Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சமூகக் குணப்படுத்தலில் சமூக மூலதனங்கள்

சமூகக் குணப்படுத்தலில் சமூக மூலதனங்கள்

மருத்துவர் சி. யமுனாநந்தா

ஓர் சமூகம் பாரிய உளநெருக்கீடுகளை எதிர்கொண்டபோது அது எவ்வாறு அதன் தாக்கங்களிலிருந்து மீளுகின்றது என்பதில் சமூக மூலதனங்கள் (Social Capital)  செல்வாக்குச் செலுத்துகின்றது. இத்தகைய சமூக மூலதனங்களின் பிரயோக சமூகக் குணப்படுத்தல் (Social Therapy) தொடர்பாக உலகில் பாரிய இனப்படுகொலைகள் நடந்தேறிய தேசங்களின் சமூகக் குணப்படுத்தல் அனுபவங்கள் எமக்கு ஓர் கற்பிதமாக உள்ளன. ருவாண்டா, கம்போடியா, குவட்டமாலா, சோமாலியா, உகண்டா, எதியோப்பியா, சியாராலியோன் போன்ற நாடுகளில் சமூகக் குணப்படுத்தலில் சமூக மூலதனங்களின் பிரயோகம் செல்வாக்குச் செலுத்துகின்றது. இத்தேசங்களில் பாரிய இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் ஈழத்தமிழ்ச் சமூகமும் பாரிய சமூகக் குணப்படுத்தலை வேண்டி நிற்கின்றது.

யுத்தத்தால் நொருங்கிய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப சமூக மூலதனம் ஓர் பாலமாகவும், ஓர் பிணைப்பாகவும் அமையும். சமுதாயத் தொடர்பமைப்புக்கள், பொதுமக்களின் பங்களிப்பு, பொதுசன அடையாளம், ஒத்துழைப்பிற்கான வழமைகள், சமூகத்தின் மீதான நம்பிக்கைகள் என்பன சமூகக் குணப்படுத்தலின் பிரதிபலிப்புக்கள் ஆகும். யுத்தம், இனவழிப்பு என்பன சமூக மூலதனத்தில் தேய்மானத்தையும், (Social Capital Atrophy) இன முரண்முனை நிலையினையும் (Ethinic Polarization) கூட்டான செயற்திறனில் (Collective efficacy) பங்கத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.

சமூக மூலதனங்கள் சமுதாய அகில வலைத்தளத்தை (Fabric Space of Social Universe) மாற்றத்திற்கு உள்ளாக்கி வரும். சமூக மூலதனங்கள் புலமைசார் சமூக மூலதனங்களாகவும் கட்டமைப்புசார் சமூக மூலதனங்களாகவும் அமையும் சமூகக் கட்டமைப்புகளுக்கு இடையே பாலமாகவும், பிணைப்புகளாகவும் கிடைச் சமூக மூலதனங்கள் அமையும். (Horizontal Social Capital) புலமைசார் சமூக மூலதனங்கள் மக்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளாகவும், கட்டமைப்புசார் சமூக முதலீடுகள் மக்களின் செயற்பாடுகளாகவும் பிரதிபலிக்கும்.
சமூக மூலதனம் மூலமான சமூக குணப்படுத்தல் மக்களின் உள ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆலயங்களிற்கும், மதவழிபாடுகளுக்கு-மான சமூக மூலதனம் ஆன்மீக ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

வன்முறையின் சாட்சியங்களாக சமூகம் எதிர்நோக்கியவைகள் கொலைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், தடுத்து வைத்தல், கொள்ளையிடல், சொத்தழிப்பு, கடத்தப்படல், சமூகத்தில் ஒதுக்கப்படல், நாட்டைவிட்டு வெளியேறல் என்பன கூட்டாக ஒரு சமூதாயத்தைப் பாதித்துள்ளது. இவற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக விதவைகள், தபுதாரர்கள், அநாதைகள், அங்கவீனமுற்றவர்கள், சிறைக்கைதிகள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அகதிகள், ஆயுதமோதலில் ஈடுபட்டவர்கள் என்பவர்கள் அமைகின்றனர். இவர்களுக்கு பாரபட்சமற்ற சமூக மூலதனங்கள் அவசியமாகும்.

சமூக மூலதனத்திலுள்ள பாதிப்புக்கள் உளநோய் ஏற்படுவதிலும், உளநோய் அதிகரிப்பிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களில் நுண்நிதிய மேம்பாடுடனான ஆற்றுப்படுத்தல்கள், செயற்திறன் பட்டறைகள் அவசியமாகும். பொதுவாக அரசியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களில் வெட்கம், குற்ற உணர்வு, நம்பிக்கையீனம், மாற்றான் தன்மை ஏற்படல் போன்ற இயல்புகள் ஏற்படும். இவர்களுக்கு கட்டமைப்புசார் சமூக மூலதனத்துடன் புலமைசார் சமூக மூலதனமும் அவசியம். சமூக முரண்நிலையில் அதிகமாக பாதிக்கப்படுபவர்-கள் பாரிய உளநோக்கங்களான உளப்பிளவை நோய், மிகை எழுச்சி நோய்நிலை, மனச்சோர்வு நோய்நிலை உடையவர்களாகவும் காணப்படு-கின்றனர். இவர்களிற்கு உரிய உளமருத்துவமும் மிகவும் இன்றியமையாதது ஆகும்.

புலமைசார் சமூக மூலதனமே சமூகப் பெறுமதி, தேசவழமை, குடிமகனுக்குரிய பொறுப்புணர்வு என்பவற்றை மேம்படுத்தும். மேலும் மீள்நிலைக்கு வரல், பிறருக்கு உதவல், தன்னம்பிக்கை, சமூகம் மீதான நம்பிக்கை என்பன மேம்பட உதவும்.

எமது மக்களுக்கான மூலதனங்களில் பெருமளவு அரச நிதித்திட்டமிடல் மூலமே கிடைக்கின்றது. இவை செவ்வன் சமூக மூலதனங்கள் ஆகும். (Vertical Social Capital) வைத்தியசாலைகள் அமைத்தல், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள் என்பனவற்றை விரிவாக்கல் என்பன செவ்வன் சமூக மூலதனங்கள் மேலும் நெடுஞ்சாலைக் கட்டமைப்புக்கள், மின்சாரவசதி, விமான நிலையம் அமைத்தல் என்பனவும் செவ்வன் சமூக மூலதனங்கள் ஆகும்.

இத்தகைய செவ்வன் சமூக மூலதனங்கள் பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்காக சமூகக் குணப்படுத்தலில் உற்றதுணையாக அமைதல் அவசியம். இங்கு இனத்துவ முனைவுத்தன்மை உள்ளடங்கல் ஆகாது.

சமுதாய அகில வலைத்தளத்தில் (Fabric Space of Social Universe) சமூக மூலதனங்கள் சமூக வெம்துளையினுள் (Social Worm Holes) இட்டுச் செல்லலாம். அதாவது அழிவுக்கு முன்பான சமூக நிலைக்கு சமூக மூலதனங்கள் இட்டுச் செல்லலாம். இதற்கு சமுதாயத் தொடர்பமைப்புக்கள், பொதுசனப் பங்களிப்பு அவசியம். சமுதாய அடையாளம் பேணப்படல் வேண்டும். ஒத்துழைப்பிற்கான வழமைகள் பேணப்படல் வேண்டும். சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்தல் வேண்டும்.

இனமுரண்நிலை அதிகரிப்பின் சமூக அகிலவளை தளத்தில் சமூக மூலதன மலிதல் ஏற்பட்டு, சமூக கருந்துளையினுள் (Social Black Holes) நுழையவேண்டிய சூழல் ஏற்படும். இதனால் சமூகக் கூட்டான செயற்திறன் பாதிக்கப்படும். எனவே இன அழிவுக்கு உட்பட்ட சமூகம் சமூக மூலதனத்தை எவ்வாறு செவ்வனே அணுக வேண்டிய தார்ப்பரியத்தினை சமூக வெம்துளைகளும், சமூக கருந்துளைகளும் சமூக அகிலவளைத்தளத்தில் சுட்டுகின்றன.

கட்டமைக்கப்பட்ட வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது சுய இருப்பினையும், பாதுகாப்பினையும், சனநாயக உரிமைகளையும் முழுமை-யாகப் பெறுவதற்கு சமூக மூலதனங்கள் பங்களிக்க வேண்டும். ஆனால் இரத்த வாடையுடனான தேர்தல் உறுமல்கள் சிறுபான்மைச் சமூகத்தினைப் பெரும்பான்மைச் சமூகத்தில் இருந்து விலத்தி வைக்கும். இது சமூக அகிலவளைத்தளத்தில் சமூகக் கருத்துக்களையே ஏற்படுத்தும்.
பாதிப்படைந்த மக்கள், பொருளாதார வறுமை, அதிகார வறுமை என்பவற்றினால் மேலும் பாதிக்கப்படுவர். இவற்றினைக் கிடையான சமூக மூலதனங்கள் அணுக வேண்டும். அடுத்து உள ஆரோக்கியம், இனப்பெருக்க ஆரோக்கியம், சமுதாய மருத்துவம் என்பவற்றிற்கான சமூக முதலீடுகள் மிகவும் முன்னுரிமையுடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

சமூக மூலதனங்களின் பிரயோகம் பரிதி நோக்கியதாகவும், (Decentralization) மக்களின் பங்களிப்புடனானதாகவும், சமூகத்தின் உள்ளடங்களாகவும், சமூக வலுவூட்டலாகவும், சமூகத்தின் அடிநிலையினை பலப்படுத்துவதாகவும் அமைதல் நன்று.

இலங்கையில் கடந்த நூற்றாண்டுகளாக உள்ள இனமுரண்பாடு, தண்ணிலை அடைவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே தரைவழிப்பாதையாக சேது பாலத்தினை சீன அரசின் உதவியுடனேயே கட்டியமைத்தல் இப் பிராந்தியத்தின் அமைதிக்கான மிகப் பாரிய செவ்வன் சமூக முதலீடாக அமையும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *