Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கொள்கைக்கான சின்னம் எது?

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கொள்கைக்கான சின்னம் எது?

திலீபன்
தேர்தல் தினம் நெருங்கி விட்டது. யாருக்கு வாக்களிக்கலாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் நிலவுகின்றது. அதற்கு தமிழ் மக்களின் தலைமைகளே காரணம். ஆனால் தென்னிலங்கை கட்சிகளுடன் நிற்கும் தமிழ் கட்சிகள் மத்தியில் எவ்வித குழப்பங்களும் இல்லை. அவர்கள் தங்களின் பிரச்சாரங்களை முடித்துவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் தமிழ்த் தேசியவாதிகள் என்பவர்கள்தான் தாங்களும் குழும்பி, மக்களையும் குழப்பியிருக்கின்றனர்.

இவ்வாறானதொரு சூழலில் மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தமிழ் ஊடகங்களுக்கும் சிவில் சமூக தரப்புக்களுக்கும்தான் உண்டு. வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் அனேகமான மக்கள் கோட்டாபாயவை எதிர்த்து வாக்களிப்பதற்கான வாய்ப்பே தெரிகிறது. இருந்தாலும் கோட்டபாயவிற்கும் ஒரு ஒரு லட்சம் தொடக்கம் ஒன்றரை லட்சம் வரையிலான தமிழ் வாக்குகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அல்லது நான் கூறுவதை விடவும் அது எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்கலாம். அது அல்ல இங்கு விடயம். தமிழ் மக்கள் அதாவது தமிழ்த் தேசிய கட்சிகளுடன் தங்களை அடையாளப்படுத்தி நிற்கும் மக்கள் தங்களுடைய வாக்குகளை எவ்வாறு போடப்போகின்றனர்? அவர்கள் போடும் வாக்குகள் இந்த உலகிற்கு என்ன செய்தியை சொல்லப் போகின்றன?

தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை இரண்டு பிரதான வேட்பாளர்களான கோட்டபாயவும் ஏற்றுக் கொள்ளவில்லை. சஜித் பிரேமதாசவும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வெற்றிக்கான வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்களை இரண்டாம்பட்சமான வாக்காளர்களாகவே கருதுகின்றனர். இந்த நிலையில் தமிழ் மக்கள் இவர்களை எவ்வாறு ஆதிரிக்க முடியும். இவ்வாறானதொரு நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித்பிரேமதாசவை ஆதரிக்குமாறு அறிவித்திருக்கின்றது. கூட்டமைப்பு கூறாது விட்டாலும் கூட பொரும்பாண்மையான தமிழ் மக்கள் கோட்டாவை எதிர்த்துத்தான் வாக்களிப்பர். இது தமிழ் மக்களின் வாக்களிப்பு மனோபாவத்துடன் தொடர்புபட்டிருக்கிறது. அதாவது, தமிழ் மக்கள் எப்போதுமே, ஒரு சிங்களவரை எதிர்த்து பிறிதொரு சிங்களவரை ஆதரிக்கும் பழக்கத்தை பின்பற்றிவருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கே அதிகம் வாக்களித்துவந்திருக்கின்றனர்.

2005இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூறியிருந்த ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டும்தான் அவர்கள் தேர்தலை பகிஸ்கரித்திருந்தனர். ஏனைய சந்தர்ப்பங்களில் எல்லாமே ஜக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களையே ஆதரித்திருக்கின்றனர். ஒரு முறை சந்திரிக்காவின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கின்றனர். ஆனால் தமிழ் மக்கள் என்னதான் சிங்கள வேட்பாளர்களை நம்பி வாக்களித்த போதிலும் எந்தவொரு சிங்கள வேட்பாளர்களுமே தங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றியுடைவர்களாக இருந்ததில்லை. மாறாக அனைவருமே பாரபட்சமில்லாமல் ஏமாற்றியிருக்கின்றனர்.; இறுதியாக ஏமாற்றியவர்தான் மைத்திரிபால சிறிசேன. இந்த வரிசையில் அடுத்து ஏமாற்றப் போகும் ஒருவருக்கு வாக்களிப்பது தொடர்பிலேயே இப்போது தமிழ் மக்கள் சிந்தித்து வருகின்றனர். நிச்சயம் மீண்டும் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். இதில் சஜித்பிரேமதாசவும் ஒன்றுதான் கோட்டாவும் ஒன்றுதான்.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்கள், தங்களின் வாக்குகளை எவ்வாறு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்காகவும் அதே வேளை தாங்கள் விரும்பும் ஒரு ஜனாதிபதிக்காகவும் வழங்க முடியும்? ஆனால் முடியும். கொள்கைக்கான வாக்கை மீன் சின்னத்திற்கும் தங்கள் விருப்பத் தெரிவை ஏனைய ஒருவருக்கும் வழங்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்கள் தங்களின் கொள்கையையும் சொல்ல முடியும் அதே வேளை தங்களின் விருபத்தையும் வெளிப்படுத்த முடியும்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் கொள்கையும் விருப்பமும் ஒரு போதுமே ஒன்றாக இருக்கப் போவதில்லை. இருக்கவும் முடியாது. எனவே இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்களுக்கு பின்னர் இடம்பெறும் ஒரு முக்கிய தேர்தல் இது. ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு அனைத்து தமிழ் மக்களையும் வாக்களிக்கச் செய்திருந்தால். தென்னிலங்கை நிச்சயம் தடுமாறியிருக்கும். இதன் மூலம் விரும்பியோ விரும்பாமலோ தென்னிலங்கை ஒரு பேரம் பேசலுக்கு வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். இது தொடர்பில் சில முயற்சிகள் இடம்பெற்ற போதிலும் கூட, அது இறுதியில் கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதையானது.

ஆனாலும் தமிழ் தலைமைகளின் கையறுநிலையாலும் சுயநல வெறியாலும் ஒரு சிறந்த வாய்ப்பை தமிழர் தேசம் இழந்துவிட்டது. ஆனாலும் இப்போதும் ஒரு வாய்ப்பு எஞ்சியிருக்கிறது. சில வேளைகளில் நாங்கள் எதிர்பார்த்தது போன்று வாய்ப்புக்கள் கிடைக்காத போது, கிடைக்கின்ற வாய்ப்புக்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்கலாம். அப்படி யோசித்தால் தமிழ் மக்களுக்கு முன்னால் மீன் சின்னம் மட்டுமே இப்போது தெரிகிறது. அதனை நோக்கி தமிழ் மக்கள் தங்களின் வாக்குகளை குவிக்கும் போது, நாம் ஒரு தனித்துவமான தேசிய இனம் – எங்களின் பிரச்சினைகள் தனித்துவமானவை என்பதை நிரூபிக்க முடியும். மீன் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு பின்னர், யார் ஜனாதிபதியாக வரவேண்டுமென்று விரும்புகின்றார்களோ அவருக்கு இரண்டாவது வாக்கை வழங்க முடியும். இந்த தேர்தலை கொள்கை அடிப்படையில் பயன்படுத்துவதற்கு இதனையும்விட சிறந்த ஒரு தெரிவு இருக்க முடியாது. ஆனால் தமிழ் மக்கள் ஒரு விடயத்தை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். கோட்பாயவிற்கு விழும் வாக்குகளை விடவும் சிவாஜிலிங்கத்தின் மீன் சின்னத்திற்கு அதிகமான வாக்குகள் விழுவதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். இது தமிழ் மக்களின் ஒரு தேசிய கடமையாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *