Search
Monday 28 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சூழலை பாதுகாத்து வருமானத்தை அள்ளித் தரும் மூங்கில் செய்கை!

சூழலை பாதுகாத்து வருமானத்தை அள்ளித் தரும் மூங்கில் செய்கை!

-கே.வாசு-

உலகில் மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் சில பயிர்செய்கை சூழல் சார் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. பொதுவாக வேகமாக அதிகரித்து வரும் இயந்திரமயமாதல் காரணமாக சூழல்சார் வெப்பநிலையானது அதிகரித்து வருகின்றது. அபிவிருத்தி, குடியேற்றம் என்ற போர்வையில் பெருமளவு காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக மனித சுவாசத்திற்குத் தேவையான சுத்தமான ஒட்சிசனைக் கூட பெற முடியாத நிலை ஏற்படத் தொடங்கியுள்ளது. ஓசோன்படையில் ஏற்பட்டுள்ள துவாரம் பெரிதாகி வருகிறது. இதனால் நச்சுக் கதிர்களும் பிற ஊதாக்கதிர்களும் வளிமண்டத்தில் இருந்து புவியை வந்தடையக் கூடிய அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சூழல் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் சூழலையும் பாதுகாக்கக் கூடிய பயிர்செய்கைகள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் காபனை அகற்றி தூய ஒட்சிசன் வாயுவை வழங்குவதில் அரசமரம், துளசி, மூங்கில் போன்ற மரங்கள் உதவுகின்றன. இவற்றில், சூழல் பாதிப்பை தடுத்து மக்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவும் ஒரு பயிர்செய்கையே மூங்கில் செய்கை.

உலகில் மூங்கில் பயிர்செய்கையில் சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேஸ், கென்யா ஆகிய நாடுகள் ஈடுபடுகின்றன. இதில் இந்தியா சிறப்பான ஒரு இடத்தில் உள்ளது. இந்தியாவை ஒத்த காலநிலைகளைக் கொண்டுள்ள ஆசிய, பசுபிக் வலய நாடுகளில் இப்பயிர்செய்கைக்கு உகந்த காலநிலை மற்றும் மண்வளம் என்பன காணப்படுகின்றது. இலங்கையிலும் இப்பயிர்செய்கை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது.

IMG_7114மூங்கில் வளர்ப்பு இலகுவானது. அதனை முதல் ஆறுமாதம் சரியாக பராமரித்தால் பின்னர் தானாக வளர்ச்சி பெறும். குறிப்பாக ஒக்டோபர் மாதத்தில் இதனை பயிர் செய்தால் மழை மூலம் கிடைக்கும் நீரிலேயே தானாக வளர்ச்சியடையும். மூங்கில் ஒரு புல்லின் குடும்பத்தைச் சேர்ந்தவை. புல்லினத்தின் ஒரு பெரியண்ணை போன்றதே மூங்கில். இது ‘பச்சைத்தங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. மூங்கிலில், உலகில் ஆயிரத்து 400க்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. வருமானத்தை நோக்கமாகக் கொண்டு விரைவாக வளரக் கூடிய பல புதிய மூங்கில் இனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மூங்கில்களில் சில இனங்கள் ஒரே நாளில் 30 சென்ரி மீற்றர் வரை வளரும் தன்மை கொண்டது. மூங்கில் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வேகமாக வளக் கூடியது. மூங்கில் வளிமண்டலத்தில் உள்ள காபன் வாயுவை அதிகமாக உள்வாங்குகிறது.

ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஒட்சிசன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவாகும். ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்காற்றை (ஒட்சிசனை) தருகிறது. இந்த அடிப்படையில், ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு ஒரு மனிதனுக்குப் போதுமானது. ஆளுக்கொரு மூங்கில் மரம் அல்லது குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்.

இலங்கையைப் பொருத்தவரை மூங்கில் செய்கை பெரியளவில் செய்கை பண்ணப்படும் அளவு மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இப்பயிர்செய்கை தொடர்பில் முதலீடு செய்வதற்கு வெளிநாடுகளில் இருந்து எவரும் முன்வரவில்லை. இலங்கை மக்களுக்கும் இது தொடர்பான அறிவு குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் தமிழகத்தில் இருந்து ஆகாஸ் குறூப் ஒப் கம்பனி மூங்கில் செய்கை மேற்கொள்வதற்காக இலங்கையில் முதலிட முன்வந்துள்ளது. அதிலும் குறிப்பாக யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு பகுதிக்கு முன்னுரிமையும் அளித்துள்ளது.

IMG_7117இக் கம்பனியின் துணையுடன் வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளில் தற்போது மூங்கில் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன், அனுராதபுரம், குருநாகல் ஆகிய பகுதிகளில் இப் பயிர்செய்கை மேற்கொள்ள நடவடிக்கையும் எடுத்துள்ளது. ஏனைய பயிர்செய்கையில் இருந்து பெறப்படும் வருமானத்தை விட மூங்கில் பயிர்செய்கை மூலம் இரட்டிப்பு வருமானத்தை பெறமுடியும்.

மூங்கில்கள் மண் அரிப்பை தடுத்து மண்வளத்தை காப்பதுடன், நீர்வளத்தையும் பெருக்க உதவுகிறது. வளர்ந்த மூங்கில்கள் வீடுகள் கட்ட தாங்கு தடிகளாக பயன்படுகிறது. குடிசைகள், சிறுவீடுகள் கட்ட மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. உணவகங்களில் உள்ள அலங்கார பொருள் செய்ய உதவுகிறது. இளம் குருத்துக்கள் ஊறுகாய் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும், நூல் இழைகள், ஆடைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. காகிதம் தயாரிக்கவும் பயன்படுகிறது. பட்டாசுகள், கூடைகள் தயாரிப்பில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் மூலப் பொருளாகவும் உதவுகிறது. இவற்றை விட மின்சார உற்பத்திக்கும் இது பயன்படுகிறது.

நீர்மின் உற்பத்தி குறைவடைந்து அடிக்கடி மின்வெட்டுக்கள் இடம்பெறுவதுடன், அனல் மின் உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தும் நிலையில் மூங்கில் மூலம் மின்சாரம் பெற எடுக்கப்படும் முயற்சிகள் இலாபகரமானதும் செலவு குறைந்ததும் ஆகும். இதனால் சூழல் பாதிப்புக்களும் குறைவாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் ஆகாஸ் குறூப் ஒப் கம்பனி இலங்கையில் மின்சார உற்பத்திக்காகவே மூங்கில் பயிர்செய்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

மின்சார உற்பத்திக்காக நடப்படும் மூங்கில் ஒன்று 30 மாதங்களின் பின் அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கரில் ஒரு வருடத்தில் 30 தொன் மூங்கிலை அறுவடை செய்யலாம். இதன் மூலம் சராசரியாக 75 ஆயிரம் ரூபாய் முதல் ஓரு இலட்சம் ரூபாய் வரை வருமானமாக பெறலாம். அதன் பின் அடுத்த வருடத்தில் 40 தொன் பெற முடியும். தொடர்ந்து சரியாக பராமரித்தால் 50 தொடக்கம் 60 தொன் வரை பெற முடியும். இதன் மூலம் வருமானத் தொகையும் இரட்டிப்படைந்து செல்லும். மூங்கில் பயிர்செய்கையுடன் இணைந்ததாக ஊடுபயிர்களை வளர்க்க முடியும். முதல் ஒரு வருடத்திற்கு மரக்கறிப் பயரிச்செய்கை செய்ய முடியும். அதன் பின் தொடர்ச்சியாக காளாண் பயிர்செய்கை மேற்கொள்ள முடியும். மூங்கில் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு மேலதிகமாக இதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும்.

IMG_7120மூங்கில் தடிகள் வெட்டி எடுக்கப்பட்ட பின்னர் மூங்கில் இலைக்களைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கலாம். இதனை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும். இன்று இராசாயன வளமாக்கிப் பயன்படுத்தத் தொடங்கியதால் மண்புழு அற்றுப் போயுள்ளது. இதனால் குப்பை கூலங்களை வளமாக்கும் செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மண்புழு வளர்ப்புக்கும் மூங்கில் இலைகள் உதவுகின்றன. இதன்மூலம் மேலதிக வருமானத்தையும் பெறமுடியும்.

மூங்கில் வளர்க்கும் இடங்களில் பாம்பு வரும் என பலர் கூறுவார்கள். ஆனால் முள் இருக்கும் மூங்கில் உள்ள இடங்களில் தான் பாம்பு, மயில் என்பன அதிகமாக இருக்கும். தனது உடலை உரசி பாதுகாக்கவும், முட்டை இட்டு அதனை பாதுகாப்பதற்காக அங்கு பாம்பு, மயில் என்பன வருகின்றன. ஆனால் முள் இல்லாத கல் மூங்கில் மற்றும் நவீன முறையில் பெறப்பட்ட பீமா போன்ற மூங்கில் பயிர்செய்கை தான் அதிகமாக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் செய்கை பண்ணப்படுகின்றது.

மூங்கில் மரத்தை பச்சை தங்கம் என்று கூறக் காரணம், இதன் வர்த்தகம் தான். ஒரு முறை மூங்கில் மரங்களை அறுவடை செய்தால், பல ஆண்டுகள் இருப்பில் வைத்து தேவைக்கு ஏற்றார் போல் விற்பனை செய்ய முடியும். ஒரு மூங்கில் வெட்டப்பட்ட நாளில் இருந்து 50 ஆண்டுகள் வரை அதே உறுதி கம்பீரத்துடன் இருக்கும். இதனால், மூங்கில் விவசாயத்தால் நஷ்டம் ஏற்படாது.

IMG_1572 (2)இலங்கையின் தென்பகுதியில் பெரியளவில் செய்கை பண்ணப்படாவிட்டாலும் பலரது வீடுகளிலும் வீட்டுக்கொரு மூங்கில் மரங்கள் இருக்கின்றன. ஆனால் வடக்கு பகுதிகளில் அவ்வாறு இல்லை. யுத்தத்தால் பாதிப்படைந்த மக்கள் தமது பொருளாதாரத்தை குறைந்த முதலீட்டுன் விரைவாகவும், இலகுவாகவும் கட்டியெழுப்புவதற்கு மூங்கில் பயிர்செய்கை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அண்மையில், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மல்லிக்கை பூ செய்கை வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு பயிர்செய்கையாகவும், அதிகளவிலானோருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு செய்கையாகவும் மாறியிருக்கின்றது. இதனைவிட, இரட்டிப்பு நன்மையையும் வருமானத்தையும் தருவதுடன் சூழல் சார் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஒரு செய்கையாக மூங்கில் செய்கை அமைந்திருக்கின்றது. இதனால் இத்தகைய பயிர்செய்கையை மேற்கொண்டு வடக்கு பகுதியை அபிவிருத்தி செய்ய மாகாண சபையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு வளமுள்ள எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

IMG_1560

N5,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *