Search
Monday 24 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பு நெருக்கடி

கொழும்பு நெருக்கடி

யதீந்திரா
புகழ்பெற்ற ரஸ்ய எழுத்தாளர் தாஸ்தோவெஸ்கி (Fyodor Dostoyevsky) தனது குற்றமும் தண்டனையும் என்னும் நாவலில் எடுத்தாளும் ஒரு கூற்று, பத்திரிகையியலில் பிரதானமாக எடுத்தாளப்படுவதுண்டு. அதாவது, பிழையான விடயங்களை செய்பவர்கள் என்று நாம் கருதுபவர்களை கண்டிப்பது மிகவும் இலகுவானது ஆனால்; அவர்களை விளங்கிக்கொள்வது மிகவும் சவாலானது. இன்று கொழும்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையைக்கு காரணமானவர்கள் என்று நமது பார்வையில் அகப்படுபவர்களை கண்டிப்பது மிகவும் இலகுவானது. அதனை எவரும் செய்யலாம் ஆனால் அவ்வாறானவர்களை விளங்கிக்கொள்வதும் அவர்களை இயக்கும் அரசியல் பின்னணிகளை விளங்கிக் கொள்வது மிகவும் சவாலானது.

இன்று நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்குமான காரணம் யார்? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் அனைவரது பதிலும் தடுமாற்றமின்றி மைத்திரிபால சிறிசேன என்பதாக இருக்கும். மைத்திரிபால திடிரென்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்து, மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்தார். அதிலிருந்து ஏற்பட்ட நெருக்கடிகள் இறுதியில் அரசாங்கமே இல்லாத நாடாக இலங்கையை மாற்றியிருக்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை. எனவே இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் வித்திட்ட சூத்திரதாரி மைத்திரிபால சிறசேன என்பதுதான் முதல் பார்வை. இரண்டாவது பார்வை மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் அதிகார வெறியே இதற்கு காரணம். இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை மேலோட்டமாக பார்த்தால் இந்த இரண்டு பார்வையும் சரிதான். ஆனால் அது முற்றிலும் சரியானதா?

2009இல் யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து, ஜனாபதித் தேர்தலுக்கு ஒருவருடம் இருக்கின்ற நிலையில், மகிந்த தேர்தலுக்கு செல்லும் முடிவை எடுக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் ஒரு உக்தியாகவே மகிந்த அவ்வாறானதொரு முடிவுக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் இந்த சந்தர்பத்தில் பிறிதொரு விடயம் நிகழ்கிறது. அதாவது, அதுவரை மகிந்தவின் முகாமில் முக்கிய நபராக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகா மகிந்தவிற்கு எதிராக களமிறக்கப்படுகின்றார். இந்தத் தேர்தலில் பொன்சேகாவை விடவும் 20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மகிந்த வெற்றி பெறுகின்றார். மகிந்த யுத்த வெற்றியை பிரதான விடயமாக முன்னிறித்தி தேர்தலை எதிர்கொண்ட போது, அந்த யுத்த வெற்றி வாக்குகளை இரண்டாக பிளக்கும் நோக்கில்தான் பொன்சேகா களமிறக்கப்பட்டார். ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 2010இல் ஒரு வருடம் முன் கூட்டியே தேர்தலை வைத்தது போன்று, இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் 2015இல் மகிந்த தேர்தலுக்கு செல்கின்றார். 2010இல் நிகழ்ந்தது போன்றதொரு நிகழ்வே மீண்டும் நிகழ்கின்றது. ஆனால் இம்முறை மகிந்தவின் முகாமில் இருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைத்திரிபாலசிறிசேன மகிந்தவிற்கு எதிராக களமிறக்கப்படுகின்றார். மகிந்தவிற்கு எதிராக அனைத்து தரப்பினருமே ஓரணியில் நிற்கின்றனர். 5லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மைத்திரி வெற்றி பெறுகின்றார். இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் வேறு.

அதனை வெளிக்கொனரவே மேற்படி விடயங்களை இங்கு குறிப்பிட நேர்;ந்தது. மேற்படி இரண்டு தேர்தல்களிலும் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க முன்னிறுத்தப்படவில்லை. ஏன்? ஏனெனில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து சிங்கள மக்களின் பெரும்பாண்மையான செல்வாக்கை ரணிலால் பெற முடியாது. இதன் காரணமாகவே இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் மைத்திரிபாலவின் வெற்றியை பயன்படுத்தி, ரணில் தன்னை பாராளுமன்றத்தில் ஒரு வலுவான பிரதமராக நிலைநிறுத்திக் கொள்வதில் வெற்றிபெறுகின்றார். கடந்த மூன்று வருடங்களாக உத்தியோகபூர்வமற்ற ஒரு ஜனாதிபதியாகவே ரணில் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன மைத்திரி-ரணில் இரண்டு தரப்பினரையும் தோற்கடித்தது. இது கூட்டரசாங்கத்தின் தோல்வியை பறைசாற்றியது, முக்கியமாக ரணிலின் தோல்வியை பதிவு செய்தது. இதன் மூலம் ஜக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் பெரும் வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்பதும் வெள்ளிடைமலையானது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை வேண்டுமென்றே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடி நிலைமையை தோற்றுவித்திருப்பது மைத்திரியின் சில அதிரடியான நடவடிக்கைகள்தான் என்றாலும் கூட, மைத்திரி இவற்றையெல்லாம் தனது சுயபுத்தியில்தான் செய்திருப்பார் என்பதை எவ்வாறு நம்பலாம்? அவ்வாறு சிந்திப்பது நிலைமைகளை சரியாக விளங்கிக்கொள்ள உதவுமா?

97156b6b58c7930493e1c5845c7ada38_XL

இது ரணில் விக்கிரமசிங்கவிற்கான நான்காவது ஆடுகளம். முதலாவது களம் 2005இல் கிடைத்தது. அன்று ரணில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன. ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூறியதன் விளைவாக தமிழ் மக்களின் ஆதரவின்றி, ரணில் சிறு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2010இன் ஆடுகளத்தில் ரணில் ஒரு அவதானிப்பாளராக தன்னை சுருக்கிக் கொண்டார். 2015இல் தன்னை ஒரு வலுவவான பிரதமராக நிறுவிக்கொண்டார். தற்போது அந்த பிரமதமர் பதவியில் அவர் இருக்க முடியுமா அல்லது இல்லையா என்னும் புதியதொரு நெருக்கடிநிலை வலிந்து தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த நெருக்கடி நிலையின் உண்மையான இலக்கு ரணிலை அகற்றுவதா அல்லது ரணிலை பலப்படுத்துவதா?

மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கை கடந்த மூன்றுவருட ஆட்சியால் சிதைக்க முடியவில்லை. இவ்வாறானதொரு நிலையில்தான், மகிந்த அதிகார வெறியால், அரசியல் யாப்பிற்கு முரணாக பதவியில் இருக்கின்றார் என்றவாறான சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான வாய்ப்பை மகிந்தவே கொடுத்திருக்கின்றார். மகிந்தவிற்கு நெருக்கமானவர்களே மகிந்த பொறுமையாக இருந்திருந்தால், அடுத்த தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றிருக்கலாம் அவசரப்பட்டுவிட்டார் என்று விமர்சிக்குமளவிற்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன. இந்த விடயங்களை தொகுத்து நோக்கினால், மைத்திரியின் ஊடாக மகிந்தவிற்கு எதிராக மீண்டுமொரு களம் திறக்கப்பட்டிருக்கிறதா? தற்போதுள்ள நிலைமையில் ஒரு தேர்தலை எதிர்கொண்டால் மகிந்தவின் வாக்கு வங்கியில் ஒரு சரிவு ஏற்படலாம் என்றவாறான கணிப்பும் உண்டு. கடந்த மூன்று வருடகால ஆட்சியால் சாதிக்க முடியாததை, தற்போது உருவாக்கபட்டிருக்கும் நெருக்கடியை கொண்டு, சாதிப்பதற்கான ஒரு திட்டம் இதற்கு பின்னால் இருக்கிறதா என்னும் கேள்வியை மிக இலகுவாக நிராகரிக்க முடியுமா? மைத்திரி இதில் தெரிந்தும் ஈடுபடலாம், தெரியாமலும் ஈடுபடலாம். வேளித்தோற்றத்தில் மைத்திரியின் நடவடிக்கைகள் முதிர்ச்சியற்ற, கோமாளித்தனமான ஒரு செயலாகவே அவரது எதிரிகளால் பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அதன் ஆழ அகலங்களோடு பார்க்க முற்படுவதுதான் சரியானது. அவ்வாறு சிந்தித்தால், தற்போது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் கொழும்பின் அதிகார நெருக்கடியின் உண்மையான இலக்கு பிறிதொன்றாகவே இருக்கும். பொதுவாக அரசியல் இலக்குகளை திட்டமிடுகின்ற போது, ஒன்று பிழைத்தால் இன்னொன்று என்னும் அடிப்படையில்தான் திட்டமிடுவர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *