Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சம்மந்தரின் கிளிநொச்சி விஜயம் சொல்லும் செய்தி

சம்மந்தரின் கிளிநொச்சி விஜயம் சொல்லும் செய்தி

ருத்திரன்-

தேர்தல் நெருங்கி வருவதை கட்டியம் கூறும் விதத்தில் நாட்டில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதியின் தேர்தல் சீர்திருத்தமே பிரதானமானது என்ற அறிவிப்பும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தனின் கிளிநொச்சி விஜயமும் இதற்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றன. ஒரு சில மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அதேநேரத்தில் ஏறத்தாழ நாடு முழுவதிலும் அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ஆயுட்காலம் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இந்த தேர்தல்கள் முறையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் தத்தமது வாக்கு வங்கிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், பின்னர் வாக்கு வங்கிகளை அதிகரித்துக் கொள்வதற்காகவும் தொடர்ச்சியாக இந்த தேர்தல்களை அரசாங்கம் ஒத்தி வைத்து வந்துள்ளது.

கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் புதிய முறையில் நடத்தப்பட வேண்டும் சட்டம் இயற்றப்பட்டு அதற்காக எல்லைகளும் மீள்நிர்ணயம் செய்யப்பட்டன. இந்த எல்லை மீள் நிர்ணயம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது என்ற காரணத்தை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. இந்த பிரச்சனை இன்னமும் முடிவடைந்ததாக தெரியவில்லை. ஆனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் கருதியுள்ளதாக தெரிகிறது.

மேற்சொன்ன இரண்டு தேர்தல்களில் எந்த தேர்தலை நடத்தினால் இரண்டு கட்சிகளுக்கும் சாதகமாக இருக்கும் என்பதில் தான் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் குழப்பம் நிலவுகிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில் வாக்கு வங்கியை பற்றி கவலைப்படும் அதேநேரத்தில் மஹிந்த தரப்பினர் தலையெடுத்து விடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆகவே இரண்டு தேர்தல்களையும் மையமாக வைத்தே இரண்டு பிரதான கட்சிகளும் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் அவர்களின் கிளிநொச்சி விஜயமும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையும் இதனையே வெளிப்படுத்துகின்றது.

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சனை 2009 இல் இருந்தே தொடங்கிவிட்டது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அப்பொழுது தான் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்த வன்னிப் பிரதேசங்களுக்கு கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு விஜயம் செய்திருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் யுத்தத்தில் தமது குடும்ப உறவுகள் இறந்ததையும், தடுப்பில் உள்ள பிள்ளைகள் மற்றும் உறவுகளின் பெயர்களையும், படங்களையும் அந்த குழுவினரிடம் வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களுடன் சென்ற ஊடகவியலாளர்களும் அதனை பதிவு செய்திருந்தனர். அதன் பின்னர் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை பூதாகரமாகியது. அப்பொழுது கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் யுத்தம் முடிந்து விட்டது. தடுப்பில் உள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் விடுதலைக்காக நாம் குரல் கொடுப்போம் என்றும் உறுதியளித்திருந்தார். இதேபோன்று, 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்திலும் வவுனியாவில் வன்னி இன் உணவகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து ‘ நான் இருக்கின்றேன். தைரியமாக இருங்கள். இறந்தவர்களை திருப்பி தரமுடியாது. உயிரோடு இருந்தால் கண்டிப்பாக அவர்களை மீட்டுத் தருவேன். இந்த கருமங்களை நிறைவேற்றுவதற்கு கூட்டமைப்போடு நீங்கள் இணைந்திருக்க வேண்டும் ‘ என்று வாக்குறுதியும் வேண்டுகோளும் விடுத்திருந்தார். இதன்காரணமாகவே கூட்டமைப்புக்கு 2010 ஆம் ஆண்டு தேர்தலை விட அதிக ஆசனங்கள் கிடைத்தது.

தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுமார் ஐந்து மாத காலமாக தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதனைப் போன்றே காணிவிடுவிப்பு, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் போன்றனவும் கவனிப்பார் இன்றியும், விடிவின்றியும் தொடர்கின்றது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை (12.07) அன்று திடீரென கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த எதிர்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவர்கள் போராடும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு அவர்களின் உணர்வுபூர்வமான அழுகுரல்களையும், மன்றாட்டத்தையும் மீண்டும் ஒரு முறை அவதானித்துள்ளார்.

தாங்க முடியாத சோகத்துடன் அழுது புலம்பிய இரண்டு வயது முதிர்ந்த தாய்மார்களை அரவணைத்து ஆறுதல் கூறியும், ஒரு பெரியவரின் கரங்களைப் பிடித்து ஆறுதல் கூறியும் காலை பிடித்து அழுதவர்களை கைதாங்களாக எழுப்பியும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார். அவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் முன்னரைப் போன்றே முஸ்டியை உயர்த்தி அரசாங்கம் இவர்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். நாமும் தொடர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம். அரசாங்கம் பதில் சொல்லாமல் நாம் ஓயமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தேர்தல் சுவரொட்டிக்கான படமும், முக்கிய வாக்குறுதியும் தயாராகிவிட்டது. கிட்டத்தட்ட அரையாண்டு காலமாக வீதியில் உள்ள மக்களை போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு செல்லுமாறோ அல்லது உங்கள் போராட்டத்தை நாங்கள் கையில் எடுத்துக் கொள்கிறோம். நீங்கள் தைரியமாக இருங்கள் என்றோ அவர்களுக்கு உறுதியளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு தலைவரின் இந்த செயல்களை பார்க்கின்ற போது தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. இதுவரை காலமும் போராட்ட களத்தில் உள்ள மக்களை சந்திக்காதவர் அண்மைக் காலத்தில் அந்த மக்களை சம்பிரதாய ரீதியாக மட்டுமே பார்த்து இருப்பதும் அவர்களது போராட்டங்களை முடித்து வைப்பதற்கு எத்தனிக்காததும் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே அவர் விரும்புவதாக தெரிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதும், எழுக தமிழ் போன்ற பேரணிகள் நடத்துவதும் அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்கு உட்படுத்தும். தென்னிலங்கை மக்களை கொந்தளிக்கச் செய்யும் என்றெல்லாம் சொல்லியவர் இன்று அந்த மக்களை பார்க்க வந்திருப்பதானது தமிழரசுக் கட்சி தேர்தல் பணிகளை ஆரம்பித்து இருப்பதையே உணர்த்துகிறது.

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களின் கூட்டத்தில் ‘கூட்டமைப்பின் பெயரை சொல்லியே நாம் அரசியலில் அடையாளத்தை காட்டியுள்ளோம். தமிழரசு கட்சியின் சார்பில் தாம் அரசியலில் பிரவேசிக்கவில்லை. கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டு இருக்கின்றோம். எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்ததாக’ சம்மந்தர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், கூட்டமைப்பைப் பற்றி பேசுகின்ற பொழுது கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற போதும் ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் தொடர்பாக தான் கருத்துச் சொல்ல முடியாது எனத் தெரிவித்து இருப்பதில் இருந்து தான் தமிழரசுக் கட்சி சார்ந்தே வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது கருத்தில் ஒரு சுய முரண்பாடு இருப்பதை உணரமுடிகிறது.

கூட்டமைப்பின் தலைவராக நான்கு கட்சியினரையும் அழைத்து கூட்டமைப்பை ஒரு குடை அமைப்பாக உருவாக்குவது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்தில் இருந்து அவர் அஅத்தகைய ஒரு அமைப்பை விரும்பவில்லை என்பதை சூசமாக வெளிப்படுத்தியுள்ளார். தலைவருடைய இந்தக் கருத்துக்களை பார்க்கின்ற போது தனது தலைமையை தக்க வைத்துக் கொள்வதற்கான தேர்தல் முன்னோட்டத்தில் அவர் ஈடுபட்டு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழரசுக் கட்சி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் இருந்தும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்தும் விலகிச் செல்வதால் மாற்று தலைமையின் அவசியத்தை வலியுறுத்தும் சக்திகள் இதுவரையில் அந்த மாற்றுத் தலைமையை நோக்கிய உறுதியான செயற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாத நிலையில் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சியின் பக்கம் சார்ந்தே முடிவெடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *