தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வது?

ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வது?

லோ. விஜயநாதன் 

நன்றி : வீரகேசரி நாளிதழ்
சுதந்திரத்துக்கு பின்னரான சிங்கள பெளத்த தேசியவாத ஒடுக்கு முறைக்கெதிரான தமிழர்களின் சுமார் 75 வருட கால இன விடுதலைப் போராட்டம் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்து எஞ்சி இருப்பவற்றையேனும் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற நிலையை எட்டியுள்ளது.  இந்த 75 வருட கால போராட்டத்தில் இடையில் ஏற்பட்ட 30 வருட கால ஆயுத போராட்டம் மட்டுமே சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் அறம், அரசியல் மற்றும் போர் சிறப்புக்களை மீள நிலைநிறுத்தி  தலை நிமிர்வை ஏற்படுத்தி இருந்தது.  ஆனால், இந்த சிறப்புக்களை சகித்துக்கொள்ள முடியாத வல்லரசுகளின் பூகோள அரசியல் சதிக்குள் சிக்குண்டு ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தது. அரசியல்,  பொருளாதார, சமூக மற்றும் கலாசார மேம்பாடுகளுக்காக  இந்த 30 வருடங்களில் நிறுவனப்படுத்தப்பட்ட மூலோபாயங்களை வகுத்து  செயற்பட்டமையினாலேயே விடுதலைப்புலிகளினால் இந்த சிகரத்தை எட்ட முடிந்தது. ஏனைய 45 வருட கால எமது போராட்டம் எந்தவித நிறுவனப்படுத்தப்பட்ட மூலோபாயங்களற்ற செயற்பாடுகளும் இன்றி வெறும் போட்டி அரசியலையும் சந்தர்ப்பவாத அரசியலையும் போராட்ட அரசியலைப்போல  ஜீ.ஜீ.பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இருப்பவற்றை தொடர்ந்தும்  இழந்து கொண்டு மேலும் மேலும் தமிழ் மக்களும் அவர்களின் போராட்டமும் பலவீனமடைந்து செல்வதற்கு இவர்களின் நிறுவனமயப்படுத்தப்படாத  மூலோபாயமற்ற செயற்பாடுகளே காரணம். நவம்பர் 16 ஆம் திகதி  நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் அரசியல் தலைவர்கள் கையாளும்  விதமும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஜனாதிபதி தேர்தல் என்பது என்ன? அதனை எப்படி எமக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்? என்ற எந்தவிதமான  புரிதலும் உபாயங்களும் இன்றி தாமும் குழம்பி தமிழ் மக்களையும் குழப்பும் நடவடிக்கைகளையே தமிழ் அரசியல் தலைவர்கள்   செய்துவருகிறார்கள்.

ஆசிரியர்களை மாணவர்கள் வழிநடத்த முனைவது போல் தமிழ் தலைமைகளை பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்து தமிழர் தரப்பு கோரிக்கை என 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்தனர். இந்த முயற்சியில் பங்குபற்றிய ஆறு கட்சிகளில் ஒரு கட்சி வெளியேற ஏனைய ஐந்து கட்சிகளும் எந்த ஜனாதிபதி வேட்பாளர் இந்த 13 கோரிக்கைகளுக்கும் ஆதரவு தருகிறாரோ அவருக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று கூட்டறிக்கை விடுத்தன. இதிலிருந்து வெளியேறிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழமைபோல மூலோபாயம் எதுவும் இல்லாமல் வெறும்  24 கரட் தமிழ் தேசிய அரசியல் விமர்சனத்தை முன்வைத்துவிட்டு  ‘தேர்தல் பகிஷ்கரிப்பு’  அறிவிப்பை செய்து மீண்டும் உறங்குநிலைக்கு சென்றுவிட்டது. உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர்  செக்கிழுத்துக் கொண்டிருந்த கூட்டமைப்பு தனது அழுக்குகளுக்கு வெள்ளை அடிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்ள பார்த்தது.  மாற்று தலைமை என்று அரசியல் தொடங்கிய நீதியரசர் விக்னேஸ்வரன் இதற்குள் சென்று தனது ‘மாற்று தலைமையை’ தொலைத்துக்கொண்டார். இந்த ஆறு கட்சிகளில்  எந்த கட்சியுமே தமிழ் மக்களின் விடியலை நோக்கிய பயணப்பாதையை செப்பனிடும் உபாயத்தை கண்டுபிடிக்க தவறியதுடன் சிங்களப் பேரினவாதத்துக்கான படிக்கட்டுக்களை செப்பனிடுவதற்கே வழிவகுத்துள்ளன. நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வினை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்தல் அல்ல. ஆனால் நிச்சயமாக தமிழ் மக்களின் போராட்டத்தை பலப்படுத்துவதற்கான ஒரு  வாய்ப்பாக அமைந்திருந்தது. இந்த புரிதலின் அடிப்டையிலேயே தமிழ்  கட்சிகள் தேர்தலை அணுகியிருக்க வேண்டும். ஆனால், 13 கோரிக்கைகளை கொண்ட ஐந்து கட்சிகளின் ஆவணம் இந்த  தேர்தலை ஒரு கருவியாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டது. இந்த 13 கோரிக்கைகளையும் இங்கு குறை கூறவில்லை. ஆனால், இவற்றைத்தான் நாம் காலம் காலமாக கோரி வந்திருக்கிறோம். பல தேர்தல்களில் மக்கள் ஆணைகளை பெற்றிருக்கிறோம்.

தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை என்ன ? இந்த தேர்தல் என்ன ? இந்த தேர்தலின் ஊடாக எவற்றை நாம் அடையலாம்? போன்ற வினாக்களை எழுப்பி அவற்றின் பதில்களின் அடிப்படையிலேயே இந்த தேர்தலை நாம் அணுகியிருக்க வேண்டும்.

5 Parties 1
யுத்தத்தின் பின்னர் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருந்து வருகின்றனர்.  தினமும் எமது பூர்வீக காணிகளை இழந்து வருகின்றோம். வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன் வைத்துள்ள ஆதாரங்களின் அடிபப்டையில், முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 6, 21, 917  ஏக்கர்கள். இதில் 4,20,300 ஏக்கர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குரியது.  எஞ்சிய 201, 617 ஏக்கர்  நிலப்பகுதியே மனித பயன்பாட்டுக்குரியது. இதில் ஏறத்தாழ 100,000 ஏக்கர் நிலப்பகுதி யுத்தத்தின் பின்னர் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. இது முல்லைத்தீவின் பயன்பாட்டுக்குரிய நிலப்பகுதியின் அரைவாசியாகும்.

இந்த புள்ளிவிபரத்தில் இருந்து எத்தகைய ஆபத்தில் வடக்கு -கிழக்கின்  எமது பூர்வீக நிலங்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றைமட்டும் நாம் புரிந்துகொள்ளவேண்டும், அதாவது குடியேற்றங்களுக்கும் பௌத்த மயமாதலுக்கும் உட்படும் எந்த ஒரு நிலத்தின் சிறு அங்குலத்தையேனும் நாம் மீளவும் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாது. அம்பாறை, திருகோணமலையில் சிங்கள குடியேற்றங்களுக்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலங்களில் சிறு பகுதியை கூட நாம் இன்று உரிமை கோர முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதே யதார்த்தம். பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களில் நிறுவப்பட்ட இஸ்ரேலிய குடியிருப்புக்களை பாலஸ்தீனர்களினால்  ஒருபோதும் மீள பெற்றுக்கொள்ள முடியாது. நிலத்தை மட்டுமல்ல நாளாந்தம் எமது மக்கள் தொகையையும் இழந்துவருகின்றோம். வடக்கு கிழக்கில் இன்று இருக்கும் தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு ஏறத்தாழ நிகரான எண்ணிக்கையான மக்கள் புலம்பெயர் நாடுகளில் வாழுகிறார்கள் என்பதே உண்மை. வடக்கு கிழக்கில் இருந்தான  மக்கள் வெளியேற்றம் தொடர்ந்து அந்தளவுக்கு உச்சளவில்  நடைபெறுகின்றது. அதேபோல, மூளைசாலிகளின் வெளியேற்றமும் தொடர்ந்து அதிகரித்தபோக்கிலேயே காணப்படுகின்றது. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் நாம் மேற்கொள்கின்ற அரசியல் நடவடிக்கைகள் ஏட்டு சுரைக்காய்களாகவே இருக்கப்போகின்றன.

எம்மிடம் எஞ்சி இருப்பவற்றை தக்கவைப்பதற்கான உபாயங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதேவேளை எமது நீண்ட கால அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டும்.   இத்தகைய ஒரு விழிப்புணர்வின் அடிப்படையில் நாம் இந்த ஜனாதிபதி தேர்தலை அணுகியிருக்கவேண்டும்.

எமது விடுதலைக்கான வரைபடம் எம்மிடம் இல்லாத வரை விடுதலை சாத்தியமில்லை. உலக வல்லரசுகளின் இலக்குகளுக்கான வரைபடங்களில் மாற்றம் ஏற்படும் என்றும் உலக ஒழுங்கு மாறும் அப்போது ‘ஈழம்’ சாத்தியமாகும் அதுவரை நாம் தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருப்போம் என்றும்  இலவு காத்த கிளிகளாக நாம் இருக்க முடியாது.  முகவரி இல்லாத சர்வதேச சமூகம் ஒருபோதும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கப்போவதில்லை.   சமகாலத்தில் உலகில் என்ன நடக்கிறது என்பதில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

குர்திஷ் போராளிகளை முடிந்தளவுக்கு பயன்படுத்தி சிரியாவில் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பை அழித்த அமெரிக்கா அண்மையில் தனது நோக்கம் ஈடேறியதும் குர்திஷ் மக்களை துருக்கி அழிப்பதற்கு வழிவிட்டு கைவிட்டு சென்றுவிட்டது.  காஷ்மீரின் சிறப்பு மாநில அந்தஸ்தை ரத்துச் செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்தியா பிரித்துள்ளது. ஸ்பெயினில் கட்டலோனியா மாநிலம் பிரிந்து செல்வதற்காகன வாக்கெடுப்பை நடத்தியதற்காக அந்த மாநிலத்தின் சுயாட்சி அந்தஸ்தை பல மாதங்கள் ரத்துசெய்து தனது நேரடி ஆட்சியை  ஏற்படுத்திய ஸ்பானிய அரசாங்கம் கட்டலோனிய ஆட்சியாளர்கள் பலருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. கொங்கொங் தனது இறையாதிபத்தியத்தில் சீனாவின் தலையீட்டை எதிர்த்து நடத்தும் போராட்டத்த்தில் இடம்பெறும் அடக்குமுறைகளை  எந்தவொரு நாடும் தட்டிக்கேட்க  முன்வரவில்லை.   இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பில் இருந்து ஐ. நா பாடம் கற்றுக்கொண்டதாக கூறப்பட்டபோதிலும் பர்மாவில்  நடைபெற்ற இனவழிப்பை தடுக்க ஐ. நா முன்வரவில்லை.  இதுவே இன்றைய உலக ஒழுங்கு.   தார்மீக கடப்பாடுகள், மனித உரிமைகளைவிட வல்லரசுகளுக்கு தமது நலன்கள் தான் மேலானவை.

Tamil Leaders

ஆனால், சர்வதேச சமூகம் தீர்வு தரும் என்ற மாயையை ஏற்படுத்தி எதற்கெடுத்தாலும் சர்வதேச சமூகத்திடம் நீதி  கோருமாறு எமது மக்களை எமது அரசியல் தலைவர்கள் போராட நிர்பந்திக்கிறார்கள். எமது பிரச்சினைகளை எடுத்துக்கூறி அவற்றை சர்வதேச சமுகத்துக்கு சொல்வதை அவசியம் அற்ற ஒன்று என்று இங்கு சொல்லவில்லை. ஆனால், இதனை தவிர வேறு எந்த உபாயங்கள் குறித்தும் எமது அரசியல் தலைவர்கள் சிந்திப்பதாயில்லை. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அதி உன்னத மேன்மை நிலையை அடைவது தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை வென்றெடுப்பதை எளிதாக்கும் என்பதை உணர்ந்து அதற்கான நிறுவனமயபப்டுத்தப்பட்ட உபாயங்கள், நடவடிக்கைகளை புலம்பெயர் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து  மேற்கொள்ளும் எந்த  நடவடிக்கைகளையும் கடந்த 10 வருடங்களில் எந்த ஒரு அரசியல் கட்சியும் மேற்கொள்ளவில்லை. இப்போதும் கூட எமது அபிலாஷைகளை வெல்வதற்கான சாத்தியமான நடைமுறை ரீதியான வழியாக நிறுவனமயப்படுத்தப்பட்ட மூலோபாய  நடவடிக்கைகளே காணப்படுகின்றன.  இந்த அடிப்படையில் தான், நடைபெறும்  ஜனாதிபதி தேர்தலை விடுதலைக்கான எமது ‘வரை வழி படத்துக்கான’ சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையிலும் முடிந்தளவுக்கு எம்மை வலுவூட்டும் வகையிலும் நாம் பயன்படுத்தி இருக்கவேண்டும். பல்கலைக்கழக மாணவர்களின் அனுசரணையில் ஒன்றுசேர்ந்த 5 கட்சிகளும் இவ்வாறு தான்  ஒரு அணுகுமுறையை கையாண்டிருக்கவேண்டும். நீண்டகால எமது அரசியல் கோரிக்கைகளை அடைவதற்கான எமது போராட்டம் ஒரு தூர நோக்கு அடிப்படையிலானதாக இருக்கும் அதேவேளை, ஜனாதிபதி தேர்தல்கள் போன்ற சந்தர்பங்கள் வரும்போது சாத்தியமான சில குறுக்கியகால  கோரிக்கைகளை உபாய ரீதியாக நாம் முன்வைக்கவேண்டும். ஐந்து கட்சிகளும் தமது 13 கோரிக்கைகளுக்கும் பதிலாக பின்னரும் சாத்தியமான கோரிக்கைகளை முன்வைத்திருந்திருக்கலாம்.

1) இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காணும் பொருட்டு பாராளும்னறதுக்கு அப்பால்  இருபக்க புத்திஜீவிகளைக் கொண்ட குழுவை 6 மாதங்களுக்குள் அமைத்தல். இந்த குழு முன்வைக்கும் யோசனையை மக்கள் கருத்து கணிப்புக்கு உட்படுத்தி தீர்வு நடவடிக்கையை மேற்கொள்ளுதல். இதன்மூலம்  கட்சி ரீதியான போட்டி அரசியலுக்கப்பால்  இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை நகர்த்தி செல்ல முடியும்.
2) பதவிக்கு வந்தவுடனேயே சகலவிதமான நில ஆக்கிரமிப்புக்களையும் உடன் நிறுத்த வேண்டும்.
3) போரினால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கை மீள கட்டியமைப்பதற்கான விசேட பொருளாதார கட்டமைப்பை தமிழ் பிரதிநிதிகளுடன் இணைந்து உருவாக்குதல். இதன்மூலம் வெளிநாடுகளின் நிதி, மூலதனங்களை நேரடியாக இந்த பொறிமுறை ஊடாக பெற்று  மாகாண அமைச்சுக்களுடன் இணைந்து  செயற்திட்டங்களை முன்னெடுத்தல்.
4) இறுதிப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பொறிமுறையை ஏற்படுத்துதல்.

இரு பிரதான வேட்பாளர்களும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டாலும் அவற்றை நிறைவேற்றுவார்கள் என்று அர்த்தம் அல்ல. ஆனால், ஆகக்குறைந்தது இன பிரச்சினை ஒன்று இலங்கையில் உண்டு, போர்க்குற்றங்கள் நடைபெற்றன அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்படவேண்டும் என்பதை சிங்கள  கட்சிகளும் சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்வதற்கு இதனுடாக நிர்ப்பந்திக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் தற்போதுள்ள தேர்தல் யதார்த்த நிலை வேறு. எமது மக்களுக்கு முன்பாக மூன்று தெரிவுகள் தான் உள்ளன:

1) தேர்தலை பகிஸ்கரித்தல் – இந்த தேர்தலில் கோத்தபாய அல்லது சஜித் பிரேமதாச  ஆகியோரில் ஒருவர் தான் வெல்லப்போகிறார். வெல்பவர் யாராக இருந்தாலும் தமிழ் மக்களை அவர் தான் ஆளப்போகிறார். ஆகவே இந்த தேர்தலுக்கும் தமிழ் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று  இந்த தேர்தல் முடிவினால் ஏற்படக்கூடிய சாதக, பாதக நிலைமைகளை ஆராயாமல் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு  தமிழ் மக்களின் எதிர்காலத்தில் கரிசனை கொண்ட எந்த கட்சியும் கோரமுடியாது. தமிழர் தரப்பின்  கடிவாளம் இன்றி ஜனாதிபதியாபவரும் தமிழர் தரப்பின் கடிவாளத்துடன் ( பலமற்றதாயினும் ) ஜனாதிபதியாபவரும் செயற்படும் விதத்தில் வேறுபாடு இருக்கிறது. 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க கூறியபோது அவர்களுக்கு அவர்களின் இராணுவ பலம் மீது நம்பிக்கை இருந்தது. தமது இலக்கை அடைவதற்கான ஒரு தெளிவான ஒரு வரை வழிபடம் அவர்களிடம் இருந்தது.

2) தமிழ் தரப்பு வேட்பாளரான சிவாஜிலிங்கத்தை ஆதரித்தல்-  1ல் சொல்லப்பட்டவை இதற்கும் பொருந்தும். இங்குள்ள மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் சிவாஜிலிங்கத்துக்கு  மக்கள் பெரியளவில் வாக்களிப்பதற்கு சாதகமான நிலைமை இல்லாத நிலையில்  எமது கோரிக்கைகளை நாமே தோற்கடித்ததாக அமையும். சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து தமிழ் அரசியலின் தனித்துவத்தை எடுத்துக்காட்டலாம் என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், இந்த ஜனாதிபதி தேர்தல் ஒருவரின் வெற்றியையும் பலரின் தோல்வியையும் நிர்ணயிக்கும் தேர்தல். இந்த தேர்தலில்,  தமிழ் அரசியலின் தனித்துவத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்களை விட பாராளுமன்ற தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் ஆசனங்களை முழுமையாக கைப்பற்றி கொள்வதன் மூலம்  தமிழ் அரசியலின் தனித்துவத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். இது கடந்த காலங்களில் நடந்துள்ளது.

3) சஜித் பிரேமதாசாவை/ கோதபாயவை  ஆதரித்தல்- கோத்தபாய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று இதனை அங்கீகரிக்குமாறு நட்டு மக்களிடம் ஆணை கேட்கிறார். இன்றுள்ள நிலையில் நாட்டு மக்கள் அத்தகைய ஒரு அங்கீகாரத்தை கோத்தபாயாவுக்கு வழங்குவது மிக மோசமான விளைவுகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும். இத்தகைய ஒரு ஆணையை பெறும் கோத்தபாய இதில் இருந்து விலகி தனது கொள்கைகளையும் செயற்பாடுகளையும் வகுக்க முடியாது. தனது தேர்தல் பிரசாரங்களில் அடிக்கடி  சிங்கள இனம் இலங்கையின் ‘தேசிய இனம்’ என்றும் பௌத்த மதம் இலங்கையின் ‘தேசிய மதம்’ என்றும் கூறிவரும் புதிய வார்த்தை பிரயோகங்களை  பயன்படுத்திவரும் கோத்தபாய இதன் அடிப்படையில் மேற்கொள்ளக்கூடிய எந்த கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். கோத்தபாய இவ்வாறு கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டால் சர்வதேச சமூகம் எம்மை காப்பாற்ற வரும் என்றோ அல்லது வடக்கு- கிழக்கில் பெரும் போராட்டம் வெடிக்கும் என்றோ வாதிடுவது மடமைத்தனம். ஒன்றை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும், மகிந்த ராஜபக்ஸ தலைமையில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் நடைபெற்றபோது அமெரிக்கா உட்பட அநேகமான மேற்கு நாடுகள் அவருடன் முரண்படவோ அல்லது தமிழ் மக்களை பாதுகாக்கவோ முன்வரவில்லை. யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட வெளியுறவு அணுகுமுறைகளே இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக போர்க்குற்றங்களை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கையில் எடுக்க காரணம்  ஆயிற்று. சில வாரங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தனது ஆட்சிக்காலத்தின் இறுதி பகுதியில் தனது வெளியுறவு அணுகுமுறையில் சில தவறுகள் விட்டமையை ஏற்றுக்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ஸ அத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் நடந்துகொள்வதில் உறுதியாக இருப்பதாக கூறியிருந்தமை கவனிக்கத்தக்கது.

Gota and Sajith

அதேவேளை, சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம் இலங்கையில் இனப் பிரச்சனை இருப்பதை ஏற்றுக்கொண்டு அதிகார பரவலாக்கலை முன்மொழிகின்றது.  சஜித் கூறும் தீர்வு எமக்கு போதுமா போதாதா, வருமா, வராதா என்பவற்றுக்கு அப்பால் ஆகக்குறைந்தது இலங்கையில்  இனப்பிரச்சினை என்ற ஒன்று உண்டு என்பதையும் அதற்கு தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதையும் சிங்கள மக்கள் அவரது விஞ்ஞாபனத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளும் நிலைமை இங்கு இருக்கிறது. இத்தகைய ஒரு நிலையில்,  சர்வதேச சமூகம் கடமைக்கு தன்னும் தனது அழுத்தங்களை இலங்கைக்கு பிரயோகிக்ககூடிய வாய்ப்பு இருக்கிறது.  ஒருவேளை தமிழ் மக்கள் வாக்களித்த சஜித் பிரேமதாச தோற்றுப்போனாலும் நாம் இழக்கப்போவது எதுவுமில்லை. எமது கொள்கைகள், நீண்டகால தமிழ் தேசிய கோட்பாடுகளை தொலைக்கப்போவதில்லை. மாறாக தமிழ் மக்கள்  இனப்பிரச்சினைக்கான தீர்வை வேண்டி நிற்கின்றார்கள் என்ற செய்தி வெளியுலகத்துக்கு உணர்த்தப்படும். 2010 இல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்ததன் மூலமும், 2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு பெருமளவில் வாக்களித்ததன் மூலமும் தமிழ் மக்கள் தமது அடையாளத்தையே அல்லது தமது விடுதலைக்கான போராட்டத்தையோ தொலைத்துவிடவில்லை.

சஜித் பிரேமதாச வெல்வதன் மூலம் ஏற்படக்கூடிய சூழ்நிலையே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் ஏற்பட்டிருந்தது.  ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவித  நிறுவனப்படுத்தப்படாத மூலோபாயமற்ற செயற்பாடுகளும் தனிமனித முதலீட்டை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுமே எந்த வித நன்மைகளையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தவில்லை.  கடந்த 4 வருடங்களும் அரசாங்கத்திடம் கையேந்தும் அரசியலையும் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடும் அரசியலையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டதே தவிர தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கடந்த  4 வருடங்களில் ஏற்பட்ட ஒப்பீட்டளவில் சாதகமான நிலைமைகளை தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நிறுவனமயப்படுத்தி பலப்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமன்றி எந்த தமிழ் அரசியல் கட்சியும் முயற்சிக்கவில்லை. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களே தம்மால் முடிந்தளவுக்கு இந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான போராட்டடத்தையும் நில மீட்புக்கான போராட்டத்தையும்  முன்னெடுத்தனர். புலம்பெயர் மக்கள்  வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் காத்திரமான செயற்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை.  சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மேன்மையை ஏற்படுத்தும் சிந்தனை மையங்கள், ஆய்வு நிலையங்களை அமைப்பதற்கோ, பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில்துறைகளை உருவாக்குவதிலோ அவர்கள் கவனம் செலுத்தவில்லை. 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் ஒரு சிறந்த உதாரணம். இவ்வாறு பல நிறுவனங்களை எல்லா துறைகளிலும் நாம் வடக்கு கிழக்கில் உருவாக்கி இருந்த்திருக்கவேண்டும்.

ஒருபுறம் யுத்தத்தை நடத்திக்கொண்டு எவ்வாறு சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக விடுதலைப்புலிகள் நிறுவனங்களை உருவாக்கி செயற்பட்டார்களோ அதே செயற்பாட்டை நாம் யுத்தத்துக்கு பின்னரும் முன்னெடுத்திருந்திருக்க வேண்டும்.  இதற்கான பொருளாதார வளமும் அறிவு வளமும் புலம்பெயர் மக்களிடம் இருக்கிறது. ஆனால், நன்கொடை அமைப்புக்கள் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதிலும் பண உதவிகளை  செய்வதற்கு அப்பால் புலம்பெயர் தமிழ் மக்களால் செயற்படமுடியவில்லை. மனித உரிமைகள் சபைக்கு சென்று அமர்வுகளில் கலந்துகொள்வதிலும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதுடனும், மாவீரர் நாள் மற்றும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை நடத்துவதுடனும் புலம்பெயர் அமைப்புக்கள் திருப்திப்பட்டுக்கொள்கின்றன.

ஆகவே, தமிழ் அரசியலை தீர்வை நோக்கி நகர்த்துவதும் இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொள்வதும் எமது கைகளிலேயே தங்கியுள்ளது. எமது நீண்ட கால அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதில் நாம் உறுதியாகவும் பற்றுறுதியுடனும் இருக்கும்வரை இலங்கை அரசியலில் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வதற்கு நாம் தயங்க தேவை இல்லை. இந்திய இராணுவ நெருக்கடி காலகட்டத்தில் ஜனாதிபதி பிரேமதாசாவை  எவ்வாறு விடுதலைப்புலிகள் பயன்படுத்தி  தற்பாதுகாப்பு நிலையை ஏற்படுத்தினார்கள் என்பதில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். எமது நிலங்களையும் மக்களையும் வேகமாக இழந்துகொண்டிருக்கும் நிலையில்  தடுப்பு  நடவடிக்கைகளே இன்று எமக்கு அவசியமாக இருக்கின்றன.  நாம் தொடர்ந்தும் அதள பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருப்பதில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். ஆகவே நாம் சுவர்களை தக்க வைத்திருந்தால் தான் எதிர்காலத்தில் சித்திரம் வரையலாம். எமது நிலங்களே எமது சுவர்கள். எமது பொருளாதார பலமும் அறிவுமே சித்திரம் வரைவதற்கான எமது தூரிகைகள். நாம் கோரும் தீர்வினை தந்தால் தான் ஏற்றுக்கொள்வோம்  இல்லையென்றால் தொடர்ந்து போராடுவோம் என்று இறுமாப்புடன்  கூறிவிட்டு நாம் ஆவண செய்யாமல் தமிழ் தேசியம்  பேசிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.

ஆகவே,  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புத்திசாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணியா பொதுஜன பெரமுனவா அல்லது கோதபாய ராஜபக்ஸவா  சஜித் பிரேமதாஸவா என்று பார்க்காமல்,  கடந்த கால வரலாறு மற்றும் இந்த இருவரதும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் நவம்பர் 16 ஆம் திகதியின் பின்னர் ஏற்படக்கூடிய எந்த நிலைமை தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னகர்த்தி செல்வதற்கு ஒப்பீட்டளவில் வாய்ப்பானது என்பதை சீர்தூக்கி பார்த்து தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

தமிழகத்தின் திருச்சியில் அண்மையில்  ஆழ்துளை கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்கான முயற்சியில் இருந்து  தமிழ் மக்களின் போராட்டம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் இருக்கிறது. சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் வீழ்ந்து 26 அடியில் இருந்தபோது அவன் மேலும் கீழே செல்லாமல் இருப்பதற்கு தேவையான தடுப்பு ஏற்பாடுகளை செய்யாமல் அவனை மீட்பது பற்றியே தொடர்ந்து சிந்தித்து செயற்பட்டதன் விளைவே  அவன் 100 அடிக்கு சென்று உயிர் துறப்பதற்கு காரணமாக அமைந்தது.


One thought on “ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வது?

  1. R.kumarasamy sarma

    தவறாமல் சஜித்பிரேமதாஸாவிற்கு வாக்கைப்போட்டு எம் எதிர்கால விளைவை பார்ப்போம்.எல்லாம் நன்மைக்கே.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *