Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜெனிவாவில் சிங்களத் தரப்பும் தமிழர் தரப்பும்

ஜெனிவாவில் சிங்களத் தரப்பும் தமிழர் தரப்பும்

யதீந்திரா
ஜெனிவா அரங்கை எவ்வாறு கையாளுவது – கையாள முடியுமா? என்னும் கேள்வியுடன் ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் எத்தனை வருடங்களை கடக்க வேண்டியிருக்கும் என்பதையும் எவரும் அறியார். இவ்வாறானதொரு சூழலில்தான் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்னும் கோரிக்கையுடன், வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் பேரணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

2012இல் இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை வெளிவந்ததிலிருந்து, கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு மார்ச்சிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கும், சர்வதேசத்தை நோக்கிய கோரிக்கைகளுக்கும் எவ்வித பஞ்சமும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் ஜ.நாவின் இலங்கை தொடர்பான நிலைபாட்டில் பெரிய மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மீண்டும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணை ஒன்று வெளிவரவுள்ளது. 2015 ஒக்டோபரில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணையனுசரனை வழங்கி ஏற்றுக் கொண்டிருந்தது. அந்த பிரேரணையை அமுல்படுத்துவதற்கு 2017இல் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. கால அவகாசம் வழங்கப்படுவதற்கு பதிலாக இலங்கையின் மீது கடுமையான பிரேரணை ஒன்றை கொண்டுவர வேண்டும் – இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்னும் கோரிக்கைகள் தமிழரசு கட்சி அல்லாத தரப்புக்கள் சிலவற்றால் முன்வைக்கப்பட்டுவருகிறது. இதில் முக்கியமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான விக்கினேஸ்வரனும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டையே முன்வைத்து வருகின்றார். ஆனால் இவ்வாறான நிலைப்பாட்டை முன்வைத்துவரும் கஜனோ அல்லது விக்கினேஸ்வரனோ தங்களது நிலைப்பாட்டுக்கான பெரும்பாண்மையான மக்கள் ஆதரவை தேர்தல் அரசியல் மூலம் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. கஜனால் அது இதுவரை முடியவில்லை. விக்கினேஸ்வரனை பொறுத்தவரையில் அவர் தற்போதுதான் தனித்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தேர்தல் வெற்றியொன்றின் ஊடாக, கூட்டமைப்பு மட்டும்தான் தமிழ் மக்களின் பிரதான தலைமை என்னும் நிலைமை மாற்றப்பட வேண்டும். அது மாற்றப்படாத வரையில், சுமந்திரனின் ஆட்டமும் நிற்கப் போவதில்லை. சுமந்திரனை வெறுமனே வசைபாடிக் கொண்டிருப்பதிலும் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.

UNHRC-UN-Human-Rights-Council-meeting-room

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் அதாவது இனப்படுகொலைக்கு ஆளான மக்கள் என்று கருதப்படும் மக்கள் கூட்டமொன்றில், பெரும்பாண்மையான ஆதரவைப் பெற்றிருக்கும் ஒரேயொரு கட்சியாக தன்னை அது நிறுவியிருக்கிறது. அதுவே அதன் பலமாகவும் இருக்கிறது. 2009இற்கு பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழ் மக்கள் கூட்டமைப்பையே தங்களின் தலைமையாக தெரிவு செய்திருக்கின்றனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்தாலும் கூட, அதனை ஒரு முக்கியமான மாற்றமாக சொல்ல முடியாது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச ராஜதந்திர சமூகத்தை கையாண்டுவரும் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், இலங்கையை தொடர்ந்தும் ஜ.நாவின் நிகழ்ழிநிரலில் வைத்துக் கொள்வதற்கு கால அவகாசப் பிரேரணை அவசியம் என்னும் வாதத்தை முன்வைத்து வருகின்றார். அவருடன் மட்டும்தான் ராஜதந்திர சமூகமும் தொடர்பில் இருக்கிறது. பிரித்தானியா கொண்டுவரவுள்ள பிரேரணை கால அவகாசம் கோரும் பிரேரணை அல்ல. அவ்வாறான பிரச்சாரங்கள் பொய்யானவை – என்று சுமந்திரன் தொடர்ச்சியாக கூறிவந்தாலும் கூட, மீண்டும் கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணையொன்றுதான், வரவுள்ளது என்பது தற்போது வெள்ளிடைமலை.

அமெரிக்காவை பொறுத்தவரையில் அது மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறினாலும் கூட, அதன் பிரத்தியேக மனித உரிமை நிகழ்சிநிரலில் தொடர்ந்தும் இலங்கையை வைத்திருக்கும். ஒரு வேளை 2020இல் தங்களது நகர்வுகளுக்கு குந்தகமான ஒரு ஆட்சி இலங்கைத் தீவில் ஏற்படுமாயின் அப்போது மனித உரிமை மீறல்கள் என்பதுதான் இலங்கையை கையாளுவதற்கான ஒரேயொரு துருப்புச் சீட்டாகவும் இருக்கும். இந்தப் பின்புலத்தில் 2020 ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டுதான் இலங்கையின் மீதான அழுத்தங்கள் அமையும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. அதே வேளை, இந்த பிரேரணையை வைத்துத்தான் தென்னிலங்கையில் தேசியவாத அலையொன்றை எழுப்பும் முயற்சியையும் மகிந்த தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாகவே இணையனுசரனையிலிருந்து விலகுமாறு மகிந்த தொடர்ச்சியாக பேசி வருகின்றார். மைத்திரிபால சிறிசேனவும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டையே முன்வைத்து வருகின்றார்.

இலங்கையில் இடம்பெறப் போகும் தேர்தல்கள் என்பது வெறுமனே, உள்நாட்டுக்குள் இடம்பெறும் கட்சிகளுக்கிடையிலான போட்டியாக மட்டும் இல்லை. மாறாக, இந்து சமூத்திர பிராந்திய அதிகார போட்டியில் பங்குகொண்டிருக்கும் உலகளாவிய சக்திகளுக்கான தேர்தலாகவும் அது இருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை இன்னும் பலமானதும் உறுதியானதுமான ஆட்சி மாற்றமொன்றாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு என்றால், ஜெனிவா அரங்கை ஒரு கட்டத்திற்கு மேல் செல்வதற்கு மேற்குலகு நிச்சயம் அனுமதிக்காது. ஏனெனில் இந்து சமூத்திர பிராந்தியத்தில் தனது கால்களை வலுவாக ஊன்றிவரும் சீனா, அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் முன்னெச்சரிக்கையுணர்வுடன்தான் மேற்குலகு இந்த விடயங்களை கையாளும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்ததிற்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆதரவளித்திருந்தன. ஆனால் யுத்தத்திற்கு பின்னரான சூழலை சீனாவே அதிகம் பயன்படுத்திக் கொண்டது. இதற்கு சீனாவின் தலையிடாக் கொள்கையே (non interference) காரணம். இவ்வாறானதொரு சூழலில்தான் மகிந்த அரசின் மீதான மேற்குலக அழுத்தங்களை சீனா தனது உள்நுழைவுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. இந்த பின்புலத்தில் நோக்கினால் ஜெனிவா பிரேரணையின் ஊடான மேற்குலக அழுத்தங்களுக்கு ஒரு எல்லைக் கோடு உண்டு.

UNHRCSri Lanka

இவ்வாறானதொரு சூழலில் இதனை தமிழர் தரப்பு எவ்வாறு அணுகலாம்? அணுக முடியுமா? யுத்தம் நிறைவுற்று பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பில் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது. இனியும் பழைய முறையிலான அணுகுமுறைகளிலேயே காலத்தை விரயம் செய்யப் போகிறதா? சிங்களத் தரப்பை பொறுத்தவரையில் – அது ரணில் தரப்பு, மைத்திரி தரப்பு, மகிந்த தரப்பு, ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி என பல தரப்புக்களாக தங்களை காண்பித்துக் கொண்டாலும் கூட, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய நீதி விசாரணை, கண்காணிப்பு அலுவலகம் என்பவற்றை கடுமையாக எதிர்த்து நிற்பதில் அவர்களுக்கிடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. ஆனால் தமிழர் தரப்புக்கள் அப்படியில்லை. ஒரு பொது நிகழ்சிநிரலில், பொது வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை அனைத்து தரப்பினருக்கும் இடையில் ஒரு உடன்பாடில்லை. கடந்த பத்து வருடங்களில் ஏன் அவ்வாறானதொரு உடன்பாட்டுக்கு வர முடியவில்லை. ஜெனிவா அமர்வுகளிலும் தங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை தமிழர் தரப்புக்கள் தெளிவாகவே காண்பித்துநிற்கின்றன. கடந்த பத்து வருட அனுபவங்களுக்கு பின்னரும் இவ்வாறுதான் தமிழர் தரப்பு முன்னகரப் போகிறதென்றால், தமிழர் தரப்பு இந்த விடயத்தில் முன்னோக்கி நகரப் போவதில்லை. ஒரு பொது உடன்பாட்டுக்கு வர மறுப்பவர்களை தேர்தல் அரசியல் பரப்பிலிருந்து அகற்ற வேண்டியதும் கூட ஒரு பொது வேலைத்திட்டமாக இருந்திருக்க வேண்டும். அதிலும் தமிழ் தேசிய தரப்புக்கள் ஒன்றாக இல்லை. எனவே தமிழர் தரப்பு இரண்டு நிலைகளில் இதனை கையாள வேண்டும். ஒன்று சில அடிப்படையான நிலைப்பாடுகளில் ஒன்றாக நிற்கக் கூடியவாறான வலுவானதொரு மாற்று தலைமை ஒன்றின் மூலம், தேர்தல் அரசியலை கைப்பற்ற வேண்டும். இரண்டு, சர்வதேசத்தை எதிர்கொள்ளுதல் என்பதில் அடிப்படையான ஒற்றுமையை காண்பிக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல் ஜெனிவாவிற்கு செல்லுதல் என்பது வெறுமனே சுறுப்பயணம் செய்வதாகவே அமையும். ஏனெனில் சிங்கள தரப்பை எதிர்கொள்ளக் கூடிய தயாரிப்புடன் தமிழர் தரப்புக்கள் இல்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *