தலைப்பு செய்திகள்

கேரதீவு உப்பள விவகாரம் தோல்வியில் முடிவு

கேரதீவு உப்பள விவகாரம் தோல்வியில் முடிவு

தென்மராட்சி பிரதேச செயலர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போது கேரதீவில் உப்பளம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் அப் பகுதி கமக்கார அமைப்புகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்கள் போன்றவையின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டதென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று யாழ் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் கேரதீவில் உப்பளம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
யாழ்.அரச அதிபர் உரையாற்றுகையில் யாழ்.மாவட்டத்திற்கு வரும் பல்வேறு தொழில் திட்டங்கள் பல எதிர்ப்புகளால் கைவிடப்படுகின்றன. இதனால் பிரதேசத்தில் தொழில் துறைகளை ஆரம்பிக்க முடியவில்லை. ஆனால் எமது மாவட்டத்தில் பட்டதாரிகள் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என உரையாற்றியுள்ளார்.
இதனையடுத்து கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதியொருவர் அரச அதிபரின் உரைக்கு பதிலளிக்கையில்,
எமது நாட்டில் உற்பத்தி நிறுவனங்கள் உருவாகுவதை நாம் தடுக்கவில்லை. கேரதீவில் உப்பளம் அமைப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகம் உள்ளன. குறித்த உப்பளம் கேரதீவில் உருவாக்கப்படுவதால் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கமுடியும். ஆனால் காலவோட்டத்தில் ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தையே இதனால் இழக்க நேரிடும்.
கேரதீவில் உப்பளம் அமைப்பதால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தான் குறிக்கோளாக இருந்தால் அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம்
ஆனால் உப்பளம் அமைப்பதால் பாதிக்கப்படவுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு நிவாரணமும், இழப்பீடும் வழங்க அரச அதிபர் எழுத்து மூலமான உத்தரவாதம் அளிப்பின் நாங்கள் கேரதீவில் உப்பளம் அமைப்பதற்கு சம்மதம் தெரிவிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.இதனையடுத்து குறித்த கலந்துரையாடல் தீர்வின்றி நிறைவடைந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *