கொழும்பில் இருந்து யாழ் சென்ற இ.போ.சபை பேரூந்தில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் பேரூந்து ரயரில் அகப்பட்டு மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் அருகே ஏ9 வீதியில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது அவருடைய பயணப்பை பேரூந்தின் வாயில் பகுதியில் கொழுவுபட்டு இழுபட்டதில் கீழே விழுந்த இளைஞன் குறித்த பேரூந்தின் ரயருக்குள் அகப்பட்டு மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கோ. திருவள்ளுவர் (வயது 30) என்ற இளைஞனே மரணமடைந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள புளியங்குளம் பொலிசார் இ.போ.சபை பேரூந்தை தடுத்து வைத்துள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் வுவனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
N5