Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோட்டபாயவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும்

கோட்டபாயவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும்

யதீந்திரா

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அழுத்தம் திருத்தமாக பேசிவருகின்றார். அதாவது, பெரும்பாண்மை (சிங்கள) மக்களின் ஆதரவின்றி அப்படியான ஒன்றை செய்ய முடியாது. இதன் காரணமாகவே கடந்த 70 வருடங்களாக அதனைச் செய்ய முடியவில்லை. அரசியல் தீர்வு என்று கூறி மக்களை அரசியல்வாதிகள் தொடர்ந்தும் ஏமாற்றியிருக்கின்றனர். தானும் அவ்வாறு கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. இதற்கு முன்னர் இலங்கைத் தீவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரமே, இந்தளவு வெளிப்படையாக அதிகாரப் பகிர்வை நிராகரிக்கவில்லை. அதில் தாங்கள் கரிசனை கொண்டிருக்கின்றோம் – அதனை பரிசீலிப்போம் என்றவாறே பேசி வந்திருக்கின்றனர் ஆனால் அவ்வாறு பேசிய எவருமே அதிகாரப்பகிர்வை கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. அதற்கான அரசியல் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் போது சில முயற்சிகளை எடுப்பதாக காண்பிப்பதும் பின்னர் அதனை எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் எதிர்ப்பதுமாகவே காலம் கழிந்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் முதல் முதலாக ஒரு ஜனாதிபதி திட்டவட்டமாக அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை என்று மிகவும் வெளிப்படையாக பேசிவருகின்றார். தனது அபிவிருத்தித்திட்டங்கள் மூலமாக தன்னால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கின்றது. அது எப்படி என்பதை விளங்கிக்கொள்ளுவதற்கு இன்னும் காலமுண்டு.

கோட்டபாய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்திருக்கும் சூழலில்தான் இந்தியா 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசியிருக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்று வரும்போதெல்லாம் அதன் ஆகக் கூடிய எல்லை 13வது திருத்தச்சட்டம்தான். கோட்டபாயவின் இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மோடி அதனை வலியுறுத்தியிருந்தார். மோடி அதனை வலியுறுத்திய போது, மோடியின் முன்னிலையில் அதனை கோட்டபாயவும் மறுக்கவில்லை. ஆனால் இந்திய ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளிக்கின்ற போது, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது ஏற்புடைய ஒன்றல்ல என்று தெரிவித்திருக்கின்றார். மோடி 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார் என்பதையும் இந்த இடத்தில் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி மற்றும் அமைதி என்பவற்றை உறுதிப்படுத்தும் என்பதிலும் அந்த முயற்சிகள் 13வது திருத்தச்சட்டத்தின் அமுலாக்கத்தை உள்ளடக்கியிருக்கும் என்பதிலும் தனக்கு நம்பிக்கையிருப்பதாகவே மோடி வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்வியின் போதே, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது சாத்தியமான ஒன்றல்ல என்று கோட்டபாய கூறியிருக்கின்றார். குறிப்பாக அதிலுள்ள பொலிஸ் அதிகாரத் தொடர்பில் மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் கோட்டபாய கூறியிருக்கின்றார்.

gotabaya-rajapaksa-1200

கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருக்கின்ற போதே, 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். 13வது திருத்தச்சட்டத்தை கால தாமதமின்றி உடனடியாக நீக்க வேண்டும் என்று 2012இல் தெரிவித்திருந்தார். இப்போது கோட்டபாய ராஜபக்ச 13வது திருத்தச் சட்டத்தை நீங்குவது பற்றி பேசவில்லை மாறாக அதிலுள்ள சில விடயங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் தேவை என்கின்றார். 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் உடாக சட்டமாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை இன்றுவரை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனால் எப்போதெல்லாம் தமிழர் பிரச்சினை, புதுடில்லியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றதோ, அப்போதெல்லாம் பதுடில்லி 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் மட்டுமே பேசிவருகின்றது. மேற்குலக நாடுகளை பொறுத்தவரையில் இலங்கையின் பிரச்சினையை மனித உரிமைகள்சார் பிரச்சினையாக மட்டுமே பார்க்கின்றனர். 2015இல் ரணில்-மைத்தரி அரசாங்கத்தினால் இணையனுசரனை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் கூட, அதிகாரபகிர்வு தொடர்பில் பேசப்படும் போது, 13வது திருச்சட்டம் தொடர்பில்தான் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது மீண்டும் மீண்டும் 13வது திருத்தச்சட்டத்திற்குள்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றது. ஆனால் இதிலுள்ள வேடிக்கையான பக்கம் என்னவென்றால், இது தொடர்பில் தமிழர் தரப்பில் ஒரு உறுதியான நிலைப்பாடில்லை. தமிழ் மக்களின் பிரதான தலைமையான கூட்டமைப்போ 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் நேரத்திற்கு ஒன்றை பேசிவருகின்றது. ஒரு தடவை அதில் ஒன்றுமில்லை என்கிறது. இன்னொரு தடைவ தாம் 13வதை தாண்டி அதிக தூரம் சென்றுவிட்டதாக கூறுகின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆங்கிலப் பத்திரிகையாளராக ராமகிருஸ்ணன் (இவர் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரனின் மகன்); ‘ஓர் இனப்பிரசினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்று ஒரு நூலை எழுதியிருந்தார். இது கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் சம்பந்தன், தாம் 13யை தாண்டி அதிக தூரம் சென்றுவிட்டதாகவும் எனவே அது பற்றி இப்போ பேசுவதில் பயனில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நூல் வெளியீட்டில் இணைந்த வடக்கு கிழக்கின் முன்னைநாள் மாகாண சபை முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் உரையாற்றியிருந்தார். இவ்வாறு கூறிய சம்பந்தனே, இப்போது அமெரிக்க தூதுவரிடம் தாம் கோட்டபாயவுடன் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசவுள்ளதாக கூறுகின்றார். அதில் ஒன்றுமில்லை – அதனை தாண்டி அதிக தூரம் சென்றுவிட்டது உண்மையனால், பின்னர் எதற்காக அது தொடர்பில் பேச வேண்டும்? இந்தியா இலங்கை பிரச்சினையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்னும் குரல் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது ஆனால் இந்தியாவோ இது பற்றி பேச்சுக்கள் வருகின்ற போதெல்லாம் 13வது திருத்தச் சட்டத்தையே வலியுறுத்திவருகின்றது. இலங்கை பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறுகின்ற நாடுகள் எதுவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எதனையும் கூறுவதில்லை. இவ்வாறானதொரு சூழலில், தமிழர் பிரச்சினை தொடர்பில், இந்தியா அழுத்தங்களை கொடுக்க வேண்டும். (அமெரிக்கா) சர்வதேச சமூகம் அழுத்தக் கொடுக்க வேண்டும் என்று தமிழர் தரப்புக்கள் திரும்பத் திரும்ப கூறுவதன் பொருள் என்ன? இப்போது தமிழ் தரப்புக்களின் நம்பிக்கையாக இருக்கப் போவது யார்?

அரசியல் தீர்வு விடயத்தில் எந்தவொரு வெளித்தரப்பும் தமிழர்களுக்கு உதவப் போவதில்லை. இந்த இடத்தில் இரண்டு தெரிவுகள்தான் தமிழர் தரப்புக்களிடம் இருக்கின்றன. ஒன்று, இந்தியாவின் கடைக்கண் பார்வைக்குள் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசியலை யையாளுவது இல்லாவிட்டால் மேற்கின் கரிசனைக்குரிய மணித உரிமைகள் விடயத்தை முன்னிறுத்தி செயற்படுவது. ஆனால் இதிலும் பிரச்சினையுண்டு. ராஜபக்ச காலத்தில் மேற்கின் அழுத்தங்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருந்தது. மேற்கு அழுத்தங்களை தொடர்ந்த போது, கொழும்பு அதிகம் சீனாவை நோக்கி சென்றது. அது உடனடியாக இந்தியாவையே பாதித்தது. சிங்கள பெரும்பாண்மையின் ஆதரவைப் பெற்றிருக்கும் இலங்கையின் புதிய தலைமையின் மீத அழுத்தங்களை பிரயோகிக்கும் போது, அது தங்களது மூலோபாய நலன்களை நீண்ட கால நோக்கில் பாதித்துவிடும் என்னும் கண்ணோட்டத்திலிருந்தே விடயங்கள் அணுகப்படும். அதே வேளை கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்றிருக்கும் கோட்டபாய தரப்பும் மேற்குலகையும் இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாத ஒரு அணுகுமுறையே பயன்படுத்துவர். முன்னர் விட்ட சில தவறுகளால்தான் 20 வருடங்ளுக்கு மேல் அதிகாரத்தை தக்கவைக்க முடியுமென்று எண்ணிய மகிந்த ராஜபக்ச எதிர்பாராத தோல்வியை சந்திக்க நேர்ந்தது. விடயங்களை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அனைத்து நகர்வுகளின் போதும் காணாமல் போகப் போவது தமிழர் பிரச்சினைதான். தமிழர் பிரச்சினை உதட்டளவில் உச்சரிக்கப்படும் விடயமாக சுருங்கிப் போவதற்கான வாய்ப்புக்களே தென்படுகின்றன. இந்தப் புதிய சவாலை தமிழ்த் தேசியவாத தலைமைகள் என்போர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்? 13யை பற்றிப்பிடித்து, இந்தியாவுடன் நிற்கப் போகின்றனரா அல்லது மனித உரிமையின் மீதான கரிசனைகளை முன்வைத்து மேற்குடன் தங்களை அடையாளப்படுத்தப் போகின்றனரா? இரண்டிலும் நிற்கலாம் என்று, எவராவது நினைத்தால் அது முடியாத காரியம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *