Search
Thursday 19 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோத்தபாய ராஜபக்சவின் ஜனாதிபதி திட்டம்

கோத்தபாய ராஜபக்சவின் ஜனாதிபதி திட்டம்

யதீந்திரா
எந்தத் தேர்தல் என்று தெரியாவிட்டாலும் கூட, ஏதோவொரு தேர்தலை நோக்கி நாடு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த தேர்தல்களை இலக்கு வைத்தே தெற்கின் அரசியல் நகர்கிறது. முக்கியமாக ராஜபக்சேக்கள் தேர்தல்களை இலக்குவைத்தே, வியூகங்களை வகுத்துவருகின்றனர். முதலில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என்னும் கருத்துண்டு. ஆயினும் இப்போதைய பிரச்சினை – ஜனாதிபதி தேர்தல் என்றால் யாரை வேட்பாளராக நிறுத்துவது? இந்தக் கேள்வியில் ஜக்கிய தேசியக் கட்சி அதிகம் உள்நுழையாமல் இருந்துவருகிறது. ஆனால் மகிந்த தரப்பினர் இந்தக் கேள்வியுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். உண்மையில் மகிந்த தரப்பின் தலையாய பிரச்சினையே அதுதான். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சமீப நாட்களாக, கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் பேசப்பட்டுவருகிறது.

ஒரு காலத்தில் அரசியலை பார்க்க எனது அண்ணன்கள் இருக்கின்றனர் என்று குறிப்பிட்ட கோத்தபாய, தற்போது அந்த அண்ணன்களின் இடத்தை தன்னால் நிரப்ப முடியுமென்று நம்புகிறார். தன்னை ஒரு அரசியல் ஆளுமையாக காண்பிக்கும் நோக்கில் ‘வியத்மக’ (viyathmaga) என்னும் அமைப்பை உருவாக்கி, அதன் ஊடாக தனது நிலைப்பாடுகளுக்கான ஆதரவை திரட்டிவருகின்றார். வியத்மக என்பதன் ஆங்கிலப் பதம் –  intellectual path – அதாவது புத்திஜீவிகளின் பாதை. மிக சமீபத்தை நிகழ்வொன்றில், மக்கள் தயாரென்றால் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்கு தயார் என்று தெரிவித்திருந்தார். கோத்தபாய குறிப்பிடுவது தமிழ் மக்களையோ அல்லது முஸ்லிம் மக்களையோ அல்ல – அவர் சிங்கள மக்களையே குறிப்பிடுகின்றார்.

இந்த இடம்தான் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதிலுள்ள சவாலுக்குரிய இடம். இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டுமாயின் சிங்கள பவுத்த மக்கள் மத்தியில் ஒரு பெரும் தேசியவாத எழுச்சி உருவாக வேண்டும். அவ்வாறானதொரு பேரெழுச்சியை உருவாக்க வேண்டுமாயின், அதற்கு ஒரு வலுவான எதிரி தேவை. இல்லாத விடுதலைப் புலிகளை ஒரு எதிரியாக காண்பித்துக் கொண்டாலும் கூட, அது அதிகம் ஜனவசியத்துக்குரிய கவர்சியை ஏற்படுத்தப் போவதில்லை. விடுதலைப் புலிகள் அரங்கில் இல்லாத கடந்த பத்து வருடங்களில், தெற்கிலோ அல்லது வடக்கு கிழக்கிலோ இராணுவத்தை இலக்குவைத்து, ஆகக் குறைந்தது ஒரு குண்டுவெடிப்பு கூட இடம்பெறவில்லை. அவ்வாறானதொரு சூழலில் செத்த பாம்மை அடிக்கப் போவதாக கூறும் பிரச்சாரங்களால் ஒரு தேசியவாத அலையை ஏற்படுத்த முடியாது. இவ்வாறானதொரு சூழலில் நாட்டின் நிலவும் அரசியல் உறுதிப்பாடின்மை மற்றும் பலவீனமான அரசாங்கம் ஆகிய காரணங்கள் மட்டுமே, தற்போதைக்கு மகிந்த தரப்பிற்கு சாதகமான ஒரேயொரு விடயமாக இருக்கிறது.

கூட்டாட்சி அல்லது நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் பெரும்பாலான மக்கள் கடுமையாக அதிருப்தியடைந்திருக்கின்றனர் என்பது உண்மை. அந்த அதிருப்தியின் விளைவுதான், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் ஆளும் தரப்பொன்றை, மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவால் தோற்கடிக்க முடிந்தது. அந்த முடிவுகளின்படி, மகிந்த ராஜபக்சவிற்கான வாக்கு வங்கி பெருமளவில் சரியவில்லை என்பதும் தெளிவானது. உண்மையில் கூட்டாட்சி, மகிந்தவின் சிங்கள வாக்குபலத்தை கணிசமாக சரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. கூட்டரசாங்கத்திலுள்ளவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எவ்வாறு விழுங்கலாம் என்று யோசிப்பதில், நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனரே தவிர, மகிந்தவை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்துவதற்கான காத்திரமான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுத்திருக்கவில்லை. இவ்வாறானதொரு சூழலில், கூட்டாட்சியின் பலவீனங்களே மகிந்தவின் பலமானது. ஆனாலும் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளின்படி மகிந்த அதிகமான செல்வாக்கை காண்பித்திருந்தாலும் கூட, ஜனாதிபதி தேர்தலில் தனித்து வெற்றிபெறுவதற்கான ஆதரவை பெறுவதற்கு இன்னும் அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் யாரை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்பதில் விவாதங்கள் இடம்பெறுகின்றன. யாரை நிறுத்தினால் அதிக வாக்குகளை பெறமுடியும்? அது மகிந்தவாக இருந்தால் இந்த விடயத்தில் கேள்வியே தேவைப்பட்டிருக்காது. ஆனால் மகிந்தவால் போட்டியிட முடியாத நிலையில்தான் அந்த இடத்தை தன்னால் நிரப்ப முடியுமென்று கோத்தபாய கருதுகின்றார்.

gota

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொண்டதில் கோத்தபாய ராஜபக்சவிற்கு முதன்மையான பங்குண்டு. எரிக் ஷொல்கெய்மின் கூற்றின்படி கூறுவதானால், விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழிக்க முடியுமென்று ஆணித்தரமாக நம்பிய ஒரேயொரு நபர் கோத்தபாய மட்டும்தான். விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக எந்தவொரு எல்லைக்கு செல்வதற்கும் கோத்தபாய தயாராக இருந்தார். யுத்த வெற்றியே கோத்தா என்னும் நபரை இலங்கையின் அரசியலில் ஒரு சக்திமிக்க நபராக உருமாற்றியது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், கோத்தபாய என்னும் நாமம் அதீத அதிகாரத்தின் அடையாளமாக இருந்தது. கோத்தபாயவை மீறி எந்தவொரு அரசியல்வாதியும் செயற்பட முடியாமல் இருந்தது. கோத்தபாயவுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே, அதுவரை மகிந்தவின் கண்ணில் தூசிவிழுந்தால் ஓடிப் போய் ஊதிவிடுமளவிற்கு நெருக்கமாக இருந்த மங்களசமரவீர, மகிந்தவிற்கு எதிரான அரசியல் அணியில் சேர்ந்தார்.
இவ்வாறான ஒருவர், ஜனாதிபதியாக வருவதை மகிந்த அணிக்குள் உள்ளவர்கள் பலரே விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. மகிந்தவும் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. தன்னுடைய காலத்திலேயே தனது மகன் நாமலை அரியணையில் ஏற்றவேண்டுமென்று மகிந்த விரும்புவதாகவும், ஆனால் கோத்தபாய ஜனாதிபதியானால், அடுத்த தடவை அவரை விலகச் சொல்வது சவாலாகிவிடும், என்று மகிந்த எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதில் எது உண்மையென்று எவரும் அறியார்.

கோத்தபாய போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வருவதில் எவ்வாறான உள்ளக சிக்கல்கள் இருக்கின்றன என்பதற்கு அப்பால், புவிசார் அரசியல் சார்ந்து எவ்வாறான நெருக்கடிகள் இருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமானது. மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்னும் எண்ணம் உள்நாட்டு காரணங்களில் இருந்து வரவில்லை. அது முற்றிலும் புவிசார் அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்ந்தது. ஆனால் அது உள்நாட்டு காரணங்களாகவே காண்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு உள்நாட்டுக் காரணங்களே தேவை. இங்கு விடயம் – மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான காரணங்களாக இருந்தவை, இப்போதும்; அப்படியேதான் இருக்கின்றது. ஏனெனில் 2015 ஜனவரி 8இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தோல்வியில் முடிந்துவிட்டது. இலங்கையின் மீதான சீனச் செல்வாக்கை ஒரு எல்லைக்குள் முடக்குவதுதான் அந்த ஆட்சி மாற்றத்தின் இலக்கு என்றால், அது குறிப்பிடத்தகு வெற்றியை பெற்றுவிட்டதாக கூற முடியாது. ஆனால் சீனாவை சமாளித்தல் என்பது வேறு விதத்தில் நடந்திருக்கிறது அதாவது, அமெரிக்கா முன்னரை விடவும் இலங்கையுடன் இராணுவ மற்றும் மூலோபாய ரீதியில் நெருங்கிச் செயற்படுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்னர் அதற்கான சட்டபூர்வமான ஏற்பாடுகள் நிறைவடையக் கூடும்.

இவ்வாறானதொரு சூழலில் கோத்தபாய போன்ற ஒருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட நபராக வருவதை மேற்குலக சக்திகள் விரும்புமா என்பதுதான் பிரதான கேள்வி. கோத்தபாய தொடர்பில் மேற்குலக ராஜதந்திர சமூகம் மகிழ்சியாக இல்லை. இந்தியாவும் மகிழ்ச்சியாக இருக்குமென்று சொல்ல முடியாது. கோத்தபாய போன்ற ஒருவர் அதிகாரத்திற்கு வந்தால், அவரை தங்களது நலன்களிலிருந்து கையாள முடியுமா என்னும் கேள்வியிலிருந்துதான், இந்த விடயத்தை அமெரிக்காவும் இந்தியாவும் அணுகும். எனவே கோத்தபாய போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதில் உள்ளக காரணிகளை விடவும், வெளியக காரணிகளே அதிகம் செல்வாக்குச் செலுத்தவல்லது. அவ்வாறான வெளியக காரணிகளே பெருமளவிற்கு உள்ளக அரசியல் காரணிகளையும் தோற்றுவிக்கும். இந்த பின்புலத்தில் நோக்கினால், கோத்தபாய என்னும் பெயர் அச்சத்துக்குரிய ஒன்றாகவே அனைத்து தரப்பாலும் நோக்கப்படுகிறது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது – தெற்கில் இடம்பெறும் ‘புத்திஜீவிகளின் பாதை’ போன்று தமிழ் சூழலில் ஏதாவது இருக்கிறதா? இன்றுவரை இலங்கை தீவை மையப்படுத்தி நடைபெறும் விடயங்கள் தொடர்பில் தமிழ்ச் சூழலில் குறிப்பிடத்தகு உரையாடல்கள் எதுவும் நிகழவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. தமிழ்ச் சூழலில் நிகழும் உரையாடல்கள் பற்றி ஒரு வார்த்தையில் கூறுவதனால் அவை அனைத்தும் பருவகாலத்து உரையாடல்கள் (seasonal discussion) இப்போது, ஜெனிவா சீசன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *