Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோட்டாவின் இந்தியாவை கையாளும் வியூகம்

கோட்டாவின் இந்தியாவை கையாளும் வியூகம்

யதீந்திரா 
இந்தக் கட்டுரை தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு செய்தியை காண முடிந்தது. அதாவது, இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்தமொறகொடவின் பெயர் உயர் பதவிகளை தீர்மானிக்கும் பாராளுமன்ற குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி அமைந்திருந்தது. இது பல கேள்விகளை முன்னிறுத்துகின்றது. அண்மைக்காலமாக 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டுமென்னும் குரல்கள் தென்னிலங்கை அரசியலை அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற சூழலில், இந்தச் செய்தி அதிக கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால், 13வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்னும் குரலை இம்முறை அரசியல் அரங்கிற்கு கொண்டுவந்தவர் வேறு யாருமல்ல, இதே மிலிந்தமொறகொடதான்.

தன்னை ஒரு தாராளவாதியாக காண்பித்துக்கொள்ளும் மிலிந்த மொறகொட, விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, அரசாங்க தரப்பு பிரதிநிதியாக பங்குகொண்டவர்களில் ஒருவர். பின்னர் ஜக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து, மகிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொண்டவர். 2007இல் பாராளுமன்ற பொது விவகாரங்களுக்கான குழு Committee on Public Enterprises (COPE)  ஜக்கிய தேசியக் கட்சியில் அமைச்சராக இருந்த காலத்தில் மொறகொட, ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. இதன் பின்னரே, இவர் மகிந்தவுடன் இணைந்துகொண்டார். மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் நீதி அமைச்சராகவும் பின்னர் உல்லாசத்துறை அமைச்சராகவும் இருந்த மொறகொட, 2010இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கொழும்பின் அரசியல் அரங்கில் செல்வாக்கிழந்தவரானார்.

இவர் அரசியலில் இருக்கின்ற போதே பிறிதொரு புறமாக உலகளாவிய மூலோபாய சமூகங்களுடன் ஊடாடுவதற்கென பாத்பைன்டர் (Pathfinder Foundation) என்னும் சிந்தனைக் கூட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார். 2006ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் மேற்படி சிந்தனைக் கூடம், மகிந்த ராஜபக்ச காலத்தில் சீனாவுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதில் கரிசனைகாட்டியது. இலங்கை விவகாரங்களில் சீனாவும் ஒரு முக்கிய சக்தியென்னும் வகையிலேயே சீனாவின் முன்னணி சிந்தனைக் கூட்டங்களுடனான (Chinese Think Tanks) தொடர்புகளை வலுப்படுத்திக்கொண்டது. 2014இல், இலங்கைக்கான சீனத் தூதரகம் மொரகொடவின் சிந்தனைக் கூட்டத்தை, தங்களின் முக்கியமான 10 பங்காளிகளில் ஒன்றாக அங்கீகரித்தது. இதன் தொடர்ச்சியாக, 2018இல், சீனா-இலங்கை ஒத்துழைப்பிற்கான கற்கை நிலையம்  China-Sri Lanka Cooperation Studies Centre- (CSLCSC) ஒன்றை மொறகொட உருவாக்கினார். 2016இல், இதே போன்று, இந்திய – இலங்கை முன்னெடுப்புகளுக்கான நிலையம் (Pathfinder Foundation’s Centre for Indo-Lanka Initiatives (CILI) ஒன்றையும் தனது சிந்தனைக் கூட்டத்தின் கீழ் ஏற்படுத்தியிருந்தார். மொறகொட ஒரு அமெரிக்க ஆதரவாளர் என்பதுதான், மொறகொட பற்றிய பொதுவான பார்வையாக இருந்தது. விக்கிலீக்ஸ் கேபிள் தகவல்களின்படி, இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் நீண்டகால தகவல் மூலமாக மொறகொட இருந்திருக்கின்றார்.

Milintha

ஆனால் ஒருவர் எல்லா காலத்திலும் ஒரேமாதிரியான சர்வதேச தொடர்பில் இருப்பதில்லை. அவ்வாறு இருக்க வேணடுமென்று எவரும் எதிர்பார்க்கவும் முடியாது. அடிப்படையில் தனது வியாபார நலன்களிலிருந்து விடயங்களை அணுகும் மொறகொட, உலகளாவிய பொருளாதாரத்தில் ஆதிபத்தியம் செலுத்திவரும் சீனாவை நோக்கியும் சாய்ந்திருந்தால் அது ஆச்சரியம்தரக்கூடிய ஒன்றல்ல. அதே வேளை, மொறகொடவின் சிந்தனைக் கூடம், ரஸ்யாவின் முன்னணி சிந்தனைக் கூடமான  Russian International Affairs Council (RIAC) உடனும் 2017இல் புரிந்துனர்வு உடன்பாடு ஒன்றையும் செய்துகொண்டது. இந்த பின்புலத்தில் நோக்கினால் மிலிந்தமொறகொட உலக மூலோபாய சமூகங்களை கையாளுவதற்கான தனிப்பட்ட ஆற்றலையும், நிறுவன ரீதியான ஆற்றலையும் ஒருங்கே கொண்டிருக்கின்றார். இவ்வாறான ஒருவர் ஏன் திடிரென்று 13வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென்று கூறுகின்றார்? 13வது திருத்தச்சட்டம் என்பது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் உள்ளடக்கமாகும். இவ்வாறான ஒருவரே தற்போது இந்தியாவிற்கான தூதுவராகவும் வரக் கூடுமென்னும் போது இதன் அரசியல் பின்புலம் என்ன?

இந்த இடத்தில் பிறிதொரு விடயத்தையும் குறித்துக்கொள்ள வேண்டும். அதாவது, அண்மையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னைநாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயின் பின்னணியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கோட்டபாய ராஐபக்ச ஐனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இவரே ஜனாதிபதிக்கான, சர்வதேச விவகாரங்கள் தொடர்பான மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு விவகாரங்களில் முக்கியமாக கடல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் நிபுனராக கருதப்படும் கொலம்பகே, மிலிந்த மொறகொடவின் சிந்தனைக் கூடத்தின் உபபிரிவான இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான கடல்சார் முன்னெடுப்புக்களுக்கான நிலையத்தின் Indo-Sri Lanka Initiatives and Law of the Sea Centres at the Pathfinder Foundation) இயக்குனராக இருந்தவர் என்பதும் முக்கியமானது. இவர் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தெரிவித்திருந்த கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை. அதாவது, பாதுகாப்பில் இந்தியாவிற்கு முதலிடம் என்பதே தமது கொள்கை நிலைப்பாடென்றும் அதில் ஐனாதிபதி தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு சீனாவிற்கு வழங்கியமையானது ஒரு தவறான முடிவாகுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயங்களை தொகுத்துப் பார்க்கும் போது ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது கோட்டபாய அரசாங்கம் இந்தியாவை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதாகவே தெரிகின்றது. அதாவது, இந்தியா தங்களிலிருந்து விலகிவிடாத வகையிலான கொள்கையொன்றை கடைப்பிடிக்க முற்படுவதாகவே தெரிகின்றது. எல்லாவிடயங்களிலும் இந்தியாவின் கரிசனைகளுக்கு முதலிடத்தை கொடுத்துவிட்டு, அதே வேளை ஏனைய சக்திகளையும் சமநிலைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றது. இதனை ஒருவரியில் சொல்வதானால், நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையில் முதலில் இந்தியா என்னும் கொள்கை நிலைப்பாடொன்றை நோக்கியே கோட்டா அரசாங்கம் நகர்கின்றது. இதனை மேற்கொள்ள வேண்டுமாயின் புதுடில்லியை மிகவும் கவனமாக கையாளக் கூடிய நபர்கள் தேவையென்னும் அடிப்படையிலேயே சில முக்கிய பதவிகளுக்கான நபர்களும் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இந்த பின்புலத்தில் நோக்கினால் இந்தியாவை கையாளுவதில் தமிழர் தரப்பு மிகவும் பலவீனமாகவும், கொழும்பு மிகவும் பலமாகவும் இருப்பதாகவே தெரிகின்றது. புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடுமென்னும் எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்ற சூழலில் 13வது திருத்தச்ட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் ஆகக்குறைந்;த அதிகாரங்களுக்கும் ஆபத்து நேரிடலாமென்னும் ஒரு நிலைமையே தற்போது காணப்படுகின்றது. இந்த இடத்தில் தமிழர் தரப்பிற்கிருக்கும் ஒரேயொரு நம்பிக்கை புதுடில்லி மட்டும்தான் ஆனால் புதுடில்லியை தங்களை நோக்கித் திருப்புவதில் தமிழர் தரப்பு மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது.

ஆனால் இதிலுள்ள மிகப்பெரிய சவால் – அரசாங்கம் ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதை இந்தியாவால் தடுக்க முடியாது. கூட்டமைப்பிலுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய விளக்கமில்லாமல் பேசிவருவது போன்று, நிலைமை சாதாரணமான ஒன்றல்ல. உண்மையில் தமிழரின் அரசியல் இருப்பு மிகவும் சிக்கலான நிலையை அடைந்திருக்கின்றது. அதாவது, அரசியல் யாப்பென்பது, ஒரு உள்நாட்டு விவகாரம். மக்கள் ஆணையைப் பெற்றுள்ள ஒரு அரசாங்கம், தன்னிடமுள்ள பலத்தைக் கொண்டு அதனைச் செய்ய முடியும். அவ்வாறு புதியதொரு அரசியல் யாப்பு வருகின்ற போது, 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் விவாதிப்பதற்கு எதுவுமிருக்கப் போவதில்லை. உண்மையில் இங்கு மாகாண சபை என்பதல்ல பிரச்சினை. 13வது திருத்தச்சடத்தின் உள்ளடக்கம்தான் பிரச்சினை.

தமிழர் தரப்புக்கள் 13ற்குள் ஒன்றுமில்லையென்று அ அறிமுகமான காலத்திலிருந்து கூறிவருகின்றன. ஆனால் அவ்வாறு கூறிக்கொண்டே, மறுபுறமாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் சிங்கள தேசியவாத தரப்புக்களோ மிகவும் தூர நோக்குடன் விடயங்களை ஆழ ஊடுருவிப்பார்க்கின்றது. 13வது திருத்தச்சட்டம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அங்கமாக இருக்கின்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கான அச்சாணியாக இருந்தது திம்பு பேச்சுவார்த்தை. இந்த பேச்சுவார்தையின் விளைவுதான் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகமென்பதும் அதனை இணைக்கப்பட வேண்டுமென்னும் கோரிக்கையையும் நாம் நோக்க வேண்டும். 13வது திருத்தச்சட்டத்தில் இரண்டு மாகாணங்கள் விரும்பினால் இணைந்து பணியாற்ற முடியுமென்னும் ஏற்பாடு கொண்டுவரப்பட்டதே வடக்கு – கிழக்கு இணைப்பை அடிப்படையாகக் கொண்டுதான். மேலும் அந்த இணைந்த வடக்கு – கிழக்கில் தனியான காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் 13வது திருத்தச்சட்டம் பேசுகின்றது. 13வது திருத்தச்சட்டத்தை இல்லாமலாக்கினால் கூடவே, இந்த விடயங்களும் இல்லாமால் போய்விடும். தமிழர் தரப்போ 13வதிலுள்ள குறைபாடுகளை முதன்மைப்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால் சிங்கள தேசியவாதிகளோ அதன் மூலம் தங்களுக்குள்ள நீண்ட கால ஆபத்தை எவ்வாறு வெற்றிகொள்ளலாமென்று சிந்தித்து, அத்கான தக்க தருணம் கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாமென்று எண்ணுகின்றனர்.

மேலும் இதிலுள்ள பிறிதொரு முக்கியமான விடயத்தையும் சிங்கள – பவுத்த தேசியவாதிகள் பார்க்கக் கூடும். அதாவது, உண்மையில் 13வது திருத்தச்சட்டம் என்பது இலங்கைக்கென்று விசேடமாக வரையப்பட்ட ஒரு தனித்துவமான ஏற்பாடல்ல. மாறாக, 13வது என்பது இந்தியாவில் இருக்கின்ற அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டின் நகல். இப்போதுல்லாவிட்டாலும் கூட, தமிழர்களுக்கு சாதகமாக சூழல் கனியும் போது, தமிழ் நாட்டில் இருப்பது போன்றதொரு ஆட்சியை கோரக் கூடிய வாய்ப்பை 13வது திருத்தச்சட்டம் வழங்கிக்கொண்டிருக்கின்றது. அதனை இந்தியாவும் ஆதரிக்கலாம். இதுவும் சிங்கள தேசியவாதிகளின் கண்ணை உறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு விடயமாகும். இப்படியான பல விடயங்களை கருத்தில்கொண்டே, சிங்கள தேசியவாதிகள் சிந்திக்கின்றனர். சிங்கள தேசிய வாதிகளுக்கும் தமிழ்த் தேசிய வாதிகளுக்குமிடையில் ஒரு அடிப்படையான வேறுபாடுண்டு. அதவாது, தமிழ் தேசியவாதிகள் என்பவர்கள் அதிகம் ஒவ்வொன்றிலுமுள்ள குறைபாடுகளை முதன்மைப்படுத்தி சிந்திக்கின்றனர். இதன் விளைவாக இறுதியில் இருப்பதையும் இழக்கின்றனர். ஆனால் சிங்களவர்களோ இருப்பவற்றிலும், தங்களின் சிங்கள – பவுத்த தேசிவாத நிகழ்சிநிரலுக்கு குந்தகமாக இருக்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் எவ்வாறு கழைந்து தங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ளலாமென்று சிந்திக்கின்றனர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *