தலைப்பு செய்திகள்

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை வவுனியாவில் போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை வவுனியாவில் போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு

கடந்த ஒரு வாரகாலமாக கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை மீள அளிக்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அவர்களது போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என அவ்வமைப்பின் வவுனியா மாவட்டச் செயலாளர் திரு.சு.டோன் பொஸ்கோ தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கழிந்த போதிலும் குடிமக்களின் காணிகள் மீள அளிக்கப்படவில்லை. அக்காணிகளை மீட்பதற்காக பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். காணிகளை மீள வழங்குவோம். அரசியல் கைதிகளை விடுவிப்போம்.

பயங்கரவாத சட்டத்தை நீக்குவோம். காணாமல் போனோருக்கு பதில் கூருவோம். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என வாக்குறுதி அளித்து தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெற்று நல்லாட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்ட அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த போதும் மக்களின் கோரிக்கையை உதாசீனம் செய்து வருகின்றது. தனது வாக்குறுதிகளை நிறைவேற்றப் பின்னடிக்கின்றது.

யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களது வாழ்வாதாரத்துக்கான நிலத்தை கையளிக்காதிருப்பது நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடாகும். அரசாங்கம் இம் மக்களின் கோரிக்கையை ஏற்று நிலத்தை அம்மக்களிடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

அத்துடன் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப்பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியாக இருப்பது தமிழ் மக்களின் எதிர்கால இருப்புக்கு ஆரோக்கியமான விடயமாக அமையாது என்பதனையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எனவே இம்மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை 10.02.2017 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா பஸ் நிலையம் முன்பாக நடாத்த தீர்மானித்துள்ளோம். அப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், முற்போக்கு சக்திகள், தொழிற் சங்கங்கள், பொது மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *