செய்திகள்

சைவத்தை தமிழோடு இணைத்து போராட்ட நியாயங்களை சர்வதேச சமூத்திடம் எடுத்துச் சென்று சேவை செய்தவர்களே ஆயர்கள்

அ.நிக்ஸன் 

மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரத்தில் குறித்த அந்த அருட்தந்தையின் செயற்பாடு ஏற்புடையதல்ல- அவருடைய பேச்சைக் கேட்டு வளைவை புடுங்கி எறிந்த சிலரின் நடவடிக்கையும் நியாயமானதல்ல.

கத்தோலிக்க திருச்சபை கட்டுப்பாடுடையது. அருட்தந்தையர்கள் தமது மறை மாவட்டங்களுக்குரிய ஆயர் இல்லங்களுக்குரிய அனுமதியின்றி எந்தப் பணிகளையும் செய்ய முடியாது- அவ்வாறு செய்தாலும் அது பற்றி ஆயர் இலத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்.

ஆகவே இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட அந்த அருட்தந்தை எவ்வாறு சுயமாகச் செயற்பட்டார் என்பது குறித்து மன்னார் ஆயர் இல்லம் உள்ளக ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

ஆனாலும், ஒருசில தனிப்பட்ட தவறுகளுக்காக கத்தோலிக்க திருச்சபையையும் அனைத்து கிறீஸ்த்தவ மக்களையும் மனம் நோகும்படி முகநூலில் பதிவிடுவது ஆரோக்கியமானதல்ல.

ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பங்களிப்பு அளப்பரியது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எனது அரசியல் பத்தி எழுத்துக்களில் கூட அந்தப் பங்களிப்பை கத்தோலிக்கத் திருச்சபையின் பங்களிப்பாக நான் பிரித்து எழுதியதும் கிடையாது.

ஏனெனில் அது தமிழ் மக்களின் பங்களிப்பு- தமிழரின் போராட்டம் சமயம் சார்ந்ததல்ல. அது தமிழர் இறைமை, மொழி. கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம்.

ஆனாலும் அந்தப் போராட்டத்திற்குள் சைவ சமயத்துக்கு முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக சைவ சமயம் என்பது தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரம் பண்பாட்டுடன் பின்னிப்பினைந்தது என்பதை தமிழ்க் கத்தோலிக்க மக்கள் அறியாதவர்கள் அல்ல.

பௌத்த சமயம் சிங்கள மொழிக்குரிய அடிப்படை மரபுவழிப் பண்பாடு என்பதை எவ்வாறு சிங்களக் கத்தோலிக்க மக்கள் எற்றுக்கொண்டுள்ளனரோ, அவ்வாறுதான் சைவ சமயம் என்பதும் தமிழ்ப் பண்பாட்டுக்குரியது என்பதை தமிழ்க் கத்தோலிக்க மக்கள் மனதாரா ஏற்றுள்ளனர்.

கத்தோலிக்கம் அல்லாத ஏனைய கிறீஸ்த்தவ மக்களும் அவ்வாறுதான் அந்த பண்பை புரிந்து செயற்படுகின்றனர்.

ஆனால் திருக்கேதீஸ்வர சம்பவத்தின் பின்னர் கத்தோலிக்கம் உள்ளிட்ட கிறீஸ்த்தவ மக்கள் பற்றி முகநூல்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பொறுமையின் எல்லைக்குச் சென்றுவிட்டன.

இஸ்லாமியர்கள் சமயத்தை மையப்படுத்தி தமிழர்களில் இருந்து தனியொரு இனமாகப் பிரிந்து சென்றதைப் போன்ற ஒரு நிகழ்வு தமிழ்க் கத்தோலிக்க சமயத்தவர்களுக்கும் வந்துவிடுமோ என்ற ஒரு அச்சத்தையும் அது தோற்றுவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமதாச 1981 ஆம் ஆண்டு யாழ் ஆயர், காலம் சென்ற தியோகுப்பிள்ளையை அவருடைய யாழ் ஆயர் இல்லத்தில் சந்தித்திருந்தார்.

அப்போது பல விடயங்கள் குறித்து ஆயருடன் பேசிய பிரேமதாச, தேசியக் கொடியை (சிங்களக் கொடியை) ஆலய திருவிழாக்களின்போது ஏற்ற வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த ஆயர் தியோகுப்பிள்ளை, இங்கு எந்தக் கொடியையும் ஏற்ற முடியாது- வேண்டுமானால் நந்திக்கொடியை மாத்திரம் நாங்கள் ஏற்றுவோம் என்றார். (நந்திக்கொடி தமிழுக்குரியதல்ல. அது சைவ சமயத்துக்குரியது.) ஆகவே சைவ சமயத்துக்குரியது எனத் தெரிந்தும் நந்திக்கொடியைத்தான் ஏற்றுவோம் என்று கூறியதன் மூலம், தமிழையும் சைவ சமயத்தையும் பிரிக்க முடியாது என்பதை பிரேமதாசாவுக்கு அன்றே சொல்லாமல் சொல்லியிருந்தார் ஆயர் தியோகுப்பிள்ளை.

(1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த யுகசக்தி என்ற வார இதழில் இது பற்றி நான் சென் பற்றிக்ஸ் கல்லுாரி மாணவனாக இருந்தபோது எழுதியிருந்தேன்-1505 ஆண்டு போத்துக்கேயர் வருவதற்கு முன்னர் நாங்கள் எல்லோரும் சைவத் தமிழர்கள் என்பதில் கத்தோலிக்க மக்கள் இன்று வரை தெளிவுடன் உள்ளனர்.)

அது மாத்திரமல்ல வடக்கு- கிழக்கு மாகாணத்தின் எல்லையை கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்டங்கள்தான் கோடிட்டுக் காண்பிக்கின்றன.

யாழ், மன்னார், மட்டக்களப்பு. திருகோணமலை மறை மாவட்டங்கள் தனித் தமிழ் மறை மாவட்டங்கள். வடக்கு- கிழக்கு ஈழத் தமிழர்களின் எல்லையையும் அது தெளிவாகக் காண்பிக்கின்றது.

1992 ஆம் ஆண்டு ஆயர் தியோகுப்பிள்ளைக்கு யாழ் மரியன்ணைப் பேராலயத்தில் இடம்பெற்ற பொன். வெள்ளி, பவழ விழாவில் உரையாற்றிய புலிகளின் முக்கிய உறுப்பினர் யோகரட்னம் யோகி, இது பற்றி விபரித்திருந்தார்.

அதேவேளை, சைவ சித்தாந்தம் பற்றிய ஆய்வு செய்து நுால் ஒன்றை வெளியிட்டவர்தான் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளார்.

தமிழையும் சைவ சமயத்தையும் பிரிக்க முடியாது என்று கூறியவர்தான் அருட்தந்தை தனிநாயகம் அடிகளார்.

தற்போது சாவகச்சேரி சென் மேரிஸ் கோவிலில் பங்குத் தந்தையாக இருக்கும் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா ( சென் பற்றிக்ஸ் கல்லூரியில் எனது வகுப்புத் தோழன்) சைவப் பண்பாட்டை தமிழில் இருந்து பிரிக்க முடியாது என்று விபரிக்கின்றார்.

இப்படி பல விடயங்களைக் கூறலாம். சைவ சமயத்தை தமிழோடு இணைத்து ஆயுதப் போராட்டத்தின் நியாயங்களை சர்வதேச சமூத்திடம் எடுத்துச் சென்றவர்கள்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்கள் அருட்தந்தையர்கள்.

இந்த விடயங்களைப் பொதுவெளியில் பிரித்துக் கூறியமைக்கு மன்னிக்க வேண்டும். அப்படிப் பிரித்துக் கூறாமல் இருப்பதற்கு இரு சமயத்தவர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் உள்ள மாந்தையில் மாத கோவில் கட்டியதே தவறனது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

ஒல்லாந்தர் காலத்தில் மாந்தையில் இருந்த மாத சொருபத்தை மடுப் பிரதேசத்திற்கு மாற்றிவிட்டனர். தற்போது மடுவில் அந்த மாதா பிரசித்தமாகிவிட்டார்.

இந்த நிலையில் அதுவும் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மாந்தையில் மீண்டும் மாத கோவில் தேவையா?