Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிந்திக்க வைக்கும் சித்திரைப் படுகொலைகள்

சிந்திக்க வைக்கும் சித்திரைப் படுகொலைகள்

முழு மானிட நேயத்தையே அதிரவைத்த சித்திரைப் படுகொலைகள் இலங்கையின் அரசியல்வாதிகளை வெகுவாகப் பாதிக்கவில்லை. மானிடத்தின் விலையை அரசியல் முதலாக்குவதற்கு முனைவதையே இங்கு நாம் காண்கிறோம். அப்பாவி மக்களின் இரத்தம் காய முன்னரே முன்னைய பாதுகாப்பு செயலர் தான் ஜனாதிபதியாக வந்து எல்லாவற்றையும் அடக்குவேன் என சூளுரைக்கின்றார். தமிழ் அரசியல்வாதிகளோ அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வருவதில் முனைப்பாக இருந்தனர்.

இன்று அவசரகாலச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களே ஆகும். முஸ்லீம்களும் தமிழிர்களே. எனவே தீவிரவாதம், பயங்கரவாதம் என்பனவற்றை அடக்கும் முனைப்போடு சிங்கள இராணுவ இயந்திரம் தமிழ் மக்களையே தொடர்ந்து அடக்கும்.

எனவே தமிழ் மக்களுக்கான பாதுகாப்பிற்கு தற்போதைய சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இரண்டாக வகுக்கலாம்.

1. சர்வதேச ரீதியான நடவடிக்கை

இன்று பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவதால் சர்வதேச பொறுப்;புக் கூறும் கட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்.

ஐக்கிய நாட்டு மனித உரிமை அமைப்பில் போர்க்குற்ற விசாரணையில் வெளிப்படுத்தி இருந்த இலங்கை ஆயுதப்படையுடன் இருந்த முஸ்லீம் ஊர்க்காவல்படை, புலனாய்வுப் பிரிவு என்பவற்றின் கடந்த காலச் செயற்பாடுகள், ஐ.நா. பாதுகாப்புச்சபையில் சர்வதேச பயங்கரவாத அரச பயங்கரவாதம் தொடர்பாக ஆராயப்படல் வேண்டும். இதன் மூலம் குற்றவாளிகளுக்கும், அரச உயரதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், சனாதிபதிக்கும் உள்ள தொடர்புகள் வெளிப்படுத்தப்படலாம்.

குற்றம் இழைத்த அரசாங்கத்தினால் சிறுபான்மை இனம் தொடர்ந்து அடக்கப்படுவதனை இதன் மூலமே தடுக்கலாம்.

2. உள்நாட்டு நடவடிக்கை

அடுத்து தமிழ் மக்களுக்கு இனரீதியான அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டிய அவசியத்தை சித்திரைத் தாக்குதல்கள் ஏற்படுத்தி உள்ளது.

உலகில் எட்டு கோடிக்கு மேல் தமிழ்மக்கள் இருந்தும் அவர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. இலங்கையில் இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவானாலும் உலக அளவில் அது தமிழ் பயங்கரவாதமாகவே பார்க்கப்படும்.

எனவே தமிழர்களுக்கு என்ற உலக இராஜதந்திரக் கட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். அதற்கு சுயாதீனநாடு உருவாதல் அவசியமாகும். அன்றேல் இலங்கை இந்திய அரசுகள் நாட்டின் ஒருமைப்பாடு என்ற போர்வையில் பயங்கரவாதத்தினை அடக்குகின்றோம் என்று தமிழினத்தை தொடர்ந்து அடக்க வாய்ப்பு உள்ளது. இதற்குச் சாதகமாகவே அவசரகாலச்சட்டம், பயங்கரவாதச் சட்டங்கள் உள்ளன.

பூகோள அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களை வெகுவாகப் பாதிக்கின்றது. 2009இல் சீனாவின் எழுச்சி எவ்வாறு பாரிய இன அழிவினை தமிழ் மக்கள் எதிர்கொள்ள வைத்ததோ அவ்வாறே. தற்போதைய ரஸ்சியாவின் எழுச்சியும் அமெரிக்காவினதும் அரபு வசந்தத்தின் வீழ்ச்சியும் இலங்கையினைப் பாதித்து உள்ளது. லிபியா, எகிப்து, ஈரான், ஈராக், துருக்கி போன்று இலங்கையும் ஓர் தோல்வியடைந்த அரச இயந்திரமாக மாறிவிட்டது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமக்குள்ள வேற்றுமைகளை பல்வேறு சக்திகளின் நலனுக்கு உபயோகித்தலுக்கு இடமளிக்கலாகாது.

உதாரணமாக இலங்கை சுதந்திரமடைந்தபோது மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது ஏனைய தமிழர்கள் வாளாவிருந்தனர். தமிழர்களின் மீதான இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளின்போது வடக்கு கிழக்கில் தனது நடவடிக்கைகளுக்கு மலையகத் தமிழர்களையும் இஸ்லாமியத் தமிழர்களையும் உதவிக்கு சேர்த்தது. அவ்வாறே 2009இல் கிழக்கு மாகாணத் தமிழர்களை தனது இராணுவ நடவடிக்கைகளுக்கு உபயோகித்தது. இதேபோல் தற்போது; இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு ஏனைய தமிழர்களை உபயோகிக்கும் சூழல் உள்ளது. ஒரு மொழி பேசும் இனக்குழுமம் அதன் உப இனக்குழுமங்களால் அழிக்கப்படும் சூழல் மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் ஏனைய திராவிட மொழிகளால் தமிழ்மொழியும் தமிழகமும் வஞ்சிக்கப்படுவதுபோல் ஈழத்திலும் ஓர் அபத்தமான சூழல் உள்ளது.

யாழ் ஆனந்தன்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *