Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்

சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்

யதீந்திரா

எதிர்வரும் நொவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மோதவுள்ள, பிரதான வேட்பாளர்கள் யார் என்பது பெரும்பாலும் தெளிவாகிவிட்டது. இந்தக் கட்டுரை பிரசுரமாகும் போது, அது தொடர்பான சகல விவாதங்களும் முடிவடைந்திருக்கலாம். இந்தக் கட்டுரை எழதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. ஒரு வேளை இந்த நிலைமைகளில் மாற்றங்களும் ஏற்படலாம். ஏனெனில் இலங்கைத் தீவில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விவாதங்கள் இனியும் நீண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஒரு வேளை அவ்வாறு நிகழ்ந்தால் ஜக்கிய தேசிய முன்னணிக்குள் பிளவுகள் தோன்றவே வாய்ப்புண்டு. ஆனால் அதற்கான வாயப்;புக்களும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறன. இந்த பின்புலத்தில் சகல கேள்விகளுக்குமான பதில்கள் இன்னும் சில தினங்களுக்குள் கிடைத்துவிடும். ஆனால் இது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அலட்டிக்கொள்ள ஏதாவது உண்டா? தமிழ் மக்களின் பிரச்சினை முற்றிலும் வேறு. இது ஒரு மிகத் துல்லியமான கேள்விகளுடன் தொடர்புடையது. அதாவது, சிங்கள தேசத்தின் தேர்தலில் தமிழ் மக்கள் ஏன் பங்குபற்ற வேண்டும்? அதனால் தமிழ் மக்களின் அரசியல் இருப்பில் எத்தகைய சாதகமான மாற்றங்கள் ஏற்படும்?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை கண்டடைவதற்கு, 2015இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை இந்த இடத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும். 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் அதீத நம்பிக்கை தெரிந்தது. மிகவும் சாதுவான தோற்றம் கொண்ட, அரசியல் மேடைகளில் ஆக்ரோசமாக பேசாத அல்லது, பேசத் தெரியாத மைத்திரிபாலவின் ஊடாக அவ்வாறானதொரு நம்பிக்கை ஊட்டப்பட்டது. மகிந்தவா அல்லது மைத்திரியா என்னும் இரண்டு தெரிவுகள் முன்வைக்கப்பட்ட போது, மைத்திரியின் பக்கமாக தமிழ் மக்கள் சென்றமை ஆச்சரியமான ஒன்றுமல்ல. அந்த நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இங்கு பதில் காண வேண்டிய கேள்வி. இந்த ஜனாதிபதி தேர்தலில் பங்களிக்கலாமா என்னும் கேள்விக்கு விடைதேட முயலும், ஒவ்வொரு தமிழ் குடிமகனும் இது தொடர்பில் சிந்திக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

இதன் ஊடாகத்தான், நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் எந்த எதிர்பார்ப்பில், எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும் என்னும் கேள்விக்கான பதிலை தேடலாம்.

2015 -ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிடம் எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. அவ்வாறு நிபந்தனைகளை முன்வைத்தால் அது எதிரணியான மகிந்த ராஜபக்சவிற்கு சாதகமாகவிடும் என்பதுதான் கூட்டமைப்பின் வாதமாக இருந்தது. இப்போது தனது கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாசவிடம் நிபந்தனைகளை வைப்பது போன்றே ரணில், அப்போதும் மைத்திரி தரப்பை தனது நிபந்தனைகளுக்குள் சிறைப்படுத்தி, தனது அரசியல் இருப்பை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார். இப்போதும் ரணில் அதற்கான முயற்சியைதான் செய்கிறார். அவர் அந்த முயற்சியில் மீண்;டும் வெற்றிபெறக் கூடும். அல்லது தோல்வியும் அடையலாம். அது ரணிலின் பிரச்சினை. ஆனால் 2015இன் ஆட்சி மாற்றமும், அதன் பின்னரான அரசியல் சூழலும் தமிழ் மக்களின் அரசியல் சமூக இருப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? இன்று விடயங்களை ஆழமாக பார்த்தால், ரணிலில் அரசியல் வியூகங்களுக்குள் கடந்த நான்கு வருடங்களாக தமிழரின் அரசியல் சிக்குண்டுகிடக்கின்றது. நல்லாட்சி, ஜனநாயகம் என்றெல்லாம் வசனங்கள் பேசியவர்கள் இப்போது எங்கே? வடக்கு கிழக்கில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல்கள் தொடர்ந்த போது அவ்வாறனவர்கள் எங்கு போயினர்? இன்று அதற்காகவும் தமிழ் மக்கள்தானே வீதிகளில் இறங்க வேண்டியிருக்கிறது! அன்றைய ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் ஒரேயொரு கோசம்தான் இருந்தது. அதாவது, மகிந்த ராஜபக்சவை வீழத்துவதற்கு தமிழ் மக்களின் ஆதரவு தேவை. ஆனால் மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கின் மீதான சிங்கள மேலாதிக்கம் முற்றிலுமாக நின்றதா? அவ்வாறாயின் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பங்களித்ததன் பெறுமதி என்ன? இன்று தேசிய அரசாங்கம் வந்து நிற்கும் இடத்தை நோக்கினால், தமிழ் மக்கள் எந்தளவிற்கு மோசமாகவும், வஞ்சகமாகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. அதனை சாதாரணமாகவே விளங்கிக்கொள்ள முடியும்.

Gota and Sajith

ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் சில முடிவுகளை எடுப்பதும், அதனை முன்வைத்து செயற்படுவதும் தவறல்ல. ஆனால், நாம் எடு;க்கும் அரசியல் முடிவுகள் நமக்கு பாதகமாக செல்கின்ற போது, அதிலிருந்து விலிகிக்கொள்வதற்கான தந்திரோபாயம் தொடர்பிலும் ஒரு தலைமை சிந்தித்திருக்க வேண்டும். அவ்வாறான எந்தவொரு தந்திராபோயமும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிடம் இருந்திருக்கவில்லை. பழுத்த அரசியல் வாதி, சாணக்கியன் என்னும் கற்பனைகளுடன் சம்பந்தன் தனது அரசியல் இயலாமையை கடந்த நான்கு வருடங்களாக போதியளவு நிரூபித்துவிட்டார். இதற்கு பின்னரும் கூட்டமைப்பு விரல் நீட்டு;ம் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியுமா? அப்படியாயின் இந்த தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்னும் கேள்வி நிச்சயம் எழும். அந்தக் கேள்விக்கான பதிலை நோக்கிய ஒரு உரையாடலை ஏற்படுத்துவதுதான் இந்தப் பத்தியின் நோக்கம்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படும் எந்தவொரு வேட்பாளரும் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை ஏற்கப் போவதில்லை. இதில் கோத்தபாய தொடர்பில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளின் வீழ்சியுடன், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கென்று எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்னும் புரிதலுடைய ஒருவரே கோத்தபாய. அவர் தொடர்பில் அலட்டிக்கொள்ள ஒன்றுமில்லை. அவருக்கு தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித்பிரேமதாச அணியினர்தான் தமிழ் மக்களை நோக்கி சில இனிப்பான பிரச்சாரங்களுடன் வரப்போவர்கள். அவர்களின் இனிப்பான பிரச்சாரம் எதனை அடிப்படையாக் கொண்டிருக்கும் என்பதும் இப்போதே தெளிவாகத் தெரிகிறது. அதாவது, அவர்கள் ஒரு ஒற்றைச் சுலோகத்தோடு வருவார்கள் – உத்தேச அரசியல் யாப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, அதனை நிறைவேற்றுவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்றவாறே அவர்கள் தங்களது வஞ்சக வலையை பின்னுவார்கள். கூட்டமைப்பும் இந்த இனிப்பான பிரச்சாரத்தை ஒரு அற்புதமான பிரச்சாரமாக முன்னெடுக்கும்.

ஆனால் இங்கு தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்வி, இந்த உத்தேச யாப்பை ஏன் கடந்த நான்கு வருடங்களில் வெற்றிகொள்ள முடியவில்லை? ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது சஜித்பிரேமதாசவோ நினைத்தால் மட்டும் அந்த யாப்பை நிறைவேற்ற முடியுமா? ஒரு வேளை இந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணி தோல்வியுற்றாலும், அடுத்து இடம்பெறப் போகும் பாராளுமன்றத்தை அவர்கள் கைப்பற்றினால் என்ன நடக்கும்? அப்போது ரணிலால் அலலது சஜித்தால் அந்த யாப்பை நிறைவேற்ற முடியுமா? அரசியல் யாப்பின் சில பகுதிகளை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பலம் தேவை. அதற்குமப்பால், பொதுசன அப்பிராய வாக்கெடுப்பு ஒன்றி;ன் மூலம் பெரும்பாண்மையான மக்களின் ஆதரவை பெற வேண்டும். இதெல்லாம் இந்த நாட்டில் நடக்கக் கூடிய விடயங்களா? மகிந்த அணி ஒப்பீட்டடிப்படையில் மிகவும் பலவீனமாக இருந்த கடந்த நான்கு வருடங்களில் செய்ய முடியாத ஒன்றை, மகிந்த பலமாக இருக்கப் போகும் காலத்தில், மகிந்தவை பகைத்துக்கொண்டு, எவ்வாறு செய்ய முடியும்? எனவே இந்தத் தேர்தலில் எவருக்கு வாக்களித்தாலும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவது ஏமாற்றம் மட்டும்தான். எனவே தமி;ழ் மக்களுக்கு முன்னாலுள்ள கேள்வி, தொடர்ந்தும் தெற்கின் சி;ங்கள தேர்தல் வியூகங்களுக்குள் சிக்கி ஏமாறுவதா அல்லது ஒவ்வொரு தேர்தல்களையும் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவதற்கான ஜனநாயக வாய்ப்புக்களாக பயன்படுத்திக் கொள்வதா?

ஆட்சி மாற்றங்களால் தமிழர் தாயப்பகுதியின் மீதான தெற்கின் ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த முடியும் என்னும் தந்திரோபாயம் படுமோசமான தோல்வியில் முடிந்திருக்கிறது. சிங்கள – பௌத்த மேலாதிக்க சிந்தனைக்கு எந்தவொரு ஆட்சியாளரும் கடிவாளம் இடப்போவதில்லை என்பதும் கடந்த நான்கு வருடங்களில் தெட்டத் தெளிவாக நிரூபனமான ஒன்று. இதன் பின்னரும் சஜித் பிரேமதாச மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது தமிழர்கள் கடைந்தெடுத்த மடையர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு செயலன்றி வேறில்லை. இன்று நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்ட போது, அரசாங்கம் அதனை எவ்வாறு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது என்பதை விடவும் வேறு சிறந்த உதாரணங்கள் தேவையில்லை. ஆட்சி மாற்றங்களின் பின்னால் தமிழர்கள் இழு படுவதால், எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதும் இப்போது வெள்ளிடைமலை. இதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் ஒரு சிங்கள வேட்பாளரை ஆதரிப்பது என்று சிந்திப்பதே தவறான ஒன்றுதான். அந்தத் தவறை செய்யுமாறு கோரும் அரசியல் தலைமைகள் அனைத்துமே தவறு செய்யும் தலைமைகள்தான். எனவே கடந்த கால தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்வதாயின், நிகழ்காலத்தை சரியாக கையாளுவது தொடர்பில் சிந்திப்பது ஒன்றே அதற்கான வழியாகும். இதில் சிலர் ஜே.வி.பியை ஒரு தெரிவாகக் கொள்ளலாம் என்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஒரு வாதமாகும. இது சிறுபிள்ளைத்தனம் என்பதை வி;டவும் அது ஒரு அபத்தமான கருத்துக் கூட. ஜே.வி.பி, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அங்கமாக இருந்த காலத்தில்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான திர்மானகரமான யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது அந்த யுத்தத்திற்கு முண்டுகொடுத்த பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றுதான் ஜே.வி.பி. இராணுவத்தில் ஆட் பற்றாக்கறை ஏற்பட்ட போது, சிங்கள இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் தீவிரமான, ஆட்சேர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்த கட்சி ஜே.வி.பி ஒன்றுதான். தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை இடம்பெற்றதெனின், அந்த யுத்தத்திற்கு முண்டுகொடுத்த ஜே.வி.பிக்கு அதில் பங்கில்லையா?

இவை அனைத்தையும் தொகுத்து நோக்கினால், சிங்கள தேசத்தின் தேர்தல் நிகழ்சிநிரலுக்குள் அகப்படாமல் இருப்பதற்கான வழியை ஆராய்வது ஒன்றுதான், தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவாகும். இந்த பின்புலத்தில், சிங்கள வேட்பாளர்கள் அனைவரையுமே, புறக்கணிப்பதுதான் தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவு. அவ்வாறு புறக்கணித்துவிட்டு என்ன செய்வதென்னும் கேள்வி எழலாம். சிங்கள தேசத்தின் தேர்தல் வியூகங்களுக்குள் அக்கப்படுவதை தடுப்பதற்கு தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள ஆகச் சிறந்த தெரிவு – ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி, தமிழ் மக்கள் அனைவரும் அவருக்கு வாக்களிப்பதன் ஊடாக, தமிழ் ஒரு தேசமாக நிற்கின்றோம் என்னும் தெளிவானதொரு செய்தியை, தென்னிலங்கைக்கும், இலங்கை தீவில் தலையீடு செய்துவரும் சர்வதேச சக்திகளுக்கு கொடுக்க முடியும். இது சாத்தியப்படாவிட்டால் இந்த தேர்தல் வியூகத்திற்குள் அகப்படுவதை தடுக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுவதை முற்றிலுமாக தவிர்ப்பதே தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள இரண்டாவது தெரிவு. மூன்றாவது தெரிவு, வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று, தங்களது வாக்குகளை செல்லுபடியதற்றதாக்குவது. இதன் மூலமும் தமிழ் மக்கள் சிங்கள தேசத்தை நம்பவில்லை என்பதை நிரூபிக்க முடியும். இவை அனைத்தும் ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டவைதான். சிங்கள தேசத்தின் தேர்தல்கள் ஒவ்வொன்றையும் தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்கான வாய்ப்புக்களாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில்தான் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் நோக்கில் சிந்திக்கும் தரப்புக்கள் ஒவ்வொன்றும் இது தொடர்பில் சிந்தித்து விரைந்து செயலாற்ற வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வாய்ப்புக்களையும் தவறவிட்டுவிட்டு, பின்னர் உணர்சிவசப்படுவதில் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு அறிவுபூர்மாக கையாளலாம் என்பதில்தான் தமிழ் தரப்புக்கள் கருத்தூன்றி செயலாற்ற வேண்டியிருக்கிறது. இது தொடர்பில் தமிழ் அரசியல் பரப்பில் விரிவான உரையாடல்கள் இடம்பெற வேண்டியது கட்டாயமான ஒன்று.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *