு சுமந்திரன் தொடர்பான சர்ச்சைகளே பிரதான காரணம். சுமந்திரனின் கருத்துக்களால், கூட்டமைப்பினரை நோக்கி கேள்விகள் எழுகின்றன. ஏனையவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் தமிழசு கட்சியின் வேட்பாளர்களுக்கும் இது ஒரு நெருக்கடியாக மாறியிருக்கின்றது. சுமந்திரனை எதிர்த்துப் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். அண்மையில் வவுணியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை போட்டுடைத்திருக்கின்றார்.

கூட்டமைப்பு தவறு செய்யவில்லை. நாங்கள் சரியான வழியில்தான் செல்கின்றோம் ஆனாலும் கூட்டமைப்புக்குள் சில புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். அவ்வாறானவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். துரோகிகளையும் காட்டிக்கொடுப்பவர்களையும் களையெடுக்க வேண்டும். உண்மையில் செல்வம் அடைக்கலநாதன் யாரைப் பற்றி பேசுகின்றார்? இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில், களையெடுப்பு என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் இது ஜனநாயக அரசியல் அல்லவா! கூட்டமைப்புக்குள் பிழையானவர்கள் இருக்கின்றனர் என்பதை கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரே ஒப்புக்கொண்டிருக்கின்றார். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்திருப்பதால்தான் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறானதொரு வாக்குமூலத்தை வழங்கியிருக்கின்றார். அதே போன்று டெலோவின் பிறிதொரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டெலோவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோ, சம்பந்தன் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கின்றார். இதன் போது செல்வம் அடைக்கலநாதனும் உடனிருந்தார். பிறர் உதவியின்றி நடக்க முடியாமல் தடுமாறும் சம்பந்தனோ, திருகோணமலையில் போட்டியிடுகின்றார். மேற்படி விடயங்கள் அனைத்தும் கூட்டமைப்புக்குள் அதிகாரம் சார்ந்து மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களாகும்.

மறுபுறத்தில் தமிழரசு கட்சியின் அதிகாரப் போட்டிகள் தினமும் ஊடகங்களின் வாயிலாக, காட்சிப்படுத்தப்படுகின்றது. தமிழரசு கட்சியின் மகளீர் அணித் தலைவி அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. கூட்டமைப்பிற்கு இதுவரை புலம்பெயர் சமூகத்திடமிருந்து 21 கோடிகள் வந்திருப்பதாகவும் அவற்றுக்கு என்ன நடந்ததென்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவரை கேட்கப்படாத ஒரு விடயம் இந்தத் தேர்தலின் போது ஏன் கேட்கப்படுகின்றது? உண்மையில் தமிழசு கட்சிக்குள் உருவாக்கியியிருக்கும் மாவை – சுமந்திரன் அணி மோதலின் விளைவுதான் இது. பொதுவாக ஒரு அணிக்குள் பிளவுகள் தோன்றினால் உண்மைகள் தாராளமாக வெளிவரத் தொடங்கும். அதுதான் தற்போது நடைபெறுகின்றது.

இன்னொரு விடயமும் இங்கு கவனத்தை பெறுகின்றது. அதாவது, தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்த நாளிலிருந்து சர்ச்சைக்குரியவாறான கருத்துக்களையே தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளியிட்டுவருகின்றனர். இதில் தமிழசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முக்கியமானவர். நீலன் திருச்செல்வத்தை பிரபாகரன் விண்ணன் என்று கூறிதாக தெரிவித்தார். அன்ரன் பாலசிங்கத்தையும் சுமந்திரனையும் தொடர்புபடுத்தி மொட்டைத் தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சுப் போட்டார். இதனால் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. தற்போது 73 கள்ள வாக்குகள் போட்டதாகக் கூறி மீண்டுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார். ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியிருப்பதானது, கூட்டமைப்பின் ஜனநாயக முகமூடியை கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அதன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகம் தொடர்பில் அதிகம் பேசுபவர்கள். தங்களுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானதென்று வாதிடுபவர்கள். இதிலுள்ள வேடிக்கையான பக்கம் என்னவென்றால் – கள்ளவாக்குள் போட்ட சிறிதரனும் – ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சதா பாடுபடு;ம் சுமந்தரனும் ஓரணியாக செயற்படுகின்றனர். தேர்தல் என்றாலே ஆச்சரியங்களுக்கு பஞ்சமிருப்பதில்லை.

இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களும் கூட்டமைப்பிற்குள் நிலவும் ஒருவகை பதட்டத்தின் பிரதிபலிப்புத்தான். அதே வேளை இதனை ஒரு தேர்தல் உக்தியாகவும் கூட சிலர் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்திருப்பதால், மக்களை திசைதிருப்புவதற்கு இவ்வாறான சர்ச்சைகள் உதவக் கூடுமென்று அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் இவ்வாறான பேச்சுக்கள் கூட்டமைப்பின் ஒழுங்கீனத்தையும் தலைமைத்துவ வறுமையையுமே காட்டுகின்றன. பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடும் இவ்வாறானவர்களால் எவ்வாறு தமிழ் மக்களுக்கு சரியானதொரு தலைமைத்துவத்தை வழங்கமுடியும்?

கூட்டமைப்புக்குள் காணப்படும் உள் மோதல்கள் ஒரு விடயத்தை தெளிவாக எடுத்துக்காட்;டுகின்றன. அதாவது, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு அதன் தலைமைத்துவ தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டது. மக்கள் தமக்கு பழக்கப்பட்ட ஒரு சின்னம் என்னும் நிலையில் ஒரு வேளை கூட்டமைப்பை திரும்பிப் பார்க்கலாம் ஆனால், அது கூட்டமைப்பிலுள்ளவர்களின் வெற்றியாக அமையாது மாறாக, கூட்டமைப்பின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதில் காணப்படும் போதைமைகளாவே இருக்க முடியும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கும் போதே மாற்றங்கள் சாத்தியப்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *