Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழர் தரப்பின் கொள்கை நிலைப்பாடு என்ன?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழர் தரப்பின் கொள்கை நிலைப்பாடு என்ன?

யதீந்திரா
தென்னிலங்கையின் அரசியல், ஜனாதிபதி தேர்தலை நோக்கி அசையத் தொடங்கிவிட்டது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் பலவாறான அபிப்பிராயங்கள் உண்டு. எவ்வாறான அபிப்பிராயங்கள் இருந்தாலும் கூட, ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில், தமிழ் மக்களுக்கு முன்னால் இரண்டு அணிகளே இருக்கப் போகின்றன. ஒன்று ரணில் தரப்பு, மற்றையது மகிந்த தரப்பு. இந்த இரண்டு தரப்புக்களில் ஒன்றை வெற்றிபெறச் செய்வதற்கான முயற்சிகளே இடம்பெறப் போகின்றன. ஒரு வேளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்றது போன்று, மகிந்த தரப்பை தோற்கடிக்கும் நோக்கில் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் கூட, அதனை திரைமறைவிலிருந்து, இயக்கும் நபராகவும் ரணில் விக்கிரமசிங்கவே இருப்பார். இதனை அடிப்படையாகக் கொண்டே, மேற்படி இரண்டு தரப்புக்களும் தங்களுக்கான அணிகளை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தல் அனுபவத்திலிருந்து ஒரு விடயம் தெட்டத்தெளிவானது. அதாவது, ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியை தீர்மானிப்பதில் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு பிரதான இடம் உண்டு. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜந்துலட்சம் வாக்கு வித்தியாசத்தில்தான் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்திருந்தார். எனினும் இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவிடம் மாறுபட்ட பார்வையுண்டு. அவரைப் பொருத்தவரையில், தெற்கில் குறிப்பாக, ஹம்பகா தொகுதியில் சரியான முறையில் பணியாற்றியிருந்தால் வெற்றிபெற்றிருக்கலாம் என்பது அவரது பார்வை. கோத்தபாய ராஜபக்சவே, மகிந்த தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை, கோத்தபாய வேட்பாளரானால், அவர் அதிகம் தனிச் சிங்கள ஆதரவில் வெற்றிபெறுவதற்கான முயற்சிகளிலேயே ஈடுபடுவார். அதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் கூட, தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளிலும் அவர்கள் நிச்சயம் ஈடுபடுவர். இந்த பின்புலத்தில் நோக்கினால், இரண்டு தரப்புக்களுமே தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து செயற்படும். அதிலும் முக்கியமாக ரணில் தரப்பிற்கு தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியமையாத ஒன்று ஏனெனில,; ராஜபக்சவிற்கு இருப்பது போன்ற, சிங்கள செல்வாக்கு ரணிலுக்கு இல்லை. இதன் காரணமாகவே ரணில் அதிகம் சிறுபாண்மை வாக்காளர்களை சார்த்திருக்க வேண்டியிருக்கிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் தலைமையிலான தென்னிலங்கையின் அரசியல் வியூகத்திற்கு முண்டுகொடுத்திருந்தது. மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தல் என்பதுதான் அந்த வியூகத்தின் ஒரேயொரு இலக்காக இருந்தது. அந்த வியூகத்தில் ரணில் தரப்பு வெற்றிபெற்றது. இதனடிப்படையிலேயே மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் நிறுவப்பட்டது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு அபூர்வமான அரசாங்கம் அதற்கு முன்னர் ஒரு போதும் இருந்ததில்லை எனெனில் எதிரும் புதிருமான இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன. எனவே இதன் மூலம் பல ஆக்கபூர்வமான விடயங்கள் முக்கியமாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியப்படும் என்றவாறான பார்வையே பலரிடமும் இருந்தது. முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறானதொரு நம்பிக்கையையே தமிழ் மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு முன்னர் எப்போதுமில்லதவாறான குழப்பகரமான நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில், ரணில் அரசாங்கம், அதிக அதிருப்திகளை சம்பாத்திருக்கின்ற சூழலில்தான், பிறிதொரு ஜனாதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழர் தரப்பு எவ்வாறு சிந்தித்து செயலாற்றப் போகிறது? தமிழ் தேசிய நிலைப்பாட்டை முன்வைத்து இயங்கிவரும் கட்சிகளே, இங்கு தமிழர் தரப்பு என்பதால் குறிக்கப்படுகிறது.

Tamil Leaders

இந்த தேர்தலை எவ்வாறு கையாளலாம் என்பதற்கு ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு அபிரப்பிராயங்களை வெளியிட்டுவருகின்றனர். சர்வதேசத்தை நாங்கள் பகைக்கக் கூடாது எனவே அவர்களின் விருப்பங்களிற்கு பின்னால்தான் செல்ல வேண்டும் என்பது ஒரு சாராரின் வாதம். இவ்வாறு கூறுபவர்கள் ரணிலின் பக்கமாக நிற்கவேண்டும் என்பதை மறைமுகமாக சர்வதேசம் என்பதால் கூற முற்படுகின்றனர். ஆனால் இவர்கள் கூறவது போன்று சர்வதேச சக்திகளுக்கு குறிப்பான சார்புநிலை என்பதில்லை. ரணில் மேற்குலகிற்கு விருப்பமான ஒருவராக இருந்தாலும் கூட, அவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத போது, அவரின் பின்னால் மேற்குலகம் நிற்காது. எவர் வெற்றிபெற்றாலும், வென்றவருடன் எவ்வாறு வேலைசெய்வது என்னும் அடிப்படையில்தான் சர்வதேச சக்திகள் சிந்திக்கும்.

இது ஒரு தேவையற்ற தேர்தல் இதில் நாங்கள் பங்குகொள்ள வேண்டியதில்லை ஏனெனில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – பின்னர் எதற்காக இவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது பிறிதொரு வாதமாக இருக்கிறது. அவ்வாறில்லை, உடனடியாக சாத்தியப்படக் கூடிய ஒரு சில விடயங்களை முன்வைத்து, அவற்றிற்கான உத்தரவாத்துடன் ஒரு வேட்பாளரா ஆதரிக்கலாம் என்பது இன்னொரு வாதமாக முன்வைக்கப்படுகிறது. வழமையாக தமிழர் செய்யும் தவறை இம்முறையும் செய்துவிடக் கூடாது. அதாவது, ஒரு கட்சியின் பக்கமாக மட்டும் நிற்காமல் இரண்டு பக்கங்களிலும் அதாவது, ரணில் மற்றும் மகிந்த முகாமிலும் தமிழர்கள் நிற்க வேண்டும் அப்போதுமதான் எவர் வென்றாலும் தமிழர்கள் ஊடாடுவதற்கான இடைவெளயிருக்கும் – என்பது ஒரு குறிப்பிட்ட தமிழர் தரப்பினரின் வாதமாக இருக்கிறது. இதில் எது சரி அல்லது எது பிழை? எவ்வாறானதொரு முடிவை எடுப்பது தமிழ் மக்களுக்கு உடனடியாகவும், நீண்டகாலத்திலும் சாதகமாக அமையும்?

தமிழ் மக்கள் வாக்களித்தாலும் அல்லது வாக்களிக்காது விட்டாலும், இரண்டு பிரதான சிங்கள அணிகளிலிருந்துதான் ஜனாதிபதி ஒருவர் தெரிவாகுவார். மேற்படி இரண்டு அணிகளிலும் போட்டியிடும் ஒருவரை வெற்றிபெறச் செய்வதற்காகவும், இன்னொருவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு தரப்பினரும் பணியாற்றுவர். மகிந்த மற்றும் ரணில் தரப்பிலிருந்துதான் ஒருவர் வெற்றிபெறுவார். இதில் ஜே.வி.பி தனியாக வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பதும் கூட, ரணில் தரப்பை வெற்றிபெறச் செய்வதற்கான ஒரு வியூகம்தான். இவ்வாறான பின்புலத்தில் தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவுகள் என்ன? கடந்தமுறை போன்று, இம்முறையும் தென்னிலங்கையின் வியூகத்திற்கு பலியாவதா அல்லது தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி கொள்கை நிலைப்பாடு ஒன்றை எடுப்பதா?

Mahinda-Rajapaksa-Ranil-Wickremesinghe-and-Maithripala-Sirisena

2015இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, அவ்வாறானதொரு கொள்கை நிலைப்பாடு தமிழர் தரப்பிடம் இருந்திருக்கவில்லை. எந்தவொரு தூரநோக்குமின்றி, எந்தவொரு கூட்;டுக் கலந்துரையாடல்களும் இன்றி, சம்பந்தன் – சுமந்திரன் என்னும் இரு நபர்களே அன்றைய முடிவை எடுத்திருந்தனர். அவ்வாறானதொரு சூழலை மீளவும் தமிழ் சமூகம் அனுமதிக்கப் போகிறதா? 2015இன் தேர்தலின் போது, சுரேஸ்பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோரும் கூட்டமைப்பின் அங்கமாகவே இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை வேறு. விக்கினேஸ்வரன் தனக்கென்று ஒரு தனியான கட்சியை கொண்டிருக்கிறார். இவ்வாறானதொரு பின்புலத்தில் மேற்படி கட்சிகளும் அதே போன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜங்கரநேசன் தலைமையிலான கட்சி, அனந்திசசிதரன் தலைமையிலான கட்சி, தமிழ் மக்கள் பேரவையினர், வடக்கு கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கிவரும் பல்வேறு சிவில் சமூக குழுக்கள் என அனைவரும் இணைந்து, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க முடியும். இந்த கொள்கை நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்புடன் உரையாடி, ஜனாதிபதி தேர்தலை கையாளுவது தொடர்பில் ஒரு பொதுவான கொள்கை நிலைப்பாட்டிற்கு வர முடியும். ஆகக் குறைந்தது அவ்வாறானதொரு கொள்கை நிலைப்பாட்டுக்கு வரக் கூடிய அனைவரையும் ஒன்றிணைப்பதன் ஊடாக, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரு மாற்றுப் பார்வையை முன்னிறுத்த முடியும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *