Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது?

ஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது?

யதீந்திரா
அண்மையில் தமிழ்த் தேசியவாத கட்சிகளான ஜந்து கட்சிகளுக்கிடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒற்றுமை முயற்சியில் ஆரம்பத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்திருந்த போதிலும் கூட, இறுதி நேரத்தில் இந்த முயற்சியிலிருந்து காங்கிரஸ் வெளியேறியிருந்தது. ஆனால் கஜேந்திரகுமாரோ, தாங்கள் வெளியேறவில்லை மாறாக வெளியேற்றப்பட்டோம் என்று கூறிவருகின்றார். இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை தமிழரசு கட்சி மற்றும் புளொட் ஏற்றுக்கொள்ள மறுத்தநிலையில்தான், கஜேந்திரகுமார் இந்த முயற்சியிலிருந்து விலகிக்கொண்டார். ஆனால் தற்போது ஜந்து கட்சிகளும் கையெழுத்திட்டிருக்கும் உடன்பாட்டை உற்றுநோக்கினால் அரசியல் தீர்வு மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பான விடயங்களில் கஜேந்திரகுமாரின் ஆலோசனைகளே அதிகம் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கூட்டமைப்பினால் அண்மைக்காலமாக பேசப்படாமலிருந்த சில விடயங்களையும் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். உதாரணமாக இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணை. அதே போன்று அரசியல் தீர்வு தொடர்பில் குறித்த ஆவணம் பின்வருமாறு வாதிடுகின்றது. அதவாது, தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமையுண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைவர்கள் என்பதனையும் அங்கீகரித்து, சமஸ்டி முறைமையின் கீழ் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மேற்படி கோரிக்கைகள் உள்ளடங்கலாக 13 கோரிக்கைகள் குறித்த ஆவணத்தில் இருக்கின்றன.

இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில்தான், இவ்வாரத்தின் இறுதிப்பகுதியில் அல்லது வரும் வாரத்தின் ஆரம்பத்தில், பிரதான கட்சிகளின் தலைமையோடு பேச்சுவார்த்தை இடம்பெறக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. நிச்சயமாக இரண்டு பிரதான வேட்பாளர்களுமே இதிலுள்ள பெரும்பாலான விடயங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் போர்க்குற்றங்கள் இனப்படுகொலை போன்றவற்றை தென்னிலங்கையின் எந்தவொரு சிங்களத்தரப்பும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவ்வாறாயின் இந்த விடயங்களின் அடிப்படையில் எதற்காக பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும்? இந்த முயற்சியில் ஏன் ஈடுபடவேண்டும்? இதன் ஊடாக இரண்டு வேட்பாளர்களையும் அம்பலப்படுத்த முயற்சிக்கின்றனரா அல்லது ஒப்பீட்டடிப்படையில் ஒருவர் பரவாயில்லை என்னும் முடிவை வந்தடைவதற்கான ஒரு தந்திரோபாயமாக இந்த நகர்வு இடம்பெறுகின்றதா? இவ்வாறான கேள்விகள் எழுவதற்கு சில காரணங்கள் உண்டு. அதாவது, இந்த விடயத்தில் கூட்டமைப்பின் சார்பில் தீர்மானங்களை எடுத்துவரும் எம்.ஏ.சுமந்திரன் காண்பித்த ஈடுபாடே அதில் பிரதானமானது. அதிலும் தான் அண்மைக்காலமாக நிராகரித்துவந்த அல்லது பேசுவதை தவிர்த்து வந்த பல்வேறு விடயங்களுடன் சுமந்திரன் உடன்பட்டமையை குறிப்பிடலாம். உதாரணமாக தமிழர்களை தேசமாக அழைப்பதை சுமந்திரன் ஒரு போதுமே ஏற்றுக்கொண்டதில்லை. அதே போன்று, இனப்படுகொலை தொடர்பில் சுமந்திரன் எப்போதுமே பேசுவதை தவிர்த்தே வந்திருக்கிறார். அப்படியொன்று இடம்பெற்றிருந்தால் முதலில் அதனை நிரூபிக்க வேண்டும் என்பதே அவரின் வாதமாக இருந்தது. ஆனாலும் மிகவும் வெளிப்படையாகவே பிரதான சிங்கள தரப்புக்களால் நிராகரிக்கப்பட்டுவரும் விடயங்களை சுமந்திரன் திடிரென்று உடன்பட்டிருப்பதானது இந்த ஒற்றுமை முயற்சி தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாகவே இந்த பத்தி இந்த முயற்சி எதை நோக்கி பயணிக்கின்றது என்னும் கேள்வியை முன்வைக்கின்றது.

இந்த சந்திப்புக்களின் போது ஒவ்வொரு கலந்துரையாடல்களிலும், தவறாமல் பங்குகொண்ட ஒரு அரசியல் கருத்தியாலாளர் என்னுடன் பேசுகின்ற போது, இது சுமந்திரனின் நிகழ்சிநிரலுக்குள் சென்றுவிட்டதோ என்னும் அச்சம் ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டு, அனைவரது உழைப்பும் வீணாகிவிட்டதோ என்றும் வருத்தப்பட்டார். இந்த சந்தேகத்தை இலகுவாக நிராகரிக்க முடியாது. ஏனெனில், ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் சுமந்திரன் – சம்பந்தன் கூட்டின் தெரிவு எப்போதுமே ஜக்கிய தேசியக் கட்சிதான். அந்த வகையில் அவர்களது தெரிவு சஜித்பிரேமதாசதான். அதில் தடுமாற ஒன்றுமில்லை. ஆனாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூட்டமைப்பு காண்பித்த கண்மூடித்தனமான ரணில் விசுவாசம், இந்தத் தேர்தலிலின் போது தீர்க்கமான முடிவொன்றை வெளியிட முடியாதளவிற்கு அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒரு பொது உபாயத்தை வகுப்பது தொடர்பில் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன் விளைவாக இதுவரை கூட்டமைப்புடன் கடுமையாக முரண்பட்டுநின்ற, கூட்டமைப்பிற்கு எதிராக, மாற்று தலைமையொன்றை உருவாக்க வேண்டுமென்று முயற்சிகளை மேற்கொண்டுவந்த விக்கினேஸ்வரன் மற்றும் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோர், மீண்டும் கூட்டமைப்புடன் ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றனர். இதன் மூலம் தாம் தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்டிருப்பதான ஒரு தோற்றப்பாட்டையும் ஏற்ப:டுத்தியிருக்கின்றனர். ஆனால் இவர்களின் கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்கள் நிராகரித்தால் இவர்களிடம் இருக்கின்ற மாற்றுத் தெரிவு தொடர்பில் எந்தவொரு திட்டமும் இவர்களிடம் இல்லை. இதனை ஒழுங்கு செய்த பல்கலைக்கழக மாணவர்களும் எழுத்து மூல உடன்பாடு ஒன்றை கட்டாயப்படுத்தியிருக்கவில்லை.

5 Parties 1

இந்தக் கோரிக்கைகளுடன் பிரதான வேட்பாளர்களிடம் செல்கின்ற போது அரசியல் தீர்வு மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பான விடயங்களை இரண்டு வேட்பாளர்களுமே நிராகரிப்பர் என்பது திட்டவட்டமான ஒன்று. ஆனால் ஒரு சில விடயங்களில் உடன்படாலம் உதாரணமாக அரசியல் கைதிகளின் விடுதலை. ஆனால் கோட்டபாய உடன்படுவதை விடவும் சற்று கூடுதலாக சஜித்தரப்பு ஏற்றுக்கொள்ளும். அவ்வாறான ஒரு சூழலில் சஜித்பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவுக்கே இவர்கள் வரநேரிடும். சுமந்திரன் இந்த விடயங்களை நன்கு கணித்தே காய்களை நகர்த்துகின்றார். இவ்வாறானதொரு சூழலில் இதுவரை கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகள் தவறென்று வாதிட்ட விக்கினேஸ்வரனும் சுரேஸ்பிரேமச்சந்திரனும் சுமந்திரனை பின்தொடர நேரிடும். இந்த நிலைமை ஒப்பீட்டளவில் விக்கினேஸ்வரனையே அதிகம் சிக்கலுக்குள்ளாக்கும். ஏனெனில் விக்கினேஸ்வரன் சம்பந்தனுக்கு மாற்றான ஒருவராக நோக்கப்பட்டவர். இந்த பின்புலத்தில் இதுவரை கூறிவந்த மாற்று என்பதும் கூட வலுவிழக்கும். சுமந்திரனை பொறுத்தவரையில் சஜித்பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை வெறுமனே கூட்டமைப்பு மட்டும்தான் எடுத்தது என்னும் நிலைமையை மாற்றியமைக்க விரும்புகின்றார். அதற்காகவே தன்னுடன் கடுமையான முரண்பாடுள்ள விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் கூட ஒரு இணக்கப்பாட்டிற்கு வர முயற்சித்தார். எனினும் தன்னுடைய நான்கு வருட உழைப்பான இடைக்கால அறிக்கையை தானே நிராகரிப்பதாக ஒப்புக்கொள்வதை தவிர, ஏனைய அனைத்து விடயங்களுடனும் அவரால் இலகுவாக உடன்பட முடிந்திருக்கின்றது! எனவே விடயங்களை தொகுத்து நோக்கினால் ஜந்து கட்சிகளின் உடன்பாடு என்பது மிகவும் தெளிவாக சஜித்பிரேமதாசவை ஆதிரிப்பதை நோக்கித்தான் செல்கின்றது? இந்த நிகழ்சிநிரலிலிருந்து விக்கினேஸ்வரனால் வெளியேற முடியுமா? இங்கு கவனிக்க வேண்டிய பிறிதொரு முக்கிய விடயம் உண்டு. அதவாது, சஜித்பிரேமதாசவும் எந்தவொரு உடன்பாட்டையும் தமிழர் தரப்போடு செய்துகொள்ளப்போவதில்லை. அதே வேளை அனைத்துமே மூடிய அறை விடயமாகவே இருக்கும். அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, எவ்வாறு விடயங்கள் கையாளப்பட்டனவோ அவ்வாறுதான் இப்போதும் விடயங்கள் கையாளப்படப் போகின்றன. அதாவது, நாங்கள இதனை வெளியில் கூறினால் கோட்டபாய வென்றுவிடுவார். எனவே வெளிப்படையாக எந்தவொரு வாக்குறுதியையும் நாங்கள் தரப்போவதில்லை. சிங்கள மக்களிடம் வெளிப்படையாக கூறப்பயப்படும் ஒன்றை தேர்தல் வெற்றியின் பின்னர் சஜித்தால் எவ்வாறு செய்ய முடியும்? இதே வேளை ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களோடு தனித்தனியாகவும் பேசிவருகின்றார். இதன் மூலமும் சஜித்தை நோக்கி இந்தக் கட்சிகளை இழுப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுவருகின்றன. இந்த அடிப்படையில் ரணில் விடுத்த கோரிக்கையை விக்கினேஸ்வரன் நிராகரித்துவிட்டதாக அறிய முடிகின்றது. ஜந்து கட்சிகள் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கின்ற நிலையில், நான் தங்களை தனியாக சந்திக்க விரும்பவில்லை என்று விக்கி பதிலளித்ததுடன், அதனை ஏனைய நான்கு கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்கு மாவை சேனாதிராஜா மட்டுமே பதிலளித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதாவது, நீங்கள் தனியாக சந்திப்பதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. நீங்களும் தனியாக சந்தியுங்கள் நாங்களும் சந்திக்கின்றோம். அதன் பின்னர் ஜந்து கட்சிகளாவும் சந்திப்போம் என்றவாறு அந்தப் பதிலில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் விக்கினேஸ்வரன் இந்த விடயத்தில் ஒரு அரசியல் நேர்மை இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றாராம்.

இந்த நகர்வுகளை பொறுத்தவரையில் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால் விக்கினேஸ்வரனின் பிரச்சினை வேறு. முன்னர் சம்பந்தன் மீது எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டதோ அதே குற்றச்சாட்டுக்கள் தன்னை நோக்கி வருவதற்கான ஒரு அரசியல் சதிராட்டத்திற்குள்தான் விக்கி இழுத்துச் செல்லப்படுகின்றார். இதிலிருந்து வெளியேறுவதற்கான பி-பிளேன் தொடர்பில் விக்கி சிந்திக்கின்றாரா? அது அவலரால் முடியுமா? இந்த நகர்வில் ஒரு சில தெரிவுகள் மட்டுமே உண்டு. இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்க முடியாதவொரு சூழலில், சிவாஜலிங்கத்தை ஆதரிப்பது அல்லது பகிஸ்கரிப்பது. அது முடியாதவிடத்து, முடிவை மக்களிடம் விட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்வது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *