Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது

ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச் சீட்டில் அடையாளமிட முடியும்.
குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விரும்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விரும்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும்.
எவ்வாறாயினும் 1 , 2 , 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்கும் போது சில விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அதாவது பிரதான வேட்பாளர்களாக கருதப்படுபர்களுக்கு 1ஆம் விருப்பை வழங்கிவிட்டு மற்றைய சாதாரண வேட்பாளர்களாக கருதப்படுபவர்களுக்கு 2 , 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்குவது அர்த்தமற்றதே. அதாவது யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2ஆம் , 3ஆம் விருப்பு வாக்குகளை எண்ணும் போது அதி கூடிய வாக்குகளை பெற்றுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள 2 , 3ஆம் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும். இவ்வேளையில் ஏற்கனவே பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள 1ஆம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருப்பதால் அந்த வாக்கு சீட்டு மீண்டும் வாக்கு எண்ணும் போது எடுத்துக்கொள்ளப்படாது. இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்பு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு சீட்டுகளில் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும். என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் விருப்பு வாக்குகளை வழங்க விரும்பின் சாதாரண வேட்பாளர் ஒருவருக்கு 1ஆம் விருப்பை வழங்கிய பின்னர் பிரதான வேட்பாளருக்கு 2ஆவது விருப்பை வழங்கலாம். இது பிரயோசமானதாக அமையும்.
இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்புத் தெரிவித்தல் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *