Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்?

ஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்?

யதீந்திரா
நாடு ஜனாதிபதித் தேர்தல் ஒன்றிற்கு தயாராகிவருகின்றது. பிரதான வேட்பாளர்கள் யார் – என்பது தொடர்பில் இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை. இது தொடர்பில் பலருடைய பெயர்கள் உலவுகின்றன. மகிந்தவின் பக்கத்தில் கோத்தபாய ராஜபக்ச என்று ஒரு தகவலுண்டு. கோத்தா இல்லை சாமல் ராஜபக்சதான் வேட்பாளர் என்றும் ஒரு கதை உண்டு. ஜக்கிய தேசியக் கட்சியின் பக்கத்தில் சஜித் பிரேமதாச அல்லது கரு ஜயசூரிய என்று ஒரு கதையுண்டு. கடந்த ஒரு சில மாதங்களாக பலருடைய பெயர்கள் அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றன. எனினும் உறுதியான தகவல்கள் இதுவரையில்லை. இதில் குறிப்பிடப்பட்ட இருவர் ஒரு வேளை பிரதான வேட்பாளர்களாக வரக் கூடும் அல்லது ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிடலாம் ஆனால் எவர் போட்டியிட்டாலும் அது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு முக்கியமான விடயமல்ல.

2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது தமிழ் மக்களின் வாக்குகள், மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டது. பொது எதிரணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன மீது தமிழ் மக்கள் கொஞ்சம் அதிகமாகவே நம்பிக்கை வைத்திருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவ்வாறானதொரு நம்பிக்கையைத்தான் மக்கள் மத்தியில் விதைத்திருந்தது. ஆனால் தமிழ் மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு விடயமும் நடைபெறவில்லை. இறுதியில், அரசியல் தீர்வு முயற்சிகள் அனைத்தும் புஸ்வானமாகின. மைத்திரி-ரணில் கூட்டரசாங்கம் படுதோல்வியடைந்திருக்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு அரசாங்கம் இதற்கு முன்னர் ஓரு போதுமே இருந்ததில்லை என்னும் அளவிற்கு நாட்டின் அரசியல் ஒழுங்கு நகைப்புக்கிடமாகியிருக்கிறது. எந்தவொரு விடயத்திலும் உறுதியான முடிவுகள் எடுக்க முடியாதளவிற்கு அரச இயந்திரம் சீர்குலைந்திருக்கிறது. இவ்வாறனதொரு பின்புலத்தில்தான் நாடு மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதனை பிறிதொரு வகையில் குறிப்பிடுவதானால், நாடு மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்திருக்கிறது. உண்மையில் 2015இல் இருந்த நிலைமையை விடவும் தற்போதைய நிலைமை மிகவும் சிக்கலானது. இந்த நிலைமையை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்? எவ்வாறு எதிர்கொள்ளலாம்? எவ்வாறு எதிர்கொண்டால் அது தமிழ் மக்களுக்கு பயனுடையதாக இருக்கும்?

ஜனாதிபதி தேர்தல் என்பது அடிப்படையிலேயே தமிழ் மக்களுக்கான ஒரு தேர்தல் அல்ல. எனெனில் இரு பக்கத்திலும் உள்ள வேட்பாளர்கள் எவருமே, வெளிப்படையாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பதில்லை. தமிழ் மக்களின் நியாயங்களை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற ஒரு வேட்பாளர் எவ்வாறு தமிழ் மக்களுக்கான வேட்பாளராக இருக்க முடியும்? தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத ஒரு சிங்கள வேட்பாளரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? தமிழ் மக்களின் பிரச்சினை என்று வரும்போது பிரதான சிங்கள கட்சிகளுக்கிடையில் காணப்படும் அரசியல் முரண்பாடுகள் அனைத்தும் உடனடியாகவே காணாமல் போய்விடுகின்றன. தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்று வருகின்றபோது, அதனை பின்னர் பார்ப்போம் – பிறகு பார்ப்போம் என்னும் அடிப்படையில்தான் அனைவருமே அதனை அணுகுகின்றனர். ஆரம்பத்தில், மைத்திரிபால சிறிசேன தொடர்பிலும் இவ்வாறானதொரு நம்பிக்கைதான் இருந்தது. நாம் முதலில் மகிந்தவை வீழ்த்துவோம், மைத்தரி பின்னர் விடயங்களை பார்த்துக் கொள்வார் என்றுதான் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தியது ஆனால் பின்னர் மைத்திரியும் ரணிலும் எதனைப் பார்த்தனர், என்பதை இப்பத்தியாளர் விபரிக்கவேண்டியதில்லை. அதனை ஒவ்வொரு தமிழ் குடிமக்களும் நன்கறிவர். உண்மையில் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் இரண்டாம்தர பிரஜைகளாகவே பார்க்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் பின்னர் அல்லது பிறகு பார்க்க வேண்டிய பிரச்சினைகளாக கணிக்கப்படுகிறது. நாட்டில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் இந்த நிலைமையை மாற்றுவதற்காக அவர்கள் பாடுபடப் போவதில்லை என்பதைத்தான் மைத்திரிபால தன்னுடைய நல்லாட்சியில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

election jaffna

தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்று வருகின்ற போது, அது தெடர்பில் வெளிப்படையான நிலைப்பாடுகளை அறிவிக்க முடியாமல் இருக்கின்ற ஒரு ஜனாதிபதி வேட்பாளர் ஒரு போதுமே தமிழ் மக்களுக்கான வேட்பாளராக இருக்க முடியாதல்வவா! ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்பவர், தமிழ் மக்களுக்கான வேட்பாளராக இல்லாதபோது, அந்தத் தேர்தல் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தேர்தலாக இருக்க முடியும்? இந்த அடிப்படையில்தான் இப்பத்தியாளர் ஜனாதிபதி தேர்தல் என்பது தமிழ் மக்களுக்கான தேர்தல் அல்ல என்று வாதிடுகின்றார். ஆனாலும் நமக்கு முன்னாலுள்ள ஒவ்வொரு விடயங்களையும் நமது நலனிலிருந்து எவ்வாறு கையாளலாம் – கையாளுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா – என்று கணித்து, செயற்படவேண்டிய பொறுப்பு நமக்குண்டு. அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலையும் கையாள முடியும்.

2015இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்பட்ட அனுபவங்கள் ஒரு விடயத்தை தெளிவாக்கியிருக்கிறது. அதாவது, எந்தவொரு வேட்பாளரின் வார்த்தை ஜாலங்களையும், அவர் தொடர்பில் மற்றவர்கள் தரும் நற்சான்றிதழ்களையும் நம்பி தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது. உண்மையில் ஜனாதிபதி தேர்தல் என்பது தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு அரசியல் டீலாகத்தான் இருக்க முடியும். இந்த பின்புலத்தில் சிந்;தித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு முன்னர் மூன்று தெரிவுகள்தான் உண்டு.

முதலாவது தெரிவு – இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து, அது தொடர்பிலான எழுத்து மூல உடன்பாட்டை கோருவது. இந்த உடன்பாட்டிற்கு ஒரு மூன்றாம் தரப்பை சாட்சியாக்குவது ஒன்றில் இந்தியா அல்லது அமெரிக்கா. அந்தக் கோரிக்கைகள் ஆவன, சமஸ்டி கட்டமைப்பின் கீழ் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிப்பது, 2015இல் இணையனுரனை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெனிவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவது, முக்கியமாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை விசாரிப்பதற்கென, வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடங்கிய விராசணை பொறிமுறை ஒன்றை உருவாக்குவதல். இந்த உடன்பாட்டிற்கு எந்த வேட்பாளர் உடன்படுகின்றாரோ அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கலாம். ஒரு வேளை தேர்தல் முடிந்த பின்னர் ஏமாற்ற எண்ணினால் மூன்றாம் தரப்பு என்னும் விடயம் தமிழ் மக்களுக்கு சாதாகமான ஒன்றாக இருக்கும்.

மேற்படி கோரிக்கையை இரண்டு வேட்பாளர்களும் நிராகரித்தால் நாம் இரண்டாவது தெரிவு தொடர்பில் சிந்திக்கலாம். இரண்டாவது தெரிவு – தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி, ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அவருக்கு வாக்களிப்பது. இதனை நாம் நமது கோரிக்கைகளில் உறுதியாக இருக்கிறோம் என்பதை காண்பிப்பதற்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். அத்துடன் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இதனை ஒரு மக்கள் ஆணையாக முன்வைக்கலாம். இந்தத் தெரிவை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு கவர்ச்சிமிக்க உணர்வுமிக்க வேட்பாளர் தேவை. அப்படியொரு வேட்பாளரை கண்டடைய முடியாது போனால் இது வெற்றியளிக்காது.

இந்த விடயமும் சாதகமாக இல்லை என்றால் மூன்றாவது தெரிவை தீர்மானிக்கலாம். மூன்றாவது தெரிவு – இது எங்களுக்கான ஒரு தேர்தல் அல்ல என்னும் அடிப்படையில் முற்றிலுமாக தேர்தலிருந்து விலகிக் கொள்வது. இந்தியாவில் இந்த நடைமுறையுண்டு. அதனை நோட்டோ (Nழுவுழு) என்று அழைப்பார்கள். அதவாது வேட்பாளர்களில் எவருமே எனது தெரிவல்ல (ழேநெ ழக வாந யுடிழஎந) என்பதை ஒரு குடிமகன் தெரிவிக்கும் முறைமைதான் அது. இம்முறை இலங்கையிலும் இந்த முறைமை அறிமுக்கப்படுப்படவுள்ளதாக ஒரு தகவலுண்டு. அது அறிமுகப்படுத்தப்படலாம் அல்லது கைவிடப்படலாம் ஆனால் தமிழ் மக்கள் முற்றிலுமாக தேர்தலிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை இறுதி தெரிவாக எடுக்கலாம்.

தமிழ் மக்களின் ஆகக்குறைந்த எந்தவொரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத, அவ்வாறு ஏற்றுக் கொண்டால் அது தனக்கு பாதகமாக வந்துவிடும் என்று பயப்படும் (இரண்டு) வேட்பாளர்களை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போது தமிழ் மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்ற, சிங்கள ஜனாதிபதிகள் தமிழ் மக்களுக்காக எதனைச் செய்திருக்கின்றனர்? இறுதியாக தமிழ் மக்கள், நம்பிக்கையுடன் வாக்களித்த மைத்திரிபால எதனைச் செய்திருக்கிறார்? அவரால் செய்ய முடிந்ததா? இப்படியான கேள்விகள் பதிலற்று கிடக்கின்ற போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் ஏன் அக்கறைப்பட வேண்டும்?


One thought on “ஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள மூன்று தெரிவுகள்?

  1. edwin vijey

    நன்றி, இவ்வாறு ஓரு விடயத்தை நோக்கியமைக்காக. நீங்கள் கூறியது போன்ற இரண்டாவது தொரிவான ஃஃ இரண்டாவது தெரிவு – தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்திஇ ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அவருக்கு வாக்களிப்பது. ஃஃ என்ற விடயம் குறித்து நாம் கவனம் செலுத்தலாம். அவ்வாறு ஒரு முடிவை தமிழ் தரப்பு எடுக்க முன்வருகிறது என உணரும் போது, ஐக்கிய தேசியக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்க முனையும் ? இந்தக் கேள்விக்கான சரியான விடையைத் தெரிந்து கொண்டால் ஏதாவது முன்னேற்றங்களை நாம் பெறும் வழியை அறிந்து கொள்ளலாம். வழமைபோல ஐ.தே.க. பணம் கொடுத்து ஏமாற்றும் நாடகத்திற்கு இசையாத தமிழ் தலைமைகள் – அதுவும் ஒன்றிணைந்து நின்றால் சில விடயங்களை சாதிக்கலாம், இது குறித்துப் பேசுங்கள்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *