Search
Tuesday 17 September 2019
  • :
  • :

கூட்டமைப்பு தலைமையின் புதிய நகர்வு எதற்காக…?

கூட்டமைப்பு தலைமையின் புதிய நகர்வு எதற்காக…?

ருத்திரன்-

புதிய அரசியல் யாப்பா…? அல்லது யாப்பில் திருத்தமா…? என்ற பட்டிமன்றத்திற்கு புத்த பிக்குகளின் எதிர்ப்பானது தேர்தல் என்னும் சிறிய விளம்பர இடைவேளையை வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் போது புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டில் நிலுவையில் உள்ள சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. அதன்படி ஜனாதிபதியின் உடைய நிறைவேற்று அதிகாரங்களை நீக்குதல், தேர்தல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் மற்றும் இனப்பிரச்சனைக்கான நீடித்து நிலைத்திருக்க கூடிய தீர்வை வழங்குதல் என்னும் மூன்று அடிப்படைகளைக் கொண்டு ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. ஜே.ஆரினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பானது பல திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அதனை மேலும் திருத்துவதை விடுத்து ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதே சிறந்தது என்று அரசாங்கம் முடிவெடுத்திருந்தது. இதனை நூறு நாள் வேலைத்திட்டத்திலும் அரசாங்கம் இணைத்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதாக உறுதியளித்த போதிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலுக்கு தயாராக இல்லாததால் ஆகஸ்ட் மாதம் வரை தேர்தல் பிற்போடப்பட்டது. இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அதேநேரத்தில் இருபதாம் திருத்தத்தின் மூலம் தேர்தல் சீர்திருத்தமும் நிறைவேற்றப்பட்டு புதிய முறையில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளபடபட்டன. இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் இந்த விடயத்தில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாகவே அது கைவிடப்பட்டு விகிதாசார முறையில் பாராளுமன்ற தேர்தல்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த கால நீடிப்புக்கு ஜெனீவா விவகாரமும் காரணமாக அமைந்ததாக ஆய்வாளர்கள் கருத்து வெளிட்டு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாரான போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் அந்த கட்சியின் பேச்சாளரும் கூட்டமைப்பு என்ற பெயரில் அரசாங்கத்துடன் நெருங்கமான உறவை பேண ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிரசுக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணக்க அரசியலையே மேற்கொண்டு வருகிறது. இதற்கு கூட்டமைப்பின் சாயம் கொடுப்பதற்காகவே அங்கத்துவ கட்சிகள் இரண்டிற்கு சில பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை. மாறாக சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு இருந்த அழுத்தங்களை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான உறவைப் பயன்படுத்திக் கொண்டனர்.

2015 இல் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இவ்வாண்டு 34- 1 இன் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சி இதற்கு தனது ஆதரவையும் வழங்கி இதனை வரவேற்றும் இருந்தது. தற்போது கூட ஐ.நாவின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இலங்கைக்கு வருகை தந்து நிலமைகளை அவதானித்து இருக்கின்றார். பூகோள பிராந்திய நலன்களை மையப்படுத்தி சர்வதேச சமூகம் இலங்கையுடனான உறவைப் பலப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்திய சர்வதேச பார்வை என்பது குறைவடையத் தொடங்கியிருக்கின்றது. மாறி வந்த சர்வதேச சூழலை கூட்டமைப்பு சரியாக பயன்படுத்த தவறியும் இருக்கின்து.

தற்போது சில மாகாண சபைகளினது ஆட்சிகாலம் நிறைவுக்கு வருகிறது. அத்துடன் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலமும் நிறைவுக்கு வந்த நிலையில் அதன் தேர்தலை நடாத்தது அரசாங்கம் இழுதடித்து வருகின்றது. கடந்த மஹிந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த வேலைகள் முழுமையடையவில்லை என்பதைக் காரணம் காட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் காலம் கடத்தி வருகின்றது. மாகாணசபைத் தேர்தலா, உள்ளூராட்சி தேர்தலா முதலில் நடைபெறும் என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் தமக்கு எது சாதகமான நிலமையை ஏற்படுத்துமோ அதனை முதலில் நடத்த வேண்டும் என பரிசீலிக்கிறது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் தேர்தல் நோக்கிய தனது செயற்பாடுகளை நகர்த்த ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாண சபையின் பதவிகாலம் நிறைவுக்கு வருகிறது. அது போல உள்ளுராட்சி சபைத் தேர்தல்களும் நடைபெற இருக்கின்றன. இதனால் அதற்கான தயார் படுத்தல்கள் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றது. கடந்த மாதம் வடமாகாண சபை விவகாரம் பல்வேறு குழப்ப நிலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், அந்த விவகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீதும், தமிழரசுக் கட்சி மீதும் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனைகளும் வலுப்பெற்று வந்திருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர.சம்மந்தன் அவர்களின் தலைமைத்துவத்தை விமர்சனம் செய்து புதிய மாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் தமது கருத்துக்ளை முன்வைத்தும் வந்தனர். இந்த நிலையில் இழந்த செல்வாக்கை மீள நிலை நிறுத்துவதன் மூலமே நடைபெற இருக்கும் தேர்தலை வெற்றி கொள்ள முடியும் என்பதும், தமது தலைமையை தக்க வைக்க முடியும் என்பதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் நிலைப்பாடு. இதனால் அதற்கான செயற்பாடுகளில் அவர்கள் இறங்கியுள்ளார்கள் என்பதையே அண்மைய செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மக்களது தேவைகளை நிறைவேற்றும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செயற்படாததன் விளைவாக தமிழ் மக்கள் தாமாகவே தமது உரிமைக்காக வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், தமது நிலங்களை விடுவிக்க கோரியும், வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகளும் மேற்கொண்டு வரும் போராட்டாங்கள் அரை ஆண்டை எட்டுகின்றன. ஆர்பாட்டத்தின் ஆரம்பத்தில் அரசிற்கு அழுத்தம் கொடுத்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது தென்னிலங்கையில் இனவாதிகள் குழப்பம் விளைவிக்க சாதகமாக அமைந்து விடும் என்று கூறி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அந்த போராட்டங்களை பெரியளவில் கண்டு கொள்ளவில்லை. ஐ.நா மனிதவுரிமை பேரவையின் அமர்வை நோக்கியே மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும், மக்களது போராட்டங்களின் பின்னால் சில அரசியல் சக்திகள் உள்ளதாகவும் தென்னிலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூறியும் வந்திருந்தது. மக்கள் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி கூட குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தற்போது அது தேவையற்ற பேரணி எனவும் கூட்டமைப்பு தலைமை கூறிவந்தது.

ஐ.நா அமர்வுகள் முடிந்தும் மக்களது இந்தப் போராட்டங்களை மாதக்கணக்கில் உறுதியுடனும், காத்திரமாகவும் மக்கள் தொடர்வதால் அவ்வப்போது மக்கள் போராட்டஙகளுக்கு சென்று பார்வையிட வேண்டிய நிலமை தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டிருந்தது. அந்த மக்களுக்கு உறுதியான வாக்குறுதிகளை வழங்கி போராட்டங்களை நிறுத்துவதற்கோ அல்லது அந்த மக்களின் கோரிக்கைளை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றச் செய்வதற்கோ கூட்டமைப்பின் தலைமையால் முடியாமல் போயிருந்தது. இது தமிழ மக்கள் மத்தியில் தமது தலைமை தொடர்பில் கடும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அமைதியாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் தமிழரசுக் கட்சியும் தற்போது விழித்து கொண்டவர்களாக செயற்படத் தொடங்கியுள்ளனர். அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ‘ காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் விடயத்தில் அரசாங்கம் பதில் சொல்லியே தீரவேண்டும் என்றும், இன்னும் பல விடயங்களில் நாம் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் சுயாட்சி அலகை பெற்றுக் கொள்வதில் இருந்து நாம் பின்னிற்க மாட்டோம்’ என்றும் தெரிவித்துள்ள அதேவேளை, அரசாங்கம் சில கருமங்களை செய்து வருகின்றது. அவை தாமதமாக நடைபெற்று வருவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கடவுளிடம் வேண்டுங்கள் எனவும் தெரிவித்தும் உள்ளார். தமிழ் மக்களையும், அரசாங்கத்தையும் திருப்திப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே இந்தக் கூற்றை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக கடந்த பல மாதங்களாக பொருத்து வீட்டு விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. கூட்டமைப்பு தற்போது பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராகவும் வழங்கு தாக்கல் செய்துள்ளது. இதுவரை வழக்குத் தாக்கல் செய்யாதவர்கள் தற்போது ஏன் செய்தார்கள் என்பதும் சிந்திக்க வேண்டி விடயமே. இந்த விடயங்களை கூட்டமைப்பு செய்கின்ற போதும் உண்மையில் அது மக்கள் நலன்களை முன்னுறுத்தி செய்யும் நடவடிக்கையா அல்லது தேர்தலுக்கான ஒரு நடவடிக்கையா என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது. எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மக்கள் மனநிலைகளை புரிந்து தனது நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து தேர்தலுக்கான நடவடிக்கையாக தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களை மீண்டும் உணர்ச்சி அரசியலுக்குள் கொண்டு செல்வது என்பது ஆரோக்கியமானது அல்ல. மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்து வருகின்றார்கள். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை புரிந்து தேர்தல் அரசியலை விடுத்து மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *