தலைப்பு செய்திகள்

கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடு சமூக அணுகல்

கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடு சமூக அணுகல்

மருத்துவர். சி. யமுனாநந்தா (MBBS,DTCD)

தொற்றுநோய்கள் மனிதனின் நாகரீகத்துடன் இணைந்து பயணிக்கின்றன. இவை மனிதனை பல்வேறு வழிகளில் தாக்குகின்றன. இவற்றைக் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அல்லது நுண்மிகள் என அழைப்பர். பொதுவாக நோய்த் தொற்றுக்கள் காற்றினால் பரவுகின்றன. மேலும் நீரினாலும், உணவின் மூலமும், தொடுகையாலும், குருதிப்பாயம் மூலமும் பரவுகின்றன. உலகில் உள்ள தொற்று நோய்களில் மனிதனுக்கு கடந்த 8000 வருடங்களாகச் சவாலாக உள்ளது காசநோயாகும். காசநோய் பக்றீரியாவால் ஏற்படும் நோயாகும். நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் சளித்திவலையால் அருகில் உள்ளோருக்குப் பரப்பப்படும் நோயாகும். ஒரு காசநோயாளியில் இருந்து ஒரு வருடத்திற்கு 10 பேருக்கு நோய்த் தொற்று ஏற்படலாம்.

காசநோய்க் கட்டுப்பாட்டு அனுபவம் தற்போது வேகமாகப் பரவும் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

காசநோய் பக்றீரியாவால் ஏற்படும் சுவாசநோய், கொரோனா வைரசினால் ஏற்படும் சுவாசநோய், காசநோய் காற்றால் மீண்டும் பரவுகின்றது. கொரோனா காற்றினாலும், தொடுகையாலும் பரவுகின்றது. சுவாசப் பாதையிலும், கண், வாய், மூக்குத்துவாரம் என்பவற்றின் ஊடும் தொற்றுகின்றது. ஒரு நோயாளி ஒரு சில நாட்களில் 10,000 பேருக்குத் தொற்றைக் கொடுக்கலாம்.

கொரோனாத் தொற்று சில இடங்களில் வீரியமாக பலரைத்தாக்கிப் பலருக்கு உயிரழிவை ஏற்படுத்துகின்றது. சில இடங்களில் சாதாரண இருமல், காய்ச்சல், தொண்டை நோ என்பவற்றுடன் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சுமார் 50% இல் எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாது காணப்படுகின்றது.

இதற்கான காரணங்கள் மூன்று. முதலாவது கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் தாக்கி அந்நபரின் உடலில் பெருகும்போது சுயமாகவே அதனது மூலக்கூற்றுக் கட்டமைப்பில் விகாரமடைகின்றது. இவ் விகாரமானது மனிதனுக்குப் பாதிப்பை அதிக அளவில் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமையின் அந்நபரில் இருந்து பலருக்கு நோய் தொற்றும். பலர் உயிரிழப்பைச் சந்திப்பர். எனவே சமூக இடைவெளியைப் பேணும்போது, முகக்கவசம் அணிதல், கைகளைச் சவர்க்காரத்தினால் கழுவுதல் என்பன இத்தகைய ஆபத்தான நோயாளிகளில் இருந்து ஏனையவர்களக்கு நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும்.

இரண்டாவதாக கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட ஒருவரில் இயல்பாகவே நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாகக் காணப்படின் அந்நபருக்கு நோயின் பாதிப்பு அதிகமாகி பலருக்கு நோயினைப் பரப்புவதுடன் உயிருக்கு அபாயகரமான நிலைக்கும் செல்லலாம்.

மூன்றாவதாக ஒரு நபர் அதிகளவான நோய்கிருமிகளை உள்வாங்கும்போது குறிப்பாக நெரிசலான இடங்கள், பல நோயாளர்கள் உள்ள வைத்தியசாலை, மூடிய கட்டிடங்கள், மலசலகூடங்கள் என்பவற்றின் மூலம் ஒரு நபர் பலரிடம் இருந்து அதிக அளவு கிருமிகளைத் தொற்றுக்குள்ளாக்கி பாதிப்படைவர். இவர்களும் மிகவும் ஆபத்தான நிலைக்குச் செல்லக்கூடியவர்களாகவும், மற்றவர்களுக்குத் தொற்றினை எடுத்துச் செல்லக்கூடியவர்களாகவும் இருப்பர்.

கொரோனாத் தொற்றுக்கு தடுப்பு முறைகள் மூலமே கட்டுப்படுத்தல் வேண்டும். நோய்க்குரிய மருந்துகள் கண்டறியப்படவில்லை.

நோய்த்தடுப்புக்கான தனி மனித அணுகல்கள் கொரோனா நோய் விரைவாகப் பரவுகின்றமையினால் தனிமனித ஆரோக்கியமும், தனிமனித சுகாதாரப் பழக்கவழக்கங்களும் நோய்க்காப்பில் முக்கியத்துவம் பெறுகின்றன.

corona-ws

நோய்கிருமிகள் தொடுகையினால் பரவும் ஆகையினால் கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டுச்சுத்தம் செய்தல் அவசியம். வெளியிடங்களுக்குச் சென்றபின் வீட்டுக்கு வரும்போது கைகளை நன்கு சுத்தம் செய்தல் அவசியம்.

பொது இடங்களில் கையுறைகளுடன் நடமாடும்போது அத்தகையவர்களால் ஏனையவர்களுக்கு நோய்கிருமிகள் பரப்பப்படும். எனவே கையுறை அணிவதனைத் தவிர்த்து கை கழுவும் பழக்கத்தினையே மேற்கொள்ள வேண்டும்.

அடுத்து சுவாசம் மூலம் பரவாது இருப்பதற்காக முகக்கவசம் அணிதல் நல்லது. ஆனால் பாவனையில் உள்ள முகக்கவசங்கள் முற்றிலும் தரமானவை அல்ல. ஆனால் சுமார் 80மூ பாதுகாப்பை முகக்கவசங்கள் தரவல்லது.

ஒரே முகக்கவசத்தினைத் தொடர்ச்சியாக உபயோகிப்பது அல்லது மீள மீள உபயோகிப்பது அவ்வளவு நல்லதல்ல. இதனால் ஏனைய கிருமிகளை நாம் உள்ளெடுக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. முகக் கவசங்களுடன் வீதிகளில் நடமாடுவோர் வீடுகளுக்குச் செல்லும்போது பாதணிகளை எவ்வாறு வெளியில் வைக்கின்றோமோ அவ்வாறே முகக்கவசங்களையும் வீட்டிற்கு உள்ளே அசுத்தப்படுத்தல் கூடாது. மேலும் முகக் கவசங்களை கண்டபடி வெளியில் வீசக்கூடாது. பொதுவாகத் துணியினால் தயாரிக்கப்பட்ட சவர்க்காரத்தினால் சுத்திகரித்து மீள மீளப் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களைப் பொதுவெளியில் மக்கள் பயன்படுத்தலாம். வைத்தியசாலையில் நோயாளிகளுடன் பழகுபவர்களுக்கு விசேட முகக்கவசங்களும், பாதுகாப்பு உடைகளும் வழங்கப்படும்.

வைத்தியசாலைகளில் கொரோனா வைரசினை அழிக்கத் தொற்றுநீக்கிகள் பயன்படுகின்றது. இவற்றின் செறிவை அதிகமாக்கவோ, அளவுக்கு அதிகமாகவோ பயன்படுத்தின் உடல் நலத்திற்குக் கேடாகலாம். மேலும் பொதுமக்கள் மீது விசிறப்படும் மருந்துகள் புற்றுநோயினை ஏற்படுத்தலாம்.

கொரோனா நோய்ப் பரம்பலில் அதன் வேகமும் அதன் பாதிப்பும் கடுமையான நடைமுறைகளைப் பிரயோகிக்க வேண்டிய நிலையை முழு உலகத்திற்கும் ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாத் தொற்றுப் பரவலைக் குறைப்பதற்கு சமூக முடக்கம் குறிப்பாக 21 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தும்போது தொற்றுள்ளவர்கள் குணமடையும் பட்சத்தில் ஏனையவர்களுக்குப் பரவல் அற்றுப்போகும். இவ்வாறு சமூகமுடக்கத்தை அமுல்படுத்தியமையால் தீச்சுவாலைபோல் ஆயிரக்கணக்கானோருக்கு நோய்தொற்று ஏற்படுவது தவிர்க்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஓர் சமூகநோய். சமூகமுடக்கம் இதற்கு ஒரு தீர்வல்ல. மாறாக அரச நிர்வாகிகளுக்கும், மருத்துவ சேவையினருக்கும் தயார்படுத்தலுக்கான ஓய்வு நிலையைத் தரும். கொரோனாத் தொற்றுச் சமூகத்தில் 60% தொற்று ஏற்பட்டு சமூகத்தில் மந்தை நிர்ப்பீடனநிலை ஏற்பட்ட பின்னரே அதன் தாக்கம் குறைவடையும். மேலும் தற்போது இந்நோய்க்கிருமி மனிதரினுள் சுமார் 50 தடவைகளுக்கு மேல் தொற்றை ஏற்படுத்தி விகாரமடைந்து உள்ளது. இதனால் இந்நோய்க்கிருமியின் வீரியத்தன்மை சற்றுத் தளர்வடைந்து உள்ளது. இது எமக்கு ஓர் ஆறுதலான செய்தி. ஆனால் நாம் எமது இயல்பு வாழ்வுக்கு மீள சில மாதங்களுக்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இயல்பாகவே செய்தல் அவசியம்.

அவற்றில் முக்கியமானது சமூக இடைவெளியினைப் பேணல். விலகி இரு, விலத்தி இரு என்பதே சமூக இடைவெளியின் விழிபொருள். ‘கூறு ஆறடி விலக அன்றேல் ஆறடி நிலம்!’ என்பதை சமூகமுடக்கம் களையும் போது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். அத்தியாவசிய சேவைகள் யாவும் சமூக இடைவெளி பேணலுடன் மேற்கொள்ளப்படல் வேண்டும். வைத்தியசாலைகள் நோயாளர்களுக்கு சேவை வழங்குதலில் இடையூறுகளைக் கொண்டிருத்தல் ஆகாது. பிரதேச, கிராமிய வைத்தியசாலைகள் முழுமையாக இயங்குவதால் மாவட்ட வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தலாம்.

கொரோனா நோயாளிகளிற்கு சிகிச்சை அளிப்பதற்கான விடுதி வசதிகளை யாழ்ப்பாணத்தில் விஸ்தரிக்க வேண்டும்.

கொரோனா நோய்தொற்று ஏற்படும்போது முதற்கிழமையில் கிருமி உடலினுள் பெருகும். நோய் அறிகுறிகள் ஏற்படும். இரண்டாம் கிழமை சுவாசப் பாதையில் சுவாசச் சிறுகுழாய்களைப் பாதித்து மூச்செடுத்தலில் சிரமத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் உடலிற்குச் செல்லும் ஒட்சிசனின் அளவு குறைகின்றது. ஏனைய பக்றீரியாத் தாக்கமும் ஏற்படுகின்றது. இத்தகையவர்களுக்கு சிறப்பான மருத்துவ வசதி தேவைப்படும்.

கொரோனா நோய் சமூகத்தில் வேகமாகப் பரவும்போது அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யக்கூடிய வசதி ஏற்படாது. மேலும் அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கக்கூடிய சூழல் ஏற்படாது. இத்தகைய அபாயநிலையே ஐக்கிய அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்டது. எனவே வருமுன் காத்தலே சிறந்தது என்பது இன்றும் எமது நோய்த் தடுப்பில் முன்னிற்கின்றது. இதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்புத் தேவை.

கொரோனா வைரஸ் எப்போது இல்லாது போகும் என்ற சமூக ஆதங்கத்திற்கு தெளிவான பதில் யாதெனில் ஆபத்தான விகாரமடைந்த கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி உயிரிழப்புக்களை ஏற்படுத்துகின்றது. அத்தகைய வைரசுடன் தொடுகை அல்லது தொடர்பை இல்லாது செய்தால் ஆபத்து எம்மை அணுகாது.

அடுத்து ஆபத்தற்ற விகாரமடைந்த வைரசு எம்மில் தொற்றும்போது எமது உடலில் அந்நோய்க்கு எதிராக எதிர்ப்புச்சக்தி எம்மிடையே தோன்றும். இவ்விதமாக 60மூ மானவர்களுக்கு வீரியமற்ற நோய்த்தொற்று ஏற்பட்டு மந்தை நிர்ப்பீடணம் ஏற்பட்டு நோயின் அபாயநிலை அற்றுப்போகும்.

இந்நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகள் தொடர்பான உத்தரவாதத்தினைத் தற்போது எதிர்வுகூற முடியாது. அதேபோன்றுதான் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள் தொடர்பாகவும் உறுதியான உத்தரவாதத்தினை அறிவியில்ரீதியாகத் தற்போது கூற முடியாது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *